நக்கீரனை எதிர்த்த தினமணிகள், குமுதம் ரிப்போர்ட்டரை ஆதரிப்பதேன்?

ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று நக்கீரன் வெளியிட்ட அட்டைப்படக்கட்டுரையை எதிர்த்து, ஜெயலலிதாவின் தனிமனித சுதந்திரம், அந்தரங்கம் ஆகியவற்றை நக்கீரன் மீறிவிட்டதாகவும், தரம்தாழ்ந்து ஜெயலலிதாவை நக்கீரன் தனிப்பட்ட முறையில் தாக்கிவிட்டதாகவும் பொங்கோ பொங்கென்று பொங்கிய நடுநிலை நாயகங்கள், பெண்ணுரிமைப் போராளிகள், இந்துமதக் காவலர்கள், சைவ சித்தாந்திகள், குஷ்பு என்கிற இரண்டு பெண் குழந்தைகளின் தாய், இன்னமும் கணவனுடனும், மாமியாருடனும் ஒரேவீட்டில் குடும்பம் நடத்திவரும் ஒரு பெண், திமுக தலைவர் மு.கருணாநிதியின் வைப்பாட்டியாக வாழ்வதாக பகிரங்கமாக குறிப்புணர்த்தி குமுதம் ரிப்போட்டர் அட்டைப்படக்கட்டுரை எழுதியதை இதுவரை கண்டிக்காமல் கள்ள மவுனம் காப்பதேன்?

இதற்கு முன், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கருணாநிதியின் மகள் கனிமொழியையும், ஆண்டிமுத்து ராசாவையும் இதேபோல் சம்பந்தப்படுத்தி ஜூனியர் விகடன் இதே ரீதியில் ஒரு அட்டைப்படக்கட்டுரை எழுதியிருந்தது? அதையும் மேற்சொன்ன கருத்து கண்ணாயிரங்கள் யாரும் கண்டிக்கவில்லை. கள்ள மவுனமே காத்தார்கள்.

அதற்கும் முன்னர் தினமலர் பாலியல் தொழிலில் ஈடுபடும் நடிகைகள் என்றொரு பட்டியலை வெளியிட்டு அவர்களின் ரேட் என்ன என்றும் வெளியிட்டிருந்தது. அதன்போதும் மேற்சொன்ன பார்ட்டிகள் யாரும் கண்டிக்கவில்லை.

ஆனால் இந்த கருத்து கண்ணாயிரங்கள், நக்கீரனை திட்டுவதற்கும், ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுப்பதற்கும் மட்டும் புதிதுபுதிதாக கோணங்களையும் வாதங்களையும் கண்டுபிடித்து வாதாடுவார்கள்.

இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் தினமணி ஆசிரியர் வைத்தியநாத ஐயர், நக்கீரனைத் திட்டி ஒரு தலையங்கமே எழுதியிருந்தார். அதில் நக்கீரனை பெயர் சொல்லாமல் நவீன தீண்டாமை கடைப்பிடித்த ஐயர்வாள், நக்கீரன் செய்தது ஊடக உலகுக்கே இழுக்கு என்றும், ஊடகத்துறை ஒட்டுமொத்தமாக நக்கீரனைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் “யோசனை”(!) தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுவதாக செய்தி வெளியிட்ட நக்கீரனின் செயலே, ஊடகத்துறைக்கு இழுக்கு என்றால், குஷ்பு கருணாநிதியின் ஆசைநாயகி என்றும், கனிமொழிக்கும் ராசாவுக்கும் ரகசியத்தொடர்பு இருப்பதாகவும், குறிப்பிட்ட திரைப்பட நடிகைகளின் இரவு நேர ரேட் இது தான் என்றும் குமுதம் ரிப்போர்ட்டரும், ஜூனியர் விகடனும், தினமலரும் செய்தி வெளியிட்ட செயலை தினமணியும், வைத்தியும் எப்படியெல்லாம் கண்டிக்க வேண்டும்?

ஆனால் அது குறித்தெல்லாம் தினமணி தலையங்கம் எழுதி கண்டிக்கவில்லை. அந்த பத்திரிகைகளை புறக்கணுக்குமாறு வைத்தியநாத ஐயர்வாளும் யோசனை கூறவில்லை. தினமணி தரப்பில் (கள்ள) மவுனமே காக்கப்படுகிறது.

அதென்ன ஜெயலலிதாவுக்கு ஒரு அளவுகோல்; குஷ்பு, கனிமொழிக்கு வேறொரு அளவுகோல்?

அல்லது நக்கீரனுக்கு ஒரு அளவுகோல்; ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், தினமணிக்கு வேறொரு அளவுகோல்?

சரியாக நூல் பிடித்து பிரித்ததைப்போல நிலவும் இந்த பிளவுக்கு என்ன காரணம்?

தினமணிகளுக்கும், வைத்தியநாத ஐயர்களுக்கும், அவரையொத்த அறிவுஜீவிகளுக்கும், பெண்ணுரிமைப் போராளிகளுக்கும், கருத்துச் சுதந்திர கண்ணாயிரங்களுக்கும், எல்லாப் பெண்களும் ஒன்றல்ல; அவர்களுக்கான பெண்ணுரிமைகளும் சமமல்ல!

குலப் பெருமையும், குடிப் பெருமையும் கொண்ட ஜெயலலிதாவின் உணவுப் பழக்கத்தை தவறாக எழுதினால் உருவாகும் அபகீர்த்தியும், அதனால் தினமணிகளுக்கு உருவாகும் கோபத்தின் அளவும் மிக அதிகம்.

இந்தப் பெருமைகள் இல்லாத கனிமொழியும், குஷ்புவும் குடும்பத்துக்கு வெளியே கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக அவதூறு எழுதினாலும் வைத்தியநாதன்களுக்கு கோபம் கொப்பளிக்காது; அவர்களிடமிருந்து குறைந்தபட்ச கண்டனம் கூட வெளிப்படாது.

வர்ணாஸ்ரம படிநிலையில் ஆகக்கடைசியில் இருக்கும் குலப் பெண்கள் மற்றவர்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்கவேண்டும் என்று மனுவே வகுத்துவிட்ட பிறகு, குஷ்பு, கனிமொழியின் கவுரவத்துக்காக மனுவின் பேரன் வைத்தியநாதன்களுக்கு எப்படி கோபம் வரும்? ஏன் வரவேண்டும்?

-நாடோடி