பத்திரிக்கையாளர்களே… நீங்கள் நேர்மையானவர்களா?

பத்திரிக்கையாளர்களே நீங்கள் நேர்மையாக செயல்படுவதாக உளப்பூர்வமாக உணர்கிறீர்களா? உங்களுக்கு நேர்மை குணம் உள்ளதா?

நாட்டில் உள்ளவர்களை எல்லாம் மனம் போனபோக்கில் விமர்சித்து எழுதும் நீங்கள் பத்திரிக்கைகள் செய்யும் தவறுகளை கண்டித்து என்றாவது எழுதியது உண்டா?

நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் தொழில்களில் பத்திரிக்கையும் ஒன்றுதானே… அது மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

ஒரு மூத்த அரசியல்வாதியை, ஒரு மூத்த பத்திரிக்கையாளரை, பத்திரிக்கையாளர்களுக்கு என்றும் மதிப்பளிக்கும் ஒரு முதியவரை, தனது கணவரோடும் இரண்டு பெண் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணோடு இணைத்து கட்டுக்கதை எழுதியிருக்கும் குமுதம் ரிப்போர்டரின் செயலை கண்டிக்கும் நேர்மை குணம் உங்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

அரசியல்வாதிகளையும், அரசு அலுவலர்களையும், நடிகர் நடிகைகளையும், சாமியார்களையும் சகட்டு மேனிக்கு சாடித்தள்ளி பத்திரிக்கை முதலாளிகளின் வியாபாரத்திற்கு துணை நிற்கும் நீங்கள், உங்களைப்போன்ற ஒரு பத்திரிக்கையாளரான கலைஞரை பற்றி ஒரு பத்திரிக்கை அவதூறான செய்தியை பரப்ப முயன்றிருக்கும் செயலை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? உங்கள் பத்திரிக்கா தர்மம் சக பத்திரிக்கையாளரை கண்டிக்கும் நேர்மையான முறையை தடுக்கிறது என்றால், கலைஞரும் ஒரு பத்திரிக்கையாளர் என்பதை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை? அவர் பத்திரிக்கையாளராக இருந்தாலும் அரசியல்வாதி என்று நீங்கள் கருதினால், அரசியல் என்பது வேறு துறை என்று ஒருவேளை நீங்கள் கருதினால், பத்திரிக்கை முதலாளிகள் வேறு தொழிலில் ஈடுபடுவதில்லையா? வெறும் பத்திர்க்கை தொழிலை மட்டும் செய்து வயிற்றை கழுவுகின்றனரா? நேர்மையாக சிந்தித்துப்பாருங்கள்.

நாட்டில் உள்ள அனைவரையும் விமர்சிக்கும் நீங்கள், நாட்டிலேயே பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கை முதலாளிகளும்தான் நேர்மையானவர்கள், நல்லவர்கள் அல்லது கடவுளைப்போன்று விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதுகிறீர்களா?

பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்க வக்கில்லாத நீங்கள், மற்றவர்களை கண்டித்து எழுதும் தகுதி பெற்றவர்களாக உங்களை எப்படி கருதுகிறீர்கள்?

பொதுவாழ்க்கைக்கு பெண்கள் வருவதே அதிசயம் இந்நாட்டில். வரும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் எப்படி வருவார்கள்? நேர்மையான சிந்தனை உள்ளவர்கள், குஷ்பு மீது நடத்தப்பட்டுள்ள பாலியல் ரீதியிலான தாக்குதலாகவே இதையும் காண்பார்கள்.

பத்திரிக்கையாளர்களே…. உங்கள் சகோதரியை அல்லது உங்கள் மனைவியை உங்கள் தெருவில் உள்ள ஒருவரோடு இதுபோன்று இணைத்து படம்போட்டு கட்டுக்கதை எழுதினால் இரசிப்பீர்களா?

உங்களுக்கு நேர்மை குணம் இருந்தால், குமுதம் ரிபோர்ட்டர் இதழை அதன் நேர்மையற்ற விமர்சனத்தை கூட்டம் போட்டு கண்டியுங்கள். உங்கள் நேர்மையை உலகிற்கு நிருபியுங்கள். கண்டிக்காமல் உங்கள் பத்திரிக்கா தர்மத்தை கடைபிடிக்க வேண்டுமானால் கடைபிடியுங்கள்.

எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் கட்டுக்கதை எழுதுவதை நீங்கள் தொடர்ந்தால்….

பத்திரிக்கையாளர்களில் நேர்மையானவர்கள் யார்? நடுநிலையானவர்கள் யாரென்று தேடமுடியாது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுவார்கள்.

– திராவிடப் புரட்சி