வீரமணிக்குக் கேள்விகளா? விடை இதோ!

ஆசிரியர் கி.வீரமணிக்கு 20 கேள்விகள் என்று சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் அவதூறான அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இங்கு தரப்படுகின்றன. பெரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவனும் எவனுமில்லை; பெரியார் இயக்கத்தவரிடம் கேள்வி கேட்டு வென்றவனும் எவனுமில்லை.
கேள்வியெழுப்பும் சிந்தனையை, துணிவை வளர்த்த இயக்கம், மேடையில் கேள்வி கேட்கும் முறையை தமிழகத்தில் உருவாக்கிய இயக்கம் எந்த கேள்விக்கும் சளைத்ததில்லை. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு கேட்கப்பட்டுள்ள இந்தக் கேள்விகள் – எளிய, இளைய திராவிடர் இயக்கத் தோழராலும் கூட விளக்கமளிக்கப்படக் கூடியவையே! அப்படியொரு தோழரின் பதில்கள் கீழே!
கேள்வி 1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?
பதில் 1. பார்ப்பான் ஜாதி பேதம் பார்ப்பவன் மட்டுமல்ல; ஜாதி பேதங்களை உருவாக்கி, அதைச் சாஸ்திர ரீதியாக வலுவூட்டி வழக்கில் கொண்டு வந்ததோடு, இன்றளவும் அதைக் காப்பாற்றத் துடிப்பவர்கள்; எதிர்காலத்திலும் நிலைநிறுத்த முயல்பவர்கள். அதனால்தான் அவர்களை முதன்மை இலக்காக்கி கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்.
மனிதர்களுக்குள் ஜாதிபேதம், மதபேதம், பிறப்பால் பேதம் யார் பார்த்தாலும், அவர்கள் எந்த ஜாதியினராயினும், எம்மதத்தவராயினும் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம். இதில் எங்களுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. நாங்கள் பார்ப்பனர்களை மட்டுமே எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம் என்பது உண்மைக்கு மாறான புரட்டு.
கேள்வி 2: கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?
பதில் 2:  கடவுள் இல்லை என்றால் எக்கடவுளும் இல்லையென்பதே பொருள். நாங்கள் இந்துக்கடவுள் இல்லையென்று சொல்லவில்லையே! எனவே, உங்கள் கேள்வி புரட்டு; மோசடி!
கேள்வி 3: தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?
பதில் 3: அடிப்படையில் இவ்வொப்பீடே தவறானது. ஒருவருக்கு விழா எடுப்பதை கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. இனிய தமிழிசையை விட்டுவிட்டு தெலுங்குக் கீர்த்தனை, கர்நாடக இசை என்று அலையும் எம் இன மக்களை நாங்கள் விழிப்பூட்டுவதை திசைதிருப்பி, சம்பந்தமில்லாததோடு இணைத்து முடிச்சுப்போடும் உம் நரித்தந்திரம், வித்தைகளெல்லாம் எங்களிடம் பலிக்காது.
தமிழில் பேசு, அந்திய மொழிக்கு அடிமையாகாதே! தமிழ்ப் பெயர் சூட்டு, ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து தமிழைக் கெடுக்காதே என்று சொல்வது எப்படி தமிழர் கடமையோ அப்படித்தான் தமிழிசையைப் பாடு, அதற்கு உயர்வு கொடு என்பதும். இதை முதலில் புரிந்து  கேள்வி கேள்! தவிர, பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி என்ற பெயரிலோ, அல்லது எந்த ஜாதியின் பெயரிலும் நடைபெறும் ஜாதி நடவடிக்கைகளையும், பேரணிகளையும், அதனால் ஏற்படும் ஜாதிக் கலவரங்களையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும், ஓட்டுக்காக இத்தகைய நிகழ்ச்சிகளில் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற்பதையும் கண்டித்தே வந்துள்ளோம். இதில் எந்த தயக்கமும் மறைப்பும் இல்லை.
கேள்வி 4: பிராமணன் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?
பதில் 4 : முதலில் நாங்கள் பூணூல் அறுக்கவில்லை. எனவே, எங்களிடம் இக்கேள்வியைக் கேட்பதே அயோக்கியத்தனம். எனினும் இக்கேள்விக்கு எம் பதில்.
பூணூலை அறுத்தவர்கள் ஏன் சிலுவையை அறுக்கவில்லை, தொப்பியை, தலைப்பாகையை அகற்றவில்லை என்பது அர்த்தமில்லை, அறியாமையின்பாற்பட்ட கேள்வி.
தொப்பியும், சிலுவையும், தலைப்பாகையும் மற்றவர்களை இழிவுபடுத்தவில்லை. பூணூல் மற்றவர்கள் இழிமக்கள், சூத்திரர்கள் என்று அறிவிக்கும் அடையாளமாகவும், தான் மட்டுமே உயர்பிறப்பாளன் என்று கூறுவதாயும் இருப்பதால் பாதிக்கப்படுவோர், இழிவுபடுத்தப்படுவோரில், உணர்ச்சி வசப்படும் ஒரு சிலரின் எதிர்வினை இது. எதிர்வினை வரக்கூடாது என்றால், மாற்றாரை மட்டப்படுத்தும் இழிவுபடுத்தும் பூணூலை அவர்களே கழற்றி, மனிதர்களைச் சமமாக மதிப்பதே சரியான தீர்வு.
கேள்வி 5: தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?
பதில் 5: தாலி அகற்றுவது ஒரு நிகழ்வு, அது ஓர் விழிப்பூட்டும் பிரச்சாரம், செயல் விளக்கம். அதைப் போராட்டம் என்பதே முதலில் புரட்டு, தவறு. போர் என்பது ஒருவருக்கு எதிராகச் செய்யப்படுவது. தாலி அகற்றும் நிகழ்வு. யாருக்கும் எதிராகச் செய்யப்படுவதில்லை.
திராவிடர் கழகத் தோழர்கள் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ உரிய இணையரை இச்சமுதாயத்திலிருந்துதான் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, கடவுள் மறுப்பையும், தாலி மறுப்பையும் கட்டாயப்படுத்த இயலாது. முடிந்தமட்டும் முயற்சி செய்து சடங்கு ஒழிப்பு, புரோகித மந்திர ஒழிப்பு செய்கிறோம்.
நாங்கள் எங்கள் குடும்பத்தினராயினும் அவர்களைக் கட்டாயப்படுத்தி எதையும் செய்யச் சொல்வதில்லை. அவர்களாக மனம் மாறி உண்மையை, சரியானதை ஏற்கச் செய்யவே முயற்சிப்போம். அப்படியிருக்க கட்சிக்காரர்களை, நண்பர்களை, உறவினர்களை கட்டாயப்படுத்துவதில்லை.
திராவிடர் கழகத்தவர் கடவுள் மறுப்பிலும், சடங்கு மறுப்பிலும், புரோகித மந்திர எதிர்ப்பிலும், தவிர்ப்பிலும் உறுதியாய் இருப்பர். தாலி கட்டுவதில் கட்டாயப்படுத்த இயலுமா? திருமணம் திராவிடர் கழகக் குடும்பத்துக்குள்ளே செய்ய இயலுமா?
திராவிடர் கழகத்தவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் வீட்டிலும், தாலி அணிய விரும்புகின்றவர் வீட்டிலும் திருமண சம்பந்தம் கொள்ளும் கட்டாயம் வரும்போது சம்பந்திகளை எப்படி கட்டாயப்படுத்த முடியும்? அவர்களுக்கும் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறோம்… திருமணத்திற்கு முன்போ, பின்போ! திருமணத்திற்கு முன்பே ஏற்போரின் திருமணங்கள் தாலியில்லாமல் நடக்கின்றன. திருமணத்திற்குப் பின்பு காலப்போக்கில் மனம் மாறி கழற்றுகின்றவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம், அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்கிறோம்.
இப்போது நடந்ததும் அப்படியொரு நிகழ்வே! இது ஒன்றும் புனிதப்படுத்தும் சடங்கு அல்ல; அடிமைத் தளையை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி! சிந்தனைத் தெளிவு பெற்றவர்கள் அகற்றிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் பிறர் துணிவு பெறுகிறார்கள்.
திராவிடர் கழகத்திலோ, அல்லது பெரியார் டிரஸ்டிலோ என்று வலியுறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டுவது என்ன காரணம் என்பதையும் நாங்கள் அறிவோம். ‘திராவிடர் கழகத் தலைவரின் மனைவி கழுத்தில் இருக்கும் தாலியை முதலில் கழட்டுங்கள்’ என்று கட்டியிருப்பதைப் பார்த்தவர் போல பேசும் அவசரக் குடுக்கைகளின் கேள்வி தான் வேறு வடிவில் நாசூக்காக கேட்கப்படுகிறது. அந்தக் கவலையே வேண்டாம். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் திருமணம் (இவர்களின் கருத்துப்படி) கொழுத்த ராகு காலத்தில் ஜாதி மறுப்பு, தாலி மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்பு என முழுமையாக நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் ஆகும். 
கேள்வி 6: எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?
பதில் 6:  அறியாமையின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்வி; அரைவேக்காட்டுத்தனமான கேள்வி இது.
முதலில் நாங்கள் தேர்தலில் அல்ல; எனவே, நாங்கள் எங்களுக்காக வாக்கு கேட்க வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆனால், அரசியலில் பங்குகொண்டு வாக்கு கேட்கும் எக்கட்சியும் கடவுள் மறுப்பைக் கொள்கையாகக் கொண்ட கட்சியல்ல. அதனால், அதை ஒரு நிபந்தனையாக வைத்து வாக்குக் கேட்டால், எந்தக் கட்சிக்கும் அதிக வாக்கு கிடைக்காது. காரணம் பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.
தேர்தலும் வாக்கெடுப்பும் மக்களுக்கான அரசை, மக்கள் மேம்பாட்டை, நாட்டின் வளர்ச்சியை உருவாக்குவதற்காகவே. மாறாக, கடவுள் உண்டா இல்லையா என்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை.
கடவுள் இல்லை என்பது அறிவியல் உண்மை. அறிவியல் மனப்பான்மையை, பகுத்தறிவை, அறிவியல் உண்மைகளை மக்களுக்குச் சொல்லி விழிப்பூட்ட வேண்டும் என்பது ஒரு குடிமகனின் கடமை என்கிறது நமது அரசமைப்புச் சட்டம். அதை நாங்கள் பொறுப்போடு செய்கிறோம். இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நம்பிக்கை, விழிப்புணர்வு அவர்களாகத் தெரிந்து விழிப்பு பெற்று வரவேண்டியது. கட்டாயப்படுத்தி உருவாக்குவது அல்ல. இதுவே எங்கள் கொள்கைப் பரப்பும் நெறி!
கேள்வி 7:  கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?
பதில் 7 :  இது நீண்டகாலமாகக் கேட்கப்படும் கேள்வி. இதற்குப் பலமுறை பதில் கூறியிருக்கிறோம். கடவுள் என்பது இல்லாதவொன்று. கற்சிலைக்குப் பாலும், தேனும் ஏன்? உண்ணும் பொருளை ஏன் பாழாக்க வேண்டும். அதை ஏழைக்குக் கொடுக்கலாமே என்றுதான் கேட்கிறோம்.
பூ என்பது அன்றைக்குப் பூத்து மாலை வாடக்கூடியது. தலைக்கு வைத்தாலும் சிலைக்கு வைத்தாலும் அதுதான் நிகழும்.
பெரியார் சிலைக்கு மாலை போடுவது, சமாதிக்கு மாலை வைப்பது பெரியார் அதை விரும்புகிறார் என்பதற்காக அல்ல. பெரியார் உயிருடன் இருக்கும்போதே மாலையை விரும்பியவர் அல்ல. மாலைக்குப் பதிலாய் பணமாய்க் கொடுங்கள் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்று கூறி அதன்படி நடந்த பகுத்தறிவுவாதி.
பெரியார் போன்ற தலைவர்களுக்கு பூமாலை வைப்பது அதை அழுகுபடுத்தவே. பிறந்த நாளில், நினைவு நாளில் அச்சிலை, நினைவிடம் அன்றைய நிகழ்வுக்காக அடையாளப்படுத்தப்படுகிறது; அழகுபடுத்தப்படுகிறது அவ்வளவே.
இந்த பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள்கூட சடங்கல்ல. அவை பிரச்சார வழிமுறைகள். மக்களுக்கு அவர்களின் கொள்கையை, பணியை அறியச் செய்வதற்கான செயல்திட்டம் இது.
ஆனால், பால், தேன், பருப்பு, பழம், எண்ணெய், ஆடையென்று மக்களுக்குப் பயன்படக் கூடியவை பாழாக்குவதையே நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். அதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.
கேள்வி 8: பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?
பதில் 8 : பார்ப்பன (பிராமண)  எதிர்ப்பு என்பது தனிநபர் விரோத எதிர்ப்பல்ல என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த தனிப்பட்ட பார்ப்பனரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல. பெரியார் இராஜாஜியோடு நண்பராக இருந்தார். கமலகாசன், ஞாநி போன்றவர்களை நாங்கள் மதிக்கிறோம்; பாராட்டுகிறோம். சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்களையே நாங்கள் எதிர்க்கிறோம்.
தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் எதிர்ப்பு பற்றி மிகத் தெளிவாக 1953லே கூறியுள்ளார்.
பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வது எல்லாம், விரும்புவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டில் நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைமைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்ளலாம். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. நமக்குள் பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுகிறேன்.
எனவே, பார்ப்பன எதிர்ப்பு என்பது தனிமனித வெறுப்பின் விளைவல்ல. பார்ப்பனிய (பிராமணிய) செயல்பாடுகள், சாஸ்திரங்கள் பெரும்பாலான மக்களின் இழிவிற்கும், தாழ்விற்கும் காரணமாகி, தமிழ்மொழியின் இழிவிற்கும், இனமான, சுயமரியாதை உணர்வுகளுக்கும் எதிராய் இருப்பதால் அதை எதிர்க்கிறோம்.
மற்றவர்கள் தாங்கள் எப்படி வளர்வது என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். பார்ப்பனர்கள் மற்றவர்கள் வளரக் கூடாது என்றும், தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்றே முயற்சிக்கிறார்கள். இதுவே வேறுபாடு.
அவர்கள், மற்றவர்களையும் சமமாக ஏற்று, சுயமரியாதைக்கு கேடில்லாமல் செயல்பட்டால் அவர்களை நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை உலக மக்களை ஒப்பாக எண்ணுகிறோம்; நேசிக்கிறோம் என்பதே உண்மை.
கேள்வி 9: நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?
பதில் 9 : நாங்கள் என்ன காவல்துறையா நடத்துகிறோம்? இந்தக் கேள்விக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? எதனால் இக்கேள்வி கேட்கப்படுகிறது? அர்த்தமற்ற கேள்வி என்றாலும் பதில் சொல்ல விரும்புகிறோம்.
முதலில் இக்கேள்விகளையெல்லாம் கேட்பதே ஒரு பார்ப்பனர்தான் என்பது எங்களுக்குப் புரியும். பெரியார் தொண்டர்கள் ஆள் அசைவை மட்டுமல்ல, அவர்கள் எழுத்தைக் கொண்டே ஆளைக் கணக்கிடுவோம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் ஜாதியோடு தொடர்புடையது அல்ல. தனிநபர் இயல்பை, சூழலை, நடத்தையைப் பொறுத்தது. நல்லவர்கள் எல்லா ஜாதியிலம் உண்டு, எல்லா மதத்திலும் உண்டு. அதேபோல் கெட்டவர்களும் எல்லா ஜாதியிலும், மதத்திலும் உண்டு. இதில் ஜாதிவாரி, மதவாரி கணக்கெடுப்பு தவறு.
நீங்கள் கேட்கும் கேள்வியின் நோக்கம் புரிகிறது. பார்ப்பனர்கள் இவற்றில் அதிகம் ஈடுபடுவதில்லை. அவர்கள் நல்லவர்கள் என்று இதன்மூலம் சொல்ல முயல்வது புரிகிறது.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியே உண்டு. கோயிலில் பக்தையை கற்பழித்த பார்ப்பனர் உண்டு. கடத்தல், நாட்டைக் காட்டிக் கொடுத்தல் செய்த பார்ப்பனர்கள் உண்டு. காந்தியையே சுட்டவன் ஒரு பார்ப்பான்தானே. இது கிடக்கட்டும்.
ஆயிரமாயிரமாண்டுகளாய் தான் மட்டுமே (தன் ஜாதி மட்டுமே) படிக்க வேண்டும். மற்றவன் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆதிக்கம் புரிந்து சமுதாயத்தில் உயர்நிலையில் தன்னை அரசு ஆதரவோடு வைத்துக்கொண்ட பார்ப்பன இனம் ஒரு பக்கம். கல்வியில்லாது, உடலுழைப்பை நம்பி ஒதுக்கி, ஒடுக்கி, நசுக்கி, அடக்கி வைக்கப்பட்டு, தீண்டக் கூடாது என்று தள்ளிவைக்கப்பட்ட சமுதாயம் மறு பக்கம். இங்கு தவறுகள் எங்கு அதிகம் நடக்கும். அவற்றுக்குக் காரணம் யார்?
வன்னியர், முக்குலத்தோர் உள்ளிட்ட 89 ஜாதியினரை தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரையாகவே வைத்திருந்தார்கள். வன்னியர்களெல்லாம் குற்றவாளிகளா? அவர்களில் உயர்குணமும், தியாகமும் புரிந்தவர்கள் ஏராளம் இல்லையா?
எல்லோருக்கும் சமவாய்ப்பும், சம உரிமையும் கொடுக்கப்பட்ட பின் அவர்களிடம் இருந்த குற்றங்குறைகளும் இன்றைக்கு மறைந்து வருகின்றன.
சுற்றுச் சூழலும் சமுதாய அமைப்பும் குற்றவாளிகள் உருவாகக் காரணமாகிறது. எனவே, இது ஜாதியைப் பொறுத்ததல்ல. சமுதாயம் ஒட்டுமொத்தமாக முயன்று அரசின் துணையோடுதான் இவற்றைக் களைய வேண்டும்.
கேள்வி 10: கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு, தெருவில் நடமாடத் தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை டம்ப்ளர் முறை, கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள், எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?
பதில் 10 :  கோவில் நுழையத் தடை, தடுப்புச் சுவர், இரட்டை டம்ளர், கவுரவக் கொலையெல்லாம் பார்ப்பனர் உருவாக்கிய ஜாதிக் கொடுமைகளின் விளைவுகள். உண்மையான குற்றவாளி அவர்களே! ஜாதிமுறை எக்காலத்துக்கும் வேண்டும் என்று இன்றளவும் முயற்சி செய்யக்கூடியவர்கள் அவர்கள்.
இவற்றை ஒழிப்பதில் எல்லா ஜாதியைச் சேர்ந்த பெரியவர்களும் முயற்சி செய்திருக்கிறார்கள். காரணம், எல்லா ஜாதியிலும் உயர்ந்தவர்கள், சமதர்மவாதிகள், மனித நேயர்கள் உண்டு. எனவே, இதை வைத்து இதில் எந்த ஜாதிக்கு அதிகப் பங்கு என்றெல்லாம் தராசு பிடிக்க முடியாது.
ஆனால், சில உண்மைகளை எல்லோரும் இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.
நந்தனை கோவிலுக்குள் நுழையாமல் தடுத்து, அவர் பிடிவாதம் பிடிக்க அவரை நெருப்பில் தள்ளி கொளுத்தியது யார்?
இராமலிங்க வள்ளலார் ஜாதி வேண்டாம் என்றதற்காக அவரை அடித்துக் கொன்றது யார்?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகத் தடையாய் இருப்பது யார்?
தமிழை பூசை மொழியாக ஆக்கக் கூடாது, அது நீசபாஷை என்றது யார்?
காந்தியாரையே வீட்டிற்குள் அனுமதிக்ககாது தாழ்வாரத்தோடு அனுப்பியது யார்?
பார்ப்பனர் வீட்டில் மலம் எடுக்கக் கூட ஒரு தாழ்த்தப்பட்டவன் வரக்கூடாது. அதைவிட உயர்ஜாதிக்காரன் வந்துதான் பார்ப்பான் கழித்த மலத்தை எடுக்க வேண்டும் என்று கும்பகோணம் மாநகராட்சியில் தீர்மானம் போடச் செய்தது யார்?
இரட்டைக் குவளை எதிர்ப்பு, தடுப்பு சுவர் எதிர்ப்பு, கோயில் நுழைவு, ஜாதியொழிப்பு இவற்றிற்கு திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள், செய்த தியாகங்களும் எத்தனை எத்தனை? பார்ப்பன ஊடகங்கள் அதைச் சொல்லாது மறைக்கும். உங்கள் அறியாமைக்கு இதைவிட அடையாளம் வேறு வேண்டாம்.
இதையெல்லாம் மறைத்துவிட்டு இன்றைய இளைஞர்களை ஏமாற்ற முயற்சி செய்கிறீர்! முறியடிப்போம்!
(தொடரும்)