- தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா?
வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. பெரியாரை, பாபாசாகேபை இன்னும் பல சமூக சீர்திருத்தவாதிகளை வாசிப்பதாலேயே நாம் “சாதியத்தை” விட்டுவந்துவிட்டோம் என்றாகிவிடாது. அதை விட்டு வர, நாம் தொடர்ந்து சுயபரிசோதனைகளையும், சுய விமர்சனங்களையும் செய்துக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது.
உதாரணத்திற்கு, நான் தொடர்ந்து இந்திய/ தமிழக தலைவர்களை பற்றி வாசித்துவருகிறேன். ஒருநாள், ஒரு குறிப்பிட்ட தலைவரை பற்றி வாசிக்கிறேன். அவரைப்பற்றி எனக்கு அதற்குமுன்னால் அதிகம் தெரியாது. அவரது ஒரு பேச்சைப்படித்து எனக்கு மெய்சிலிக்கிறது. ஆகா, இப்படி எல்லாம் நம் ஊரில் தலைவர்கள் இருந்து இருக்கிறார்களே என்று யோசிக்கிறேன். ஆனால், அந்தப்பேச்சில் அவரது சாதி குறித்தும் இருக்கிறது. அது ஒருவகையில் எனக்கு தொடர்புடையதாக இருக்கிறது. உடனே ஒரு பெருமை என்னுள் எட்டிப்பார்க்கிறது. எவ்வளவு பெரிய முரண் இது என்று தோன்றினாலும்.. அந்த பெருமை தோன்றி மறைகிறது. இது தான் பிரச்சனை.
காமராசரில் இருந்து கலைஞர் வரை இது பொருந்துகிறது. எல்லோருக்கும் சாதி அடையாளம் உண்டு. சாதியை ஒழிக்கச்சொன்ன பெரியாருக்கும் அண்ணலுக்குமே இன்னமும் சாதி அடையாளம் இங்கே உண்டு. ஒட்டுமொத்தமான மக்களுக்கான தலைவர்களாக இவர்கள் இருந்தாலும், தங்களது சாதி என இவர்களை நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இது தான் பெரியாரை சூத்திரர்களின் தலைவர் என்றும், அண்ணலை தலித்துகளின் தலைவர் என்றும் பிரிக்கிறது. இது தான் சாதியின் வெற்றி!
பெரியார் ஒருமுறை சொன்னாராம், நாம் சாதியை அடியோடு ஒழித்தாலும்.. சாதிய உணர்வு மனிதனில் இருந்து ஒழிய 300 ஆண்டுகள் ஆகும் என்று.
நம் எல்லோருக்குள்ளும் சாதி இருக்கிறது. அதை தொடர்ந்து சுயபரிசோதனை செய்துக்கொள்வோம். குறிப்பாக முற்போக்கு கருத்தியல் பேசுபவர்கள் இதில் செய்யும் தவறு.. சக தோழர்களுக்கு முத்திரை குத்துவது. இப்படி எல்லோரையும் சாதியவாதி என்று முத்திரை குத்துவதால் ஒரு பயனும் இல்லை. நம் ஒற்றுமை தான் குலையும்.
தவறுகளை திருத்திக்கொள்ளும் “பகுத்தறிவும்”, “திறந்த மனதும்” மிக முக்கியம். அது தான் நம்மை சாதியவாதிகளிடம் இருந்து வேறுப்படுத்திக்காட்டுகிறது. ஒரு கருத்தினால்/ ஒரு செயலினால், ஒருவன் சாதியவாதியும் ஆகிவிடமாட்டான். முற்போக்குவாதியும் ஆகிவிடமாட்டான். தொடர்ந்து பயணிப்போம்!
நன்றி : Rajarajan Rj https://www.facebook.com/rajarajan.rajamahendiran/posts/10208039907310100