1968 டிசம்பர் 28 ஆம் நாள் அனலாய் விடிந்தது!
முதல்நாள் இரவு கீழ்வெண்மணியில் தின்று தீர்த்த தீயில் பொசுங்கினர் 44 விவசாயத் தோழர்கள்!
தமிழக விவசாயத் தோழர்களையெல்லாம் தீண்டி அவர்தம் இதயங்களையெல்லாம் சுட்டது!
கண்களிலெல்லாம் கடப்பாறையாகப் பாய்ந்து கண்ணீரைக் கொட்ட வைத்தது!
இந்த விசயத்தில் தீயவர்களைத் தூண்டிவிட்டு எரியூட்டிய நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடுவைவிட பெரியார் மீது எரிந்து விழுந்தனர் உண்மை புரியாத சிலர். பெரியார் விவசாயத் தொழிலாளர்களிடையே பிளவு ஏற்படுத்தி, திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் என்பதை ஏற்படுத்திட அவர்கள், கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கத்துடன் மோதல் போக்கைக் கடைபிடித்தது, நிலக்கிழார்களுக்கு வசதியாகப் போய்விட்டது என்று குற்றம் சாட்டினர்.
இன்னும் சிறுமதியாளர்கள் சிலர் நாகூசாமல் பெரியார், நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு ஆதரவாக இருந்தார் என்று கூடுதல் குற்றச்சாட்டு வைத்தனர்.
ஆனால், உண்மை என்ன?
கீழ்வெண்மணி சம்பவம் நடைபெற்ற காலத்தில் தமது திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கமும், பண்ணையாளர்களும் நட்போடும், நல்லுறவோடும், நம்பிக்கையோடும் ஒவ்வொருவருடைய பிரச்சனை குறித்தும் பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும் என்பதும், அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உரிமைகளைப் பெறவேண்டும் என்பதும் பெரியாரின் நிலைப்பாடாக இருந்தது. தமது இத்தகைய கொள்கை மற்றும் செயல் திட்டம் குறித்து, திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடங்கிய 1952 ஆம் ஆண்டிலிருந்தே விரிவாகப் பேசியும், விளக்கியும் வந்துள்ளார். விவசாயிகளுக்குப் பாடுபட பல அமைப்புகள் இருக்கும்போது, ” நான் ஏன் தனியாக ஒரு விவசாய சங்கம் தொடங்க வேண்டுமென்று கேட்கிறார்கள். மற்ற கட்சிகள் தொழிலாளர்கள் சங்கங்களைத் தொடங்கி, தமது ஆட்சியின் அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்களே தவிர, தொழிலாளர்களின் இழிநிலையைப் போக்குகிறார்களா? தொழிலாளர்கள் உயரவேண்டுமானால், இலாபத்தில் அவனுக்குப் பங்கு வேண்டும். நிர்வாகத்தில் உரிமை வேண்டும். அதற்கான காரியம் செய்தால்தான் தொழிலாளி, முதலாளி பேதம் மறையும். மாறாக, மற்ற சங்கங்கள் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சண்டை மூட்டுவதிலேயே குறியாக இருக்கின்றன. தொழிலாளர்களை வன்முறையாளர்களாக மாற்றுகிறார்கள் அந்த சங்கத்தினர்.
முதலாவதாக, முதலாளிகளைக் காப்பாற்றும் அரசாங்கத்தையும், அந்த அரசாங்கத்தை வழிநடத்தும் பார்ப்பன அதிகாரிகளையும் ஒழிக்க வேண்டும்” என்று பிரச்சனையின் அடிவேர் வரை சென்று, அதை அழிக்க வேண்டும் என்கிறார் பெரியார்.
அந்த வகையில், பெரியாரைப் பொருத்தவரை இன இழிவு முதலில் அழிக்கப்பட வேண்டும். அடுத்தது பொருளாதார பேதஒழிப்பு. இதே நிலைபாட்டில்தான் 1930களில் தொடங்கி இறுதி காலம் வரை வலியுறுத்தி வந்தார்.
- பாலு. மணிவண்ணன்