அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை !

அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை

அறுபது ஆண்டு கால தொடர் போராட்டம்!

அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல.

மான உரிமைப் போராட்டம்!

சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர்!.

பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம்.அய்.பி.எஸ் ஆகலாம்

குடியரசுத் தலைவராகலாம்.ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன நியாயம்?

“தீண்டாமை தண்டிக்கப்படவேண்டிய குற்றம்” என்று சொல்லும் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கோவில் கருவறைக்குள் பிராமணரல்லாதார் அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டுவிடும் என வைகாசன ஆகமம் கூறுவதை உள்ளடக்கியதாக இருக்கும் 25,26 சட்டப்பிரிவுகளை மானமுள்ள ஒருவனால் எப்படி ஏற்க முடியும்?

1950 களில் தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட இந்தப்போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

1970 ல் பார்ப்பணரல்லாதார் கருவறை நுழைவுப்போராட்டத்தை அறிவித்தார் பெரியார்.

1972 ல் வாரிசு உரிமை அர்ச்சகப் பணி நியமனத்தினை ஒழித்து, இந்து அறநிலையச் சட்டதிருத்தத்தை

கொண்டுவந்தார் கருணாநிதி. தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் பிராமணர்கள். அர்ச்சகர்கள் கோவில் ஊழியர்கள்தான் என்றும், வாரிசு உரிமைப்படி பணி நியமனம் செய்வது செல்லாது என்றும் சொல்லி தமிழக அரசின் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க முடியாது என்று அறிவித்தது உச்சநீதிமன்றம்.

அதே சமயம் “ஆகமங்களின் படி குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் அர்ச்சகராக முடியும். மேற்படி இனத்தவர்கள் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு அர்ச்சகர்கள் நியமணம் செய்யப்படவேண்டும்” எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.

1979ல் எம்.ஜி.ஆர் அவர்களால் அமைக்கப்பட்ட நீதிபதி மகராசன் தலைமையிலான குழு 1982ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.அர்ச்சகர்கள் சம்பளம் பெறுவது உட்பட பல்வேறு ஆகமவிதி மீறல்கள் கோவில்களில் நடைபெறுவதை சுட்டிக்காட்டியது.

1991 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வேத ஆகமக்கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாகவும் அதில் சமூக நீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதில் பயிற்சி பெற்றவர்கள் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

2002 ம் ஆண்டு கேரளாவில் ஈழவர் சாதியைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஆதித்யன் என்பவர் தொடுத்த வழக்கில், பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகர் ஆகலாம். மரபு பழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சட்ப்பிரிவு 17 ன்படி பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தீண்டாமைக்குற்றம். மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் கூறியது.

2006 ம் ஆண்டு மேற்படி தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இந்து அறநிலையச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த அரசாணையையும் பின்னர் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்கும் வகையில் அவசர சட்டத்தையும் கொண்டுவந்தார்.

மதுரையைச் சேர்ந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உடனே 1972 உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசர சட்டத்திற்கு தடையானை வாங்கி விட்டார்கள்.

உச்ச நீதிமன்றத் தடையால் அர்ச்சகர் பள்ளியில் முறையாக ஆகமம் பயின்ற 206 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்படாமல் பெரிய போராட்டத்திற்கு பின் நீண்ட நாட்கள் கழித்தே வழங்கப்பட்டது. சான்றிதழ் கிடைத்தும் அவர்களுக்கு அர்ச்சகர் பணி கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆகம விதிப்படித்தான் எல்லாம் நடக்கிறதா?

ஆகமம் உண்டியல் வைத்துகொள்ள அனுமதிக்கிறதா?

ஆகம விதிப்படி மின் விளக்குகள் பொருத்தப்படலாமா?

அர்ச்சகர்கள் ஊதியம் பெறலாமா?

ஆகம விதிப்படித்தான் கோவில்கள் அமைந்துள்ளனவா?

அர்ச்சகர் பணிநியமனத்தில் மட்டும் ஆகமவிதிப்படி சாதி பார்ப்பதாக சொல்லப்படுவது ஏன்?

.

2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது தற்போதைய தமிழக அரசு வழக்கறிஞர் இப்பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பதாக கூறி கால அவகாசம் கோரினார்.

எட்டு மாதங்களைக் கடந்தும் எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், உட்பட பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

சட்டம் திருத்தப்படுமா? அல்லது அர்ச்சகர் பணி நியமனத்தில் அரசு திருத்தம் கொண்டுவருமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் சாதி தீண்டாமை பேசும் ஆதிக்க சாதியினர் ஒருபோதும் திருந்தமாட்டார்களா? என்ற கேள்விதான் ஓங்கி ஒலித்துகொண்டிருக்கிறது.

-கி.தளபதிராஜ்