மத அழைப்பாளரா பெரியார்? கி.தளபதிராஜ்

மானுட சமூகத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதே தன் வாழ்நாள் பணியாய்க் கொண்டு, கடவுள் மத சாதித் தடைகளை தகர்த்தெரிந்து சமத்துவசமுதாயம் படைக்க, தள்ளாத வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்தபடி சுற்றிச்சுற்றி தொண்டாற்றிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் உலகத் தலைவர் பெரியார்!.

மானுடப்பற்றைத் தவிர வேறு எதன்மீதும் எனக்குப் பற்று இல்லை என பறை சாற்றியவர்!.சமூக நீதிக்குரல் எழுப்பி 1925ம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், சாகும் தருவாயிலும் தான் கொண்ட கொள்கையில் சாயாத சிங்கமாய் சிலிர்த்து நின்றார்!

காங்கிரசை ஒழிப்பதே முதல்வேலை என்று சூளுரைத்து வெளியேறிய பெரியார்தான் பச்சைத்தமிழர் காமராசரை ஆதரித்தார். தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகர் காமராசர் என்றார்.அவரது ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வேர்களில் கல்வி நீரோடை பாய்ந்தது. அரசுப் பணிகளில் அடக்கப்பட்ட சமூகம் அடியெடுத்து வைத்தது. “காமராசரை வலுப்படுத்துங்கள்!” என்று முழங்கினார் பெரியார். காரணம் பெரியார்! காரியம் காமராசர்! என்று ஏடுகள் எழுதின.

மனித வளர்ச்சிக்குப் பயன்படாத மதக்குப்பைகளை மண்ணோடு மண்ணாக புதைக்கச்சொன்னவர் பெரியார்.அதே பெரியார்தான் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டி புத்த மதத்திற்கும், இஸ்லாத்திற்கும் செல்லுங்கள் என்று அறிவுறுத்துகிறார்!. ஆனால் புத்த மதத்தை தழுவ முடிவெடுத்து அம்பேத்கர் அழைப்பு விடுத்தபோது பெரியார் அதை மறுக்கிறார். இஸ்லாத்துக்கோ, புத்த மதத்திற்கோ செல்வதைக்கூட சூத்திரப்பட்டம் ஒழிய ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருதினார் பெரியார்.

“கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 சதவீத மக்கள் இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதையெல்லாம் செய்கிறார்கள். அப்படி இருக்க இசுலாத்துக்கு செல்வதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கிறது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது இஸ்லாம் மதமும் ஒழிந்து போகும்!”
என ஓங்கி ஒலிக்கிறார்.

பெரியாரின் சொல்லிலும் செயலிலும் நேர்மை இருந்தது. தாம் கொண்ட கொள்கையில் கடைசிவரை உறுதியாய் இருந்தார். தமிழ்ச்சமுதாயம் அவர் மீது நம்பிக்கை வைத்தது. பெரியாரை வளைக்கவோ, திரிக்கவோ முயற்சிப்பவர்கள் என்றும் அம்பலப்பட்டுப்போவார்கள் என்பதை வரலாறு அவ்வப்போது உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

திரு.சேஷாச்சலம் அவர்கள், சிலநாட்கள் “பூங்குன்றனாக” பவனிவந்து, பின் பெரியாரின் கொள்கைகள் தன்னை ஆட்கொண்டதாகக் சொல்லி “பெரியார்தாசன்” என பெயர் மாற்றி அதன் பின்னர் புத்தமதம் தன்னை ஈர்த்ததாகக் கூறி அதற்குத்தாவி உடன் சித்தார்த்தன் என பெயர் மாற்றி இறுதியில் இஸ்லாமே இனிய மார்க்கம் எனக் கண்டறிந்து அப்துல்லாஹ் வாக வேடமேற்று அண்மையில் மைத்தானவர். தன் “நா” வன்மையால் தமிழ்நாட்டு மேடைகளில் வலம்வந்தவர். அவர் எழுதிய “இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா?” எனும் நூலை “இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம்” அன்மையில் வெளியிட்டிருக்கிறது. அப்துல்லாஹ் என்ற பெயரிலேயே இந்த நூல் எழுதப்பட்டுள்ளதால் இனி அப்துல்லாஹ் என்றே குறிப்பிடுவோம்.

நபிகள் நாயகம் விழா போன்ற இஸ்லாமிய விழாக்களில் பெரியார் பேசிய ஒன்றிரண்டு பேச்சுக்களை எடுத்து, அதையும் முழுமையாக வெளியிடாமல், சிற்சில வரிகளை மட்டும் பொறுக்கி பக்கத்திற்குப் பக்கம் மேற்கோள் காட்டி தன் கருத்துக்கு வலுசேர்க்க முயற்சித்திருக்கிறார் அப்துல்லாஹ்!.

1923 லிருந்து 1973 வரை, பெரியார் இஸ்லாத்தைப் பற்றி பேசிவந்திருக்கிறார் என்று குறிப்பிடும் அப்துல்லாஹ்க்கு 50 ஆண்டுகளில் காணக் கிடைத்தது இரண்டு மூன்று கட்டுரைகளே என்பதும், அதிலும் முன்னுக்குப் பின் வெட்டப்பட்ட சில வரிகளே என்று நினைக்கும்போது வருத்தமாகத்தானிருக்கிறது.பெரும்பாலும் எனது கருத்துக்களை மட்டுமே பேசிவந்த நான் இந்த விசயத்தில் எனது கருத்துக்களைக் கூறாமல் பெரியாரின் கருத்துக்களையே கூற விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நூலுக்கான மறுப்பை நாமும் எமது சொந்தக்கருத்தாக எதையும் வைக்கப்போவதில்லை; பெரியாரின் மத ஒழிப்புக் கொள்கையை கொச்சைப்படுத்த முயல்வோரை தோலுரிக்க, அவர் வழியிலேயே, அவர் எடுத்துக் கொண்ட, பெரியார் கட்டுரைகளின் மறைக்கப்பட்ட பகுதிகளோடு, மேலும் சில பேச்சுக்களையும், கட்டுரைகளையும் எடுத்துக்காட்டியிருக்கிறோம்.

பெரியார் இஸ்லாத்தின் அழைப்பாளராகவே (Representative) இருந்தார் என்று எழுதுகிறார் அப்துல்லாஹ்!. பெரியாரோ, 1927 லேயே நான் எந்த மதத்துக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல என்று எச்சரித்திருக்கிறார்! .
நான் எந்த மதக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல; அல்லது எந்த மதத்துக்காரனுக்காவது நான் அடிமையுமல்ல; “அன்பு, அறிவு” என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன்.

மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ, சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப் படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனசாட்சிக்கு கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனசாட்சியை கட்டுப்படுத்தக்கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? என்பவைகளை தயவு செய்து யோசித்துப்பாருங்கள்.

-குடிஅரசு 11.9.1927

நமது நிலைக்கு காரணம் என்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றன? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள் தனமே நமது இன்றைய இழிவு நிலைக்குக் காரணம்.

மதத்தையாவது, சாதியையாவது, கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் மக்களுக்குச் சமத்துவமும், அறிவும், தொழிலும், செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது.

-குடிஅரசு 14.9.1930

“மதத்தையோ கடவுளையோ உண்மை என்று நம்பி காப்பாற்ற முயற்சிப்பவர்களால், மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லும் பெரியாரை. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு அழைப்பாளராக அடையாளப்படுத்தும் அப்துல்லாஹ், பெரியார் இறைவனைப் பற்றியும் தொடர்ந்து பேசியிருப்பதாக கூறுகிறார். அப்படி அவர் இறைவனைப் பற்றி பேசியிருப்பாரேயானால் அந்த வரிகளை எடுத்துக்காட்டியிருக்க வேண்டியதுதானே? இறைவனைப் பற்றி பெரியார் பேசியிருக்கிறார். எப்படித் தெரியுமா? “கடவுள் இல்லை! இல்லவே இல்லை!” என்று பேசியிருக்கிறார். பெரியார் இஸ்லாத்தைப்பற்றி பேசியிருக்கிறார். இஸ்லாத்தில் சகோதரத்துவம் இருக்கிறது. சூத்திரப்பட்டம் ஒழிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே இஸ்லாத்துக்கு சென்று உங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுங்கள் என்றார். அதேசமயம் அவர் இஸ்லாத்தின் மூடநம்பிகைகளை சுட்டிக்காட்டவும் தயங்கியதில்லை.
மனிதனின் அறிவிற்குப் பயப்படும் “கடவுளும் மார்க்கமும்” உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் பயந்து ஓடுகிறீர்கள்? அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கிறவனை விட கடவுள், மதம் இவைகளைப் பற்றி கவலைப்படாதவனே, இல்லை என்று கருதிக்கொண்டிருப்பவனே வீரனென்று நான் சொல்லுவேன்.

சமாதை வணங்கவேண்டாம், பூசை செய்யவேண்டாம் என்றால் உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால் இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன?

இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கு உருவமில்லை என்பதும், அதைத்தவிர மற்றதை வணங்கக்கூடாதென்றும் சொல்லப்படுகிறது. அது மாத்திரமில்லாமல் அல்லாசாமி பண்டிகையிலும் கூண்டு முதலிய பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் இஸ்லாமியர் சிலர் நடந்துகொள்வது மிகவும் வெறுக்கத்தக்கது. இவைகளையெல்லாம் ஒரு “மார்க்க கட்டளை” என்று சொல்வதானால் அந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவு மார்க்கமாகவோ, உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்க முடியாது.

இன்று இந்துவும், கிறிஸ்தவனும் பகுத்தறிவைக் கண்டால் பயப்படுகிறார்கள். இஸ்லாம் மார்க்கத்தில்தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று பந்தயம் கட்டுகிறார்கள். ஆனால் சமாது வணக்கமும், கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்ட மக்களை ஏராளமாய் வைத்துக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கையோடு சேர்த்துக்கொண்டிருக்கிறவர்களையும், சேர்த்து வைத்துக்கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மற்ற மதங்களைவிட “இசுலாம் மதம்” மேலானது என்பது எனது அபிப்ராயம்.ஆனால் அதில் இனிச் சிறிதுகூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் நான் முரண்பட்டவன். ஏனெனில் நான் கண்களில் பார்ப்பதைக் கொண்டுதான் சொல்லுகிறேன். இன்று இசுலாம் மதச் சடங்குகள் சீர்செய்யப்பட வேண்டியவை என்று துணிந்து கூறுவேன்.

-குடிஅரசு 1.2.1931
மற்ற மதங்களைவிட இசுலாம் மதம் மேலானது என்பது எனது அபிப்ராயம்.ஆனால் அதில் இனிச் சிறிதுகூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் நான் முரன்பட்டவன் என்று கூறும் பெரியார் அவர்கள் ஒட்டுமொத்த மதத்தைப்பற்றிய தனது பொதுவான கருத்தாக, மனிதனின் அறிவிற்குப் பயப்படும் “கடவுளும் மார்க்கமும்” உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் பயந்து ஓடுகிறீர்கள்? அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கிறவனை விட கடவுள், மதம் இவைகளைப் பற்றி கவலைப்படாதவனே, இல்லை என்று கருதிக்கொண்டிருப்பவனே வீரனென்று நான் சொல்லுவேன் என்று அறிவிக்கிறார்.

காந்தியை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற பெரியார், காந்தி இறந்தபோது இந்த நாட்டுக்கு “காந்தி தேசம்” என்று பெயரிடவேண்டும் என்றார். இப்படி பெரியார் முன்பு சொன்ன கருத்துகள் பலவற்றை பின்னால் மாற்றிகொண்டிருக்கிறார் என்று எழுதுகிறார் அப்துல்லாஹ்.

பெரியார் “கொள்கையை மாற்றிக்கொண்டார்” என்பது சரியா? காந்தியார் பார்ப்பனத்தலைவர்களோடு சேர்ந்து, சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டபோது “காந்தியை ஒழித்துக்கட்டுவேன்” என்ற பெரியார், அதே காந்தி இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலைச்சேர்ந்த நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டநிலையில், பெரியார் இந்த நாட்டுக்கு “காந்தி தேசம்” என பெயர் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். பெரியாரை முழுமையாக புரிந்தவர்களுக்கு இதில் முரண்பாட்டுக்கே இடம் இல்லை என்பது புரியும்.

பெரியார் 1932 ல் ரஷ்யா சென்று வந்தார். அவ்வருடம் தொடங்கி 1938 வரை முழுமையான நாத்திகப்பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னும் பின்னும் சமயங்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் அப்துல்லாஹ்.

1953ல் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்!
1956ல் இராமர் படஎரிப்புப் போராட்டம்!
1967ல் திருவாரூர் மாவட்டம் விடயபுரத்தில்

கடவுள் இல்லை! கடவுள் இல்லை!
கடவுள் இல்லவே இல்லை!!
கடவுளை கற்பித்தவன் முட்டாள்!
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்!
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!

ஆத்மா, மோட்சம், பிதிர்லோகம் இவற்றால்
பலன் அனுபவிக்கிறவன், மகாமகா அயோக்கியன்!!

என்கிற கருத்தாழமிக்க கடவுள் மறுப்பு வாசகத்தை அறிவித்து அதை தன் சிலைகளுக்கு கீழேயும் கொடிக்கம்பங்களிலும் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட வேண்டும் என்கிற வேண்டுகோள்! இப்படி தன் வாழ்நாள் முழுதும் நாத்திகப் பிரச்சாரம் செய்த நாத்திகத்தலைவனை நா கூசாமல் பெரியார் 1932 முதல் 1938 வரையே முழுமையான நாத்திகப்பிரச்சாரம் செய்ததாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அப்துல்லாஹ்.

ஆதிதிராவிடர்களை நான் ஏன் இஸ்லாம் மதத்தில் சேருங்கள் என்று கூறுகிறேன்? எனக்கேட்டு அதற்கான பதிலையும் தருகிறார் பெரியார்!
ஆதிதிராவிடர்களை நான் இசுலாம் மதத்தில் சேருங்கள் என்று சொல்வதற்காக அநேகம்பேர் என்மீது கோபித்க்க்கொண்டார்கள். அவர்களுக்கு சொந்த அறிவும் இல்லை. சொல்வதை கிரகிக்கக்கூடிய சக்தியும் இல்லை.

மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதிதிராவிடர்களை இசுலாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை. அல்லது ஆத்மார்த்தத்திற்கோ, கடவுளை அடைவதற்கோ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித்திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாகிரகம் செய்வது போலவே இசுலாம் கொள்கையை தழுவுவது என்பது ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்வேன்.

கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 மக்கள் என்னென்னவோ, அவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதையெல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கிறது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது இசுலாம் மதமும் ஒழியும்.

நான் இசுலாம் மதக்கொள்கைகள் முழுவதையும் ஒப்புகொண்டதாகவோ, அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதைக் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவை போன்ற நடவடிக்கைகளை இசுலாம் மதத்திலும் செய்கிறார்கள். சமாதி வணக்கம், பூசை, நெய்வேத்தியம் முதலியவைகள் இசுலாம் மதத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல், இசுலாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கிறது. மற்றும் நாகூர் முதலிய ஸ்தல விசேஷங்களும், சந்தனக்கூடு, தீமிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன. இவை குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. ஆனால் இவை ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச்சமூகமும் தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ள முடியும்.

குடிஅரசு 2.8.1931.

அவர் மதமாற்றத்தை எல்லோருக்குமாக முன்மொழியவில்லை. கடவுள் நம்பிக்கையோடு இருப்பவர்கள், அதே நேரத்தில் சாதி இழிவு வேண்டாம் என்பவர்களுக்கு மதமாற்றத்தை ஒரு வழியாகக் காட்டினார். ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமாக அவர் ஒருநாளும் அதைக் கூறவில்லை. அம்பேத்கர் மதம் மாறுவதாக அறிவித்தபோது, ஒரு தோழர், பெரியாருக்கு கடிதம் எழுதி, மதத்தை மறுக்கும் சுயமரியாதைக்காரர்கள், மத மாற்றத்தை ஆதரிக்கலாமா என்று கேட்டதற்கு, பெரியார் அளித்த விளக்கத்தைப் ப‌டித்தால் இன்னும் தெளிவாக‌ விள‌ங்கும்.

“வெளிப்படையாய் நாம் பேசுவதானால் அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும், நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபணை என்ன என்று கேட்கின்றோம்.

முகம்மதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம். கோஷா இருக்கலாம். கடவுள் இருக்கலாம். மூட நம்பிக்கை இருக்கலாம். மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம். சமதர்மமில்லாமலுமிருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகம்மதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். நாஸ்திகருக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். சமதர்மவாதிகளுக்கும், பொது உடமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற – ஒதுக்கப்பட்டிருக்கின்ற ‍ தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, நாயினும், மலத்திலும் புழுத்த விஷக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் – தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டு இருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா? இல்லையா என்று கேட்கின்றோம்.

உண்மையாகவே சுயமரியாதைக்காரருக்கு இந்தச் சமயத்திலும் வேலை இருக்கிறது என்றுதான் நாம் கருதுகிறோம். ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவப் பிள்ளை, கிறிஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லீம் என்றோ அழைக்க இடமில்லாமலும், அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்ற சமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு “எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்” என்கின்றவன் போனால் இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும் “சரி எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்” என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.”

-குடிஅரசு 17.11.1935

சாதி, கடவுள், மதம் ஒழிந்த சமதர்ம சமத்துவ சமுதாயத்தையே இறுதி லட்சியமாகக் கொண்டிருந்த பெரியார், தீண்டாமையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு மட்டுமே, மதமாற்றத்தை மக்களுக்கு தாம் முன்மொழிவதாகக் கூறுகிறார். மற்றபடி முஸ்லிம் மதத்தில் உள்ள மூட நம்பிக்கை, பெண்ணுரிமை மறுப்பு கருத்துகள் சுயமரியாதைக்காரர்களுக்கோ, பொதுவுடைமைவாதிகளுக்கோ உடன்பாடானது அல்ல என்றும் கூறுகிறார்.

இசுலாம் மார்க்கம், மக்களுக்கு உபதேசிப்பதிலும், வேதவாக்கியங்களிலும் மேன்மையாக இருக்கிறது. என்கிறார் பெரியார். அதனால் தான் சொல்கிறேன் இசுலாத்தை பெரியார் எதிர்க்கவில்லை. ஏற்றுகொண்டார் என்று அந்தப் புத்தகத்தை முடித்திருக்கிறார்.

இசுலாம் மார்க்கம் மக்களுக்கு உபதேசிப்பதிலும், வேதவாக்கியங்களிலும் மேன்மையாக இருக்கிறது என்று பேசிய பெரியார் தொடர்ந்து பேசியதை லாவகமாக மறைத்துவிட்டார் அப்துல்லாஹ்!.
இசுலாம் மார்க்கம் மக்களுக்கு உபதேசிப்பதிலும், வேதவாக்கியத்திலும், மேன்மையானதாய் இருக்கின்றது என்கின்ற திருப்தியானது மனித சமுதாயத்திற்கு எல்லா பயன்களையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்துக்கு ஒப்பக் காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச்செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக்கி உலக மக்களை ஒன்றுபடுத்தவும், சகோதரத்தன்மையுடன் இருக்கவும், பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்ய வேண்டும்.

எந்தக் கொள்கைக்காரனும் புத்தகத்தில் இருப்பதைக் கொண்டு, தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது. உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி, எதையும் நேரிடை அனுபவத்தைக் கொண்டு பரீட்சித்து சரிபார்க்க வந்துவிட்டது.

செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவனியாகும்.
என் சரக்கைப் பரீட்சிக்கலாமா? என்கின்ற அடக்குமுறை இனி பலிக்காது. “அவர் ஒஸ்தின்னு சொன்னார்” “ஆண்டவன் சொன்னான்” என்பவையெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால், காரியத்தில் நடந்து காட்டாவிட்டால், இனி மதிப்புபெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப் பார்த்துத்தான் மதிக்கவேண்டியதாகும். அந்த முறையில் இசுலாம் கொள்கை என்பதும், முசுலிம் மக்களின் நடத்தையைக் கொண்டும், அவர்களது பிரத்தியட்சப்பயனை கொண்டும்தான் மதிக்கப்பட முடியும்.

இந்துக்கள் தேர் இழுப்பதைப்பார்த்து முசுலிம்கள் பரிகாசம் செய்துவிட்டு, முசுலிம்கள் கூண்டு கட்டிச் சுமந்துகொண்டு , கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, வாணவேடிகை செய்துகொண்டு தெருவில் போய்க்கொண்டிருந்தால் உலகம் திரும்பிச் சிரிக்காதா?

இந்துக்கள் காசிக்கும், இராமேஸ்வரத்திற்கும் போய் பணம் செலவழித்துவிட்டு பாவம் தொலைந்துவிட்டது என்று திரும்பி வருவதைப்பார்த்து முசுலிம்கள் சிரித்துவிட்டு, நாகூருக்கும், மக்காவுக்கும், முத்துப்பேட்டைக்கும் போய்விட்டு வந்து தங்கள் பாவம் தொலைந்துவிட்டது என்றால் மற்றவர்கள் சிரிக்கமாட்டார்களா?

குடிஅரசு 9.8.1931
நாகூருக்கும், மக்காவுக்கும், பாவம் தொலைக்கச் செல்வதாக கூறுபவர்களை கடுமையாக சாடுகிறார் பெரியார். ஆனால் பெரியார் கொள்கையை 40 ஆண்டுகாலமாக கடைப்பிடித்து வந்ததாக சொல்லும் நூலாசிரியரோ இறைவனுக்காக கட்டப்பட்ட முதல் ஆலயமான கஅபாவிற்குச் சென்று உம்மா செய்தேன் என்று எழுதுகிறார்.

தீண்டாமையை ஒழிக்க தற்காலிக ஏற்பாடாக இசுலாத்தை தழுவச்சொன்ன பெரியார், நபிகளை இஸ்லாம் மார்க்கம் கூறுவது போன்று மகான் என்றோ அமானுஷ்யசக்தி படைத்தவர் என்றோ தான் கருதவில்லை என நபிகள்நாயகம் விழாவிலேயே பேசுகிறார். அப்படி சில நேரங்களில் நபிகளையும், கிறிஸ்துவையும் தான் மகான் என்று குறிப்பிட்டதற்காண காரணத்தையும் அவரே விவரிக்கிறார். அதோடு புத்தமதத்தை கை விட்டதால்தான் நாம் மானஉணர்ச்சியற்ற முட்டாள்களாக இருக்கிறோம் என்றும் கூறுகிறார்.
தோழர்களே நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்யசக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நபி அவர்களை ஒரு மனிதத்தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல் அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குடிஅரசு 23.12.1953

நபிகள் பிறந்த காலத்தில் அராபிய மக்கள் அசல் காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்தார்கள். அந்தக் காட்டுமிராண்டி காலத்திலேயே, அவர் அந்தக் காலநிலைக்கு ஏற்ற வழிகாட்டினார் என்பதாலேயே, அவரை மகான் என்கிறோம். அது போலவே ஏசுநாதர். இவர்களையெல்லாம் பெரிதாகப் பேசக்காரணம், மக்களிடம் அறியாமையும், காட்டுமிராண்டித்தன்மையும் நிறைந்திருந்த காலத்தில் சொன்னார்கள் என்பதால்தான்.

மதசாஸ்திரிகள் வண்டிவண்டியாக அளப்பார்கள். ஆனால் சரித்திரத்தைப்பற்றி பேசினால் எவனோ வெள்ளைக்காரன் சொன்னதை நம்புகிறாயா? என்பார்கள். இவர்களெல்லாம் உள்ளபடியே மனசாட்சியை மறைத்துப் பேசுவார்கள். மக்களும், வாதாடத் தெரிந்த அளவு படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவதில்லை. எதை எடுத்தாலும் சண்டப்பிரசண்டமாகப் பேசவேண்டும் என்பதைத் தவிர சரித்திரம், உண்மைத்தத்துவம் படித்து விஷயங்களை உணர்ந்து பேசவேண்டும் என்று நினைப்பதேயில்லை. மதம் என்றாலே மடமைதான்.

விடுதலை 17.5.1957

புத்தரால் கூறப்பட்ட பத்துக் கோட்பாடுகளையே, கிறிஸ்த்து பத்துக்கட்டளைகளாக சுருக்கி கூறியிருக்கிறார். முகமதுநபி கூட ஏறத்தாழ அப்படித்தான் செய்துள்ளார். ஆகவே எல்லா மதத்தினர்களும் புத்தக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டே தங்கள் கோட்பாடுகளை வளர்க்க முயன்றிருக்கிறார்கள்.

புத்தரை அடுத்து கிறிஸ்துவும், முகமதுநபியும் தோன்றினார்கள். இவர்களுக்குப்பிறகு இந்த நாட்டில் வேறு அறிவாளிகளே தோன்றவில்லை என்று அர்த்தமா?

புத்தர் தன்னை மனிதர் என்றே கூறிக்கொண்டார். ஏசு தன்னை கர்த்தரின் தூதுவன் என்று கூறிக்கொண்டார். முகமதுநபியும் தன்னை ஆண்டவனால் அனுப்பப்பட்ட தூதன் என்று கூறிக்கொண்டார். அப்படி கூறிக்கொண்டதால்தான் பாமரமக்கள் அவர்களை நம்பினார்கள்.
தன்னை மனிதன் என்றே கூறிக்கொண்டு மனித சமுதாயத்திற்கு வேண்டிய பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறிய புத்ததர்மத்தை ஏற்றுகொள்ளாத காரணத்தால்தான் நாம் இன்று கடுகளவு கூட மானஉணர்ச்சி அற்றவர்களாக முட்டாள்களாக இருக்கிறோம்.

விடுதலை 17.1.1959.
அப்துல்லாஹ் அவர்கள் தன் வாதத்திற்கு வலுச்சேர்ப்பதாக நினைத்து எடுத்துக்காட்டிய பெரியாரின் கட்டுரைகளோடு, 1925ல் காங்கிரஸை விட்டு பெரியார் வெளியேறிய காலம் முதல் 1973ல் மறையும்வரை மதத்திற்கு எதிராக அவர் பேசியும், எழுதியும் வந்த பல்வேறு கட்டுரைகளிலிருந்து சிலவற்றையும் சேர்த்து, காலவரிசைப்படியே அளித்து நூலாசிரியரின் பொய்யான வாதத்தை மறுத்திருக்கிறோம். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பெரியார் தன் இறுதிக்காலத்தில் 1972ல் விடுதலையில் எழுதிய தலையங்கம் ஒன்றே பெரியார் எந்த ஒரு மதத்திற்கோ, கடவுளுக்கோ, சாதிக்கோ ஏஜெண்டாக ஒருபோதும் இருக்கவில்லை என்பதையும் அப்படி கற்பிக்க முயலுவோரின் முகத்திரையை இந்த ஒரு கட்டுரையே கிழித்தெறியும் என்பதையும் வாசகர்கள் உணரலாம்.
கடவுளால் ஒன்றும் பயனில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும், முட்டாள்தனமான, காட்டுமிராண்டி, அயோக்கியத்தனங்கள் ஒழிக்கப்படுவதற்காகவாவது கடவுள் மதம் ஒழிக்கப்பட வேண்டாமா? என்று கேட்கிறேன்.

ஒழுக்கத்துறையில், அறிவுத்துறையில், இவ்வளவு கேடுகள் இருப்பது மாத்திரமல்லாமல் பொருளாதாரத்துறையில் எவ்வளவு கேடுகள், நட்டங்கள் ஏற்படுகின்றன? இந்தக் கேட்டிற்குப் பயன் என்ன?

அயோக்கியர்கள், மடையர்கள், சோம்பேறிகள் பிழைக்கிறார்கள். மக்களை ஏய்க்கிறார்கள். என்பதில்லாமல் நற்பயன் என்ன என்று கேட்கிறேன்? சமுதாயம் எவ்வளவு பிரிவுற்று சின்னாபின்னப்பட்டுக் குதறிக்கிடக்கிறது?

எதற்காக இந்து, எதற்காக கிறித்துவம், எதற்காக முசுலிம், முதலிய மதங்கள் வேண்டும்? இவர்களுக்குத் தனித்தனி வேதம், செய்கைகள் முதலியன எதற்காக தேவையாக இருக்கின்றன? இவைகளால் பிரிவினை உணர்ச்சியல்லாமல் சமுதாயத்திற்கு நலமென்ன? என்று கேட்கிறேன்.

இவற்றால் மனிதனின் அறிவுகெட்டு, வளர்ச்சிப்பாழாகி, இந்த இருபதாம் நூற்றாண்டிலும் மனிதன் அறிவிற்கும், சிந்தனைக்கும் ஏற்றபடி வளராமல் தேங்கிக் கிடக்கிறான். இது எவ்வளவு பெரிய கேடு?

ஆகவே தன்னை பகுத்தறிவுள்ள மனிதன் என்று உணர்ந்த எவனும், மனித சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்யவேண்டும் என்றால், தன் வாழ்நாளில் ஏதாவது நல்ல காரியம் என்று கூறிக்கொள்ள வேண்டுமானால் கடவுள், மதம், வேதங்கள் ஒழிக்கப்படத் தன்னால் கூடியதைச் செய்யவேண்டும். இதுதான் அறிவுள்ள மனிதர்க்கு அடையாளம் என்பது என் கருத்து.

விடுதலை தலையங்கம் 18.10.1972.
பகுத்தறிவுள்ள மனிதன், கடவுள்- மதம்- வேதங்கள் ஒழிக்கப்படத் தன்னால் கூடியதைச் செய்யவேண்டும். அதுதான் அறிவுள்ள மனிதனுக்கு அடையாளம் என்று தந்தை பெரியார் தனது 92ம் வயதிலும் தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

பெரியார் கொள்கையும், இயக்கமும், புத்தகங்களும் வாழும்மட்டும்
பெரியாரை எந்தக்கொம்பனாலும் திரிக்க முடியாது!. தங்கள் வசதிக்கு பெரியாரை வளைக்கப்பார்க்கும் குதர்க்க வாதிகள் இனியாவது தங்கள் ஈனச்செயல்களை நிறுத்தட்டும்!.