தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் மேலும் »

பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா?

ஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி மேலும் »

பெரிய குஞ்சு தாத்தா…

ஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் மேலும் »

திராவிடநாடு

கேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் மேலும் »

ரைம்ஸ்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு மேலும் »

 

தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று

உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள்.

உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!

உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!

உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!

உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!

அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்–கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!

அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.

ஒரு நாள் என்பது என்ன?

சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.

ஒருமாதம் என்பது என்ன?

ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்குதிங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு என்பது என்ன?

சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் நாள் முதல் (உத்ராயணம்) மீண்டும்அதே நிலை (மீண்டும் உத்ராயணம்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.

அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.

சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும்வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.

உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்றுபொருள்.

சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும்; பங்குனி சித்திரையில் உச்சியில்இருக்கும்; பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும்; பின் தென்கோடிக்கு வந்து மீண்டும்வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்குநோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.

சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்துஅவ்வாறு கணித்தனர்.

ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில்கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.

தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தைமுதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்–டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின்முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கிலஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியேஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள்வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் இருப்பிடத் திலிருந்துவடமேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.

ஏசு பிறப்பை வைத்து ஆங்கில ஆண்டுக் கணக்கீடு என்பது சரியன்று. காரணம், ஏசு பிறந்தது டிசம்பர் 25.மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்றஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.

எனவே, சூரியச் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுக் –கணக்கீடு என்பது உறுதியாவதோடுதை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.

தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகள் தொடராண்டுக்குப் பயன்படாது. 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டுகளில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க வேண்டும்?

மறைமலை அடிகள்

எனவே தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921- ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்து, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்து, 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார்.

எனவே, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவியல் சார் தமிழர் மரபை நாம் ஏற்றுக்கொண்டாடுவதோடு, அதையே நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டுஇந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்!தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்!

தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்கவேண்டும். அதை யாரும் எதிர்க்கப் போவதில்லை.

எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழிகாட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள்.

தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம்அல்லவா?

உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்?இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா?எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!

1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது.அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.

அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா?

சல்லிக்கட்டு போல்…தமிழர்கள் இளைஞர்கள் ஒன்று பட்டால் நிச்சயம் நிறைவேறும்.

– சிகரம்

பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா?

ஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது .

தாலி

கி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் ஆய்வறிஞர் மா.இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலதாலி வழக்கம் இல்லை என்பதை பல்வேறு தரவுகளுடன் எடுத்துறைக்கின்றனர் . ஆகவே கி.பி 10 பின்னர் தான் பெண்களின் கழுத்து தாலி புனித பொருளாக மாற்றபட்டு நடைமுறைக்கு வந்ததாக கருதலாம் . அதன் பின்னரே கோவில்களில் பெண் தெய்வங்களுக்கு தாலி அணிவிக்கும் திருகல்யாண நிகழ்வு கள் நடத்தபட்டுள்ளன தம் குல பெண்ககளுக்கு மேலாடை அணியும் உரிமை கோரி குமரி பகுதி நாடார்கள் நடத்திய தோல்சீலை போராட்டத்தை ஒடுக்க அன்றைய நாயர்கள் நாடார் பெண்களின் தாலியை அறுத்த அந்த இடம் இன்று “தாலியறுத்தான் சந்தை” என்ற வழங்கபடுகிறது .

தொல்குடி மக்கள் தங்கள் பிள்ளைகளை தீயவை அண்டாமல் காப்பதற்காக அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள்’ஐம்படைதாலி’ என்று குறிப்பிடுகின்றனர் இன்றும் கூட நான் பயனப்படும் மலை கிராமங்களில் இந்த பழக்கம் உள்ளதை காண்கிறேன் . கி.பி 7ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாக பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது என்பதையும் நினைவில் கொள்வோம் .

//புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு:54)//
// புலிப்பல் தாலி புன்தலைச் சிறார் (புறநானூறு :374)//

மாறாக வீரத்தின் சின்னமாக புலிப்பல்லை ஆண்கள் அனிந்தணர் என்ற செய்தியை சங்க இலக்கியங்களில் காண்கிறோம். தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக அணிந்து கொண்டதால் அதனை “புலிப்பல் தாலி” என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார் தான் முதன் முதலில் தாலியை நிராகரித்து பேசவும் எழுதவும் தொடங்கியது . 1968 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தாலி இல்லாத சுயமரியாதை திருமண சட்டத்தை சட்டபூர்வமாக அலங்கரித்தது அண்ணா ஆட்சி காலத்தில் தான் .

கடைசியாக ஒரு செய்தி சங்க இலக்கியத்தில் தாலி மட்டுமல்ல பெண்ணுக்குரிய மங்கல பொருளாக இன்று கருதப்படும் மஞ்சள்,குங்குமம் ஆகியவையும் பேசபடவே இல்லை
மஞ்சள் பூசி குளிப்பது கிருமி எதிர்ப்பு சக்தி ஆரோகியம் தொடர்பான ஒரு பொருளாகவே தமிழர் வாழ்வில் இருந்துள்ளது .’நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்’ கண்ணனை நீராட்டுவதை பெரியாழ்வார் பாசுரம் பேசுகிறது .எனவே குழந்தைகளை தேய்த்து குளிப்பாட்டும் பொருளாக மஞ்சளை தமிழர்கள் பயன்படுத்தி வருவது தெரிகிறது .

“விறலி மஞ்சள்” பூசு மஞ்சளில் புகழ் பெற்றது ஆகும் . விரல் என்றால் முகபாவனை விரலி என்பது முகபாவங்களை மாற்றி நடிக்கிற நடனமாடுகிற பெண்ணை குறிக்கும் . அன்று கூத்தாடிய பெண்கள் விளக்கொளியில் தான் நடனமாடினர்: முகம் பளிச்சென்ற தெரிய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி கொண்டனர் . விரலியர் மட்டுமே பூசி கொண்ட மஞ்சளை காலப்போக்கில் குடும்ப பெண்களும் பூச தொடங்கினர் . விரலியரை மதியாத நம் சமூகம் விரலி மஞ்சளை மட்டும் கொண்டாட தொடங்கியது .

டாக்டர் நீங்கள் தாலி பற்றிய நெடும் தரவுகளை தெரிந்து கொள்ள விரும்பினால் பாளையங்கோட்டை போகும் போது பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களை சந்தித்து இதை பற்றி கேட்டீர்களானால் நிறைய தரவுகளை முன் வைப்பார் .

நன்றி: பேராசிரியர் தொ.ப.

ko.prince முகநூல் பதிவிலிருந்து

பெரிய குஞ்சு தாத்தா…

ஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள்.

பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

“எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க”

“அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு பேருப்பா, என்ன பெரிய குஞ்சும்பாங்க, எந்தம்பிய சின்னகுஞ்சும்பாங்க”

“பெரிய குஞ்சு தாத்தா… பெரிய குஞ்சு தாத்தா…னு கூப்டா ஒனக்கு சங்கடமா இல்லையா”

“அதென்னா இன்னைக்கு நேத்தா கூப்ட்றாங்க”

“ஒனக்கு இந்த பேரு புடிச்சிருக்குதா”

“ம்ம்ஹும்..புடிக்காது, வெளிலலாம் எங்கயாச்சும் ஆஸ்பித்ரிக்குலாம் போனா இந்த பேர சொல்ல மாட்டன். எனக்கு பள்ளிகொடத்துக்கு வச்ச பேரு வேற. நானும் மூனாப்பு வரைக்கும் போனனே. ரேசன் கார்டுல, ஓட்டு அட்டைலலாம் வேற பேரு தான் . இந்த பேரு கெடையாது. வெளீல யாரு கேட்டாலும் அந்த பேர சொல்லிக்குவேன்”

“சேரி..அந்த பேரு என்னா”

“மகாலிங்கம்”

😬

– இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

திராவிடநாடு

கேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர்.

கேரள மக்கள் திராவிடநாடு என பேசுவதற்கு பின்னால் இருக்கும் செய்தி மிகப் பெரியது. அந்த செய்தியை இந்திய ஒன்றியத்தின் அரசியல் அறிவுஜீவிகள் கொஞ்சம் அதிர்ச்சியோடுதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சோவியத் ரஷ்யா உருவாக்கப்பட்ட போது, உருவாக்கப்படும் முறையில் லெனினுக்கு உடன்பாடில்லை என்று படித்திருக்கிறேன். பிற்காலத்தில், கோர்பசேவ் கொண்டுவந்த சீர்திருந்தங்களை அடுத்து, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, நாடுகள் சோவியத்தை விட்டு விலகி தனிநாட்டை அமைத்துக்கொண்டன. உலகின் மிகபெரிய நாடு, இரண்டு கண்டங்களில் இருந்த நாடு, வல்லரசு நாடு, மிக எளிதாக சிதறுண்டு போனது. இதனை கம்யூனிசத்தின் தோல்வி என பலர் கூறினர். ஆனால் அது கம்யூனிசத்தின் தோல்வி அல்ல, பல நாடுகளை இணைத்து உருவாக்கிய ரஷ்யா அதன் பன்மைத்தன்மைக்கு முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஏற்பட்ட தோல்வி அது. உலகப்போரில் ஒற்றுமையாக போரிட்டவர்கள், கம்யூனிசத்தை ஒற்றுமையாக கடைபிடித்தவர்கள், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை குவித்து சோவியத் ரஷ்யாவினை முதலிடத்தில் வைத்து பெருமைப்பட்டவர்கள், தனித்தனியாக பிரிந்ததற்கு பின்னால் சர்வதேச சதிகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், அந்த சர்வதேச சதி வெற்றி பெற காரணமாக இருந்தது அதன் பன்முகத்தன்மை. எனவே, கம்யூனிசம் தவறு செய்யவில்லை அந்த இசத்தை பின்பற்றியவர்கள் மக்களின் இன மொழி அடையாளத்திற்கு மதிப்பளிக்காத தவறை செய்தனர்.

இந்த உண்மையை அறிந்தவர்கள் இப்போது கேரளாவில் இருந்து ஒலிக்கும் ‘திராவிடநாடு’ என்ற குரலுக்கு பின்னால் இருக்கும் உணர்வை புரிந்து சற்று அதிர்ந்துதான் போயிருப்பார்கள். இந்திய ஒன்றியம் விடுதலை பெற்ற பின்னர், சுமார் எழுபது ஆண்டுகளாக கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் மாறி மாறி ஆட்சி செய்கின்றனர். தொடர்ந்து எழுபது ஆண்டுகளாக அங்கு ஆள்வது மாநில கட்சி அல்ல. இரண்டு கட்சிகளும் தேசிய கட்சிகள். புதிதாக அங்கு துளிர்க்க ஆரம்பிக்கும் பிஜேபியும் தேசிய கட்சித்தான். இந்த கட்சிகளின் கொள்கையே அங்கு வாழும் மக்களின் அரசியல் கொள்கை. தேசிய கட்சிகளின் கொள்கை என்றுமே இந்திய ஒன்றியத்திற்கு எதிரானது அல்ல. ஒன்றுபட்ட இந்திய ஒன்றியத்தின் மீது தேவையே இல்லாமல் அதிக பற்றை உருவாக்கும் கட்சிகள். இப்படிப்பட்ட கட்சிகள் இத்தனை காலமாக இந்திய ஒன்றியத்தின் மீது பற்றை ஊட்டியும், திராவிடநாடு என்ற முழக்கம் அங்கிருந்து கேட்கிறது. ஏன்?

ஏன்? என்ற கேள்விக்கான விடை சோவியத் ரஷ்யா சிதைந்ததில் இருக்கிறது. கேள்விக்கான விடை கேரளாவில் மட்டுமல்ல திராவிடப் பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அரசியல் கட்சிகளின் சித்தாந்த பிரச்சாரத்தால் இரு வேறு இன மக்களை, ஏற்றத்தாழ்வுகளோடு, பாகுபாடுகளோடு, புறக்கணிப்புகளோடு, சேர்த்து வைத்திருக்க முடியாது. திராவிடர்களாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை இந்திய ஒன்றியத்தில் இணைத்து அவர்களை இந்தியர்களாக உணரவைக்கும் முயற்சி என்றாவது ஒருநாள் தோல்வி அடைந்தே தீரும். அதுவே இப்போது எழுபது ஆண்டுகளுக்கு பின்பு நடக்கிறது.

ஒரு நினைவூட்டலுக்கு சொல்கிறேன். சோவியத் ரஷ்யாவும் எழுபது ஆண்டுகள்தான் இருந்தது.

– திராவிடப் புரட்சி

ரைம்ஸ்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

“அவர்கள் தானே அந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்கள் இருப்பது இயல்பு தானே?” எனச்சொல்வது வாதத்திற்கு சரியானதாக இருந்தாலும், “கறுப்பர்களுக்கு வீடு இல்லை” என்று பலகை வைக்குமளவு அவர்கள் அந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதால் வலுக்கட்டாயமாக அந்த மக்களின் இருப்பை நிலைபெறச்செய்வது கடமையாகிறது. இதை பல கட்டமாக முன்னெடுத்து ஒப்பீட்டளவில் இந்த ஒடுக்குமுறையில் கடந்த காலத்தை விட முன்னேறியும் விட்டார்கள்.

ஆனால் இன்றளவும் குழந்தைகளுக்கு சொல்லப்படும் நீதிக்கதைகளில் இருந்து, ரத்னா fan விளம்பரம் வரை எல்லோருக்குமான கலாச்சாரமாக இங்கே நிறுவப்படுவது பார்ப்பனிய கலாச்சாரமாக தான் இருக்கிறது. இந்த மண்ணின் பூர்வகுடி அடையாளங்களை கொண்டவர்களை காட்டவே காட்டாமல் போனாலும் பரவாயில்லை, மாறாக நெகட்டிவ் கதாபாத்திரங்களாக முன் நிறுத்துவதும், ஒன்றிரண்டு காட்சிகள் மூலம் குறியீடாக காட்டினாலும் அதையும் ஏலியன் பார்வை கொண்டு பார்க்கும் அளவு இங்கே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது, இது தொடர்வது இன்னும் கொடுமை.

கிடைக்கும் தளங்களில் எல்லாம் இந்த அரசியலை பேசி பதிய வைத்து விடுகிறவர்கள் குறைச்சலான ஆட்களாக இருந்தாலும், “இதிலென்ன இருக்கு? இதுல இதைப்பத்தியெல்லாம் பேசியே ஆக வேண்டுமா?” என்று நமட்டு சிரிப்போடு கடப்பவர்கள் மேலும் எரிச்சலூட்டுபவர்கள்.

குழந்தைகளுக்கான rhymes , சின்ன விஷயம் தான், ஆனால் அதை பார்க்கும் எல்லா குழந்தைக்கும் அந்த குழந்தைக்கு தெரியாமலேயே சமூகநீதி போதனையாக மெனக்கிடாமல் புத்தியில் ஊறச்செய்யும் முயற்சியாக தான் இதை பார்க்கிறேன்.

ஆனால் இதேபோல, சிறு வயதில் இருந்தே நம் வீட்டு குழந்தைகளுக்கு பிற்போக்குத்தனங்கள் ஊறச்செய்யும் நிறைய விஷியங்கள் இருக்க, அதை களைவதற்கான முயற்சியை செய்ய தேவையில்லை, செய்கிறவர்களையாவது நாம் ஆதரிக்கிறோமா என்பது கேள்விக்குறி தான்.

– வாசுகி பாஸ்கர்

பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!

பெரியார் பற்றி
ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!
*———————————————————————-*

சாதிமதச் சேறோடு,
சங்கத்தமிழன் பேரோடு,
பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு,
பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…!

பிறந்தபொழுது
உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்”
இறந்தபொழுது
என்நாட்டிற்கு நீ “நாயகர்”

குளிப்பதென்றால்
குழந்தையாக மாறிச் சிணுங்குவாய்,
மக்கள் விழிப்பதென்றால்
தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…!

பள்ளிக்கூடம் சென்று
நீ
பாடம் படிக்கவில்லை,
உனைப்படிக்கவே எங்களுக்கு
நேரம் போதவில்லை…!

எதுகை,மோனை எதுவும்
உன்பேச்சில் என்றுமில்லை,
பகுத்தறிவு ஒன்றே
நீ பெற்றெடுத்த பிள்ளை…!

கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு
கருத்துச் சண்டை போட்டாய்,
வெறுப்பையே வெகுமானமாய் கொண்டு
தமிழனிடமிருந்தே தமிழனை
மீட்டாய்…!

வைக்கம்வரை சென்று
வைராக்கியம் காட்டினாய்,
கள்ளுக்கடை போராட்டத்தை
கடைக்கோடி தமிழனுக்கும் ஊட்டினாய்…!

கள்ளை ஒழிக்க உன்வீட்டு
தென்னையெல்லாம் வெட்டினாய்,
ஆரியம் அழிக்க
அன்றாடம் அவர்தலையில் குட்டினாய்…!

பேண்பார்த்துக் கொண்டிருந்த
பெண்ணினத்தை,
வான்பார்க்க வைத்தாய்,
தாயம்போட்டுக் கொண்டிருந்தவளையும்
தன்சுயம் உணர வைத்தாய்…!

தனக்கொரு பிள்ளையென
தனித்து பெற்றுக்கொள்ளவில்லை,
தன்மான தந்தையே எமக்கு
உனைத்தவிர வேறுயாருமில்லை…!

இருண்ட இனத்தை வெளுப்பாக்கிய
வெண்தாடிக் கிழவா,
உன்வேலை இன்னும் மிச்சமிருக்கு
எழு.
வா..!

*———————————————————————*
துளிர்(எ)சீ.வினோத்குமார்.
ஊ.ஒ.தொ.பள்ளி
பிள்ளையார் பட்டி.
பொன்னமராவதி ஒன்றியம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா?

  • தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா?

வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. பெரியாரை, பாபாசாகேபை இன்னும் பல சமூக சீர்திருத்தவாதிகளை வாசிப்பதாலேயே நாம் “சாதியத்தை” விட்டுவந்துவிட்டோம் என்றாகிவிடாது. அதை விட்டு வர, நாம் தொடர்ந்து சுயபரிசோதனைகளையும், சுய விமர்சனங்களையும் செய்துக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது.

உதாரணத்திற்கு, நான் தொடர்ந்து இந்திய/ தமிழக தலைவர்களை பற்றி வாசித்துவருகிறேன். ஒருநாள், ஒரு குறிப்பிட்ட தலைவரை பற்றி வாசிக்கிறேன். அவரைப்பற்றி எனக்கு அதற்குமுன்னால் அதிகம் தெரியாது. அவரது ஒரு பேச்சைப்படித்து எனக்கு மெய்சிலிக்கிறது. ஆகா, இப்படி எல்லாம் நம் ஊரில் தலைவர்கள் இருந்து இருக்கிறார்களே என்று யோசிக்கிறேன். ஆனால், அந்தப்பேச்சில் அவரது சாதி குறித்தும் இருக்கிறது. அது ஒருவகையில் எனக்கு தொடர்புடையதாக இருக்கிறது. உடனே ஒரு பெருமை என்னுள் எட்டிப்பார்க்கிறது. எவ்வளவு பெரிய முரண் இது என்று தோன்றினாலும்.. அந்த பெருமை தோன்றி மறைகிறது. இது தான் பிரச்சனை.

காமராசரில் இருந்து கலைஞர் வரை இது பொருந்துகிறது. எல்லோருக்கும் சாதி அடையாளம் உண்டு. சாதியை ஒழிக்கச்சொன்ன பெரியாருக்கும் அண்ணலுக்குமே இன்னமும் சாதி அடையாளம் இங்கே உண்டு. ஒட்டுமொத்தமான மக்களுக்கான தலைவர்களாக இவர்கள் இருந்தாலும், தங்களது சாதி என இவர்களை நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இது தான் பெரியாரை சூத்திரர்களின் தலைவர் என்றும், அண்ணலை தலித்துகளின் தலைவர் என்றும் பிரிக்கிறது. இது தான் சாதியின் வெற்றி!

பெரியார் ஒருமுறை சொன்னாராம், நாம் சாதியை அடியோடு ஒழித்தாலும்.. சாதிய உணர்வு மனிதனில் இருந்து ஒழிய 300 ஆண்டுகள் ஆகும் என்று.

நம் எல்லோருக்குள்ளும் சாதி இருக்கிறது. அதை தொடர்ந்து சுயபரிசோதனை செய்துக்கொள்வோம். குறிப்பாக முற்போக்கு கருத்தியல் பேசுபவர்கள் இதில் செய்யும் தவறு.. சக தோழர்களுக்கு முத்திரை குத்துவது. இப்படி எல்லோரையும் சாதியவாதி என்று முத்திரை குத்துவதால் ஒரு பயனும் இல்லை. நம் ஒற்றுமை தான் குலையும்.

தவறுகளை திருத்திக்கொள்ளும் “பகுத்தறிவும்”, “திறந்த மனதும்” மிக முக்கியம். அது தான் நம்மை சாதியவாதிகளிடம் இருந்து வேறுப்படுத்திக்காட்டுகிறது. ஒரு கருத்தினால்/ ஒரு செயலினால், ஒருவன் சாதியவாதியும் ஆகிவிடமாட்டான். முற்போக்குவாதியும் ஆகிவிடமாட்டான். தொடர்ந்து பயணிப்போம்!

நன்றி : Rajarajan Rj   https://www.facebook.com/rajarajan.rajamahendiran/posts/10208039907310100