ஆனந்த விகடன் இந்த வாரம் அப்பட்டமாக ஜெ.புராணம் பாடியிருக்கிறது; இன்னும் ஏதாவது கெட்ட பெயர் வாங்காமல் இருந்தால் (அவ்வளவு நம்பிக்கை) இப்போதைய சூழலில் ஜெ ஹோ… ஜெயா ஹோவாம்.
டெசோ போராட்டத்தின் எதிரொலிதான் ஜெ.விடம் மாற்றம் என்ற தற்காலிக நாடகம். இதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாத ஆ.வி.யின் நடுநிலை மீண்டும் நாறியிருக்கிறது.
மாணவர் போராட்டத்தை ஆதரித்தார் என்று அப்பட்டமான புளுகு. மாணவர் போராட்டத்தை பல வழிகளிலும் ஒடுக்கியவர் ஜெ.போலீசை விட்டுத் தக்கியவர்; மாணவர்களின் சுயவிவரங்களைக் கேட்டு அரசுப் பணி இல்லை என்று மிரட்டினார்கள். விடுமுறை விட்டு விடுதியைக் காலி செய்யச்சொன்னார்கள்; கல்லூரி திறந்தும் சனி, ஞாயிறு வகுப்புகள் என்று அறிவித்து தண்டனை கொடுத்துள்ளார் ஜெ. (மவங்களா…இனிமே போராட்டம்னு வருவீங்க?) இதெல்லாம் ஆ.வி.யின் பார்வையில் மாணவர் போராட்ட ஆதரவு நடவடிக்கைகள்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கள வீரர்கள் பங்கேற்றால் சென்னையில் நடத்தமாட்டேன் என்றாராம். இந்தப் போட்டியை சென்னையில் நடத்துகிறேன் என்று டெல்லியிடம் சென்ற ஆண்டு கேட்டுவாங்கியவர் இந்த ஜெ.அப்போது சிங்கள வீரர்கள் வருவார்கள் என்பது தெரியாதா?
ஐ.பி.எல்.அணிகளில் சிங்களர்கள் இருந்தால் அனுமதி இல்லை என்றாராம். சன் டி.வி.அணியில் சிங்கள வீரர்கள் பற்றிப் பேசிய ஜெ. மெட்ராஸ் சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த சிங்கள வீரர்கள் பற்றிப் பேசவில்லையே ஏன்? இனப் பற்றா? சென்ற ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு எப்படி ஜெ அனுமதி கொடுத்தார்? அப்போது சிங்கள வீரர்கள் யாரும் ஐ.பி.எல்.அணிகளில் இல்லையா?
கெயில் திட்டத்தை நிறுத்திவிட்டாராம். இதனால் மேற்கு மாவட்ட மக்கள் குளிர்ந்துவிட்டார்களாம்.இந்த கெயில் திட்டத்தையும் தமிழகத்துக்குக் கடந்த ஆண்டு கொண்டுவந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஜெ.தான். அப்போது விவசாய நிலங்கள் பாதிக்கும் என்பது தெரியவில்லையா? உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் கெயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசு கைய்போஅம் இட்டிருக்குமா?
காவிரி தீர்ப்பை அரசிதழில் இடம்பெறச் செய்ததால் தஞ்சை விவசாயிகள் குதூகலிக்கிறார்கள் என்கிறது ஆ.வி. தஞ்சை விவசாயிகள் பயி இழப்பீடு நிவாரணம் வங்கப் படவில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே. இதற்குப் பெயர்தான் குதூகலமா?
கச்சத்தீவை எப்படியும் மீட்டு விடுவாராம். 1991 ல் ஆட்சிக்கு வந்தபோதே இதே பல்லவியைப் பல முறை பாடினாரே. கச்சத்தீவு சிக்கல் என்ன ஆயிற்று? கருணாநிதி கடிதம் எழுதினால் கேலி பேசும் ஆ.வி., ஜெ.கடிதம் மட்டுமே எழுதுவதையும், சட்டமன்றத்தில் வாய்வீரம் பேசுவதையும் எப்படித்தான் போராட்டம் என்கிறதோ?
தனி ஈழம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியதை புகழ்ந்துள்ளது ஆ.வி.தேர்தலின் போது ராணுவத்தை அனுப்பி தனி ஈழத்தைப் பெற்றுத்தருவேன் என்று ஊர்தோறும் முழங்கியவர், இப்போது தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு என்று பம்முவது ஏன்?வெளிப்படையாக தனி ஈழமே தீர்வு எனத் தீர்மானம் போட்டிருக்கலாமே?
கருணாநிதியையும் தி.மு.க.வையும் விமர்சிக்கப் பயன்படுத்திக் கொண்ட தீர்மானமே தவிர அதில் வேறு எந்த சாரமும் இல்லையே. மனப்பூர்வமாக தமிழகம் ஒற்றுமையாக தனி ஈழத்தை ஆதரிக்கிறது என்பதை இந்தியாவுக்குக் காட்டவேண்டுமானால், தி.மு.க.மீது குற்றம் சொல்லாமல், தீர்மானத்தை மட்டுமல்லவா தாக்கல் செய்யவேண்டும். அதை விடுத்து தி.மு.க.வை வெளியேர்றுவதில் மட்டுமெ கருத்தாய் இருந்து வெளியேற்றிவிட்டு தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் ஜெ. பாராளுமன்றத்தில் அமெரிக்க தீர்மானத்தை திருத்துவது குறித்த தீர்மானத்தைப் போடவேண்டும் என்று கருணாநிதி சொன்னபோது அதுபயனில்லதாது, தேவையில்லாதது என்ற ஜெ, இவர் போடும் தீர்மானம் எப்படிப் பயனுள்ளது என்கிறது ஆ.வி?
ஜெ. முன்னுக்குப் பின் முரணாகப் பேசினால் ராஜதந்திரம்; அதையே கருணாநிதி செய்தால் துரோகம். இதுதான் ஆ.வி.யின் அகராதி.
ஈழத்தை முன்வைத்து எப்போதும் தமிழ்நாட்டில் மக்கள் வாக்களித்தது இல்லை. 2009 ல் ஆ.வி.குழும இதழ்களும், அப்போதைய அ.தி.மு.க.ஆதரவு ஊடகங்களும் போர்ப் படங்களையும், பிணக்குவியல்களையும் காட்டியபோதுகூட தி.மு.க.கூட்டணி 40 ல் 28 ஐ வென்றது. அதில் காங்கிரசும் அடக்கம். இது ஜெ.வுக்கும் நன்றாகத்தெரியும்.
இறுதியாக ஆ.வி.என்ன சொல்ல வருகிறது? தேர்தலுக்காக மக்கள் பிரச்சினகளில் ஜெ.கவனம் செலுத்துகிறார் என்கிறது. ஆமாம்… அவர் தேர்தலுக்காக மட்டும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறவரை நாடகம் ஆடுகிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால்,இதை ஆ.வி.சொல்லாது. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஈழப்போராட்டத்தை நசுக்க, ஒழிக்க, அதன் ஆதரவாளர்களை ஒடுக்க, போராளிகளை விரட்டியடிக்க, இரும்புக்கரம் கொண்டு அடக்க தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்து இன உணர்வு பொங்கிவிடாமல் தனது முந்தைய ஆட்சிகளில் செய்துவிட்டு, இப்போது எல்லாம் முடிந்தவுடன் ஈழத்தாய் வேடம் கட்டி ஜெ.வருவாராம்; அவரை தமிழர்களெல்லாம் நம்பவேண்டுமாம்; நடுநிலைக்கென்றே அவதாரம் எடுத்த ஆனந்த விகடன் சொல்கிறது. நம்பித்தொலையுங்கள்