டிஜிட்டல் பார்ப்பனீயம்

’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள்.

1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான்.

1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக கல்விகற்று இணையத்துக்கு வருபவர்களை நக்கல் அடித்து துரத்தி அடிப்பது. பிறப்பு, வளர்ப்பு குறித்த inferiority complex ஏற்படுத்துவது.

2) இடஒதுக்கீடு போன்ற விவாதங்கள் வரும்போது ‘தகுதி’ பேசுவது. தகுதி என்பது பூணூலா என்று பதில் கேள்வி கேட்டால், ‘அய்யய்யோ… சாதிவெறி புடிச்சவன்’ என்று கூப்பாடு இடுவது.

3) ‘லைக்’ இடுவது, ‘கமெண்டு போடுவது’, ‘விவாதிப்பது’ போன்ற விஷயங்களில் இருக்கும் partiality. நீண்டகால இணைய விவாதங்களில் நீடிப்பவர்கள் இதை தெளிவாக உணரமுடியும்.

4) மோடி, ஜெயலலிதா என்று அவர்களது தேர்வுகள், எந்த தேசத்தில் வசிப்பவர்களாக இருந்தாலும் unique ஆக இருக்கும். எப்படி எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள், இவர்களை இணைக்கும் ‘சக்தி’ எதுவென்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

5) ‘ஈழம்’ மாதிரி பிரத்யேகப் பிரச்சினைகளில் எப்போதும் மெஜாரிட்டியான தமிழர்களுக்கு எதிரான வாதங்களையே முன்வைப்பார்கள். அதுவே பார்ப்பனரல்லாத தலைமைக்கு எதிராக திரும்பும் சந்தர்ப்பம் கிடைக்கிறதென்றால், அதையும் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் முன்பு பேசிவந்தவற்றிலிருந்து அப்படியே ‘யூ டர்ன்’ அடிப்பார்கள்.

6) தமிழர்களை ‘பொறுக்கி’ என்றே இணையத்தில் எப்போதும் விளிக்கும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களை இவர்கள் கண்டித்ததில்லை. பதிலுக்கு ரீட்விட்டு, லைக்கும் தூள்பறக்கும். ஏனெனில் அந்த விளிப்பு தங்களுக்கு பொருந்தாது என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அதே மொழியை எதிர்விவாதம் செய்பவர்கள் பயன்படுத்திவிட்டால், ‘அய்யய்யோ… நாகரிகம் அற்ற காட்டுமிராண்டிகள்’ என்று கூப்பாடு போடுவார்கள். அயல்நாட்டில் எல்லாம் படித்த பேராசிரியர், லஜ்ஜையே இல்லாமல் தன்னை சாதியடையாளத்தோடு சமூகத்தில் முன்வைத்துக் கொள்கிறாரே என்றெல்லாம் யோசிப்பதேயில்லை.

7) ஊழல்தான் நாட்டின் முதன்மைப் பிரச்சினை என்று வாதாடுவார்கள். சாதி, மதவாதப் பிரச்சினைகளை பேசும் விவாதங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் (லாலு, ராசா பெயர்கள் மாதிரி) பெயர்களை அடுக்குவார்கள். அதாவது இவர்கள் அதிகாரத்துக்கு வரும் பட்சத்தில், இதுதான் நடக்கும் என்பார்கள். இஸ்ரோவிலும் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு என்று சி.ஏ.ஜி. சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக் காட்டினால் அப்படியே லீஸில் விட்டுவிடுவார்கள். ஊழல் எதிர்ப்பிலும் கூட இவர்களுக்கு ‘தேர்வு’ இருக்கிறது.

8) ‘பெரியார்’ என்கிற பெயரை தினமும் தேடுபொறி இயந்திரங்களில் தட்டச்சி தேடுவார்கள் போல. மறைந்து நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் ஆன தலைவரை கற்பனை செய்யவியலா வார்த்தைகளில் அர்ச்சிப்பார்கள். ’பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும்’ என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சு அதனால்தான் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் அதைவிட மோசமான வார்த்தைகளை அவர் குறித்து இணையத்தில் வாசித்திருக்கிறேன்.

9) சாதிய அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம் கொண்டவர்களோடு, அவர்கள் எந்த சாதி, என்ன மதம் என்ற பாகுபாடெல்லாம் காட்டாமல் தற்காலிக கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். அப்போதைக்கு முற்போக்காளர்கள் மூடிக்கொண்டு போகவேண்டும், அவ்வளவுதான் அவர்களது நோக்கம். ‘விஸ்வரூபம்’ பிரச்சினையின் போது இந்த போக்கை நீங்கள் கண்டிருக்கலாம்.

10) இவர்களோடு ஒத்துப் போகிறவர்களை அடிவருடிகளாக மாற்றிக் கொண்டு, எதிர்நிலை விவாதம் பேசுபவர்களை தேடி அடிக்கும் அடியாட்களாக மாற்றுவது. உதாரணங்கள் தேவையில்லை. அடிபட்டவர்களுக்கு புரியும்.

பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தீண்டாமை சில இந்திய நகரங்களில் முற்றிலும் ஒழிந்திருக்கலாம். அதன் தாக்கம் குறைந்திருக்கலாம். ஆனால் களம் மாறியிருக்கிறது. ’டிஜிட்டல் தீண்டாமை’ சத்தியமாக இங்கே நிலவுகிறது. உணராதவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதற்கு அவர்களே பலியாகப்போவது உறுதி!

யுவகிருஷ்ணா