தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் மேலும் »

பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா?

ஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி மேலும் »

பெரிய குஞ்சு தாத்தா…

ஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் மேலும் »

திராவிடநாடு

கேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் மேலும் »

ரைம்ஸ்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு மேலும் »

 

நண்பர்கள் யார்? தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?

வாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம்.

.
ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம்
ஓடிக் கொண்டிருந்தாலும்….
மறுபக்கம் இப்படி ஒரு புத்தகமா? என
ஆச்சர்யத்தில் நாம் ஆடிப் போகும் அளவுக்கு
ஒரு செயலைச் செய்திருக்கிறது கர்நாடக அரசு.
.
ஆம்…. கர்நாடக அரசின் “குவெம்பு பாஷா பாரதி”
வெளியிட்டிருக்கிற ஒரு புத்தகம்தான்
நம்மை ஆச்சர்யத்தின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது.
.
அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா? “பெரியார் விசாரகளு”
.
அதுவாகப்பட்டது : “பெரியார் சிந்தனைகள்.”
.

நானூறு பக்கங்களில்
பெண்விடுதலை….
சமூக நீதி….
பெளத்தம்… என 52 தலைப்புகளில் பெரியாரின் சிந்தனைகளை
கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
.
கீழ்வெண்மணியில் நடந்த தலித் படுகொலைகளைக் கண்டித்து
28.12.1968 விடுதலை நாளிதழில் வெளிவந்த
தலையங்கத்தையும் தேடிப்பிடித்து சேர்த்திருப்பது
வரலாற்றைப் படிக்காமலே வரலாற்றைப் படைக்க நினைக்கும்
சிலருக்கு பாடமாக இருக்கும்.
.
இந்நூல் வெளிவருவதற்குப் பின்னணியில் இருந்தவர்தான்
கன்னட பேராசிரியரான கே.வி.நாராயணா.
ஹம்பி பல்கலைக் கழகத்தில் ஒன்பதுமுறை
பதிவாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
அத்தோடு சமஸ்கிருதக் கலப்பில்லாத
கன்னட மொழி வளர்ச்சிக்காக உழைத்து வருபவர்தான்
இந்தக் கே.வி.நாராயணா.
.
பெரியாரின் சிந்தனைகளை
கன்னட மக்களுக்குக் கொண்டு செல்லும் பணிக்கு
பதிப்பாளராகத் துணை நின்றவர்
திராவிடப் பல்கலைக் கழகத்திலும்,
பெங்களூர் பல்கலைக் கழகத்திலும்
தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய
கார்லோஸ் என்றழைக்கப்படும் பேராசிரியர் தமிழவன்.


.
பலருக்கும் முன்பாகவே எண்பதுகளில்
அமைப்பியல்வாதத்தினை (Structuralism) தமிழகத்தில்
அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்தான்
நவீன இலக்கியவாதியான தமிழவன்
.
பெரியாரை கன்னட அறிவுஜீவிகளும் புரிந்து கொள்ளும் வகையில்
கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தவர் பேராசிரியர் சிவலிங்கம்.
.


சிவலிங்கம் தமிழ் பேராசிரியர் மட்டுமில்லை.
கர்நாடக தலித் மக்களின் விடுதலைக்காக
“ஸ்வாபிமானி தலித் சக்தி” என்கிற இயக்கத்தினை
முழுவீச்சோடு நடத்தி வருபவர்.
.
நரபலி கொடுக்கப்பட்ட தலித் இளைஞனின் கொடூரக் கொலையை
உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த துணிச்சல்….

காதலுக்குத் துணை நின்ற தலித் பெண்ணை
நிர்வாணமாக ஓடவிட்ட கொடூர முகங்களைத் தோலுரித்த துணிவு….
என சிவலிங்கத்தின் பெயரைக் கேட்டாலே கர்நாடக அரசு கதிகலங்கும்.
.
(கடந்தவாரம் பெங்களூரு சென்றபோது
சிங்கிளாக எம்மைச் சந்தித்த இந்த சிங்கத்தைப் பற்றிப்
பின்னர் விரிவாக எழுதுகிறேன்…
.
பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில் சுழன்று கொண்டிருக்கும்
இவருடன் கதைக்க விரும்புபவர்கள்
முன்னரே குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அழையுங்கள்: 09886346428 )
.
ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக்காக உழைத்துவரும்
இவரோடு மொழிபெயர்ப்பில் கைகோர்த்த மற்றொருவர் நல்லதம்பி.
.
இன்று இவர்கள் விதைத்த விதை
மரமாகி
கிளை பரப்பி
கனி தரும்போது….

கன்னட மக்கள் தங்களது உண்மையான நண்பர்கள் யார்?
தங்களைத் தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?
என்பதை துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள்.
.
( நன்றி: டுபாக்கூர் பக்கங்கள் – குமுதம் வார இதழ் )

தத்துப்பித்து தீபா! பாவம் பாண்டே!

Deepa  Thanthi TV Interview

தீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன்.

பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி வரிகளில் கூறுகிறேன்.

தீபாவின் ஒட்டுமொத்தப் பதில்களின் சாரம் ஒன்றே ஒன்றுதான்! “என் அத்தையின் சொத்துக்கு நான்தான் முழு உரிமையாளினி; சொத்து என்பதன் பொருள் வீடு-மனை, நிலம்-நீச்சு, பணம்-காசு….. மட்டுமில்லை; ‘அத்தை வகித்த பதவியும், கட்டிக்காத்த கட்சியும் எனக்கே சொந்தம்’ என்னும் சிறுபிள்ளைத்தனமான…. (விருப்பப்படுவோர் ‘பைத்தியக்காரத்தனமான…’ என்றும் போட்டுக்கொள்ளலாம்) ஆசைகள்…. ஆசைகள்…..ஆசைகள்!

அ.இ.அ.தி.மு.க-வில் உறுப்பினராக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும், கொள்கை பரப்புச் செயலாளர் போன்ற கட்சியின் சில முக்கியப் பதவிகளிலும் கோலோச்சிய இவரின் அத்தையான ஜெயலலிதா, ‘எம்ஜியாருக்குப் பின் தாம்தாம்’ என்று உரிமை கோரியதையே ஏற்க முடியாத முணுமுணுப்புகளும், முழக்கங்களும் கிளம்பிய நிகழ்வுகளைக்கூட அறியாத, திராவிட இயக்கமான ‘அ.இ.அ.தி.மு.கவில் உறுப்பினர்’ ஆகக் கூட தமது ஆரியத்தன்மை இடம் கொடுக்காத இந்தப் பச்சை மண்ணை, பக்குவப்படுத்தாமலே அனுப்பியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அந்தப் பெண் கூறும் எதுவுமே உண்மையோடும் நியாயத்தோடும் ஒட்டவில்லை.

பெரும்பாலான கேள்விகளுக்கும், பம்மிய அவரின் பாவங்கள்,
“அடப் பரிதாபமே!” என்பதா?
“இந்தா புள்ளே! எடத்தக் காலி பண்ணு…!’
என்று சொல்வதா? என்றுதான் யோசிக்க வைத்தது.

தீபாவின் ஒட்டுமொத்த பம்மல்களும் சேர்த்து நமக்கு ஒன்றை உணர்த்தியது – ‘தீபா குடும்பத்துக்கும், ஜெயலலிதாவுக்கும் ஆகவே ஆகாது! தமது உடன்பிறப்பான அண்ணன், அண்ணி, அண்ணனின் பிள்ளைகள்… ஆகிய எவரையும் ஜெயலலிதா ஏற்கவில்லை!’ என்பதை தீபாவின் அந்தப் பம்மல்களே பட்டவர்த்தனப்படுத்திவிட்டது.

‘நக்கீரன்’ குறிப்பிட்டது போல, தீபாவைத் தயார்ப்படுத்தி அனுப்பி இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்! ஆனால், தயாரிப்புத்தான் சொதப்பலோ சொதப்பல். அதற்காகவெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-சின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. விஷமத்தனமானதுதான் என்றாலும்கூட, இதுபோலத்தான் சிலவேளைகளில் மணலில் கயிறு திரிக்கும் ‘விசுத்தனமான’ முயற்சிகளில் மெனக்கெட்டு இறங்கி, ‘மானங்கெட்டுப்போச்சே….!’ என்று தலையில் முக்காட்டைப் போட்டுக்கொண்டு போகும் நிலைக்கு ஆளாகும் ஆர்.எஸ்.எஸ். தீபா விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது.

மைத்ரேயன், சிரிப்பு நடிகர் சேகர் ஆகியோரை ‘உள்ளே’ அனுப்பி வைத்ததில் தொடங்கி, பலவற்றிலும் தோல்வியைத் தழுவிய காவித்தலைமை, கடைசியாய் எடுத்த ஆயுதம்தான் இந்த தீபா என்னும் மணல்….!
அதுவும்கூட ஆற்று மணலில்லை; எதற்குமே உதவாத கடற்கரை மணல்!
இதை மெய்ப்பித்தது ரங்கராசு ஒளிபரப்பிய, தீபாவின் பேட்டி!
தேங்க்ஸ் ட்டூ ரங்கராசு! மெனிமோர் தேங்க்ஸ் ட்டூ ‘மண்ணு’ தீபா!

‘ஆகாத அத்தை’யை, உயிரோடு உள்ளவரை அணுக முடியாத தீபா, இறந்தபிறகு அவரின் அத்தனைக்கும் ஆசைப்பட்டு… மன்னிக்கவும், ஆசைப்பட வைக்கப்பட்டு, ஆட்டுவிக்கப்படுகிறார். பாவம்! ஏதுமற்று ஏமாந்து நிற்கப்போகிறார்; அவரின் சகோதரன் தீபக்குக்கு உள்ள புத்திசாலித்தனம்கூட இல்லை, ஆட்டுவிக்கப்படும் இந்தப் ‘பார்பி பொம்மை’யிடம்!

கடைசியாக ரங்கராசு கேட்ட கேள்விக்கு, தீபா சொன்ன பதிலில் அவரின் ‘பச்சப்புள்ளத்தனமான’ ஆசை அப்பட்டமாக வெளிப்பட்டது…
“அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆகி, முதலமைச்சர் ஆக விரும்புகிறீர்களா?
உங்க அத்தையாலேயே சமாளிக்க முடியாத மிகக் கடினமான பணிகளாச்சே…?”

“நிச்சயமாக! ஏன் முடியாது? நிச்சயம் முடியும்…!” என்றபோது அந்த முகத்தில்தான் எத்தனை ‘பளிச்’!
ஆனாலென்ன….. அதுவும்கூட செயற்கைப் ‘பளிச்’தான்!
“கட்….கட்….”
“லைட்ஸ் ஆன்…”
“டேக்… ஓகே…!” ‘பளிச்’ அது!

பலாபலன்:

சானலின் நிலைப்பாடு சசிகலாவை முன்னிலைப்படுத்த வேண்டும்; ஊடக முதலாளிகளின் போயஸ் தோட்ட விஜயங்களே அதை உறுதிப்படுத்திவிட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-சின் ஊடக ஆயுதமான ரங்கராசு போன்றவர்களுக்குத்தான் இது இக்கட்டான காலக்கட்டமாகிவிட்டது.

தமது முதலாளித் தலைமையின் ‘தொழிற்கொள்கை’க்கு மாறாகச் செயல்பட முடியாது; அதே சமயம் ‘கொள்கைத் தலைமையின்’ அற்ப ஆசைகளை நிறைவேற்றியாக வேண்டும். அதன் விளைவே இந்தச் சொதப்பலான பேட்டி.

விளைவு:

இதுவரை எடுத்த எந்தப் பேட்டிகளிலும் இல்லாத அளவுக்கு, தீபாவை நோக்கிய நேர்கொண்ட கேள்விகள்…. ரங்கராசுவின் மனதுக்குள் சசிகலாவும், முதலாளி பாலசுப்பிரமணியனும் வந்து வந்து போனது அவருக்கு நேர்ந்த சோகம்!
திமுகவை ஆதரிக்க வேண்டிய சோகமான நிர்ப்பந்தம் நேர்ந்தபோது, “ஒரு கையால் பூணூலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, மறு கையால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!” என்று அக்கிரகாரவாசிகளை நோக்கிக் கோரிக்கை வைத்த ராஜாஜி என்ற ராஜகோபாலுக்கு அன்று ஏற்பட்ட சோகம்தான் இன்று ‘தந்தி டிவி’ ரங்கராசுக்கு ஏற்பட்டுவிட்டது.

சில எடிட்டிங்குகள்,
தீபாவை சைடு போசில்…. லாங் ஷாட்டில் ஜெயலலிதா போலவே தோற்றம் வரும்படி கொண்டுவந்தது…
போன்ற சில சில்லறை வேளைகளை மட்டுமே செய்து, தமது காவித்துவ ஆசைகளுக்குத் தீனி போட்டுக்கொள்ள முடிந்தது ரங்கராசு பாண்டேவால்!

மதுரை அன்புமதி

பாப்பாத்தி!(சிறுகதை) -கி.தளபதிராஜ்

பெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி!. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு, வண்டி வரும் நேரத்தையும், பிளாட்பாரத்தையும் விசாரித்து இரண்டாம் பிளாட்பாரம் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ரயிலை பிடிக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தாலும் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டால் அந்த சங்கடமெல்லாம் ஒரு நொடியில் கரைந்து போய்விடும்!.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும் பசுமையான வயல்வெளியும், சிதறிக்கிடக்கும் மல்லிகை மொட்டுகளைப்போல் விளைந்து நிற்கும் நெற்கதிரில், ஒய்யாரமாய் ஊஞ்சலாடி,சிறகடித்துப் பறக்கும் வெள்ளைக்குருவிகளும், செல்லும் வழி எங்கும் நம்மைத் தொடர்ந்து வரும் அடர்ந்த காடுகளும், ரயில் சத்தம் கேட்டு துள்ளித் தெரித்தோடும் ஆட்டு மந்தைகளும் , ரயில்வே லைனை ஒட்டிய குடிசைகளில் நம்மை எதிர்பார்த்து காத்திருந்து “கை” அசைத்து வழியனுப்பும் சின்னக் குழந்தைகளின் குதூகலமும் அற்புதம்!. புதுப்புது மனிதர்களின் ரயில் சினேகம்!. முன்பின் அறியாத முகங்களோடு தயங்கித்தயங்கிப் பேசத்துவங்கி , பின் வண்டியை விட்டு இறங்கும்போது மனமில்லாமல் விடைபெற வைக்கும் அரட்டைக் கச்சேரி! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ரயிலில் பயணம் செய்வது ஒரு சுகம்னா, ரயிலுக்காக காத்திருக்கும் நேரம் கூட ஒரு சுகம் தான். அதிலும், ஆள் அரவமற்றுக் கிடக்கும் சின்ன சின்ன ஸ்டேஷன்களில் அமர்ந்திருப்பது ஒரு தனி சுகம்!. பரந்து விரிந்து சலசலக்கும் ஆலமரங்களும், அந்த சலசலப்பினூடே சின்னஞ்சிறு குருவிகள் எழுப்பும் சில்மிஷ சத்தமும், இலுப்பைப்பூவும், வேப்பம்பழமும் கலந்து தரும் கிராமத்து வாசனையும் …மனசுக்கு எத்தனை சுகம்!
சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனில் ஜன நடமாட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பலர் பக்கத்து ஊரில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்திற்குச் சென்று திரும்பியவர்கள். பெரும்பாலும் அந்தக் கூட்டம் சேலம் செல்லும் வண்டிக்காகவே காத்திருந்தது. நாகூர் வண்டி வந்து நிற்கும் இரண்டாவது நடைமேடையில் வெய்யிலின் உக்கிரம் தாங்காமல் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் புதிதாக நடப்பட்டிருந்த மரக்கன்றுகளின் நிழலில் ஒன்டியிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஆளில்லாத ஒரு மரத்தை தேடிப்பிடித்து அமர்ந்தபோது, விட்டு விட்டு வீசிய மெல்லிய காற்று அந்தப் புங்கன் மர நிழலில் கலந்து இதமாக இருந்தது.
நான் இருந்த இடத்திற்கு பக்கத்தில், கால்மேல் கால்போட்டு, ஒரு கையை தரையில் ஊன்றியபடி, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதைப்போல் படுத்திருந்த அந்த முதியவரின் அடிவயிற்றில் ஆறு மாதமே ஆன சிசு ஒன்று வெப்பம் தாங்காமல் நெளிந்து கொண்டிருந்தது. பிபி சீனுவாசும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய காதல் கீதம் அவரது கைப்பேசி வழியே அந்த இடத்தை நிரப்பியிருந்தது. அவர் அந்தப் பாடல்களை தன்னை மறந்து தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பாடல் முடிந்ததும், அந்தப்பாடலை ஒட்டி அவர் கொடுத்த “கமென்ட்” கேட்டு சிலர் சிரித்தனர்!.
கடிகாரத்தில் இப்போது மணி மூனு ஆகியிருந்தது. வெகுதூரத்தில் ஒலித்த ரயிலின் ஹாரன் சத்தம் கேட்டு வண்டிக்கு வந்தவர்கள் தங்கள் பைகளையும், மூட்டை முடிச்சுகளையும் எடுத்துக்கொண்டு, ரயில் ஏறத் தயாரானார்கள். நான் ஏறி அமர்ந்த பெட்டியிலேயே தன் தோளில் குழந்தையை சுமந்தபடி, கீழே விழாத குறையாக, தட்டுத்தடுமாறி அந்த முதியவரும் ஏறினார். அப்படி ஏறும்போது அவர் கால் பட்டு சிலர் முகம் சுளித்தனர்.

அவருக்கு முன்பே அவரது கைப்பேசி பாடல் சத்தம் அந்தப் பெட்டியில் நுழைந்தது. ஆனால் அவை இப்போது குத்தாட்டப் பாடல்களாக மாறியிருந்தது.
சிலருக்கு அந்தச் சத்தம் எரிச்சலை உண்டாக்கியிருக்கக் கூடும். அவர் தள்ளாடியதைப் பார்த்த ஒரு பூனூல் ஆசாமி “சரியான போதை கேஸ்” என்று முனுமுனுத்தார். “இங்கெல்லாம் டிக்கெட் பரிசோதகர்கள் வரமாட்டார்களா?” என குரலை உயர்த்தினார் ஒரு நடுத்தர வயதுக்காரர். சில மணித்துளிகள் அவரைப்பற்றி மறைமுகமான கிண்டலும் கேலியும் தொடர்ந்தது.

இதற்கிடையே கைப்பேசி அடிக்கடி கைநழுவி விழுவதும், பின் அதை துலாவி அவர் எடுப்பதுமான காட்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அதைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர், “பெரியவரே! டிக்கெட் எடுத்தாச்சா?” என்று நக்கலடித்தார். அந்த இளைஞரிடம் தன் சட்டைப் பையில் இருந்த ரயில்வே ஊழியர் அடையாள அட்டையைக் காட்டி “ஐ ஆம் ரயில்வே ஸ்டாஃப்” என்று பெரியவர் சீரியஸ்ஸாக சொல்ல, பெட்டியில் மீண்டும் கிண்டல் கலந்த சிரிப்பு !.

அதையெல்லாம் அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. தன் அருகில் ஒரு துண்டை விரித்து அதில் அந்த குழந்தையை படுக்க வைக்க முயற்சித்தார். தோளிலிருந்து இறக்கியதும் குழந்தை வீல் என்று கத்த ஆரம்பித்தது. கைப்பேசியில் நின்றுபோயிருந்த பாடலை மீண்டும் ஒலிபரப்பி குழந்தையின் நெஞ்சில் இதமாக தட்டிக் கொடுக்க, குழந்தை தூங்கிப்போனது.
பெரியவர் இப்போது தன் கைப்பையில் இருந்த ஒரு கதைப் புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினார். அந்த புத்தகத்தின் அட்டையில் மீசையை முறுக்கியபடி ஜெயகாந்தன், எதிரில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
அவ்வப்போது மாறிக்கொண்டிருந்த அந்தப் பெரியவரது முக பாவனை அவர் கதையில் ஒன்றிப்போயிருந்தை உணர்த்தியது. சில நேரங்களில் சில வரிகளை பிறர் காதில் விழும்படி அவர் உரக்கப்படித்தார்.
வண்டி விருத்தாசலத்தை அடைந்த போது குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. புத்தகத்தை சற்று இறக்கி குழந்தையைப் பார்த்த பெரியவர், மேலேயிருந்த “கை”ப்பையை எடுத்து அரவணைப்பாக குழந்தையின் அருகே வைத்துவிட்டு என்னை திரும்பிப்பார்த்தார். பின் வண்டியை விட்டு மெல்ல கீழே இறங்கினார். அந்தப்பார்வை “நான் வரும்வரை என் குழந்தையை பார்த்துக்கொள்” என்று என்னிடம் சொல்வது போல் இருந்தது.
வண்டி விருத்தாசலத்தில் இருபது நிமிடமாவது நிற்கும். இஞ்சினைக் கழற்றி பின் பகுதிக்கு மாற்ற வேண்டும். வெளியே சத்தமாக இருந்தது. சிலர் ‘கார்டி’ டம் ஆவேசமாக சண்டைபோட்டதை ஜன்னல் வழியாக பார்க்க முடிந்தது. “கக்கூஸில் தண்ணி வரலை. எவ்வளவு நேரம் அடக்கிக் கிட்டு இருக்கிறது?” என்று கத்தினார் ஒருவர். “தண்ணி பிடிக்காம வண்டிய எடுக்கக்கூடாது”. எங்கிருந்தோ ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. “வண்டியை ஒழுங்காக நிர்வாகம் பண்ண வக்கில்ல. இதுல வேற டிக்கட் காச ஏத்தப்போறானோலாம். மூனு மாதத்துக்கு முன்னால் பதிவு பண்ணினா ஒரு ரேட்டாம்….! மூனு நாளைக்கு முன்னாடி பதிவு பண்ணினா ஒரு ரேட்டாம்…!”. என நீட்டி முழக்கினார் வண்டிக்குள் ஜன்னலோரமாய் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஆசாமி.
வழக்கமா இந்த வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு இந்த காட்சி புதிதில்லை. பல முறை நானும் தண்ணி இல்லாமல் அவஸ்தைப்பட்டு, விருத்தாசலத்தில் தண்ணி ஏத்தச் சொல்லியிருக்கிறேன். இப்போது கூட அவர்களோடு சேர்ந்து அந்த முறையீட்டில் கலந்து கொள்ள ஆசைதான். பெரியவர் தனியாக விட்டுச்சென்ற சிசு இருக்கையில் இருந்து புரண்டு கீழே விழுந்து விடுமோ என்கிற பயம் என்னை தடுத்தது. வெளியே அதிகரித்த கூச்சலில் குழந்தை விழிக்கவும், குழந்தைக்கு வாங்கிய பாலை தலும்பாமல் ஒரு கையில் ஏந்தியபடி பெரியவர் தட்டுத்தடுமாறி பெட்டியில் நுழையவும் சரியாக இருந்தது.
அழுத குழந்தையைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டார். பால் சூடாக இருந்தது. ஒரு கையால் ஸ்பூனில் பாலை எடுத்து ஊதி ஊதி அவசர அவசரமாக ஊட்ட ஆரம்பித்தார். முதியவரின் கை நடுக்கத்தில் பால் பெரும்பாலும் கடை வாயில் வழிந்தோடியது. பாதி குடிக்கும்போதே குழந்தை மீண்டும் தூங்க ஆரம்பித்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து, அருகில் இருந்த வாஷ்பேசினில் நனைத்து, குழந்தையின் முகத்திலும் கழுத்திலும் வழிந்தோடிய பாலை மெல்ல துடைத்து பின் பழையபடியே இருக்கையில் படுக்க வைத்தார். குழந்தை தூங்கிவிட்டதை மீண்டும் உறுதிப்படுத்திகொண்டு, மறுபடியும் புத்தகத்தை கையில் எடுத்து, கதையை விட்ட இடத்தில் தொடர்ந்தார்.
அவர் இப்போது படிக்கும் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது போலும்; அல்லது அவரது வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் அந்த கதை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்!. முன்பை விட அடிக்கடி வார்த்தைகளை ரசித்து ஏற்ற இறக்கத்தோடு உரக்கப் படித்தார். அவர் உச்சரித்த வரிகளிலிருந்து அது என்ன கதை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
“என்ன பெரியவரே! ஜெயகாந்தன் கதையா? பகல் நேர பாசஞ்சர் வண்டியா?” என்றேன்.

என்னை ஒரு கனம் ஏறிட்டுப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தார்.

சின்ன வயசுல அந்த கதையை நானும்படிச்சுருக்கேன். எவ்வளவு அழகா எழுதியிருப்பார். நம்ம மாதிரி ரயில்ல போயிட்டிருந்த ஒரு மிலிட்டரி காரன்கிட்ட …அதான்… அவன் பேருகூட… “அம்மாசி”ன்னு நினைக்கிறேன்!. பசிக்கொடுமை தாங்காமல் தன் கைக்குழந்தையை அந்த மிலிட்டரிக் காரன் கிட்ட கொடுத்துட்டு ஒரு பொண்ணு செத்துப்போவாளே! அந்தக் கதை தானே?.படிச்சுருகேன். ஜெயகாந்தன் கதைன்னா நானும் ஒரு நேரத்துல தேடித்தேடி படிப்பேன்.
“ஆமாம்!.. ஒங்க பேரு என்னா? குழந்தை ஒங்க பேத்தியா?”
“என் பேரையா கேக்குறீங்க? என் பேரு இராவணன். இந்த கதையில் வர்ற மாதிரி இதுவும் ஒரு அனாதைதான். யாரு பெத்தப் பிள்ளையோ? போன வாரம் இதே வண்டியில ஏறுனப்ப தனியா கிடந்துச்சு. நமக்குத்தான் புள்ள குட்டி எதுவும் இல்லையேன்னு அணைச்சுக்கிட்டேன்”.
பெரியவரின் கண்கள் மீண்டும் புத்தகத்தில் புதைந்தது. அமைதியாகக் கடந்த சில மணித்துளிகளுக்குப் பிறகு அந்தக் கதையின் சில வரிகளை அவர் உரக்கப் படிக்கத் தொடங்கினார்.
“மூன்றாம் நாள் மத்தியானம் அந்தச் சின்னஞ்சிறு ரயில்வே ஸ்டேஷனில் தெற்கே இருந்து வரும் பகல் நேரப் பாசஞ்சர் வண்டிக்காகக் கையில் குழந்தையுடன் காத்திருந்தான் அம்மாசி.


தன் தாய்க்குச் செய்யத் தவறிய ஈமக் கடன்களை யெல்லாம் நேற்று ஒரு தாய்க்குச் செய்துவிட்டு, வாழ்க்கையில் தனக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம் போல் அந்தக் குழந்தையை இரவெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டு அந்த ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தான் அம்மாசி.


இன்று சரியான நேரத்திலேயே அந்த பாசஞ்சர் வண்டி வந்து நின்றது. தலையும் உடம்பும் ஆட்டம் கண்டு விட்ட அம்மாசி, குழந்தையோடு தனது பைச் சுமையையும் ஒன்றாய் எடுத்துச் செல்ல முடியாமல் முதலில் குழந்தையை ஜன்னல் வழியாக ஒரு அம்மாளிடம் கொடுத்துவிட்டு பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

வண்டியில் இருந்தவர்கள் எல்லாரும் குழந்தையையும் கிழவனையும் மாறி மாறிப் பார்த்தனர். ‘இந்தக் கிழவனுக்கு இவ்வளவு அழகான குழந்தை என்ன உறவு’ என்று நினைத்தார்களோ?

“பொண்ணு… மகளா, பேத்தியா?” என்று விசாரித்தாள் சன்னல் வழியாகக் குழந்தையை வாங்கிய அந்த அம்மாள்.

பிள்ளையே பெறாத அம்மாசி ஒன்றும் யோசிக்காமல் உடனே “பேத்தி!” என்று பதில் சொன்னான்.

குழந்தையின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டியவாறே மீண்டும் அந்த அம்மாள் “என்ன பேரு?” என்று வினவினாள்.

அந்த நேரத்தில் ரயில் ‘கூ’வென்று கூவிச் சிரித்தது.

‘குழந்தையின் தாயிடம் பெயரைக் கேட்க மறந்து விட்டோமே’ என்று உதட்டைக் கடித்துக் கொண்டான் அம்மாசி.

ரயிலின் கூவல் நின்ற அதே விநாடியில், தான் கண்டுபிடித்த பெயரை பிரகடனம் செய்தான் அம்மாசி: “பாப்பாத்தி!”

“பாப்பாத்தி! பொருத்தமான பேருதான்!” என்று சிலாகித்தாள் அந்த அம்மாள்.”
பெரியவர் இப்போது கதையை மேற்கொண்டு படிப்பதை நிறுத்தினார்.

நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு நிமிடம் புத்தகத்தை மூடிவிட்டு என்னை ஏறிட்டு பார்க்கிறார்.

“தம்பி என் பேத்திக்கு நான் ‘பாப்பாத்தி’ ன்னு பேரு வைக்க மாட்டேன்!.

நாளைக்கு எவனாவது ” ‘இராவணன்’ குடும்பத்துல ‘பாப்பாத்தி’ ன்னு பேரு இருக்கு. அதனால ‘பாப்பாத்தி’ ங்கிற பேரு ‘திராவிடர்’களைக் குறிக்கும் சொல்!”லுன்னு சொன்னாலும் சொல்லுவான்!”

என்ன தம்பி நான் சொல்றது சரிதானே? எனக் கேட்டு கலகலவெனச் சிரித்தார்.

ரயில் இப்போது வழக்கத்தைவிட வேகமாக‘கூக்கூக்கூ…கூ’ -வென்று கூவி சிரித்தது!

-கி.தளபதிராஜ்

அரசியல் என்பது வெறும் வெற்றி தோல்விகளால் முடிவு செய்யப்படுகிற ஒரு புறப்பொருள் அல்ல

அரசியல் என்பது வெறும் வெற்றி தோல்விகளால் முடிவு செய்யப்படுகிற ஒரு புறப்பொருள் அல்ல, அது ஒரு உயிரியக்கக் கோட்பாடு, கட்சிகள், தலைவர்கள் இவற்றை எல்லாம் தாண்டி ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் இருந்தும் உருவாக்கப்படும் ஒரு வாழ்வியக்க ஆற்றல், தனக்குள் உருவகித்துக் கொண்ட பல்வேறு சிந்தனைகளின் கூட்டுத் தொகுப்பை உள்ளீடு செய்து சமூக இயக்கத்தோடு தனி மனிதர்கள் இணையும் ஒரு அளப்பரிய வெளி அது.

கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு மானுடனின் ஆழ்மனமும் இசைந்து உருவாக்கிய ஒரு இயக்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் முடிந்து விடும் என்று நான் நம்பவில்லை. அதிமுக வின் தலைமைக்கும், அதன் அரசியல் கோட்பாடுகளுக்கும் ஒரு எல்லை வகுத்துக் கொடுத்திருகிறார்கள் வாக்காளர்கள், சட்டமன்ற இயக்கங்களிலும், சட்டமியற்றும் நிலைப்பாடுகளிலும் ஏறத்தாழ சரிபாதியான ஒரு எதிர்க் கட்சியை அவர்கள் கடந்து வர வேண்டும்.

முன்னைப் போல முழு வீச்சில் தான்தோன்றித்தனமாக ஜெயாவால் இயங்க முடியாதபடி ஒரு வலிமையான எதிர்கட்சி வரிசையை எமது மக்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள், ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் தி.மு.க என்கிற சமூக இயக்கத்தின் வேர்களை மீண்டும் வலிமைப்படுத்தி, அதன் குறைகளைக் களைந்து கொண்டு மீண்டெழ ஒரு வாய்ப்பைக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கும் கணிசமான உறுப்பினர்களை வழங்கும் வாய்ப்பையும் தி.மு.க வுக்குக் கொடுத்து தேசிய அளவில் அந்தக் கட்சியின் முக்கியத்துவத்தையும் இந்தத் தேர்தல் மூலம் உயர்த்திக் கொடுத்திருக்கிறார்கள்.

மதச் சார்பும், பார்ப்பனீய உள்ளீடுகளும் நேர்த்தியாகச் செய்யப்படுகிற மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சிக்கும் கூட இந்த திராவிடக் கட்சிகளின் முழுமையான வெற்றி ஒரு வலிமையான “செக்”.

ஆக, எல்லா வகையிலும் இந்தத் தேர்தல் திமுகவைப் பொருத்தவரை நேர்மறையான நம்பிக்கைகளை வழங்கி இருக்கக் கூடிய தேர்தலே, வருத்தம் தரக்கூடிய சில நிகழ்வுகளாக சிலவற்றை இந்தத் தேர்தல் நமக்குச் சொல்கிறது, சட்டமன்றத்தில் முழுமையாக பங்களிப்பை இழந்திருக்கும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளின் தோல்வி உண்மையில் மக்களின் தோல்வியே, ஆனால், அது முழுக்க முழுக்க அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட தற்கொலை முயற்சி.

வை.கோ என்கிற பரிதாபமான பழி தீர்க்கும் வன்மம் கொண்ட ஒரு மனிதனின் மண்குதிரையை நம்பி அவர்கள் ஆற்றில் இறங்கிக் கரைந்து போனார்கள். விஜயகாந்தின் தோல்வி, பிரேமலதா என்கிற இன்னொரு பாசிசத் தலைமையை உருவாக்கும் ஆபத்தில் இருந்து எமது மக்களைக் காப்பாற்றி இருக்கிறது, விஜயகாந்தின் அரசியல் பேரங்களையும், கோட்பாடுகளற்ற அரசியல் இயக்கத்தையும் மக்கள் வலிமையான இரும்பு ஆப்படித்து காலி செய்திருக்கிறார்கள், தனித்துவமான தங்கள் அரசியல் உணர்வால் தேமுதிக என்கிற நச்சுப் பாம்புக்கு சமாதி கட்டி அனேகமாக அழித்து விட்டார்கள்.

கூடா நட்பு கேடாய் முடிந்ததைப் போல, அண்ணன் திருமாவளவன், வை.கோ என்கிற தனிப் பகை அரசியல் செய்யும் ஒரு அரசியல் தரகரிடம் வீழ்ந்து போயிருக்கிறார், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் என்கிற கனவைக் கூட நனவாக்க முடியாமல் அவரை இந்தமுறை அழித்தவர் வை.கோ என்கிற தரகர் மட்டும்தான், மருத்துவர் கிருஷ்ணசாமியின் தோல்வி பல்வேறு ஐயங்களைத் தோற்றுவிக்கும் தோல்வி மட்டுமன்றி, அவர் இன்னும் இணக்கமான அரசியலை ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இயக்கங்களோடு செய்ய வேண்டிய ஒரு அழுத்தத்தை அவர் சார்ந்த சமூகத்துக்கும் உருவாக்கி இருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதிக்க சாதி அரசியலுக்கும், அதீத ஆசைகளுக்கும் மீண்டும் ஒருமுறை மக்கள் ஆப்படித்துப் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், ஆனாலும், அவர்களின் தன்னம்பிக்கையையும், வாக்கு வங்கியையும் கொண்டு நேர்மறையான மாற்றங்களை நோக்கி அவர்கள் பயணித்தால் மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி மீண்டும் கலைக்கப்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்தொடு இணைந்து விடுவதற்க்கான எல்லா சாத்தியக் கூறுகளும் வரும் நாட்களில் உண்டு. பாரதீய ஜனதாக் கட்சியை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை பிணைத் தொகை இழந்த அவர்களின் தலைவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

இறுதியாக அண்ணன் சீமானின் கனவுகள் வெகுதொலைவில் விண்மீன்களுக்கு அப்பால் நிலை நிறுத்தப்பட்டது என்றாலும், அரசியலின் அரிச்சுவடியை இப்போது தான் படிக்கத் துவங்கி இருக்கும் அவரது பயணம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், ஈழம் எமது இதயத்தில் ஆறாமல் இருக்கும் வடு என்றாலும், அது மட்டுமே இங்கு அரசியல் இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியின் உடன்பிறப்புகள் விரைந்து உணர வேண்டும்.

ஆளுங்கட்சியின் வலிமையான பல தலைவர்களை எல்லாம் தங்கள் வாக்கு வலிமையால் விரட்டி அடித்திருக்கிறார்கள் எம்மக்கள், பல இடங்களில் எளிய மக்கள் பணியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள், தொடர்ந்து செய்யப்படும் அரசியல் பரப்புரைகளாலும், விழிப்புணர்வுப் பாடங்களாலும் தான் பணத்துக்காகவும், பல்வேறு உடனடித் தீர்வளிக்கும் புறக்காரணிகளுக்காகவும் வாக்களிக்கும் பாமர மக்களையும், அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையும் மாற்ற முடியும், கட்சிகளைத் தாண்டி, தலைவர்களைத் தாண்டி அப்படி ஒரு அரசியல் மயப்படுத்தலை நாம் தொடர்ந்து செய்வோம்.

இந்தத் தேர்தல் காலக் கொண்டாட்டங்களில் எனது அரசியல் நிலைப்பாடோ, சொற்களோ மாற்று அரசியல் இயக்கங்களில் இருக்கும் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அது தனி மனிதர்களுக்கு எதிரான வன்மமோ பகையோ அல்ல என்பதை உணருங்கள், அரசியல் ஒரு மேம்பட்ட சமூகத்துக்கான வழிமுறை, மாற்று வழிகளில் பயணித்தாலும் நமது ஒற்றை இலக்கு தமிழ்ச் சமூகத்தின் மேன்மை என்பதே இறுதியான உண்மை.

வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகும் அதிமுகவின் தலைவியும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்து, உங்களைத் திருத்திக் கொண்டு இன்னும் சிறப்பான மக்கள் பணியாற்ற முயற்சி செய்யுங்கள், தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அறவழியில் நின்று வரும் ஐந்தாண்டு காலமும் உங்கள் ஆட்சிக்கு உதவும் வகையில் அவர்களை நேர்மையோடும், முதிர்ச்சியோடும் அணுகுங்கள்.

இறுதியாக திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அழிக்க முடியாத சமூகப் பேரியக்கம் என்பதை மூதறிஞர் கலைஞர் மீண்டும் ஒருமுறை தனது கடின உழைப்பாலும், அரசியல் முதிர்ச்சியாலும் உணர்த்தி இருக்கும் மகிழ்ச்சியில் புதிய தலைமுறையின் அகப்பொருளாய் இந்த இயக்கத்தை மாற்றுவோம்.

 – கை. அறிவழகன்

தோல்வி அல்ல இது

தோல்வி அல்ல இது, உயிர்ப்போடும், கொண்ட கொள்கைகளோடும் பீனிக்ஸ் பறவையாகத் தான் எழுந்து வந்திருக்கிறோம், அதிமுகவுக்கு ஒரே எதிரிதான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பல எதிரிகள்.

அதிகாரப் பசியும், துரோக வரலாறும் கொண்ட சகுனிகள் மறைமுகமாக பாசிச ஜெயாவுக்கு முட்டுக் கொடுத்த வாக்குச் சிதறல், மதவாத முகமான ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எல்லா இடத்திலும் ஒரு நாற்காலியைப் போட்டு வளர்க்கும் முதலாளித்துவ ஊடகங்கள், சாதிய ஆற்றல்களை ஒன்றிணைத்து சமூகத்தைப் பிளவு செய்த ஒற்றைச் சாதி ஆதிக்க ஆற்றல்கள்.

அடக்குமுறையை நிர்வாகத் திறன் என்று பறைசாற்றிய அடிமை அரச அலுவலர் கூட்டம், ஊழலில் திளைத்த பணம், நடுநிலை என்கிற பெயரில் திமுகவுக்கு எதிராக எப்போதும் ஒப்பாரி வைக்கும் பார்ப்பனீய வன்மம் கொண்ட கும்பல் என்று திசையெங்கும் பரப்பப்பட்ட அவதூறுகளையும், தடைகளையும் தாண்டியே 100 சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்ற எம்மக்கள் எங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

சமூக நீதியின் மீது அளவற்ற பற்றுதலும், நல்லிணக்கமும், நம்பிக்கையும், அரசியல் அறிவாற்றலும் கொண்ட மிகப்பெரிய ஒரு இளைஞர் படை தி.மு.கவில் வளர்ந்து வருவதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாக நமக்குச் சொல்கிறது. ஏறத்தாழ 110 சட்ட மன்ற உறுப்பினர்கள் தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கையை வென்று காட்டியிருப்பதை மிகப்பெரிய தோல்வியைப் போலச் சித்தரிப்பார்கள், அழிந்தோம், காணமல் போனோம் என்றெல்லாம் இன்னும் சில நாட்களுக்குப் பேசுவார்கள்.

உண்மையில், இத்தனை எதிர்களையும் தாண்டி உயிர்ப்போடும், எழுச்சியோடும் எழுந்து வந்ததைக் கொண்டாடுங்கள், நாமே பாதித் தமிழகத்தின் மக்களுக்குப் பணியாற்றப் போகிறோம், பதவியும், அதிகாரமும் மட்டும்தான் ஜெயாவுக்கு, மிகச் சிக்கலான ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் தென் மூலையில் இருக்கும் ஒரு பழமையான இனத்தின் சமூக நீதியின் மீதான நம்பிக்கையும், எழுச்சியுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த வெற்றி.

முதல்வருக்கும் மேலான நம்பிக்கையையும், பொறுப்பையும் மீண்டும் வென்று காட்டியிருக்கிறார் தலைவர் கலைஞர். அரசியல் என்பது ஆட்சி அதிகாரத்தை நுகரும் பதவிகளால் காட்டப்படும் கட்டிடம் அல்ல, மாறாக, வருங்கால சந்ததியை வழிநடத்தி அறமும், ஆற்றலும் கொண்ட மேம்பட்ட சமூகத்தை உருவாக்கும் ஒரு பாதை, நாம் சரியான பாதையில் தான் இருக்கிறோம், இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்.

– கை.அறிவழகன் 

திராவிட கட்சிகள் ஒன்றும் செய்யவில்லையா?

தமிழகத்தில் திராவிடர் இயக்கம் சாதித்தது மலையளவு. அவற்றை ஒரே கட்டுரையில் சொல்லிவிட முடியாது என்றாலும் ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனையை மட்டும் இந்த தேர்தல் நேரத்தில் அவசியம் சொல்லியாக வேண்டும். தமிழகத்துக்கு திராவிடக் கட்சிகள் எதையுமே செய்யவில்லை என்ற சிலரின் கற்பனாவாதத்தை முறியடிக்க வேண்டியது அவசியம்.

கேவலம் ஒரு தேர்தல் வெற்றிக்காக, 50 ஆண்டுகள் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் சீரழித்துவிட்டன என்று ஒரு பொய் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது!

மனிதவள மேம்பாடு தொடர்பாக ஐநா சபை கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் இந்தியா 130வது இடத்தைப் பிடித்தது. இந்தியாவில் உள்ள மாநிலங்களை வரிசைப்படுத்தும்போது கேரளாவுக்கு முதலிடம், ஹிமாச்சல் பிரதேசத்துக்கு இரண்டாம் இடம், தமிழ்நாட்டுக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

தமிழ்நாட்டைப் போலவே பெரிய மாநிலங்களான மகாராஷ்டிராவும் குஜராத்தும் பின்தங்கியுள்ளன என்பதை கவனியுங்கள்!

மனிதவள மேம்பாட்டு குறியீட்டை வருவாய், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடுவார்கள்.

அந்த வகையில் கேரளாவையும் ஹிமாச்சலையும் தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியாது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். காரணம், கேரளாவின் வருவாய் பெரும்பகுதி வெளிநாட்டில் இருப்போர் சம்பாதித்து அனுப்பும் வருவாய். ஆகவே கேரளாவில் இருப்பது Money Order Economy என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். கேரளாவில் சொல்லிக்கொள்ளும்படி தொழிற்சாலைகளும் கிடையாது.

ஹிமாச்சலைப் பொருத்தவரை, அது மலைப்பகுதி, குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம். அதனால் மக்களுக்கு போதுமான அளவு நிலம் கிடைத்தது. அதோடு, அங்கு caste rigidity இங்கு இருக்கும் அளவுக்கு கிடையாது. எனவே, அந்த வகையில் பார்த்தால் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தமிழத்தின் பொருளாதாரத்தைப் பாராட்டியிருக்கிறார். காரணம், தமிழகத்தில் இருப்பது productive economy.

கல்வி, சுகாதாரம் என்ற குறியீட்டில் பார்த்தால் தமிழகம் பிற எல்லாம் மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

கல்வியில் அனைத்து ஜாதி மக்களுக்குமான வாய்ப்பு திராவிடர் இயக்கத்தால்தான் சாத்தியம் ஆனது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தான் 69 சதவிகிதம் வரை மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

ராமதாஸ், தமிழிசை ஆகியோர் படித்து டாக்டரானது இந்த இடஒதுக்கீட்டால்தான்! இந்த சமூகநீதியை வென்றெடுக்க திராவிடர் இயக்கத் தீரர்கள் செய்த தியாகங்கள் சொல்லில் அடங்காதவை!

இன்றைக்கு அனைத்து சமூகத்திலும் ஏராளமான மருத்துவர்கள் உண்டு. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும்கூட ஒருவர் மருத்துவர் ஆகியிருக்கும் வாய்ப்பு. கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் அருந்ததியருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். இதோ, இப்போது அந்த அருந்ததியர் சமூகத்தில் இருந்து ஒரு பெண் முதல் மருத்துவராக வந்திருக்கிறார்.

இதனால், ஏற்பட்ட சமூக மாற்றத்தை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! Health Careல் தமிழகம் ஏன் சிறப்பாகத் திகழ்கிறது? Effective implementation of healthcare schemes இங்கே எப்படி சாத்தியமானது? யோசித்துப் பாருங்கள்.

திராவிடர் இயக்கம் கொடுத்த இடஒதுக்கீட்டின் காரணமாக இன்று எல்லா சமூகத்திலும் மருத்துவர்கள் உருவாகிவிட்டார்கள். ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்றால்கூட, என்னுடைய சொந்தக்காரப் பெண் பக்கத்து ஊரில் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். அவரைப் போய் பாருங்கள் என்று யாரேனும் ஒருவர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.

இதயச் சிகிச்சை என்றாலும்கூட யாராவது ஒருவர் அவருக்கு தெரிந்த மருத்துவரை நமக்கு பரிந்துரை செய்கிறார்கள். சாதாரண காய்ச்சலுக்குக் கூட நமக்கு தெரிந்த மருத்துவருக்கு போன் செய்து மாத்திரை, மருந்து பெயர் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறோம்.

நமக்கு தெரிந்த, நம் ஊரைச் சேர்ந்த அல்லது நமக்கு தெரிந்தவருடைய அறிமுகமான மருத்துவர் என்று ஊரில் உள்ள எல்லா பெரிய மருத்துவமனைகளிலும் இருக்கிறார்கள். நாம் அவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம். சுகாதாரத்துறையில் ஒரு Social Access கிடைத்தது எப்படி? இந்த துறை Elite Controlலில் இருந்தால் சாதாரண மக்களுக்கு இது சாத்தியமாகுமா?

இவையெல்லாம் என்ன கனவில் நடந்ததா? அல்லது ஒரே நாளில் நடந்ததா? திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை அல்லவா இது? எதோ போகிற போக்கில், திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு போகிறீர்களே, உங்களுக்கு மனசாட்சி உண்டா?

போய் குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் மேற்கு வங்கத்தையும் பாருங்கள் சுகாதாரத் துறையில் இதுபோன்ற Social Access உண்டா? மேல்தட்டு சமூகத்தின் கையில்தானே சுகாதாரத் துறை இருக்கிறது. மறுக்க முடியுமா? மண்டல் பரிந்துரை அமலாக்கத்துக்கு பிறகுதானே இந்த நிலையில் சிறிய மாற்றம் தென்படத் தொடங்கியிருக்கிறது.

கல்வியில், சுகாதாரத்தில், வருவாயில் என்று தமிழகம் சிறந்து விளங்குவதற்கு காரணம் திராவிடக் கட்சிகள் தானே! இன்றைக்கு மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வை மத்திய அரசு புகுத்தும்போது, அதை வலுகொண்டு திமுகதானே எதிர்க்கிறது?

சிந்தியுங்கள்! திமுக நமது இயக்கம், நம் மக்களுக்கான இயக்கம் என்பதை மறவாதீர்கள்! சிறுபிள்ளைத்தனமான வாதங்களில் ஈடுபட்டு அறிவை இழக்காதீர்! உதயசூரியனுக்கு வாக்களித்து தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்துவோம்!

– வெற்றிகொண்டான்

ஈழ விடுதலைப் போர்

ஈழ விடுதலைப் போரில் தோல்வியைத் தழுவி கூண்டோடு அழிந்து போன புலிகளும் சரி, அவர்களோடு கடைசி வரை இருந்த மக்களும் சரி, ஒரு தீவிர மனநிலையில் இருந்தார்கள், அவர்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் அல்ல, அவர்களுடைய வாழ்க்கை முறை போருக்குப் பழகிப் போயிருந்தது, சாவை மிக நெருக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் அவர்கள்.

பல ஈழ நண்பர்களோடு பேசிப் பார்த்திருக்கிறேன், அவர்கள் மரணம் குறித்த அச்சம் அதிகம் இல்லாத ஒரு போர்ச் சூழலைப் பழகிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் வாழ்க்கை முறையே போர் என்றாகி ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டிருந்தது, அவர்களுக்கு நன்றாகத் தெரியும் இது இறுதிப் போர், இந்தப் போருக்குப் பின்னே சிங்களவனா? தமிழனா என்கிற கேள்விக்கு விடை தெரிந்து விடும்.

வாழ்வா? சாவா? என்கிற இரண்டே தேர்வுகள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. வைராக்கியத்தோடு பலர் புலிகளோடு இருந்தார்கள், வெகு சிலர் வேறு வழியில்லாமலும், இன்னும் சிலர் அழுத்தங்களாலும் முள்ளிவாய்க்காலில் அடைந்து இருந்தார்கள்.

வெறியேறிய சிங்களப் படைகளுக்கு முழு சுதந்திரத்தோடு தமிழர்களைப் படுகொலை செய்யும் அதிகாரத்தை உள்நாட்டு இனவெறி ஆட்சியாளர்கள் மட்டுமன்றிப் பன்னாட்டு அதிகார மையங்களும் வழங்கி இருந்தன, ஏனெனில் ஈழம் என்பது பொதுவுடமைச் சித்தாந்தமும் பார்ப்பனீய மனநிலையும் இல்லாத இனக்குழுக்களை எழுச்சி கொள்ள வைக்கும் ஒரு தவறான அரசியல் மாதிரி என்பதை முதலாளித்துவ தேசியங்களும், பார்ப்பனீய ஆற்றல்களும் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டு காய் நகர்த்தின.

வைராக்கியமும், சுயமரியாதையும் கொண்ட ஈழ மக்கள் சாவை ஒரு பொருட்டாகக் கருதவில்லை, இறப்பு உறுதி என்று தெரிந்தும் புலிகளோடு இருப்பதில் இருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. அப்படியே பலர் இறந்தும் போனார்கள்.

இறுதிக் கட்டப் போர் நேரத்திலும் அப்போது முதல்வராய் இருந்த தலைவர் கலைஞரும் சரி, புலிகளோடு இணக்கமாக இருந்த திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் சரி, உளப்பூர்வமாக ஈழ மக்களின் மீதும் புலிகளின் மீதும் உண்மையான கரிசனம் கொண்டவர்களாகவே அரசியல் செய்தார்கள், நடுவண் அரசுக்குப் பல வழிகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இறுதியாகத் தலைவர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது கூட ஒரு நேர்மையான மானுடனின் அழுகுரலாகவே இருந்தது, அரசியல் செயல்பாடுகளுக்கு நடுவே இந்த முடிவை ஒரு உணர்வு வயப்பட்ட நிலையிலேயே கலைஞர் எடுத்தார், திட்டமிடுதலோ, வேறு எந்த எதிர்பார்ப்புகளோ இல்லாத நிலையில் எதாவது செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே கலைஞர் கடற்கரையில் உண்ணா நோன்பைத் துவக்கினார். இது ஈழ மக்களின் மீதும் புலிகளின் மீதும் உண்மையான நேசம் கொண்ட தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரியும்.

இன்று ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் சூழலில் நடக்க இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் ஈழ அரசியலைப் பேசுகிறவர்கள் யாரென்று ஒரு பட்டியலைப் போட்டீர்களேயானால், அது அதிமுக அல்ல, அது பாட்டாளி மக்கள் கட்சி அல்ல, அது விடுதலைச் சிறுத்தைகள் அல்ல, குறிப்பாக சிலர் வருவார்கள், அரசியல் முக்கியத்துவம் இழந்த, இனித் தமிழக அரசியலில் எந்த இடமும் இல்லாமல் காணாமல் போகப் போகிற வை.கோ வைப் போன்ற பெரியவர்கள்.

ஏதாவது பேச வேண்டும் என்கிற வெறியில் மக்களற்ற இடங்களில் ஒலிபெருக்கியை முறைத்துக் கொண்டு பேசும் பாரதீய ஜனதாக் கட்சியின் பார்ப்பனீய முலாம் பூசப்பட்ட தேசபக்தாஸ். இது போக, புலம் பெயர்ந்த ஈழ மக்களின் உழைப்பையும் பணத்தையும் உறிஞ்சித் தமிழகத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிற நாம் தமிழர் கட்சியின் வாய்ப்புரட்சி வீரர் சீமானால் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கும் இளைஞர்கள், மற்றும் தொடர்ந்து பல பொய்களைச் சொல்லியும், உணர்வூட்டியும் புலம் பெயர்ந்த மக்களின் உழைப்பைக் கொள்ளையடிக்கும் மார்கழி 15, பங்குனி 26 போன்ற சில ஒட்டுக் குழுக்கள்.

இவர்களின் அரசியல் வாழ்க்கை மட்டுமன்றி அன்றாட வாழ்க்கையும் ஈழ அரசியலின் கருணையில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது, தலைவர் கலைஞரைத் திட்டியும், தூற்றியும் வீதியில் திரிந்தால் மட்டுமே தமிழக அரசியல் குறித்த எந்த அரிச்சுவடியும் தெரியாத புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பணம் அனுப்புவார்கள். சீமான் மற்றும் பங்குனி, மார்கழியார்களின் பொருளாதார வளமும், அரசியல் எதிர்காலமும் கலைஞரைத் தூற்றுவதிலும், திமுகவுக்கு எதிரான அரசியல் செய்வதிலும் தான் அடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனும், தலைவர்களும் ஈழத்தின் மீது பேரன்பு கொண்டவர்கள், உளப்பூர்வமான ஈடுபாடு கொண்டவர்கள், கைக்காசைச் செலவழித்துக் கூட்டங்கள் நடத்தி ஈழச் சிக்கலை உலகளாவிய அரசியல் மயப்படுத்தியவர்கள், இன்னும் சொல்லப் போனால் ஈழ அரசியலை உங்களுக்கு அறிமுகப் படுத்தியதே ஒரு திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவனாகத் தான் இருப்பான் என்பதை நினைவு கூறுங்கள். சீமான்களே, பங்குனி மார்கழிப் போராளிகளே, உங்கள் ஈழப் புலி வேடம் எதற்கானது என்பதை இப்போது பல புலம் பெயர்ந்த தமிழர்களே உணரத் துவங்கி விட்டார்கள், ஆகவே இது உங்களுக்கான கடைசி வாய்ப்பு, இயன்ற அளவு சுருட்டுங்கள்.

மே 19 க்குப் பிறகு உங்கள் புலி வேடம் களைந்து உண்மையான நரிகளாய் நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள், அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் முதல்வராகப் பதவியேற்று மீண்டும் ஈழச் சிக்கலை தேசிய அரசியலாக்கி இயன்ற அளவு அதிகார ஆற்றலை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பார். அவர் ஒருவரால் மட்டுமே அது சாத்தியம் என்பதை வாய்ப்புரட்சி சீமான்களும், மார்கழி மற்றும் பங்குனி வீரர்களும் மீண்டும் ஒருமுறை உணர்வார்கள்.

– கை.அறிவழகன்