தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும், பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த ஆட்சிக்காலம் வரை நியமிக்கப்பட்டு வந்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் மூலம், ஒன்று முதல் எட்டாவது வரை ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தமிழக அரசால் அன்மையில் நடத்தப்பட்ட தகுகித்தேர்வில் ஆறு லெட்சத்து அய்ம்பதாயிரம் பேர் தேர்வு எழுதியதில் வெறும் இரண்டாயிரத்து அய்நூறு பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றனர்!.
ஆசிரியர் தகுதித்தேர்வு தேவையற்றது என்பதை சுட்டிக்காட்டி, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.பல்வேறு சமூக அமைப்புகளும் குரல் கொடுத்தன.ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர் தகுதித்தேர்வை எதிர்த்து வீதிக்குவந்து போராடின!.
ஆசிரியர் பணிக்கென தனிப்பயிற்சி கல்லூரியை ஏற்படுத்தி, அதற்கென்று பட்டயமும் தமிழக அரசால் வழங்கப்பட்டுவரும் நிலையில், மேலும் ஒரு தகுதித்தேர்வு அவசியம்தானா? அரசால் நடத்தப்படும் ஆசிரியப்பயிற்சி தேர்வுகள் மீது அரசுக்கே நம்பிக்கையின்றி போய்விட்டதா? பட்டயத்தகுதி போதுமானதாக இல்லை என்று அரசு கருதும் பட்சத்தில், பட்டயத்தேர்வை தரம் உயர்த்தலாமே! அரசு நடத்தும் தகுதித்தேர்வில் வரும் வினாக்களை ஆசிரியப்பயிற்சி தேர்விலேயே இணைக்கலாமே! ஒவ்வொன்றிற்கும் இப்படி தகுதித்தேர்வு என்று ஆரம்பித்தால் இந்த தகுதித்தேர்வு வினாக்களை தேர்வு செய்தவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள்? அவர்களுக்கு ஏதேனும் தேர்வு நடைபெற்றதா? பல ஆண்டுகளாக அரசால் நடத்தப்பட்ட பட்டயப்படிப்பை முடித்து, வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்காலம் என்னாவது? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.
தமிழகஅரசு தகுதித்தேர்வை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்பணி நியமனம் செய்வதை எதிர்த்து, சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தமிழக அரசோ, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையில் கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபீதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, பள்ளிக்கல்வி இயக்குநர் கு.தேவராஜன் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அமைத்திருப்பதாகவும் அக்குழு ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக முடிவு செய்யும் என்றும் உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது!.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக்குழு ஆசிரியர் பணி நியமனம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய நாளிதழ்களில் வெயிவந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் வரையறுக்கப்படும் என்றும், ஆசிரியர் தகுதித்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் 60 சதவீதத்திற்கும், ஆசிரியர் பட்டயத்தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 25 சதவீதத்திற்கும், மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 15 சதவீதத்திற்கும்,கணக்கில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று பட்டதாரி ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் தகுதித்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் 60 சதவீதத்திற்கும், பி.எட். தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 15 சதவீதத்திற்கும், பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் 15 சதவீதத்திற்கும், மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 10 சதவீதத்திற்கும்,கணக்கில் கொள்ளப்படும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி,உயர்நிலைக்கல்வி,மேல்நிலைக்கல்வி,தொழிற்கல்வி என்று ஒவ்வொரு நிலையை கடக்கும்போதும் தமிழக அரசால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுதான் அவர்கள் மருத்துவர்களாகவோ பொறியாளர்களாகவோ விஞ்ஞானிகளாகவோ ஆசிரியர்களாகவோ விளங்குகின்றனர்.பள்ளிக் கல்வியில் தோல்வியடைந்தவர்கள் கூட பலர் இன்று சிறந்த விஞ்ஞானிகளாகவும் தலைசிறந்த மருத்துவர்களாகவும் பல்வேறு துறை வல்லுநர்களாகவும் விளங்குவதை எடுத்துக்காட்டமுடியும்.அப்படி இருக்கையில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் செய்து வருவது ஏன்?
ஆசிரியர்பணி நியமனத்திற்கான, ஆசிரியர் பட்டயத்தேர்வையும் அவர்களின் பதிவு மூப்பையும் மட்டும் கணக்கில் கொள்ளாமல், அடுத்தடுத்து அவர்கள் பெற்றோர்களின் தகுதி என்ன? அவர்கள் பரம்பரையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பிறப்பிலேயே இவர் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் தானா? என்கிற மனுதர்ம ஆராய்ச்சிக்கு தமிழக அரசு தயாராகிவிட்டதோ?என்கிற முடிவிற்குத்தான் வரவேண்டியுள்ளது!.