ஜுனியர் விகடன்(27.6.2012 மற்றும் 1.7.2012) ஆகிய இதழ்களில் திரு எஸ்.இராமகிருஷ்ணன் தனது “எனது இந்தியா’ கட்டுரையில் 1911ம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலைசெய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக் கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா?
ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சிநாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்?
“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.”
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta.
திரு. ரகுநாதன் தமது ‘பாரதி காலமும் கருத்தும்’ (1982) என்ற நூலில் இக்கடிதத்தின் தமிழ் மூல வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்ட தடயங்களின் (Exhibits) தமிழ் அச்சுப் பிரதியிலிருந்து இதனை அப்படியே எடுத்து எழுதியதாக ரகுநாதனுடன் நிகழ்த்திய உரையாடலின் போது குறிப்பிட்டதாக பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் தெளிவாக பதியவைத்திருக்கிறார்.
தனது கட்டுரையில், வாஞ்சிநாதன் ஆஷை கொல்வதற்கு முக்கிய காரணம் “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்வதுதான்” என்ற பார்ப்பன தர்மத்தை வெளிப்டுத்தும் இந்த கடிதத்தை வெளியிட்ட திரு.இராமகிருஷ்ணன், “அடக்குமுறை ஆங்கிலஆட்சி மீதான கோபத்தைவிட, தன்னுடைய மதநம்பிகை,சனாதனதர்மம் ஆகியவை ஆங்கில மிலேச்சர்களால் பாதிக்கப்படுகிறது என்ற கோபம்தான் வாஞ்சிநாதனுக்கு இருந்தது என்று சொல்லி அவரது கொலை நோக்கத்திற்கான காரணத்தை சிலர் பதிவு செய்துள்ளனர்.என்கிறார்.அது சிலரது பதிவா? வரலாறா? என பார்ப்போம்.
வாஞ்சிநாதனின் உடல் திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டபோது அடையாளங்கண்டவர் உணவு விடுதி நடத்தும் ராமலிங்க அய்யர்.கடந்த மூன்று நாட்களாக வாஞ்சிநாதன் தனது விடுதிக்கு வந்து சென்றதாக அவர் கூறினார்.என்கிறது கட்டுரை.அவ்வளவு பெரிய திருநெல்வேலி நகரத்தில் அவர் தேர்ந்தெடுத்தது அய்யர் உணவு விடுதியைத்தான்.இதை ஏதோ சுவைக்காக தேர்ந்தெடுத்ததாக எளிதாக எண்ணிவிடமுடியாது.அவரது வர்னாஸ்ரமதர்மத்தை பாதுகாக்கவே அவர் அந்த விடுதியை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதே உண்மை.
இந்தவழக்கில் கைது செய்யப்பட்ட பதினான்கு பேரில் பெரும்பான்மையோர் பார்ப்பனர்களே என்பதும் மீதமுள்ளவர்களும் உயர்வகுப்பாராக தங்களை அடையாளம்காட்டிகொண்ட பிள்ளைமார்களே என்பதும் மிகவும் கவணிக்கப்படவேண்டிய செய்தியாகும்.
அன்றைய காலகட்டத்தில் ஆஷை “நவீன இரணியன்” என்று பத்திரிக்கைகள் எழுதியதாக கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார். “இரணியன்” யார்? இரணியன் அசுரர்களின் தலைவனாக கருதப்பட்டவன். பார்ப்பன குலதர்மத்தை எதிர்த்து சவால் விட்டவன். புராணகால இரணியனின் கதை புரட்சிக்கவிஞரால் சிறிது மாற்றம் செய்யப்பட்டு “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” எனும் பேரில் நாடகவடிவம் பெற்றது. பேரறிஞர் அண்ணா இரணியனாக நடித்திருக்கிறார்.
வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து சூத்திரர்களின் பாதுகாவலனாய் “நவீன இரணியன்” என்று பத்திரிகைகளில் எழுதப்பட்ட ஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சிநாதன் கொலை செய்தது எப்படி காலனி ஆதிக்க எதிர்ப்பாகும்?
ஆஷ்ம் அவரது மனைவியும் பயணிக்கையில் பிரசவவேதனையால் துடித்துகொண்டிருந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை தனது வண்டியில் ஏற்றி அவசரம் கருதி அக்ரஹாரம் வழியாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார் ஆஷ். “தாழ்த்தப்பட்ட பெண்ணை அக்ரஹாரத்தின் வழியாக அழைத்துச்சென்று பார்ப்பன சனாதனதர்மத்தைக் கெடுத்துவிட்டார் ஆஷ்!.” இதுவே ஆஷ் கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிற வரலாறு இருக்க, புதுச்சேரியில் இயங்கிவந்த வ.வே.சு.அய்யர் முடிவெடுத்து நீலகண்டபிரம்மச்சாரி திட்டம்தீட்டி வாஞ்சி அய்யர் நடத்திய படுகொலை பார்ப்பன குலதர்மத்தை காப்பதற்கே என்பது நன்றாகப் புரிகிறதுபோது,இராமகிருஷ்ணன் பார்ப்பன வாஞ்சிக்கு பல்லக்கு தூக்குவது ஏன்?
நீதிபதி சங்கரன் நாயர் தீர்ப்பை சிறப்பான தீர்பபாக வர்ணித்த ராமகிருஷ்ணன் நீதிபதிகள் அர்னால்ட் ஒயிட் மற்றும் ஐலிங் ஆகிய இருவரும் இணைந்து வழங்கிய தீர்ப்பை ஏனோ வெளியிடவில்லை!