கடவுள்கள் இவ்வளவு கையாலாகதவர்களாகவா இருப்பார்கள்!
அண்மையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள ஸ்ரீகாகுளம் நரசிம்மசுவாமி கோயில் ரதம் தீவைத்து எரிக்கப்பட்டது. சுற்றுப் பிரகாரத்தில் இருந்த(சாமி)சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிகழ்வை கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கவா கடவுள்?
நூறாண்டு பழமைமிக்க அந்தக் கோவிலைப் பாதுகாக்க, படாரென்று கதவை உடைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாமா கடவுள்?
நம் புராண இதிகாசக் கதைகளில் செய்வதுபோல நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து அந்தப் பாவிகளை (!) நாசம் பண்ணியிருக்க வேண்டாமா கடவுள்? கலையரசி (!) சரஸ்வதியின் கை ஒடிக்கப்பட்டுள்ளது அனுமனின் தலை வெட்டப்பட்டுள்ளது. சிவனின் முதுகில் சிராய்ப்புகள். கடந்த செப்டம்பரிலிருந்து கடவுள்கள் சுமார் 180 பேர் (?) காயம் பட்டிருக்கின்றனர்.
அவர்களின் பக்தர்கள் என்று காட்டிக் கொள்ளும் பா.ஜ.க. அரசியல் சூதாடிகள், மாநில அரசுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மனிதர்களைக் காப்பாற்ற, கடவுள் இருக்கிறார் என்று பிரச்சாரம் செய்துவந்த அந்தப் புராணிகர்கள், “இல்லாத கடவுள்களால் எது முடியும்? நாம்தான் களத்தில் இறங்கி அரசியல் பண்ணியாக வேண்டும்’’ என்று குதித்தது.
அவர்களது கோபத்தைத் தணிக்கும் வகையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி போலீசை முடுக்கிவிட்டார். அதன் அடிப்படையில் கோயில் இடிப்பு, சிலைகள் உடைப்பில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மதத்திலிருந்து இதுவரை 337 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், காகிநாடா கோயில் இடிப்பில் ஈடுப்பட்டவன். உள்நோக்கமில்லாத ஒரு குடிகாரன் என்று தெரியவந்திருப்பதாகவும், அவனும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இந்தச் சம்பவங்கள் குறித்து காகிநாடாவிலிருந்து கருத்துத் தெரிவித்த கிறித்துவ பாதிரியார் ஒருவர்,
“இங்கே கல்லையும் மரங்களையும் கடவுள் என்று வழிபட்டுவரும் அப்பாவி மக்களுக்கு, அவை “கடவுள் இல்லை” என்று நிரூபிக்க வேண்டும் என்றும், பிறகு அவர்களை கிறித்துவ மதத்திற்குள் கொண்டுவந்து, “மாநிலம் முழுவதும் கிறித்துவ கிராமங்களை உருவாக்க வேண்டும்’’ என்றும் அறைகூவல் விடுத்து, வலைதளங்களில் அதை வைரலாக்கியுள்ளார்.
“உடனே அந்தப் பாதிரியாரைக் கைது செய்யாமல் இருப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ள பா.ஜ.க வினர், “முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் கிறித்துவர் என்பதால்தான் பாரபட்சம் காட்டப்படுகிறதா?’’ என்றும் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர்.
சரி, மதமாற்றம் செய்வது தான் உங்கள் நோக்கமா?
கிறித்துவர்கள் இதை மறுக்கின்றனர்!
அடுத்த சில மாதங்களில் திருப்பதி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் வெற்றிபெறுவதற்காக பா.ஜ.க வினரும் பிற இந்துமதத் தீவிரவாதிகளும் நடத்தும் அரசியல் சூது இது என்கின்றனர். தங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிட்டு அரங்கேற்றும் சதி என்றும் பயப்படுகின்றனர். சிறுபான்மையினராயிற்றே! மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் இது பற்றிக் கேட்டபோது,
“ஆந்திராவில் மத மோதல்களை உண்டாக்கி அரசியல் நிலையற்ற தன்மையை உண்டாக்கிட பா.ஜ.க வினர் முயற்சிக்கின்றனர். என்று தெரிவித்தார். மேலும், தமது மதம் “மனிதநேயம்’’ என்றும், தமது ஜாதி “கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றுவது’’ என்றும் குறிப்பிட்டவர், தாம், மதத்தை அரசாங்கத்திலிருந்து பிரித்து வைத்திருப்பதாகவும், மதசார்பின்மைதான் தமது கொள்கையென்றும் அறிவித்தார்.
ஆனாலும் பா.ஜ.கவின் குண்டர்கள் தினமும் ஒரு கோயிலை இடித்தும், கடவுள் என்று அவர்களால் நேற்றுவரை கும்பிடப்பட்டு வந்த சிலைகளை உடைத்தும், குறுஞ்செய்திகள், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யு – ட்யூப் முதலான ஊடங்களில் பதிவாகின்றன. அந்தப் பொய்கள் உண்மைகளை முந்திக்கொண்டு வெகு வேகமாகப் பரவுகின்றன. நம்ப வைப்பது எளிது என்பதால், தாம் விரும்புகிற மாதிரி, இந்துக்களை எளிதாக நம்பவைகின்றனர். அதன்மூலம் அப்பாவி இந்து மக்களிடையே மத வெறுப்புணர்ச்சியை வளர்த்து வருகின்றனர். மக்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும்! எச்சரிக்கை!
-பாலு மணிவண்ணன்