ஜாதி ஒழிப்பில் பெரியார்!

தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பை தனது சாவு வரையிலான போராட்டமாகக் கொண்டவர்! அதனால்தான், “ஜாதிப்பிணியை போக்க வந்த மாமருந்து ” என்று போற்றினார் புரட்சிக்கவிஞர். பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை விடவும், தீண்டத்தகாத சமுகத்தினரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானது என்று மேடைகளில் முழங்கியவர் மட்டுமல்ல, போராடிப் போராடி அந்த உரிமைகளைப் பெற்றுத்தந்தவர் பெரியார்தான். இந்து மதத்தில் பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்த தீண்டாமையை பெரியார், தீண்டத்தகாத தீங்காகக் கருதினார். அது நான்காம், அய்ந்தாம் ஜாதியினரை விலங்கினும் கீழாக வைப்பதைக் கண்டு பொங்கினார்.   பஞ்சமர் பட்டம்  ஒழியாமல்,  சூத்திரப்பட்டம் போகாது என்று உரைத்தார்.  இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். அப்போதுதான் தீண்டாமையை ஒழிக்கமுடியும் என்று போர்முரசு ஒலித்தவர் தந்தை பெரியார்! 
மற்றவர்களைப் போல, அவரொரு மேலோட்டமான சீர்திருத்தக்காரர் அல்ல. அடிப்படையான புரட்சிக்காரர். புரட்சியே முழுமையானது. அதுவே பிரச்சனைக்கு முழுமையான  தீர்வும் வழங்குவது என்று முழங்கினார். அதற்காக அவர் முன்வைத்த ஆலோசனைகள் இதோ:
சமுகத்தின் காவல், போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவுகளின் காவலர் பணிகளில் ஆதிதிராவிடர்களை நியமிக்க வேண்டும். அதாவது, சூப்பரிண்டண்ட் போன்ற உயரதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்றார்.
இஞ்சினியர்களாக, டாக்டர்களாக தாழ்த்தப்பட்ட ஜாதியினரை நியமிக்க வேண்டும் என்றார். ஆதிதிராவிடர்களை, கலெக்டர்களாக நியமிக்க வேண்டும் என்றார். 
நீதிபதிகளாகவும், மந்திரிகளாகவும் நியமிக்கலாம். இவற்றால்தான் ஜாதி ஒழியுமென்று அறுதியிட்டுக் கூறினார் பெரியார்.
கோயில் பூசாரி வேலைகளை பறையனுக்குக் கொடுக்க வேண்டுமென்றார். அதனால் மற்ற ஜாதிக்காரன், கோயிலுக்கு வரமாட்டான் என்றால் போகட்டும் என்றார்.
கிராமங்களில் உள்ள கணக்கப்பிள்ளை வேலைகளை, பறையனுக்குக் கொடுக்க வேண்டுமென்றார்.
மணியக்காரர் வேலையைச் சக்கிலியனுக்கும், குறவனுக்கும் கொடுக்க வேண்டும் என்றார்.
சேரியிலே இருக்கிற தீண்டப்படாத மக்களை, மற்ற ஜாதி இந்துக்கள் வாழும் இடத்திற்குக் குடியமர்த்த வேண்டும் என்றார்.
இப்படியான உள்ளார்ந்த பணிகளை, சமுகத்தின் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்றார் பெரியார். அப்போதுதான் ஜாதியை வேரோடு கிள்ளி எறியமுடியுமென்று அறுதியிட்டு உரைத்தார் பெரியார்.
அதுமட்டுமா? எனக்கு பெண் குழந்தை இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள், சிவராஜ் அவர்களின் மகனுக்கோ அல்லது சத்தியவாணிமுத்துவின் மகனுக்கோதான் மணமுடித்துத் தந்திருப்பேன் என்று ஊரறிய, உலகறிய அறிவித்தார் தந்தை பெரியார். 
சம்பந்தி என்ற உறவு  நம் ஜாதிய சமுக அமைப்பில் மிகமுக்கியமான  உறவு. தான், யாருக்குச் சம்பந்தியாக விரும்புகிறேன். அதுவும் தனக்கு மகள் இருந்தால், யாருக்குத் திருமணம் செய்து தரவிரும்புகிறேன் என்று தந்தை பெரியார் அறிவிப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. 
”ஆயிரம் ராமசாமிகள், ஆயிரம் வருசத்துக்குப் பாடுபட்டாலும் ஜாதியை ஒழிக்க முடியாது. தீண்டாமைக் கொடுமைகளை மாற்ற வேண்டும். மாற்ற முடிகிறதோ, இல்லையோ சாவதற்கு முன்பு ஏதாவது சொல்லிவிட்டுப் போகலாம்.  நான் சாகும் போது இத்தனை பேரையும் நாலாவது ஜாதியாக, அய்ந்தாவது ஜாதியாக விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை” என்று தமது இறுதிக்காலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியது, அவரது உள்ளார்ந்த மனவோட்டத்தை உண்மையாக வெளிப்படுத்துகிறது. நேர்மையாகப் பறை சாற்றுகிறது. ஒரு கவலைக் காவியமாக வெளிப்படுத்துகிறது. 
இப்படியாக, தமது இறுதிக்காலம் வரை தாழ்த்தப்பட்டோரை இணைத்தேதான் ஜாதி ஒழிப்பைப் பற்றிச் சிந்தித்தார், ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபட்டார் பெரியார். அதைப் புரிந்துகொண்டு ஜாதி ஒழிப்புப் போராட்டங்களை முன்னெடுப்போம்.