Category Archives: கவிதை

பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!

பெரியார் பற்றி
ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!
*———————————————————————-*

சாதிமதச் சேறோடு,
சங்கத்தமிழன் பேரோடு,
பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு,
பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…!

பிறந்தபொழுது
உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்”
இறந்தபொழுது
என்நாட்டிற்கு நீ “நாயகர்”

குளிப்பதென்றால்
குழந்தையாக மாறிச் சிணுங்குவாய்,
மக்கள் விழிப்பதென்றால்
தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…!

பள்ளிக்கூடம் சென்று
நீ
பாடம் படிக்கவில்லை,
உனைப்படிக்கவே எங்களுக்கு
நேரம் போதவில்லை…!

எதுகை,மோனை எதுவும்
உன்பேச்சில் என்றுமில்லை,
பகுத்தறிவு ஒன்றே
நீ பெற்றெடுத்த பிள்ளை…!

கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு
கருத்துச் சண்டை போட்டாய்,
வெறுப்பையே வெகுமானமாய் கொண்டு
தமிழனிடமிருந்தே தமிழனை
மீட்டாய்…!

வைக்கம்வரை சென்று
வைராக்கியம் காட்டினாய்,
கள்ளுக்கடை போராட்டத்தை
கடைக்கோடி தமிழனுக்கும் ஊட்டினாய்…!

கள்ளை ஒழிக்க உன்வீட்டு
தென்னையெல்லாம் வெட்டினாய்,
ஆரியம் அழிக்க
அன்றாடம் அவர்தலையில் குட்டினாய்…!

பேண்பார்த்துக் கொண்டிருந்த
பெண்ணினத்தை,
வான்பார்க்க வைத்தாய்,
தாயம்போட்டுக் கொண்டிருந்தவளையும்
தன்சுயம் உணர வைத்தாய்…!

தனக்கொரு பிள்ளையென
தனித்து பெற்றுக்கொள்ளவில்லை,
தன்மான தந்தையே எமக்கு
உனைத்தவிர வேறுயாருமில்லை…!

இருண்ட இனத்தை வெளுப்பாக்கிய
வெண்தாடிக் கிழவா,
உன்வேலை இன்னும் மிச்சமிருக்கு
எழு.
வா..!

*———————————————————————*
துளிர்(எ)சீ.வினோத்குமார்.
ஊ.ஒ.தொ.பள்ளி
பிள்ளையார் பட்டி.
பொன்னமராவதி ஒன்றியம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

ON PERIYAR

A Super nova blaz’d in the azure sky
Looked down and saw a world of caste and cant
Its frown made the Brahmin priest and devil fly
No more could they give their shibboleth a godly slant.

The poor Harijan, banned from entering Vaikkom.
Curs’d his own Fate and thought it was god-made,
A young handsome Man went there and said: “Come,
We shall walk these streets, till shadows fade!”

He was a Patriot and loved this Great Land,
He loved Man and hated superstition and caste,
He has left his Great Foot-prints on times sand
They shall doubtless for ever last!

A tall, handsome Man, Great and good,
He lived all his Life for the noblest cause,
He sleeps now forever, as you and I should,

We and posterity will rue the loss.

He spoke the Truth that there is no god,
Many were angry for they loved but fraud,
He saw very clearly that god was common sad.
He was laid to rest on Christmas Day, forget not this Lord!

-A.S.K.
(’பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா’ நூலிலிருந்து…)

எங்கள் அப்பா

அப்பா!
எல்லா அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
தாத்தாவும்
பாட்டியும்
இந்நேரம்
முசிறியில்
மூச்சோடு
இருந்திருப்பார்கள்!

அப்பா!
எல்லா
அப்பாக்களையும்
போல்
நீயும்
இருந்திருந்தால்
என்
அக்கா
அமெரிக்காவிலும்
என்
அண்ணன்
கனடாவிலும்
நான்
இலண்டனிலும்
சொகுசாகப்
படித்துக்
கொண்டிருப்போம்!

என்
அப்பாவா நீ
இல்லையப்பா
நீ
நீ
நீ
எங்கள்
அப்பா!

எங்கள் என்பது…
அக்கா
அண்ணன்
நான்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது…
செஞ்சோலை
காந்தரூபன்
செல்லங்கள்
மட்டும்
இல்லை!

எங்கள் என்பது…
உலகெங்கிலும்
உள்ள
என்
வயது
நெருங்கிய
என்
அண்ணன்கள்
என்
அக்காள்கள்
என்
தங்கைகள்
என்
தம்பிகள்
அனைவருக்குமானது!

ஆம்…அப்பா!
நீ
எங்கள்
அனைவருக்குமான
‘ஆண் தாய்’
அப்பா!
அதனால்தான்
சொல்கிறேன்…

நான்
மாணவனாக
இருந்திருந்தால்
என்
மார்பில்
மதிப்பெண்களுக்கான
பதக்கங்கள்
பார்த்திருப்பாய்!

நான்
மானமுள்ள
மகனாய்
இருந்ததால்தானே அப்பா
என்
மார்பில்
இத்தனை
விழுப்புண்கள்
பார்க்கிறாய்!

சிங்கள வீரர் ஒருவரது
மனைவியின்
வயிற்றில்
வளர்ந்த
கருவுக்கும்
கூட
கருணை காட்டிய
அப்பா!

உன்
பிள்ளை
உலக
அறமன்றத்துக்கு
முன்
ஒரே
ஒரு
கேள்வி
கேட்கிறேன்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
துப்பாக்கி
தூக்கினால்
அது
போர்க்
குற்றம்!

பன்னிரெண்டு
வயது
பாலகன்
மீது
துப்பாக்கியால்
சுட்டால்…
இது
யார்க்
குற்றம்!

என்னைச் சுட்ட
துப்பாக்கியில்
எவர்
எவர்
கைரேகைகள்!

உலக
அறமன்றமே!
உன்
மனசாட்சியின்
கதவுகளைத்
தட்டித்
திறக்க

உலகெங்கிலுமுள்ள
பாலச்
சந்திரர்கள்
அதோ
பதாகைகளோடு
வருகிறார்கள்!

பதில்
சொல்லுங்கள் !

– பாவலர் அறிவுமதி

குஷ்பு புடவையும் குமுறும் கடவுளும்!

கிருஷ்ணன்:
கோபியர் கொஞ்சி
நாளாச்சு!
அவதாரம்
தரித்தகாலம்
அழிஞ்சே போச்சு!
குஷ்பு புடவையில்
நான் தான்!
நினைக்கையிலே
தேன்தான்!
இராமன்:
மயக்கம்
தீரலையோ?
மன்மதா!
பக்தனெல்லாம்
படைதிரட்டி
நிற்கிறான்!
ஏகபத்தினி விரதன்
ராமன்! -குஷ்பு
தேகம் சுத்தும்
சேலையிலா?
விலாநோக
விம்முகிறான்!
விவரங்கெட்ட
பக்தன்.
தூணிலும்
துரும்பிலும்
இருக்குமெனக்கு
குஷ்பு
துணியிலிருக்க
உரிமை இல்லையா?
ஆதாரத்தோடு
ராமன் கேட்க
ஆத்திரத்தோடு
நுழைந்தார்
ஆஞ்சநேயர்!
ஆஞ்சநேயன்:
அடே ராமா!
ஆண்டு அனுபவித்த
அதிர்ஷ்டகட்டைகள்
நீங்கள்!
அடியேன் கதை
அப்படியா?
அடித்தது அதிர்ஷ்டம்
என்றிருந்தேன்!
கட்டும் புடவையில்
கட்டை பிரம்மச்சாரியா?
கழட்டு என்றே
கறைகின்றான்!
அவன்மட்டும்
அடிஷனல் வைத்து
அலைகின்றான்!
ராமன்-கிருஷ்ணன்-
ஆஞ்சசேயன் மூவரும்:
பறிக்காதே!பறிக்காதே!!
ஆண்டவன் உரிமையை
பறிக்காதே!
எங்கள் உரிமை!
எங்கள் உரிமை!!
தூணில் இருப்பதும்
துணியில் இருப்பதும்
எங்கள் உரிமை!
எங்கள் உரிமை!!
பறிக்காதே!பறிக்காதே!!
ஆண்டவன் உரிமையை
பறிக்காதே!

நவம்பர் 13

இன்று
இருபதாம் நூற்றாண்டின்
நரகாசுரனுக்கு
தமிழ் மண்ணின்
தேவிகள்
பெரியார்
எனப் பெயர் சூட்டிய
நாள்.

அறியாராய் இருந்த
தமிழர்களை,
ஆரியம்
சிறியாராய் அவமதித்த
திராவிடர்களை,

எதுவும் தெரியாராய் ஆக்கிட
சூழ்ச்சி புரிவோரின் ஆணவத்தைச்
சுட்டெரித்திடப்
பகுத்தறிவுப் பாடம் சொல்லிய
சூரியனுக்குப்
`பெரியார்’ எனப் பட்டம்
சூட்டியது சரிதானே என்று
உலகம் சொல்கிறதே
இன்று….!

     – சம்பூகன்

மதுவிலக்கு: ராஜாஜி கிண்டலும், கலைஞரின் பதிலும்

தேர்தலில் தோல்வியடைந்த ராஜகோபாலாச்சாரியார் கலைஞரை நிந்தித்து கல்கியில் எழுதிய கவிதையும், அதற்கு கலைஞர் கவிதையாலேயே கிழித்தெறிந்த பதிலும்.

ராஜாஜியின் கவிதை

“சாராய சகாப்தம்’

ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல
ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா
தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்;
வீழ்ந்தவர்கள் முன்போல் வாட
ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு
வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு
வரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார்
கள்ளும் சாரயமும் தந்தார்
அரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில்
போற்றுக முதல்வர் பணியை!
சோற்றுத் திண்டாட்டம் – ஏழை மனைகளில்
சாராயக் கடைகளில் பெரும் கொண்டாட்டம்!
போற்றுக தமிழ் நாட்டு முதல்வரை!
சாராயக் கடைகளை அரங்கேற்றினார்
வரம்பெற்ற கருணைச் செல்வர்!

-ஆச்சாரியார்

************************************
ஆச்சாரியாருக்கு கலைஞரின் பதில் கவிதை:

கிழ பிராமணா! உன் வாக்குப் பலித்தது

`சாராய சகாப்த மென்று ஓர் கவிதை
சக்ரவர்த்தி ராஜாஜி மாமுனிவர்
தாராளமாய்க் `கல்கி ஏட்டில் தீட்டியதால்
யார் யாரோ சுதந்தராக்கள் மகிழ்கின்றார்.
`பார் பாராய்க் குடித்தவர்கள் பர்மிட் வாங்கி
நேர்மாறாய்ப் பேசுகின்றார் புத்தர்போல!
இதயத்தில் நோய் என்றும்
இரு யூனிட் வேண்டுமென்றும்
இதோ `டாக்டர் சர்டிபிகேட் பாருமென்றும்
இங்கிருக்கும் சுதந்தராக்கள் குடித்த கதைஊர் அறியும்
பணக்காரர் பகல் வேடக்காரரெல்லாம்
மணக்கும்மது வாங்குவதற்கு பர்மிட் வேண்டும்
பகட்டுக்கு ஒருநீதி – பாவம் ஏழைக்கு ஒருநீதி
பஞ்சாங்க சாத்திரத்தின் புதுநீதி
வாடுகின்ற ஏழைக்குடிகாரன்
வார்னீஷைக் குடித்து செத்த போதும்தனம்
மேவுகின்ற சீமான்கள் – போதை
மோதுகின்ற `விஸ்கி, ரம் அடித்தபோதும்
நவ்ரோஜி வீதியில்தான்
நாற்றம் துளைக்கலையோ?
நாடுதான் பார்க்கலையோ?
`ஆழ்ந்த அறிஞர் அண்ணா என்று
அன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்
அயர்ந்தேதான் போனேன் அய்யா!
இன்னொருநாள்,
அண்ணாபற்றி அரசாங்கப் பாடநூல் வந்தபோது அற்பவயதில் செத்தவரெல்லாம்
அவதாரப் புருடர் தாமோ என எழுதி
அவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தாபோகும்?
ஒரிசாவில் இவர்கட்சி ஆட்சியிலே
ஓடிற்றே மதுவின் வெள்ளம்! அப்போது
தரிசாகப் போனவது ஏன் இவரின் உள்ளம்?
வரம் பெற்ற கருணைச்செல்வா என – எனை
வாழ்த்துகின்றார்! வணங்குகின்றேன்
வரம் தந்தார் இவரல்ல; நேசக்
கரம் தந்த நாட்டு மக்கள்!
வரம் பெற்றேன் – பெரியார் அண்ணா தந்த நெஞ்ச
உரம் பெற்றேன்.
இப்போதும் சொல்கின்றேன்,
கேட்டிடுக!
இந்தியா முழுமைக்கும் அறவே
மதுவிலக்கு கொண்டுவர
சட்டம் செய்தால்:
சிரம் தாழ்த்தி கரம் குவித்து
சிறப்பான செயல் என்று போற்றி நின்று
செயலாக்க முந்திடுவேன்
அதன் பிறகும்;
இதய நோய் என்று – சிலர்
இருட்டினிலே குடிப்பதையும்
இனி அனுமதிப்பதில்லை யென்று விதி செய்வேன்
முழுவிவரம் தேவை யெனில்
பட்டியல் பிறகு சொல்வேன்!

– டாக்டர் கலைஞர்

(17.9.1971 ஈரோடு தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் போது பாடிய கவிதை)

(தகவல்: ’முகநூல்’ அன்சாரி முஹம்மது)

திசைகாட்டும் கருவிகள்

இந்தி எதிர்ப்பு
மாநாடு!
ஈரோடு எங்கும்
கொடிக்காடு!

அகங்காரம்
அறுத்தெரிந்த அண்ணா
அலங்கார வண்டியில்
அமர்ந்திருக்க…

தம்பிக்குப் பின்னால்
தடியூன்றி
தள்ளாடித் தள்ளாடி
தாடிக்கிழவன்
நடந்து வர…

ஊர் மெச்சிய
ஊர்வலம்
உற்சாகமாய்
அரங்கேறிற்று!

வழி நெடுகிலும்
குழுமியிருந்த கூட்டம்…
அய்யாவின்
பனித்துளி நிகர்த்த
பாசம் பார்த்து
கண்ணீர்த்துளிகள்
உதிர்த்தன

கரைபுரண்ட
களிப்போடு!
எனக்கு வயது
எழுபதைத் தாண்டிற்று!

என் முதுமை
என் முதுகில் தட்டி…
பெட்டிச் சாவியைப்
பிள்ளையிடம்
கொடு என்று
வேண்டிற்று!

மாநாட்டு மேடைதனில்
களங்கமற்ற
அய்யா பேச்சு – அவரை
வணங்கிடச் சொன்னது
வந்திருந்தோரை!

அண்ணன் தம்பி உறவு
அறுபட்டுப் போயிற்று!
தந்தை தனயனாயினர்
தம்பியும் அண்ணனும்!

கூடுதலாய் கூடுதல்
குற்றமோ என்னவோ?
பிரிவு என்னும்
பேராயுதம்
பரிவு காட்ட மறுத்தது!

உரசல்களில்லா
உறவுகள் ஏது?
ஒரு கூட்டுப் பறவைகள்
இருவேறு திசைகளில்
மனமின்றி பறந்தன!

பேராசான் பிறந்தநாளில்
பிறந்தது
பேரறிஞரின்
தி.மு.க. எனும்
திராவிடக் குழந்தை!

இரட்டைக் குழல்
துப்பாக்கிகளாகின
இருவர் இயக்கமும்!

அறிவாசனின்
அடுக்குமொழி முழக்கம்
துடிப்பான களப்பணி
வெற்றிக் கனியாகி
விழுந்தது அவர் மடியில்!

ஆட்சி கிடைத்ததும்
ஆசானை மறந்துவிட
மனிதர்களால் முடியும்
மகான்களால் முடியுமா?

அன்னை கரங்களில்
பிள்ளை விழுவதுபோல்
அய்யா கரங்களைப்
பற்றி – அண்ணா
வணங்கிய காட்சி…
கோடிக் கண்களுக்கு
குதூகலம் தந்தன!

தமிழனின்
தனித்துவத்தை
தரணியில் உயர்த்திய
தந்தை சொன்னார்…
என் அந்தஸ்தை
கூட்டிட்டார் – என்
இளவல்
அண்ணா என்று!

கோட்டையில் – திராவிடக்
கொடி உயர்த்திய -அண்ணா
எட்டுத் திசைகளிலும்
கொட்டி முழங்கினார்!
நான் கண்டதும்
கொண்டதும்
அய்யா ஒருவரே என்று!

திராவிட இனத்தின்
திசைகாட்டும் கருவிகள்
அய்யா அண்ணா
புகழுக்கு அழிவேது?
இந்த இருவருக்கும் நிகர் ஏது?

கவிஞர். மணிவேந்தன்.
மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர்
மதிமுக.
நன்றி :- சங்கொலி