தலைப்பை பார்த்து குழம்பாதீர்கள். விளக்கம் பதிவின் இறுதியில் இருக்கிறது. அந்த விளக்கத்தை தெரிந்துகொள்வதற்கு முன் ஈழத்தமிழ் அரசியலின் வியாபார பின்புலத்தை கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.
ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் பிரதான தமிழக அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தாங்களும் குழம்பி, தமிழ்நாட்டு மக்களையும் ஏகத்துக்கு குழப்பிக் கொண்டிருக்க, இதை வைத்து கல்லா கட்டும் வியாபாரிகளும் தமிழக அரசியலில் உண்டு. அப்படியானவர்களில் சில சில்லறை வியாபாரிகள், ஈழப்பிரச்சனையை தெருவோரத்தில் கூறுகட்டி கூவி விற்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் பதிவே இது.
ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் அவ்வப்போது குரல் கொடுக்கும் அமைப்புக்களில் ஒன்று மே17 இயக்கம். நன்கு படித்த, நுனிநாக்கில் ஆங்கிலமும், தூயதமிழும் (அங்காங்கே பலவந்தமாக திணிக்கப்பட்ட ஈழத்தமிழ் வார்த்தைகளுடன்) சரளமாக பேசக்கூடிய பட்டதாரி இளைஞர்கள் நடத்தும் இந்த மே17 இயக்கத்தின் பெயர்க் காரணமே கொஞ்சம் விசித்திரமானது.
2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி அநியாயமாய் முள்ளிவாய்க்காலில் முடிந்த விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக இந்த மே17ஐ அமைப்பின் பெயராக வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள், இதுவரை உருப்படியாக, சொந்தமாக ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்ததில்லை. அப்படி செய்யக்கூடிய அளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாகவும் இது உருவாகவில்லை. இதை இவர்கள் உருவாக்கவும் இல்லை.
திருமுருகன் காந்தி என்கிற இளைஞர் ஒரு அரசியல் தலைவராக (!) உருவாகவும், அவர் ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் நடத்தும் ஆர்பாட்டங்கள், நினைவுநாட்கள், கருதரங்குகள், பேரணிகளில் “தமிழ்நாட்டின் இளைஞர்கள் சார்பில்” (?) கலந்துகொள்ளும் ஒரு பேச்சாளராகவும் வளர்ந்திருப்பது தான் இந்த மே 17 என்கிற அமைப்பு இதுவரை செய்திருக்குக்கும் ஈழத்தமிழர் ஆதரவு பங்களப்பு.
இவர்கள் தமிழ்நாட்டில் ஆர்பாட்டம் நடத்தும் அழகே அலாதியானது. பெரும்பாலான பிரச்சாரங்களை இணையத்திலேயே நடத்தும் இவர்கள், தப்பித்தவறி இணையத்திற்கு வெளியில் இவர்கள் செயற்பட நினைத்தால் பெரும்பாலும் இவர்களின் ஈழத்தமிழ் ஆதரவு ஆர்பாட்டங்கள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடக்கும். அதுவும் சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலைக்கு பின்னால், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குமேல் தான் இவர்களின் ஆர்பாட்டங்கள் எல்லாமே நடக்கும்.
இதில் ஒரு முக்கிய தொழில் ரகசியம் அடங்கியிருக்கிறது. சென்னையின் மெரினா கடற்கறை பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அதாவது சென்னையின் மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் கூட்டம் அலைமோதும். ஒட்டுமொத்த சென்னைக்குமான ஒரே இலவச திறந்தெவெளி பொழுது போக்குக்கான இடமாக சென்னை கடற்கரைப்பகுதிகள் இருப்பதால் விடுமுறைநாட்களில் கூட்டம் கூடுவது இயல்பு. அதிலும் சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டம் கண்டிப்பாக கூடும்.
அந்த கூட்டத்தோடு கூட்டமாக மே17 இயக்க ஆட்கள் ஆளுக்கொரு மெழுகுவர்த்தியோ, பேனரோ பிடித்துக்கொண்டு நின்றால், பீச்ச்சுக்கு வந்திருக்கும் கூட்டம் காற்றுவாங்கியபடி, இவர்களை சுற்றி ஆவலாக கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். உடனே நம் அண்ணன் திருமுருகன் காந்தியோ அல்லது வேறு “சிறப்பு அழைப்பாளரோ” கொஞ்ச நேரம் ஈழ ஆதரவு பேச்சுக்கச்சேரி நடத்துவார்.
ஒருவேளை, மவுன அஞ்சலி நிகழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் பேசவேண்டிய தேவையும் இல்லை. முகத்தை கொஞ்சம் துக்கம் கலந்த சீரியஸாக வைத்துக்கொண்டாம் போதும். இதையெல்லாம், ஏற்கெனவே ஏற்பாடு செய்திருக்கும் புகைப்படக்கலைஞரும், வீடியோ கிராபரும் படம்பிடித்து உடனுக்குடன் “நேரலையாக” இணையத்தில் ஒலி/ஒளிபரப்பிவிடுவார்கள். இதற்காகவே காத்திருக்கும் வெளிநாட்டு இலங்கைத் தமிழ் வானொலிகள் இதை “நேரலையாக” தொலைபேசி மூலம் கருத்துக்களை வாங்கி உணர்ச்சி பொங்க உலகம் முழுமைக்கும் ஒலிபரப்பும். மாபெரும் மக்கள் போராட்டம் சக்ஸஸ் என்று ஈழத்தமிழ் வானொலிகள் முழங்கும். மே17 அமைப்பின் முகநூல் பக்கமெல்லாம் புகைப்படங்களால் ரொம்பி வழியும்.
இதன் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வெளிநாட்டில் நடக்கும் அடுத்த ஈழத்தமிழர் ஆதரவு ஆர்பாட்டம், பேரணி, கருத்தரங்கு என்று திருமுருகன் காந்திக்கு அழைப்பு வரும். அவரும் அங்கே போய், தமிழ்நாட்டின் இளைஞர்கள் ஈழத்துக்கு ஆதரவாக “களம் காண”த் துடித்துக்கொண்டு காத்திருப்பதாக பேச்சுக்கச்சேரியை நடத்துவார். சாட்சிக்கு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மெரினாவில் திரண்ட மக்கள் வெள்ளத்தின் (!) புகைப்படம், காணொளிகள் காட்டப்படும். இவரை அங்கே காசுகொடுத்து அழைத்தவர்கள் இவரின் காணொளியுடன் கூடிய கச்சேரிக்கு மயங்கி மறு கச்சேரிக்கும் அழைப்பார்கள். முடிந்தால் தங்கள் நண்பர்கள் வேறு ஊர்களில் நடத்தும் இதே போன்ற கச்சேரிகளுக்கும் பரிந்துரை செய்வார்கள். இது தான் ஈழ ஆதரவு அரசியல் கச்சேரி பார்முலா.
இதோ அண்ணன் திருமுருகன் காந்தி அவர்கள், தனது அடுத்த மெரினா மக்கள் வெள்ளத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதில் சுவார்ஸ்யமான செய்தி என்னவென்றால், மே 17 என்று அமைப்பின் பெயர் வைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த குறிப்பிட்ட நாளில் நடத்தவேண்டிய தனது அமைப்பின் அதிமுக்கியம் வாய்ந்த ஆண்டு நிகழ்வை, மே 19 ஆம் தேதியில் நடத்துகிறார். இடம் அதே மெரினா கண்ணகி சிலைக்கு பின்புறம். நேரம் மாலை நான்குமணி. நாள்— இவ்வளவுதூரம் சொன்ன பிறகுமா உங்களுக்கு புரியவில்லை? ஞாயிற்றுக்கிழமை தான்.
இப்போது தெரிந்ததா, ஞாயிற்றுக்கிழமை ஈழப்போராளிகள் யாரென்று?