கேள்வி : பேரறிவாளின் தாயார் அற்புதம்மாள் சமிபத்தில் அளித்த பேட்டியில், என் மகன் கைது சம்பவத்தின் போது திராவிடர் கழகம் எங்கள் குடும்பத்தை கை விட்டுவிட்டது என்று குற்றம் சொல்லியிருக்காரே?
பதில்: அது அவரது ஆதங்கமாக இருக்கலாம். குற்றசாட்டாக ஏற்க முடியாது . ராஜீவ் வழக்கை 23 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலைமையை வைத்து கருத்து சொல்லகூடாது.
சம்பவம் நடந்தபோது ‘ராஜீவ் கொலையில் கருணாநிதிக்கு சம்பந்தம் இருக்கிறது ‘ என்று பிரச்சாரம் செய்தார்கள். அதனால்தான் தி.மு.க கொடிக்கம்பங்கள் கொளுத்தப்பட்டன. முரசொலி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.மல்லிகை விசாரணை கூடத்தில் வைகோ ஐந்து நாட்கள் விசாரிக்க பட்டார்.
பத்மநாபா கொலை வழக்கில் தி.மு.க வை சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் , வைகோவின் தம்பி ரவி, உள்துறை செயலாளராக இருந்த நாகராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்குகளிலும் கருணாநிதி, வைகோ சேர்க்கப்பட்டு சிக்கவைக்கப்பட்டிருக்க முடியும்.
பேரறிவாளனை சி.பி.ஐ அதிகாரிகள் அழைத்து சென்றது, திராவிடர் கழக தலைமை அலுவலகமான பெரியார் திடலில். சிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இந்த சதித்திட்டமே பெரியார் திடலில் தான் நடந்தது என்று காட்டியிருக்க முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீரமணி பக்குவமாக நடந்து கொள்ள, அத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
கட்சியை காப்பாற்றுவதா, ஒரு தனி மனிதரை காப்பாற்றுவதா என்று யோசித்திருக்கலாம். இந்த அடிப்படையில் யோசிக்க வேண்டும்.
தி.க. , தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் நெருக்கடி தருவதற்கு சி.பி.ஐ-யில் இருந்த சில அதிகாரிகள் இதனை பயன்படுத்தப் பார்த்ததாகவும், ஆனால் விசாரணை குழுவில் இருந்த முக்கிய அதிகாரி தான் அதனை ஏற்கவில்லை என்றும் சொல்வார்கள். ஜெயின் கமிஷனின் முதல் கட்ட அறிக்கையை பார்த்தால் ‘ ராஜீவ் கொலையே தமிழர்கள் அனைவரும் சேர்ந்து உடந்தையாக இருந்து நடத்தியது’ என்று இருக்கும். இந்த அறிக்கையை வைத்து தான் 1998 -ல் திமுக மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது அன்றைய காங்கிரஸ் கட்சி. எனவே தான் திமுக-வும் , தி.க-வும் அடக்கி வாசித்தே கருத்து சொல்கின்றன.
2009 ஆம் ஆண்டுகளில் ஈழ படுகொலைகளுக்குபிறகு தமிழக மக்களிடம் ஏற்பட்ட அனுதாபங்களை வைத்து , 1991-ல் ஏன் அப்படி செயல் படவில்லை என்று கேட்பது பொருத்தமானது அல்ல.
நன்றி: ஜூனியர் விகடன் (12-03-2014)