அமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

“அவர்கள் தானே அந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்கள் இருப்பது இயல்பு தானே?” எனச்சொல்வது வாதத்திற்கு சரியானதாக இருந்தாலும், “கறுப்பர்களுக்கு வீடு இல்லை” என்று பலகை வைக்குமளவு அவர்கள் அந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதால் வலுக்கட்டாயமாக அந்த மக்களின் இருப்பை நிலைபெறச்செய்வது கடமையாகிறது. இதை பல கட்டமாக முன்னெடுத்து ஒப்பீட்டளவில் இந்த ஒடுக்குமுறையில் கடந்த காலத்தை விட முன்னேறியும் விட்டார்கள்.

ஆனால் இன்றளவும் குழந்தைகளுக்கு சொல்லப்படும் நீதிக்கதைகளில் இருந்து, ரத்னா fan விளம்பரம் வரை எல்லோருக்குமான கலாச்சாரமாக இங்கே நிறுவப்படுவது பார்ப்பனிய கலாச்சாரமாக தான் இருக்கிறது. இந்த மண்ணின் பூர்வகுடி அடையாளங்களை கொண்டவர்களை காட்டவே காட்டாமல் போனாலும் பரவாயில்லை, மாறாக நெகட்டிவ் கதாபாத்திரங்களாக முன் நிறுத்துவதும், ஒன்றிரண்டு காட்சிகள் மூலம் குறியீடாக காட்டினாலும் அதையும் ஏலியன் பார்வை கொண்டு பார்க்கும் அளவு இங்கே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது, இது தொடர்வது இன்னும் கொடுமை.

கிடைக்கும் தளங்களில் எல்லாம் இந்த அரசியலை பேசி பதிய வைத்து விடுகிறவர்கள் குறைச்சலான ஆட்களாக இருந்தாலும், “இதிலென்ன இருக்கு? இதுல இதைப்பத்தியெல்லாம் பேசியே ஆக வேண்டுமா?” என்று நமட்டு சிரிப்போடு கடப்பவர்கள் மேலும் எரிச்சலூட்டுபவர்கள்.

குழந்தைகளுக்கான rhymes , சின்ன விஷயம் தான், ஆனால் அதை பார்க்கும் எல்லா குழந்தைக்கும் அந்த குழந்தைக்கு தெரியாமலேயே சமூகநீதி போதனையாக மெனக்கிடாமல் புத்தியில் ஊறச்செய்யும் முயற்சியாக தான் இதை பார்க்கிறேன்.

ஆனால் இதேபோல, சிறு வயதில் இருந்தே நம் வீட்டு குழந்தைகளுக்கு பிற்போக்குத்தனங்கள் ஊறச்செய்யும் நிறைய விஷியங்கள் இருக்க, அதை களைவதற்கான முயற்சியை செய்ய தேவையில்லை, செய்கிறவர்களையாவது நாம் ஆதரிக்கிறோமா என்பது கேள்விக்குறி தான்.

– வாசுகி பாஸ்கர்