அடிகளார் காலில் பெரியார் விழுந்தாரா?

குன்றக்குடி அடிகளார் மடத்தை சார்ந்த ஒருவர் தந்தை பெரியாரின் நெற்றியில் அவர்களது வழக்கப்படி திருநீறு பூசினார். அந்த சாம்பலை தந்தை பெரியார் துடைத்துகொண்டார் என்பது மட்டுமே இதுவரை செய்தி.

தற்போது திருச்சி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ள நூலில் இருந்து பெறப்பட்டதாக வினவு தளத்தில் ஓரு புதிய கதையை கட்டுரையாக பதிந்துள்ளார். அதை ஆதாரம் என்று சொல்லி சிம்ம வாகனி என்ற ஒருவர் முகநூலில் வாதாடிக்கொண்டிருக்கிறார்.

சரி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ளதாக வந்துள்ள செய்தி என்ன? திருச்சியில் தந்தை பெரியாருக்கு நடந்த பாராட்டு விழாவில், தந்தை பெரியார் குன்றக்குடி அடிகளாரின் காலை தொட்டு ஆசி வாங்கினார் என்பதே அந்த செய்தி.

சிம்ம வாகனி மற்றும் அவரது எழுத்தை படித்து மகிழ்ந்து இரசிக்கும் கூட்டத்திற்கு வேண்டுமானால் எதையும் அப்படியே நம்பும் வழக்கம் இருக்கலாம். பெரியாரியவாதிகள் அப்படியல்ல. எதையும் ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவுவாதிகள்.

திருச்சி.செல்வேந்திரன் எழுதியிருந்தாலும் எழுதாவிட்டாலும் அந்த நிகழ்வு நடந்ததா? என்பதை தற்போது நாம் ஆராய்வோம். மரியாதைக்குரிய திருச்சி.செல்வேந்திரன் அவர்கள் சொல்லுவதை குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் பெரியாரியவாதிகளுக்கு இல்லை என்பதை அவரே எற்றுக்கொள்வார்.
தந்தை பெரியாரும் இனமான அடிகளாரும்
பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்த மேடையின் மீதும் மேடைக்கு முன்பும் பலர் நிச்சயமாக இருந்திருப்பார்கள். இந்த நிலையில், தந்தை பெரியார் காலில் விழுந்திருந்தால், அந்த அதிசயமான செய்கையை பலரும் கண்டு அதிர்ந்திருப்பார்கள். அதிர்ந்தவர்கள் பெரியாரின் தொண்டர்களாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. அங்கு குழுமியிருந்த ஆன்மீகவாதிகளும் பொதுமக்களும் அதிர்ந்திருப்பார்கள். அப்படி அதிர்ந்ததாக திருச்சி.செல்வேந்திரன அவர்களைத் தவிர வேறு யாரும் இதுவரை சொன்னதில்லை.

தந்தை பெரியாரை இப்போது குறை சொல்லுபவர்களை விட அப்போது சொல்லிக்கொண்டிருந்தவர்கள் பலர். அவரது கொள்கைக்கு அப்போது எதிரிகளும் பலர். இப்படிபட்ட அவரது கொள்கைக்கு முரணான நிகழ்வை அறிந்து அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? பத்திரிக்கைக்கு பத்திரிக்கை தலையங்கம் தீட்டி சந்தோஷபட்டிருக்க மாட்டார்களா? “ஆன்மிகத்தின் காலில் நாத்திகம்” காலில் விழுந்த சுயமரியாதை” என்றெல்லாம் தலையங்கம் தீட்டி மகிழ்ச்சியை வெளிபடுத்தி இருக்கமாட்டார்களா?

ஆகவே, இந்த தகவல் முற்றிலும் தவறான தகவல். திருச்சி செல்வேந்திரன் அவர்கள் எழுதியிருந்தாலும், அதுவும் தவறான ஒன்று என்பதே மேலே உள்ள வாதங்கள் நிருபிக்கின்றன.

மேலும் தந்தை பெரியாரோடு இருந்த மேலும் சிலரை இன்று தொடர்புகொண்டு பேசினேன். இந்த செய்தி முற்றிலும் தவறு என்று அடித்து சொல்லுகின்றனர்.

பலர் முன்னிலையில் நடந்த ஒன்று என்று ஒரே ஒருவர் சொல்லுவதால் அது ஆதாரமாகாது. அங்கிருந்த பலரும் ஆம் என்று ஏற்றுக்கொண்டால், அல்லது அதே காலத்தில் அது பத்திரிக்கைகளில் செய்தியாக வந்திருந்தால் மட்டுமே அது ஆதாரமாகும்.

இறந்து 39 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை எதிரியாக கருதி அவதூறு பிரச்சாரம் செய்பவர்களை கண்டு வியப்பதை விட நான் தந்தை பெரியாரை நினைத்து வியக்கிறேன். மறைந்தும் சிம்ம சொப்பனமாக வாழும் அவர் வாழ்ந்த காலத்தில் சிலர் உறங்கி இருக்கவே மாட்டார்கள் போல.

தந்தை பெரியாரின் கொள்கைகள் தவறு என்று வாதிட வக்கில்லாதவர்கள் அவருக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை, எள்ளு தாத்தா காலத்தில் இருந்து எள்ளு பேரன் காலம் வரை தொடர்கிறார்கள்.

சூரியனை பார்த்து நாய் குரைக்கிறது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்லுவார்கள், அதுதான் என் நினைவுக்கு வருகிறது.

குறிப்பு:
எதையும் ஆராயும் பெரியாரியவாதிகள் இந்த செய்தி குறித்த பின்புலங்களை கண்டறிய தேடுதலை தொடங்கியுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– திராவிடப் புரட்சி