பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் நேர்க்காணலை சமஸ் அவர்கள் தி இந்துவில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு முக்கியமான அரசியல் கேள்வி கேட்கிறார். ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா? என்பதே அந்த கேள்வி.
அதற்கான அற்புதம் அம்மாளின் பதில் ‘தி இந்துவில்’ வெளிவந்துள்ளது. அந்த பதிலுக்கான இறுதிப்பகுதி, “நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கெல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க. எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே…” என்று முடிகிறது.
அந்த பேட்டியில் கொளத்தூர் மணி அவர்களின் பெயர் இல்லை.
ஆனால், பேட்டியை எடுத்த சமஸ் அவர்களின் பிளாக்கில் அந்த பேட்டி அப்படியே வெளிவந்துள்ளது. அதில், கீழ்கண்டவாறு அந்த பேட்டி முடிவடைகிறது.
“நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, கொளத்தூர் மணி, வைகோ, சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க. எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே… ”
நன்றாக கவனிக்கவும், பேட்டி எடுத்தவர் அவரது பிளாக்கில் அந்த பேட்டியை முழுமையாக வெளியிட்டுள்ளார். அது அப்படியே தி இந்துவில் பிரசுரமாகியிருக்கிறது. ஆனால், அதில் கொளத்தூர் மணி அவர்களின் பெயர் இல்லை. அந்த காலம் போல ஆச்சு கோர்ப்பவர் செய்த பிழை என்று இன்றைய கணினி காலத்தில் சொல்லி தப்பிக்க முடியாது.
அன்று சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் அறிவு சொல்லாத ஒன்றை பதிவு செய்தார், இன்று இந்து சொல்லியதை மறைக்கிறது. இரண்டும் ஒன்றே! குற்றமே!
கொளத்தூர் மணி அவர்களின் பெயர் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இதன் மூலம் தூக்குதண்டனைக்கு எதிராக போராடுபவர்களுக்கு இடையே, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு இடையே ஒரு பிளவை உண்டாக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! இந்த பேட்டியே தி.மு.க, தி.க, கொளத்தூர் மணி, கோவை.இராமகிருட்டிணன், சு.ப.வீ உள்ளிட்ட மற்ற பெரியாரிய இயக்கங்களை ஒரு குறிப்பிட்ட களத்தில் இருந்து பிரித்து மேய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்றாகவே சந்தேகிக்கத் தோன்றுகிறது.
இந்த பேட்டி நம்பகத் தன்மை அற்றதாக இருக்கிறது! அற்புதம் அம்மாள் உண்மையிலேயே இப்படியெல்லாம் பேசியிருக்கிறாரா? என்று சந்தேகிக்கும் வண்ணம் இருக்கிறது.
இதை பார்ப்பனியம் என்று சொன்னால் கோபித்துக்கொள்வார்கள் எனவே இப்படிச் சொல்லுகிறேன்…
ராஜபக்சேவின் நண்பரது பத்திரிக்கை அல்லவா? இப்படித்தான் செயல்படும்!
இத்துடன் சமஸ் அவர்களின் பிளாக்கை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டுள்ளேன் ஆதாரமாக!
– திராவிடப் புரட்சி