Deepa Thanthi TV Interview

தத்துப்பித்து தீபா! பாவம் பாண்டே!

Deepa  Thanthi TV Interview

தீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன்.

பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி வரிகளில் கூறுகிறேன்.

தீபாவின் ஒட்டுமொத்தப் பதில்களின் சாரம் ஒன்றே ஒன்றுதான்! “என் அத்தையின் சொத்துக்கு நான்தான் முழு உரிமையாளினி; சொத்து என்பதன் பொருள் வீடு-மனை, நிலம்-நீச்சு, பணம்-காசு….. மட்டுமில்லை; ‘அத்தை வகித்த பதவியும், கட்டிக்காத்த கட்சியும் எனக்கே சொந்தம்’ என்னும் சிறுபிள்ளைத்தனமான…. (விருப்பப்படுவோர் ‘பைத்தியக்காரத்தனமான…’ என்றும் போட்டுக்கொள்ளலாம்) ஆசைகள்…. ஆசைகள்…..ஆசைகள்!

அ.இ.அ.தி.மு.க-வில் உறுப்பினராக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும், கொள்கை பரப்புச் செயலாளர் போன்ற கட்சியின் சில முக்கியப் பதவிகளிலும் கோலோச்சிய இவரின் அத்தையான ஜெயலலிதா, ‘எம்ஜியாருக்குப் பின் தாம்தாம்’ என்று உரிமை கோரியதையே ஏற்க முடியாத முணுமுணுப்புகளும், முழக்கங்களும் கிளம்பிய நிகழ்வுகளைக்கூட அறியாத, திராவிட இயக்கமான ‘அ.இ.அ.தி.மு.கவில் உறுப்பினர்’ ஆகக் கூட தமது ஆரியத்தன்மை இடம் கொடுக்காத இந்தப் பச்சை மண்ணை, பக்குவப்படுத்தாமலே அனுப்பியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அந்தப் பெண் கூறும் எதுவுமே உண்மையோடும் நியாயத்தோடும் ஒட்டவில்லை.

பெரும்பாலான கேள்விகளுக்கும், பம்மிய அவரின் பாவங்கள்,
“அடப் பரிதாபமே!” என்பதா?
“இந்தா புள்ளே! எடத்தக் காலி பண்ணு…!’
என்று சொல்வதா? என்றுதான் யோசிக்க வைத்தது.

தீபாவின் ஒட்டுமொத்த பம்மல்களும் சேர்த்து நமக்கு ஒன்றை உணர்த்தியது – ‘தீபா குடும்பத்துக்கும், ஜெயலலிதாவுக்கும் ஆகவே ஆகாது! தமது உடன்பிறப்பான அண்ணன், அண்ணி, அண்ணனின் பிள்ளைகள்… ஆகிய எவரையும் ஜெயலலிதா ஏற்கவில்லை!’ என்பதை தீபாவின் அந்தப் பம்மல்களே பட்டவர்த்தனப்படுத்திவிட்டது.

‘நக்கீரன்’ குறிப்பிட்டது போல, தீபாவைத் தயார்ப்படுத்தி அனுப்பி இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்! ஆனால், தயாரிப்புத்தான் சொதப்பலோ சொதப்பல். அதற்காகவெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-சின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. விஷமத்தனமானதுதான் என்றாலும்கூட, இதுபோலத்தான் சிலவேளைகளில் மணலில் கயிறு திரிக்கும் ‘விசுத்தனமான’ முயற்சிகளில் மெனக்கெட்டு இறங்கி, ‘மானங்கெட்டுப்போச்சே….!’ என்று தலையில் முக்காட்டைப் போட்டுக்கொண்டு போகும் நிலைக்கு ஆளாகும் ஆர்.எஸ்.எஸ். தீபா விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது.

மைத்ரேயன், சிரிப்பு நடிகர் சேகர் ஆகியோரை ‘உள்ளே’ அனுப்பி வைத்ததில் தொடங்கி, பலவற்றிலும் தோல்வியைத் தழுவிய காவித்தலைமை, கடைசியாய் எடுத்த ஆயுதம்தான் இந்த தீபா என்னும் மணல்….!
அதுவும்கூட ஆற்று மணலில்லை; எதற்குமே உதவாத கடற்கரை மணல்!
இதை மெய்ப்பித்தது ரங்கராசு ஒளிபரப்பிய, தீபாவின் பேட்டி!
தேங்க்ஸ் ட்டூ ரங்கராசு! மெனிமோர் தேங்க்ஸ் ட்டூ ‘மண்ணு’ தீபா!

‘ஆகாத அத்தை’யை, உயிரோடு உள்ளவரை அணுக முடியாத தீபா, இறந்தபிறகு அவரின் அத்தனைக்கும் ஆசைப்பட்டு… மன்னிக்கவும், ஆசைப்பட வைக்கப்பட்டு, ஆட்டுவிக்கப்படுகிறார். பாவம்! ஏதுமற்று ஏமாந்து நிற்கப்போகிறார்; அவரின் சகோதரன் தீபக்குக்கு உள்ள புத்திசாலித்தனம்கூட இல்லை, ஆட்டுவிக்கப்படும் இந்தப் ‘பார்பி பொம்மை’யிடம்!

கடைசியாக ரங்கராசு கேட்ட கேள்விக்கு, தீபா சொன்ன பதிலில் அவரின் ‘பச்சப்புள்ளத்தனமான’ ஆசை அப்பட்டமாக வெளிப்பட்டது…
“அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆகி, முதலமைச்சர் ஆக விரும்புகிறீர்களா?
உங்க அத்தையாலேயே சமாளிக்க முடியாத மிகக் கடினமான பணிகளாச்சே…?”

“நிச்சயமாக! ஏன் முடியாது? நிச்சயம் முடியும்…!” என்றபோது அந்த முகத்தில்தான் எத்தனை ‘பளிச்’!
ஆனாலென்ன….. அதுவும்கூட செயற்கைப் ‘பளிச்’தான்!
“கட்….கட்….”
“லைட்ஸ் ஆன்…”
“டேக்… ஓகே…!” ‘பளிச்’ அது!

பலாபலன்:

சானலின் நிலைப்பாடு சசிகலாவை முன்னிலைப்படுத்த வேண்டும்; ஊடக முதலாளிகளின் போயஸ் தோட்ட விஜயங்களே அதை உறுதிப்படுத்திவிட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-சின் ஊடக ஆயுதமான ரங்கராசு போன்றவர்களுக்குத்தான் இது இக்கட்டான காலக்கட்டமாகிவிட்டது.

தமது முதலாளித் தலைமையின் ‘தொழிற்கொள்கை’க்கு மாறாகச் செயல்பட முடியாது; அதே சமயம் ‘கொள்கைத் தலைமையின்’ அற்ப ஆசைகளை நிறைவேற்றியாக வேண்டும். அதன் விளைவே இந்தச் சொதப்பலான பேட்டி.

விளைவு:

இதுவரை எடுத்த எந்தப் பேட்டிகளிலும் இல்லாத அளவுக்கு, தீபாவை நோக்கிய நேர்கொண்ட கேள்விகள்…. ரங்கராசுவின் மனதுக்குள் சசிகலாவும், முதலாளி பாலசுப்பிரமணியனும் வந்து வந்து போனது அவருக்கு நேர்ந்த சோகம்!
திமுகவை ஆதரிக்க வேண்டிய சோகமான நிர்ப்பந்தம் நேர்ந்தபோது, “ஒரு கையால் பூணூலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, மறு கையால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!” என்று அக்கிரகாரவாசிகளை நோக்கிக் கோரிக்கை வைத்த ராஜாஜி என்ற ராஜகோபாலுக்கு அன்று ஏற்பட்ட சோகம்தான் இன்று ‘தந்தி டிவி’ ரங்கராசுக்கு ஏற்பட்டுவிட்டது.

சில எடிட்டிங்குகள்,
தீபாவை சைடு போசில்…. லாங் ஷாட்டில் ஜெயலலிதா போலவே தோற்றம் வரும்படி கொண்டுவந்தது…
போன்ற சில சில்லறை வேளைகளை மட்டுமே செய்து, தமது காவித்துவ ஆசைகளுக்குத் தீனி போட்டுக்கொள்ள முடிந்தது ரங்கராசு பாண்டேவால்!

மதுரை அன்புமதி