’மானமும் அறிவும்’ – தெளிவற்றவர்களுக்கு ஒரு விளக்கம்!

பெரியார் சொன்ன “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்ற கருத்தை தோழர். பரிமளராசன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருந்தார்.

அதை கண்டு சகிக்க முடியாமல், தலைச்சிறந்த தத்துவ மேதையாக தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர் (கிருஷ்ணா தமிழ் டைகர்), // மானம் என்றெல்லாம் எதுவும் தனியா இல்லை தோழர்! மானம் என்று சொல்வதே ஒருவகை உளவியல் ரீதியான அறிவுதான். அறிவும், மானமும் வேறு வேறல்ல. பள்ளிகொடத்துல படிச்சு மனப்பாடம் செய்றத ஒரு வேள அறிவுன்னு எல்லாரும் நெனைக்கிறமாதிரி நெனச்சு மானம், அறிவுன்னு தனித்தனியா சொல்லிட்டாரோ? என்ன பகுத்தறிவோ போங்க! // என்று தனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிரேக்கத்தில் பிறந்திருந்தால் சாக்ரடீசை குறை சொல்லி தங்களை அறிவாளியாக காட்டிக்கொள்ள முயன்றிருப்பார்கள் சிலர். அவர்கள் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்து தொலைந்துவிட்டதால், தந்தை பெரியாரை குறை சொல்லுவதன் மூலமாக தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவரான இந்த மேதாவிக்கான எனது விளக்கம்:

இழி நிலையில் இருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பது அறியாமை!

இழி நிலையில் இருக்கிறோம் என்பதையும், எதனால் இழி நிலையில் இருக்கிறோம் என்பதையும் உணர்வதற்குத் தேவை அறிவு!

உணர்ந்த பின்பும் அந்த நிலையை சகித்துக்கொண்டு மாற்ற முயற்சிக்காமல் அப்படியே தொடர்வது மானமற்ற நிலை!

இழி நிலையை சகிக்க முடியாமல் அதை நீக்க போராடும் உணர்வே மானம்!

அறிவுள்ளவன் எல்லோரும் மானவுணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

எடுத்துக்காட்டு: நீ பிறப்பால் இழிவானவன், நீ கோவில் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று கேவலப்படுத்தினாலும், அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், கோவிலுக்கு வெளியே கைக்குப்பி நிற்பவர்களும், அப்படி நிற்பது சரி என்று வாதிடும் படித்த பட்டம் பெற்ற பார்ப்பன அடிவருடிகளும் அறிவிருந்தும் மானவுணர்வு இல்லாதவர்கள்.

IQ தான் EQ என்று வாதாடமுடியாது. EQ மற்றும் IQ இரண்டும் சேர்ந்து சரியான கலவையில் இருப்பதுதான் சரி.
அது போலத்தான் தந்தை பெரியார் “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்று சொல்லியுள்ளார்.

அறிவு இல்லாமல் மானவுணர்வு மட்டுமிருந்தால் அவன் வெறும் முரடனாக மட்டுமே அறியப்படுவான். மானவுணர்வு இல்லாமல் அறிவு மட்டுமிருந்தால், அவன் வெறும் கோழையாக மட்டுமே அறியப்படுவான். ஆகவே, மானமும் அறிவும் சேர்ந்து இருந்தால்தான் அழகு!