அயோக்கியதனத்திற்கு அளவில்லையா?

தினமணி என்றொரு ஏடு! நம் பார்வையில் அது இனமணி. ஒவ்வொரு நாளும் அதன் ஒலிப்பில் இதை உணர்த்துகிறது.

நெஞ்சினில் நஞ்சு வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே! என்ற வரிக்கு தினமணி வைத்தியநாத அய்யர் சரியான சான்று!

தமிழ்ப் பற்றாளர் போல் காட்டுவார். ஆனால், தமிழை உள்ளூர அழித்தொழிக்கும் வேலையை அரவமின்றி செய்வார்.

நடுநிலையாளர் போல் காட்டுவார். ஆனால், அப்பட்டமாக தன் சார்பு நிலையை வெளிப்படுத்துவார்.

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை போட்டால், முதல் பக்கத்தில் செய்தி போடுவார். உயர்நீதிமன்ற நீதிபதி அதற்கு தடைவிதித்தால் செய்தியே போடமாட்டார்.

தி.மு.க. மீது ஊழல் வழக்கு வந்தாலே நடந்துவிட்டது போல பக்கம் பக்கமாக எழுதுவார். ஆனால், செயலலிதாவுக்கு தண்டனையே வழங்கப்பட்டாலும் அதை எப்படியெல்லாம் மறைத்தும், மாற்றியும் எழுத முடியுமோ அப்படி எழுதுவார்.

தாலி அகற்றுதல் சிந்தனை வறட்சி என்று கட்டுரை வெளியிடுவார். அதற்கு மறுப்பு எழுதினால் அதை மறைத்து, ஆசிரியர் கடிதத்தில் நான்குவரி வெளியிடுவார்.

உளச் சான்று உறுத்தலே இல்லாமல் மதியென்ற மண்டூகத்தை விட்டு கேலிப் பேசுவார். பெரியார் படத்தையே போடமாட்டார். சங்கராச்சாரியை தெய்வமாகத் தூக்கிப் பிடிப்பார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஊறி, சோவிடம் ஆசிபெற்று, தினமணியுள் நுழைந்து விட்டவர் இப்படித்தான் இருப்பார் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால், அயோக்கியத்தனத்தின் உச்சமாய், அபாண்டமாய், ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவரை கேவலப்படுத்துவதும், மாண்பின், பண்பாட்டின் உறைவிடமான அவரை, அவரது செயலை திரித்து, அவர் சமுதாய, பண்பாட்டுக்கு எதிரிபோலவும், சமூகம் தறிகெட்டுப் போக அவரே காரணம் என்பதுபோல கேலிக் கருத்து வெளியிடுவதும் அயோக்கியத்தனத்தின் உச்சமல்லவா?

தாலி என்பது அடிமைச் சின்னம் என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை, கணிப்பு. இதை பல பெண்கள் மகிழ்வுடன் ஏற்று தாலியை மறுக்கின்றனர்.

சுயமரியாதைத் திருமணச் சட்டமே தாலியில்லா திருமணத்தை ஏற்கிறது.

பதிவுத் திருமணம் செய்து கொள்வதை சட்டம் ஏற்கிறது. அதற்கு தாலி கட்டாயம் கட்ட வேண்டியதில்லை.

உண்மைகள் இப்படியிருக்க, தாலி கட்டுகிறவர்கள், கட்டிக் கொள்கிறவர்கள் எல்லாம் கண்ணியவான்கள், ஒழுக்கச் சீலர்கள் போலவும், தாலி கட்டாதவர்களெல்லாம் கண்டபடி கண்டவர்களோடு வாழ்பவர்கள் போலவும், அதை தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தூண்டுவது போலவும், ஆதரிப்பது போலவும் முதல் பக்கத்தில் கருத்து வெளியிடுகிறார்கள் என்றால் அவர்களை எதனால் அடிப்பது?

நான் தாலியில்லாமல் திருமணம் செய்தேன். நானும் என் மனைவியும் ஒருவர் ஒருத்தியென்ற ஒழுக்க நெறியில் இன்றளவும் வாழ்கிறோம். ஒரு புலனாய்வு வைத்து வேண்டுமானால் ஆய்வு செய்துகொள். ஆனால், தாலி கட்டி திருமணம் செய்தவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், என்னென்ன ஒழுக்கக் கேடு புரிகின்றார்கள் என்பது இந்த வை(பை)த்தியநாத அய்யருக்கும், மதியென்ற மண்டூகத்திற்கும் தெரியாதா?

இன்றைக்கு நடக்கின்ற ஒழுக்கக் கேடுகளை புரிகிறவர்கள் எல்லாம் தாலி கட்டியவர்களா? கட்டாதவர்களா?
சூடு சொரணை நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்!

தாலி அணிய விருப்பமில்லை, அதை கழற்றி விடுகிறேன் என்று ஒரு பெண் சொன்னால், அப்படிப்பட்ட பெண், ஊர் ஊரா சுத்தலாம் இச் இச் என்று எத்தனை முத்தம் வேணா குடுத்துக்கலாம்; ஹோட்டல்ல தங்கலாம்; வேறு என்ன வேணாலும் பண்ணிக்கலாம், என்று முடிவுக்கு வந்துவிட்டாள் என்று அந்த பெண் சொல்கிறாள் என்று பொருள் என்று உங்கள் அகராதி சொல்கிறதா?

இதைக் கேட்டால் அந்தப் பெண் உங்களை முச்சந்தியில் நிறுத்தி முகத்தில் உமிழ்ந்து செறுப்பால் அடிக்க மாட்டாளா?

இதைத் தான் திராவிடர் கழகம் சொல்கிறது என்கிறீர்களே என்றைக்கு இப்படி திராவிடர் கழகம் சொன்னது? ஆதாரம் காட்ட முடியுமா? அற்பத்தனத்திற்கும் அயோக்கியத் தனத்திற்கும் அளவில்லையா?

இப்படியெல்லாம் எழுதினாலும் தண்டிக்கப்படக் கூடாது என்று தலையங்கம் வேறு இன்று எழுதுகிறாய். உங்களை மட்டும் எவனும் தண்டிக்கக் கூடாது. ஆனால், மற்றவர்களெல்லாம் தப்பு செய்யாமலே தண்டிக்கப்பட வேண்டும். இதுதானே ஆரிய தர்மம். பத்திரிகை இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதுவதா? இது பேனா ரவுடித்தனம் இல்லையா?

உடம்பெல்லாம் நெய்யைப் பூசிக்கொண்டு எவனோடு வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் என்பதும், மனிதனை மட்டுமல்ல குதிரையோடு படுத்துக்கூட பிள்ளை பெறலாம் என்பதும் உங்கள் கலாச்சாரமே ஒழிய திராவிடர் கலாச்சாரமல்ல.

ஓகே தினமணி!

– மஞ்சை.வசந்தன்