தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று

உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள்.

உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!

உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!

உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!

உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!

அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்–கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!

அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.

ஒரு நாள் என்பது என்ன?

சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.

ஒருமாதம் என்பது என்ன?

ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்குதிங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு என்பது என்ன?

சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் நாள் முதல் (உத்ராயணம்) மீண்டும்அதே நிலை (மீண்டும் உத்ராயணம்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.

அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.

சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும்வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.

உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்றுபொருள்.

சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும்; பங்குனி சித்திரையில் உச்சியில்இருக்கும்; பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும்; பின் தென்கோடிக்கு வந்து மீண்டும்வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்குநோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.

சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்துஅவ்வாறு கணித்தனர்.

ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில்கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.

தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தைமுதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்–டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின்முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கிலஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியேஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள்வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் இருப்பிடத் திலிருந்துவடமேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.

ஏசு பிறப்பை வைத்து ஆங்கில ஆண்டுக் கணக்கீடு என்பது சரியன்று. காரணம், ஏசு பிறந்தது டிசம்பர் 25.மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்றஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.

எனவே, சூரியச் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுக் –கணக்கீடு என்பது உறுதியாவதோடுதை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.

தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகள் தொடராண்டுக்குப் பயன்படாது. 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டுகளில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க வேண்டும்?

மறைமலை அடிகள்

எனவே தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921- ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்து, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்து, 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார்.

எனவே, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவியல் சார் தமிழர் மரபை நாம் ஏற்றுக்கொண்டாடுவதோடு, அதையே நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டுஇந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்!தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்!

தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்கவேண்டும். அதை யாரும் எதிர்க்கப் போவதில்லை.

எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழிகாட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள்.

தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம்அல்லவா?

உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்?இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா?எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!

1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது.அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.

அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா?

சல்லிக்கட்டு போல்…தமிழர்கள் இளைஞர்கள் ஒன்று பட்டால் நிச்சயம் நிறைவேறும்.

– சிகரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *