பெரியார் யார்? பார்ப்பனப் புகட்டுக்கு எதிர்ப்பாளர்… கடவுள் மறுப்பாளர்… சாதி எதிர்ப்பாளர்…. சாதி இருக்கும் வரை எல்லா சாதியினருக்கும் சம உரிமை கோரியவர்… சுயமரியாதைக்காரர்….. பெண்ணுரிமை பேசியவர் … அனைத்திலும் சமத்துவம் வேண்டிய பொதுவுடைமையாளர்! இப்படி பன்முகம் கொண்ட ஈரோட்டு வைரம் அவர்!
சோவியத் யூனியனின் கம்யூனிசப் புரட்சியை, அதன் ஆரம்ப நாட்களிலேயே வரவேற்றுப் பாராட்டியவர். அவர் சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்தபோதே, பொதுவுடைமைக்கான சிந்தனைகளைக் கொண்டிருந்தார். கம்யூனிசத்தின் அடிப்படைகளை தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ம.சிங்காரவேலருடன் விவாதித்து வந்தார். பெரியாரின் சமூக இயக்கம் அரசியல் இயக்கமாகவும் வடிவெடுத்து, சோசலிசத்துக்காகப் பாடுபட வேண்டுமென்று சிங்காரவேலர் கேட்டுக்கொள்ள அதனை உடனடியாக ஏற்று வேலைத்திட்டம் ஒன்றைச் சொன்னார் பெரியார்.
இரஷ்யா செல்லும் முன்பே மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையை, தமிழாக்கம் செய்து 4-10- 1931, 25-10-1931 குடிஅரசு இதழ்களில் வெளியிட்டார்.
1932 ஆம் ஆண்டு தனது அய்ரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும், தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பொதுவுடைமைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ‘தோழர்’ என்ற சொல்லைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்தார். சோவியத் யூனியனில் கடவுள் வணக்கங்கள் இல்லை. மதவொழிப்பு நடைமுறையில் உள்ளது என்பதையெல்லாம் பற்றியும் விளக்கமாக குடிஅரசு இதழில் எழுதினார்.
“சமதர்ம உணர்ச்சி, ருஷ்யாவில் ஏற்படுவதற்கு முன்பே, இந்தியாவில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடவுளின் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்று, மோட்ச சாதனமென்று புகட்டி வந்ததால், சமதர்ம உணர்ச்சி இங்கு ஏற்படமுடியாமல் போய்விட்டது” என்று இந்திய சமுக வளர்ச்சிப் போக்கை வரலாற்றுப் பூர்வமாக ஆராய்ந்து அறிவித்தார் பெரியார். மேலும், உலகில் பிற நாடுகளில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமே இருந்தது. ஆனால் இந்தியாவிலோ, மேல்ஜாதி, கீழ்ஜாதி என்றிருந்த பேதம், பணக்காரன், ஏழையென்ற தத்துவத்தை மறைத்துவிடுகிறது என்று பெரியார் எழுதியது பொதுவுடைமையாளர் மத்தியிலே புதுப் பார்வையை ஏற்படுத்தியது. புதிய சிந்தனையை விதைத்தது. வர்ணபேதமும், வர்க்க பேதமும் இருந்த உண்மையான நிலையை, இயக்கவியல் வளர்ச்சிப்போக்கில் புரிந்துகொள்ள மறுத்தனர் அன்று இங்கிருந்த பொதுவுடமையாளர்கள்.
அவர்களுக்கு மேலும் விளக்கம் அளிக்கும் வகையில், 1934 ஆம் ஆண்டு பகுத்தறிவு இதழில், “ருஷ்யாவில் இருப்பதைப் போன்று சமதர்மக் கொள்கையை இங்கு புகுத்த முடியாது. நம் கண்ணெதிரில் நம் அனுபவத்தில் உள்ள விசயங்களையும், நமது புத்திக்குச் சரியென்று தோன்றும் விசயங்களைப் பற்றியும் பேச வேண்டும். லட்சியத்தில் மாறுதல் இல்லாமல் வேலை முறையில் மாறுதல் செய்வது குற்றமாகாது” என்கிறார் பெரியார்.
மேலும் 1935 ஆம் ஆண்டு, குடிஅரசு இதழில், “ சமதர்மம் என்பது மதம் மாறுவது போன்ற வெறும் உணர்ச்சியல்ல. காரியத்தில் அனேக மாறுதல்களும், புரட்சிகளும் ஏற்படவேண்டும். சமதர்மத்திற்கு நாம் திட்டங்கள் வைத்திருக்கிறோம். அத்திட்டத்தில் இம்மியளவும் பின்போகும்படியோ, மாற்றிக்கொள்ளவோ நான் சொல்லவில்லை” என்கிறார் பெரியார். என்னே அவரது நேர்மை! எவ்வளவு வெளிப்படையான தலைவர்!
26-8-1934 பகுத்தறிவு இதழில், “நமது இயக்கம், மனித சமுதாயத்தில் சமதர்ம வாழ்க்கை ஏற்படுத்த, கடவுள், ஜாதி, மதம். தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து, மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும் பிரதானமாகக் கருதி உழைத்து வரும்” என்று உறுதியளித்து, அதனை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார்.
தோழர்கள் ம.சிங்காரவேலர், பா.ஜீவானந்தம், வல்லத்தரசு போன்றோர் தந்தை பெரியார் அவர்கள் பொதுவுடைமைப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டார் என்று விமர்சித்து சுயமரியாதை இயக்கத்தைவிட்டு விலகியம் தமது சமதர்ம கருத்துப் பரப்பலைத் தொடர்ந்தார்.
1952 இல் முதல் பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தே பிரச்சாரம் செய்து, அதற்கு மக்கள் மத்தியில் ஒரு தொடர்பை ஏற்படுத்தினார்.
சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் சமூக அக்கறை கொண்ட எவரும் பொதுவுடமையாளர்கள் தான்.
அந்த வகையில் பெரியார் ஒரு மாபெரும் பொதுவுடைமைப் புரட்சியாளர்!