மிஸ்டர் புளுகாரின் புலனாய்வு லட்சணம் இதுதான்!
”மாணவர்களைத் தூண்டுகிறாரா ஜெ.?, உளவு பார்க்க வந்த டெல்லி உள்துறை”
– இது இன்று காலை வெளியான ஜூனியர் விகடன் (20.3.2013) இதழின் அட்டைப்பட்த் தலைப்பு.
`மாணவர் போராட்டம் தீவிரம்!கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு காலவரையற்ற விடுமுறை!
-இது இன்றைய நாளிதழ்களில் (16.3.2013) வெளிவந்துள்ள முதன்மைச் செய்தி.
ஜூ.வி.யின் கற்பனையில் உதித்த சூப்பர் ஐடியாவின் படி மாணவர்களைத் தூண்டிய ஜெயலலிதாதான், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இநத இரண்டு செய்திகளையும் படிக்கும் மாணவ மணிகள் ஜூனியர் விகடனின் கற்பனையக் கண்டு சிரியாய் சிரிக்கிறார்கள்.
ஜூ.வி.யின் புலனாய்வுப் புலி மிஸ்டர் புளுகார் கண்டுபிடித்த இன்னொரு மாபெரும் புலனாய்வுத் தகவல் இது. அதையும் படித்துத் தொலைத்து சிரியுங்கள்.
“முந்தைய போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதன் தொடர்ச்சிதான் இப்போதைய கல்லூரி மாணவர்களின் உக்கிரப் போராட்டம் என்று மத்திய அரசு கருதுகிறது.`இதைக் கண்டுகொள்ளாமல் போலீசை கைகட்டி வேடிக்கைப் பார்க்கச் சொல்லி,இதன் மூலம் மத்திய அரசுக்கு எதிராக மக்களின் மனோநிலை திரும்பட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா நினைப்பதாக அவர்கள் யோசிக்கிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.”
மிஸ்டர் புளுகார், விகடன் கம்பெனி அறைவிட்டு வெளியே வராமல் மட்டுமில்லை, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என எதையுமே பார்க்காமல் ஜெ.ஆட்சிக்கு சேவகம் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த மாதிரி ரூம் போட்டு யோசிப்பதிலேயே காலம் கழிப்பது இதிலிருந்து தெரிகிறது.
கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுதும் நடைபெறும் மாணவர் போராட்டங்களை ஒடுக்கும் அனைத்து முயற்சிகளையும் ஜெ.யின் காவல்துறை செய்துவருவதை நாடறியும்.மாணவர்களை மிரட்டுவது, கைது செய்வது, தாக்குதல் தொடுப்பது, போராடவிடாமல் தடுப்பது, விடுதலைப் புலி என்று சொல்லி கைது செய்து விடுவோம் என்று மிரட்டுவது என ஜெ.யின் காவல்துறை ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கிவருகிறது. இந்த நடவடிக்கைகளினால் எந்தவித பலனும் கிடைக்காத்தால்தான் வேறு வழியின்றி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தும், அரசு விடுதிகளில் இருந்து மணவர்களை வெளியேறவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது ஜெ.யின் அரசு.
அதுமட்டுமா,சென்னையில் மார்ச் 29 வரை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடைவிதிப்பதாகவும் ஜெ.யின் அரசு அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளெல்லாம் மாணவர் போராட்டங்களை ஆதரிக்கும் நடவடிக்கைகளா?மாணவர்களைத் தூண்டும் நடவடிக்கைகளா?ஜூ.வி.யைப் படிப்பவன் சிரிக்கமாட்டானா?அது சரி நீங்கள்தான் வெட்கமில்லாத கூட்டமாயிற்றே…
இன்னொரு புலனாய்வை அவிழ்த்துவிட்டுள்ளார் மிஸ்டர் புளுகார்.மார்ச் 14 ல் வனத்துறை அரசு விளம்பரத்தில் புலிக்குட்டிகள் பட்த்தை ஜெ. போட்டுவிட்டாராம். அது மறைமுகமாக விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் செயலாம்.
`விடுதலைப் புலிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன்’,
`தமிழ்நாட்டிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டியது நான்தான்’,
`விடுதலைப் புலிகளைத் தடை செய்ய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியது என் ஆட்சியில்தான்’,
`பிரபாகரனைக் கொண்டுவந்து தூக்கில் போடவேண்டும்’
– இப்படியெல்லாம் இறுமாப்போடு பேசிய ஜெயலலிதாதான், புலிக்குட்டிகளுக்குப் பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு புலிப்படம் போட்டு விளம்பரம் தந்தார் என்று புளகாங்கிதம் அடைகிறது பூணூல் பாசம்.
புலிக்குட்டிக்குப் பெயர் வைப்பது என்பது இங்குமட்டுமல்ல,மத்திய அரசே வனத்துறையும் செய்கிறது.மற்ற மாநில அரசுகளும் செய்கிறது. இந்தியாவின் தேசிய விலங்கே புலிதான். அதை மத்திய காங்கிரஸ் அரசு மாற்றியாவிட்டது?
ஜெயலலிதா யானைகளுக்கு முகாம் நடத்துகிறார். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு யானைக் குட்டி பரிசளித்தார்; இதனால் இவர் யானைச் சின்னம் கொண்ட மாயாவதியை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று எழுதுவீர்களோ?
சரி இதையெல்லாம் விடுங்கள். புலிகளை ஆதரிப்பது என்று முடிவெடுத்தால் நேரடியாக ஆதரிக்க வேண்டியதுதானே? அது என்ன மறைமுகமாக ஆதரிப்பது? அதற்கு விகடன் வகையறாக்கள் அருஞ்சொற்பொருள் விளக்கமளிப்பது?
இப்படி நடுநிலை வேஷம் போட்டுக்கொண்டு டெசோ மீது பாய்வோருக்கு நாம் வைக்கும் கேள்விகள்:
• தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஜெ. உண்மையிலேயே விரும்பியிருந்தால், டெசோ வேலை நிறுத்தத்தை தடுத்தது ஏன்?
• கடைகளைத் திறக்கச் சொல்லி காவல் துறையை ஏவிவிட்டது ஏன்?
• டெசோவைத் தனக்குப் பிடிக்காது என்றால்,அவரே வேலை நிறுத்தம் அறிவித்திருக்கலாமே?ராமதாஸ்கூட கோரிக்கை வைத்தாரே! (தமிழ்நாட்டின் புதிய தமிழ் உணர்வாளர், புலி ஆதரவாளர் தோழர் தா.பா. ஏனோ இந்த மேட்டரில் தன் வாய்க்குத் தாப்பாள் போட்டுக்கொண்டுவிட்டார்)
• சரி, வேலைநிறுத்தம் சட்ட விரோதம் என்று அரசு கருதினால், வேறு வகையான போராட்டம் நடத்தியிருக்கலாமே?
• அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியோ,சட்டமன்றத்தைக் கூட்டியோ மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கலாமே?
• மத்திய அரசு, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்றோ, அல்லது தனித்தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்றோ ஜெ.விடமிருந்து அறிக்கையோ, குரலோ வராமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?
• தேர்தலின் போது இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி ஈழத்தைப் பெற்றுத்தருவேன் என்று நன்றாகவே மேடைகளில் நடித்தவர் இன்று முதலமைச்சரான பின்பு வாய்மூடி இருப்பது ஏன்?
– இதுபோல இன்னும் பல கேள்விகள் உண்டு.
முதலமைச்சரிடமிருந்தோ, அ.தி.மு.க.விடமிருந்தோ இதற்கான பதிலை நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் ஈழம் என்பது ஜெயல்லிதாவுக்கு தேர்தல் அரசியலுக்கான ஒரு பிரச்சினை.
ஜெ. எப்போதுமே ஈழத்துக்கு எதிரானவர்தான். 1991-1996 மற்றும் 2001-2006 ஆட்சிக்காலங்களில் மட்டுமல்லாமல் தற்போதும் ஈழத்துக்கான ஆதரவுப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியவர் ஜெயலலிதா. ஈழ ஆதரவு எண்ணம் தமிழர்களிடம் வந்துவிடக்கூடாது என்பதற்காக தடா, பொடா சட்டங்களைப் பயன்படுத்தியவர்; வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டவர் ஜெயலலிதா. இது பதிவு செய்யப்பட்ட வரலாறு. விகடன்கள் என்னதான் தலைகீழாக நின்று பொய்ப்பிரச்சாரங்கள் செய்து மறைக்க முயன்றாலும் அது முடியாது.
தமிழகத்தில் ஜெ.வின் பிரச்சார பீரங்கியாக வெட்கமில்லாமல் இதுபோல கற்பனையில் எழுதிவரும் விகடன் வகையறாக்கள் மேற்படிக் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.
– இப்படி விழுந்து விழுந்து விகடன் எழுதுவது ஏன்? ஜெ.வுக்கு எதிராக மாணவர்களின் கோபம் திரும்பிவிட்டது. அதிலிருந்து எப்படியாவது ஜெ.யைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தானே…