அம்மனக்கூத்தாடும் ஆ(ரிய)னந்த விகடன்!

“தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசன்னன்” என்பதுபோல் ஆனந்த விகடனுக்கு தலைகொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரனையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே ஆனந்த விகடனின் ஆணவத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.   (குடிஅரசு -10.10.37)

வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத்துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனை கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்!

முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே கனித்த ஆனந்த விகடன் மீதான மதிப்பீடு!.

ஆச்சாரியார் காலத்தில் துவக்கிய ஆரிய கூத்தை அம்மையார் ஆட்சிக்காலத்திலும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது ஆனந்த விகடன்!.

1937ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி வெளிவந்த ஆனந்த விகடனில், ஒரு கட்டுரை!. தலைப்போ “வாழிய செந்தமிழ்!”. கட்டுரையின் உள்ளடக்கம் என்ன தெரியுமோ?

ஹிந்தியை மூன்றாம் பாரம்வரை கட்டாய பாடமாக வைக்க வேண்டும். அப்படி செய்தால் சமஸ்கிருதம் சுலபமாக வந்துவிடும்.

தமிழைக் கற்றுக்கொடுக்கும் போது தமிழரின் நிலை, கொள்கை ஆகியவற்றை புகுத்தக்கூடாது. இது தான் விகடனின் கட்டுரை.

வாழிய செந்தமிழ் என தலைப்பிட்டு, ஹிந்திக்கு வாழைமரம் கட்டி வந்தனம் பாடியது!. சந்தடிசாக்கில் சமஸ்கிருதத்திற்கு சாமரம் வீசி வரவேற்பு பத்திரம் வாசித்தது!. தமிழினக் கலாச்சாரத்திற்கோ தடைபோட்டது!. ஆனந்த விகடனின் தமிழ்ப்பற்று இது தான்!.

அன்மையில் ஆனந்த விகடன் “பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்” எனும் சொல் அகராதியை ஆயிரக்கணக்கான பக்கங்களை உள்ளடக்கிய மூன்று தொகுதிகளாக வெளியிட்டது. அதில் வெளிவந்த ஓரிரு வார்த்தைகளின் பொருளைப்பாருங்கள்!

அந்தனர் (Brahmin):
இந்தியாவில் உள்ள நால்வர்ணங்களில் முதல் பிரிவைச்சேர்ந்தவர். வேதகாலத்தின் பிற்பகுதியிலிருந்தே புரோகிதர் சாதி இருந்து வந்துள்ளது. மற்ற பிரிவினர்களை விட இவர்கள் அதிகமான சடங்குத்தூய்மை உடையவர்கள் என நம்பப்பட்டது. எனவே இவர்கள் மட்டுமே மதச்சடங்குகள் செய்யத் தகுதியுடையவர்களாகவும் கருதப்பட்டனர். வேதகீதங்களின் தொகுப்பைப் பாதுகாக்கும் பொறுப்பும் இவர்கள் வசமே விடப்பட்டது. உயர்ந்த அந்தஸ்தும் கல்விப்பாரம்பரியமும், இருந்த காரணத்தால் இந்திய அறிவாராய்ச்சியில் இவர்கள் பல நூற்றாண்டுகளாக அதிகாரம் செலுத்திவந்தனர். ஆன்மீகத்திலும், அறிவிலும் மேன்மையான இவர்கள் அரசியல் சக்திவாய்ந்த சத்திரிய குலத்தினர்க்கும் அறிவிரை வழங்கிவந்தனர். சட்டப்படியான அங்கீகாரம் இல்லை என்றாலும் இன்றும் இவர்களில் பலர் தங்களது மரபுச் சிறப்புரிமைகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். சிலவகையான தடைவிலக்குகளை கடைபிடித்தல், சைவ உணவு உண்ணல், சில தொழில்களிலிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றின் மூலம் ஆச்சாரத்தூய்மைகளை காப்பாற்றி வருகின்றனர்.

ஆரியர்(கள்):
ஈரானிலும் வடக்கு இந்தியாவிலும், குடியேறிய வரலாற்றுக் காலத்திற்கும் முந்தைய மக்கள். இவர்களுடைய ஆரிய மொழியிலிருந்துதான் தெற்கு ஆசியாவின் இந்தோ அய்ரோப்பிய மொழிகள் உருவாகின. ஆரிய இனம் பிற மக்கள் இனங்களைவிட உயர்ந்தது எனக்கருதப்பட்டது. இந்தக்கருத்தால் அடால்ப் ஹிட்லர் பீடிக்கப்பட்டார். இதன் அடிப்படையிலேயே யூதர்கள், நாடோடிகள்(ரோமா), ஆரியர் அல்லாதவர்கள் ஆகியோரை அழிக்க வகைசெய்த நாஸி கொள்கையை ஹிட்லர் உருவாக்கினார்.

மனு:
இந்தியப்புராணங்களின்படி உலகின் முதல் மனிதர்.மனுஸ்மிருதியை ஆக்கியவர்.முதல் யாகத்தை நடத்தியவர் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் அரசராகவும் அறியப்படுகிறார். இடைக்கால இந்தியாவை ஆட்சிசெய்தவர்களில் பலரும் இவரைத்தான் முன்னோர் என உரிமை கொண்டாடுகிறார்கள்.பிரளயவெள்ளம் குறித்த கதையில் நோவா மற்றும் ஆதாம் ஆகிய இருவரின் இயல்புகளையும் ஒருசேரக்கொண்டவர். மீன் ஒன்றினால் பெருவெள்ளம் குறித்து எச்சரிக்கப்பட்டதால் ஒரு படகை உருவாக்கினார். இவரது படகு மலையின் உச்சியை அடைந்து நின்றது. வெள்ளம் வடிந்த பிறகு பாலும் வெண்ணையும் கலந்த ஒரு கலவையை மனு ஊற்றினார்.ஓராண்டுக்கு பிறகு தன்னை மனுவின் மகள் என்று கூறிகொண்டு ஒரு பெண் அந்த நீரிலிருந்து தோன்றினாள். இவர்கள் இருவரும் இணைந்து பூமியில் மீண்டும் மனிதகுலம் வளர்வதற்கு காரணமானார்கள்.

ஆனந்த விகடன் தகவல் களஞ்சியத்தின் யோக்கியதை இதுதான்!. பார்ப்பனப்பன்னையம் கேட்பாரில்லை என்கிற போக்கில் தவறானத் தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறது. அந்தனர் (Brahmin) மற்ற பிரிவினர்களை விட அதிகமான சடங்குத்தூய்மை உடையவர்களாம். சில தொழில்களிலிருந்து விலகியிருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மைகளை காப்பாற்றி வருகின்றனராம். மலம் அல்லுவதும், நாற்று நடுவதும், கல்லுடைப்பதும் எமது இனத்திற்கே உரிய தொழிலா? இந்தத் தொழில்களிலிருந்து விலகியிருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மைகளைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்வதாக கொழுப்பெடுத்து எழுதியிருக்கிறது. ஆரிய இனம் பிற மக்கள் இனங்களைவிட உயர்ந்தது எனக்கருதப்பட்டதாக தற்பெருமை பேசுகிறது விகடன்.

மனுவின் கதையோ ஆபாசத்தின் உச்சம்!. பாலும் வெண்ணையும் கலந்த ஒரு கலவையை மனு ஊற்றினானாம். ஓராண்டுக்கு பிறகு தன்னை மனுவின் மகள் என்று கூறிகொண்டு ஒரு பெண் அந்த நீரிலிருந்து தோன்றினாளாம். இவர்கள் இருவரும் (அப்பனும் மகளும்) இணைந்து பூமியில் மீண்டும் மனிதகுலம் வளர்வதற்கு காரணமானார்களாம். அட ஆபாசத்தின் அடித்தளமே உன் பெயர்தான் ஆரியமா? இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தகவல் களஞ்சியம் என்ற பெயரில் இப்படி அருவறுப்பான புனைக்கதைகளை கட்டவிழ்த்து விட வெட்கமாக இல்லையா உங்களுக்கு?

இப்படிப்பட்ட கூட்டத்திற்குத்தான் ஈழத்தமிழர் மீது இப்போது திடீர் அக்கரை முளைத்திருக்கிறது!. விகடனில் வாரந்தோறும் எது வந்தாலும் வராவிட்டாலும் ஈழம் தொடர்பான கட்டுரை வராமலிருப்பதில்லை. கலைஞரை வசைபாடவே துவக்கப்பட்ட கட்டுரைக்களம் அது. டெசோ உட்பட கலைஞர் எதைச்செய்தாலும் அதை விமர்சிக்கவேண்டும் என்ற நோக்கிலேயே விஷம் கக்குகிறது. மீண்டும் கலைஞர் ஆட்சிபீடத்தில் அமர்ந்து விடக்கூடாது என்கிற ஆத்தாமைதான் ஆனந்த விகடன்களை இப்படி அம்மனக்கூத்தாட வைக்கிறது. சில எடுபிடிகளும் இனத்துரோகிகளும் வேண்டுமானால் அவர்களுக்கு வாளாகியிருக்கலாம். எந்த ஒரு மானமுள்ள தமிழனாலும் இதை ஏற்றுகொள்ள முடியாது.

1937ல் குடிஅரசில் வெளிவந்த கட்டுரை வரிகளை மீண்டும் நினைவுகொள்வோம்! ஆனந்தவிகடன் வகையறாக்களை புறக்கணிப்போம்!.

– கி.தளபதிராஜ்