தோல்வி அல்ல இது, உயிர்ப்போடும், கொண்ட கொள்கைகளோடும் பீனிக்ஸ் பறவையாகத் தான் எழுந்து வந்திருக்கிறோம், அதிமுகவுக்கு ஒரே எதிரிதான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பல எதிரிகள்.
அதிகாரப் பசியும், துரோக வரலாறும் கொண்ட சகுனிகள் மறைமுகமாக பாசிச ஜெயாவுக்கு முட்டுக் கொடுத்த வாக்குச் சிதறல், மதவாத முகமான ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எல்லா இடத்திலும் ஒரு நாற்காலியைப் போட்டு வளர்க்கும் முதலாளித்துவ ஊடகங்கள், சாதிய ஆற்றல்களை ஒன்றிணைத்து சமூகத்தைப் பிளவு செய்த ஒற்றைச் சாதி ஆதிக்க ஆற்றல்கள்.
அடக்குமுறையை நிர்வாகத் திறன் என்று பறைசாற்றிய அடிமை அரச அலுவலர் கூட்டம், ஊழலில் திளைத்த பணம், நடுநிலை என்கிற பெயரில் திமுகவுக்கு எதிராக எப்போதும் ஒப்பாரி வைக்கும் பார்ப்பனீய வன்மம் கொண்ட கும்பல் என்று திசையெங்கும் பரப்பப்பட்ட அவதூறுகளையும், தடைகளையும் தாண்டியே 100 சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்ற எம்மக்கள் எங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
சமூக நீதியின் மீது அளவற்ற பற்றுதலும், நல்லிணக்கமும், நம்பிக்கையும், அரசியல் அறிவாற்றலும் கொண்ட மிகப்பெரிய ஒரு இளைஞர் படை தி.மு.கவில் வளர்ந்து வருவதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாக நமக்குச் சொல்கிறது. ஏறத்தாழ 110 சட்ட மன்ற உறுப்பினர்கள் தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கையை வென்று காட்டியிருப்பதை மிகப்பெரிய தோல்வியைப் போலச் சித்தரிப்பார்கள், அழிந்தோம், காணமல் போனோம் என்றெல்லாம் இன்னும் சில நாட்களுக்குப் பேசுவார்கள்.
உண்மையில், இத்தனை எதிர்களையும் தாண்டி உயிர்ப்போடும், எழுச்சியோடும் எழுந்து வந்ததைக் கொண்டாடுங்கள், நாமே பாதித் தமிழகத்தின் மக்களுக்குப் பணியாற்றப் போகிறோம், பதவியும், அதிகாரமும் மட்டும்தான் ஜெயாவுக்கு, மிகச் சிக்கலான ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் தென் மூலையில் இருக்கும் ஒரு பழமையான இனத்தின் சமூக நீதியின் மீதான நம்பிக்கையும், எழுச்சியுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த வெற்றி.
முதல்வருக்கும் மேலான நம்பிக்கையையும், பொறுப்பையும் மீண்டும் வென்று காட்டியிருக்கிறார் தலைவர் கலைஞர். அரசியல் என்பது ஆட்சி அதிகாரத்தை நுகரும் பதவிகளால் காட்டப்படும் கட்டிடம் அல்ல, மாறாக, வருங்கால சந்ததியை வழிநடத்தி அறமும், ஆற்றலும் கொண்ட மேம்பட்ட சமூகத்தை உருவாக்கும் ஒரு பாதை, நாம் சரியான பாதையில் தான் இருக்கிறோம், இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்.
– கை.அறிவழகன்