பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!

பெரியார் பற்றி
ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!
*———————————————————————-*

சாதிமதச் சேறோடு,
சங்கத்தமிழன் பேரோடு,
பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு,
பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…!

பிறந்தபொழுது
உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்”
இறந்தபொழுது
என்நாட்டிற்கு நீ “நாயகர்”

குளிப்பதென்றால்
குழந்தையாக மாறிச் சிணுங்குவாய்,
மக்கள் விழிப்பதென்றால்
தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…!

பள்ளிக்கூடம் சென்று
நீ
பாடம் படிக்கவில்லை,
உனைப்படிக்கவே எங்களுக்கு
நேரம் போதவில்லை…!

எதுகை,மோனை எதுவும்
உன்பேச்சில் என்றுமில்லை,
பகுத்தறிவு ஒன்றே
நீ பெற்றெடுத்த பிள்ளை…!

கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு
கருத்துச் சண்டை போட்டாய்,
வெறுப்பையே வெகுமானமாய் கொண்டு
தமிழனிடமிருந்தே தமிழனை
மீட்டாய்…!

வைக்கம்வரை சென்று
வைராக்கியம் காட்டினாய்,
கள்ளுக்கடை போராட்டத்தை
கடைக்கோடி தமிழனுக்கும் ஊட்டினாய்…!

கள்ளை ஒழிக்க உன்வீட்டு
தென்னையெல்லாம் வெட்டினாய்,
ஆரியம் அழிக்க
அன்றாடம் அவர்தலையில் குட்டினாய்…!

பேண்பார்த்துக் கொண்டிருந்த
பெண்ணினத்தை,
வான்பார்க்க வைத்தாய்,
தாயம்போட்டுக் கொண்டிருந்தவளையும்
தன்சுயம் உணர வைத்தாய்…!

தனக்கொரு பிள்ளையென
தனித்து பெற்றுக்கொள்ளவில்லை,
தன்மான தந்தையே எமக்கு
உனைத்தவிர வேறுயாருமில்லை…!

இருண்ட இனத்தை வெளுப்பாக்கிய
வெண்தாடிக் கிழவா,
உன்வேலை இன்னும் மிச்சமிருக்கு
எழு.
வா..!

*———————————————————————*
துளிர்(எ)சீ.வினோத்குமார்.
ஊ.ஒ.தொ.பள்ளி
பிள்ளையார் பட்டி.
பொன்னமராவதி ஒன்றியம்.
புதுக்கோட்டை மாவட்டம்.