வரவு செலவுக்குத் தயாரா?
வெறும் சிலையல்ல பெரியார்
வீறுகொள் சித்தாந்தத்தின் சீலம்!
சிதைத்து நொறுக்கப்பட்ட
திராவிடச் சமுதாயத்தைச்
செதுக்கவந்த யுகப்புரட்சியின் ஞானம்!
சிறுநரிகள் ஊளையிட்டு
சிங்கச் சேனைக்கு அழைப்பா?
சிறுபிள்ளைத் தனம்
செய்வதறியா மடத்தனம்!
காவிச் சாயத்தை ஊற்றினாய்
காலித்தனத்தின் புத்தியைக் காட்டினாய்!
கட்சிகளை மறந்தனர் எம் தலைவர்கள்
கர்ச்சனைத் தோள்களைத் தட்டினர்
கண்டனக் கூர்வாள் நீட்டினர்!
எங்கே ஒளியப் போகிறாய்?
சங்கரமடத்தை நோக்கியா?
தமிழ் மண்ணை விட்டே நீங்கியா?
இராமனைப் போல் மரத்தில் பதுங்கியா?
தலைவனில்லை உமக்கு
தறுதலைக் குஞ்சுகளே…
வீண் வம்பு எதற்கு?
விபரீதமாகும் – உன்
கூட்டல் மனக் கணக்கு!
அட, கோழைகளே…
ஆந்தை அலறும் நேரத்தில்
அய்யா சிலை மீது செருப்பா?
ஆயிரமாயிரம் செருப்புகளை
அலட்சியச் செருப்பாலடித்து
ஆகாயம் தொட்டவர் எம் பெரியார்!
வம்பை விலைக்கு வாங்காதே – இன்று
சம்பூகன் கைகளில் போர்வாள்!
வாளுக்கு முன்னே அ‘வாளா’?
வரவு செலவுக்குத் தயாரா?
1விடுதலை தி.ஆதவன்