இப்படி ஒரு கருத்தை உதிர்த்திருப்பவர் யாராக இருக்கும்?
யாராவது ஒரு வேதாந்தியாக இருக்கும்; இல்லையெனில், யாராவது ஒரு ஆன்மிகவாதியாக இருக்கும்; அப்படியும் இல்லையென்றால், யாராவது ஒரு தெய்வீகப் பிறவியாக இருக்கும்; அதுவும் இல்லையென்றால், யாராவது ஒரு சாமியாராக இருக்கும் என்று நீங்கள் சொன்னால், தமிழ்நாட்டில் வசிக்கவே தகுதியில்லாதவர் என்று தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் அர்ச்சனை புரியலாம்! ”அது எப்படி சொல்லப் போச்சு?” என்று ஆளைப் பிறாண்டி எடுக்கலாம். ஏனெனில், இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
ஆம், ”கொரோனா” எனும் வைரஸ் தொற்றை ஒழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரு முதலமைச்சர்தான் இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலைத் தருகிறார்!
கொரோனா ஒழியும் நாள் கடவுளுக்குத்தான் தெரியும் என்றால், முதலமைச்சர் எதற்கு? அமைச்சர்கள் எதற்கு? மருத்துவமனைகள் எதற்கு? மருத்துவர்கள்தான் எதற்கு? கில்லி மாதிரி சொல்லி அடிக்கவேண்டிய ஒரு முதலமைச்சர் இப்படிப் பேசுவது வெட்கக்கேடு! மானக்கேடு!
சரி, “கொரோனா ஒழியும் நாள் கடவுளுக்குத்தான் தெரியும்” என்று முதலமைச்சர் எடப்பாடி சொல்வதை ஏற்றுக்கொண்டால், இத்தனை காலமும் கொரோனாவை ஒழிக்காமல் பாதுகாத்து வருவதும் கடவுள்தான் என்றாகிறது!
அதுதானே லாஜிக்!
கொரோனாவை ஒழிக்கும் ஆற்றல் பெற்றிருக்கும் கடவுள், இத்தனை காலமும் அதைச் செய்யாமல் இருந்தது ஏன்?
நாடு முழுவதும் 13,183 பேர் சாகட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரா?
புலம் பெயர்ந்து தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பட்டினி கிடக்கவிட்டாரா?
வீட்டு வாடகை கொடுக்க முடியாத குடியிருப்புதாரரை, நடுராத்திரியில் வெட்டித் தலையை வீதியில் விட்டெறிய விட்டாரா?
ஊரடங்கினால் வேலையில்லாத, கையில் காசில்லாத கணவனுக்கு, குடிக்க காசு தர மறுத்ததால், மனைவியை அரிவாளால் வெட்டிக் கொல்ல வைத்தாரா?
போக்குவரத்து வசதியின்மையால், கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி மருத்துவ மணைக்கு கேன்சர் சிகிச்சைக்காக, மனைவியை சைக்கிளில் ஏற்றிவைத்து 60 வயதுக்கு மேற்பட்ட கணவரை ஓட்ட வைத்தாரா?
இப்படி மனிதாபிமானமற்று நடந்துகொண்டால் அது கடவுளா?
மனிதாபிமானமற்ற அந்தக் கடவுளின்பால் கடவுளாபிமானம் (!) கொள்வது இனியும் நமக்குத் தேவையா?
எடப்பாடி பழனிசாமி அவர்களே, மூடநம்பிக்கை மூடர்களுக்குத்தான். முதலமைச்சருக்குமா?
கடவுளுக்கு இலாகா பிரித்து எழுதி வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.
அதன்படி பார்த்தால் எல்லாவற்றையும் படைப்பவர் பிரம்மா!
அப்படியெனில் கொரோனாவையும் படைத்தவர் பிரம்மனாகத்தான் இருக்கவேண்டும்!
மனிதர்களையும் படைத்து, அவர்களைக் கொல்ல கொரோனாவையும் படைத்து… இது என்ன பொம்மை விளையாட்டா? வக்கிரமாக இல்லை?
எல்லாவற்றையும் பாதுகாக்கும் சமூகநலத்துறை அமைச்சர் திருமாலாம்! இவர்தான் பிரம்மா படைத்த அனைத்து உயிர்களையும் பத்திரமாகப் பாதுகாக்கிறவர்!
ஆம், மனிதர்களைக் கொன்றுதின்ன வைத்து கொரோனாவைப் பாதுகாக்கிறவர்!
இறுதியாக அழிக்கும் கடவுளென்று சிவனைக் குறிக்கிறார்கள்.
அப்படியானால், பிரம்மனால் படைக்கப்பட்ட, திருமாலால் பாதுகாக்கப்பட்ட கொரோனாவை சிவன் அழிக்க வேண்டும்! எப்போது? எப்படி?
அளிக்கவேண்டிய நாள் குறித்து, “சித்ரகுப்தன்”, ஆபீஸ் ஃபைல்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அப்புறம் எமனை எழுப்ப வேண்டும்! எருமைக்கிடாக்களை ரெடி பண்ண வேண்டும்!
மேலுலகத்தில் இருந்து இறங்கி, அவ்வளவு பெரிய எருமைக்கடாவும், எமனும் வந்து, என்றைக்கு கொரோனாவை ஒழிப்பது?
இப்படி, பார்ப்பனர்களால் எழுதப்பட்ட புராணக் கதைகளுக்கு பதவுரை எழுதுவதா ஒரு முதலமைச்சரின் வேலை?
இட்டுக்கட்டப்பட்ட கடவுளுக்கு இப்படி ஒரு பேரும் புகழும் (!) பெற்றுத் தருவதா முதலமைச்சரின் வேலை?
ஆக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பகுத்தறிவற்றவர் என்பதும், “கடவுள்” பயனற்றவர் என்பதும் அம்பலமாகிவிட்டது! பொய்ம்முகங்கள் கிழிபடத்தானே செய்யும்?