”தமிழக அரசியல்” எனும் தரங்கெட்ட….!

பெண்களையும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொன்ன கிருஷ்ணனுக்கு விழா கொண்டாடலாமா? என்று அன்மையில் அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர்கழக தலைவர் வீரமணி!. தமிழக அரசியல் எனும் தரங்கெட்ட ஒரு இதழில் அதற்கு நேரிடையாக பதிலளிக்க இயலாத ஒரு அனாமதேயம் வீரமணியாரை கொச்சைப்படுத்தியுள்ளது. அதோடு “பறச்சிகளும், பள்ளச்சிகளும் ரவிக்கைப்போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது” என்று பெரியார் கூறியதாக துணிச்சலாக ஒரு பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

1962ல் சட்டசபை தேர்தலில் காமராஜரை முழுமையாக ஆதரித்தார் பெரியார். பட்டுகோட்டையில் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரக்கூட்டத்தில் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்கி நீண்ட உரையாற்றினார்.அப்போது “காலாகாலமாய் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை தந்தவர் காமராசர். இன்று அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிகிறார்கள்! உள்ளாடை அணிகிறார்கள்!” என்று பேசினார். இந்தப்பேச்சு அப்போதே சில விஷமிகளால் திரிக்கப்பட்டு “பறச்சிகளும், பள்ளச்சிகளும் ரவிக்கைபோட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது” என்று பெரியார் கூறியதாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. நாத்திகம் மற்றும் விடுதலை இதழ்களில் கடும் மறுப்பு தெரிவித்து கட்டுரைகள் வெளிவந்தன. அய்ம்பது வருடங்களுக்கு பின் இப்போது அதே வேலையை செய்திருப்பது கடைந்தெடுத்த கயவாளித்தனம் அல்லவா?

“நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.

(11-12-1968 அன்று சென்னை – அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.)
-“விடுதலை” 15-12-1968

மேல் துண்டுகூட போட உரிமைமறுக்கப்பட்ட நாதஸ்வரக்கலைஞர்களுக்கு மேல் துண்டு அணியும் உரிமையை பெற்றுத்தந்தவர் பெரியார்!. சூத்திரச்சிகள் என்று சொல்லி நாடார் சமூகப்பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்று 1829 ம் ஆண்டில் திருவாங்கூர் அரசாங்கமே உத்தரவிட்டதும், 19ம் நூற்றாண்டின் துவக்கம்வரை நாகர்கோவில் பகுதியிலேயே அவர்கள் ரவிக்கை அணியமுடியாத நிலையிருந்ததையும், இவர்கள் அறிவார்களா? இவர்களுக்கே இந்த நிலை என்றால் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? இந்த நிலைமையையெல்லாம் மாற்றியது நீதிக்கட்சியும், அதன் நீட்சியான திராவிட இயக்கமும்தான் என்பதை இந்த கழிசடை பேர்வழிகள் அறிவார்களா?

-கி.தளபதிராஜ்