திராவிடநாடு

கேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர்.

கேரள மக்கள் திராவிடநாடு என பேசுவதற்கு பின்னால் இருக்கும் செய்தி மிகப் பெரியது. அந்த செய்தியை இந்திய ஒன்றியத்தின் அரசியல் அறிவுஜீவிகள் கொஞ்சம் அதிர்ச்சியோடுதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சோவியத் ரஷ்யா உருவாக்கப்பட்ட போது, உருவாக்கப்படும் முறையில் லெனினுக்கு உடன்பாடில்லை என்று படித்திருக்கிறேன். பிற்காலத்தில், கோர்பசேவ் கொண்டுவந்த சீர்திருந்தங்களை அடுத்து, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, நாடுகள் சோவியத்தை விட்டு விலகி தனிநாட்டை அமைத்துக்கொண்டன. உலகின் மிகபெரிய நாடு, இரண்டு கண்டங்களில் இருந்த நாடு, வல்லரசு நாடு, மிக எளிதாக சிதறுண்டு போனது. இதனை கம்யூனிசத்தின் தோல்வி என பலர் கூறினர். ஆனால் அது கம்யூனிசத்தின் தோல்வி அல்ல, பல நாடுகளை இணைத்து உருவாக்கிய ரஷ்யா அதன் பன்மைத்தன்மைக்கு முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஏற்பட்ட தோல்வி அது. உலகப்போரில் ஒற்றுமையாக போரிட்டவர்கள், கம்யூனிசத்தை ஒற்றுமையாக கடைபிடித்தவர்கள், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை குவித்து சோவியத் ரஷ்யாவினை முதலிடத்தில் வைத்து பெருமைப்பட்டவர்கள், தனித்தனியாக பிரிந்ததற்கு பின்னால் சர்வதேச சதிகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், அந்த சர்வதேச சதி வெற்றி பெற காரணமாக இருந்தது அதன் பன்முகத்தன்மை. எனவே, கம்யூனிசம் தவறு செய்யவில்லை அந்த இசத்தை பின்பற்றியவர்கள் மக்களின் இன மொழி அடையாளத்திற்கு மதிப்பளிக்காத தவறை செய்தனர்.

இந்த உண்மையை அறிந்தவர்கள் இப்போது கேரளாவில் இருந்து ஒலிக்கும் ‘திராவிடநாடு’ என்ற குரலுக்கு பின்னால் இருக்கும் உணர்வை புரிந்து சற்று அதிர்ந்துதான் போயிருப்பார்கள். இந்திய ஒன்றியம் விடுதலை பெற்ற பின்னர், சுமார் எழுபது ஆண்டுகளாக கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் மாறி மாறி ஆட்சி செய்கின்றனர். தொடர்ந்து எழுபது ஆண்டுகளாக அங்கு ஆள்வது மாநில கட்சி அல்ல. இரண்டு கட்சிகளும் தேசிய கட்சிகள். புதிதாக அங்கு துளிர்க்க ஆரம்பிக்கும் பிஜேபியும் தேசிய கட்சித்தான். இந்த கட்சிகளின் கொள்கையே அங்கு வாழும் மக்களின் அரசியல் கொள்கை. தேசிய கட்சிகளின் கொள்கை என்றுமே இந்திய ஒன்றியத்திற்கு எதிரானது அல்ல. ஒன்றுபட்ட இந்திய ஒன்றியத்தின் மீது தேவையே இல்லாமல் அதிக பற்றை உருவாக்கும் கட்சிகள். இப்படிப்பட்ட கட்சிகள் இத்தனை காலமாக இந்திய ஒன்றியத்தின் மீது பற்றை ஊட்டியும், திராவிடநாடு என்ற முழக்கம் அங்கிருந்து கேட்கிறது. ஏன்?

ஏன்? என்ற கேள்விக்கான விடை சோவியத் ரஷ்யா சிதைந்ததில் இருக்கிறது. கேள்விக்கான விடை கேரளாவில் மட்டுமல்ல திராவிடப் பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அரசியல் கட்சிகளின் சித்தாந்த பிரச்சாரத்தால் இரு வேறு இன மக்களை, ஏற்றத்தாழ்வுகளோடு, பாகுபாடுகளோடு, புறக்கணிப்புகளோடு, சேர்த்து வைத்திருக்க முடியாது. திராவிடர்களாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை இந்திய ஒன்றியத்தில் இணைத்து அவர்களை இந்தியர்களாக உணரவைக்கும் முயற்சி என்றாவது ஒருநாள் தோல்வி அடைந்தே தீரும். அதுவே இப்போது எழுபது ஆண்டுகளுக்கு பின்பு நடக்கிறது.

ஒரு நினைவூட்டலுக்கு சொல்கிறேன். சோவியத் ரஷ்யாவும் எழுபது ஆண்டுகள்தான் இருந்தது.

– திராவிடப் புரட்சி