உலகத்தில் கயிறுகளுக்கு அடுத்து அதிகமாக திரிக்கப்படுவது வரலாறுகள் தான். பொதுவாக ஒவ்வொரு தலைமுறைக்கும் அதன் முந்தைய தலைமுறையின் வரலாறு ‘புனைவு’ கலந்தே புகட்டப்படுகிறது. காலம் காலமாக இது நடப்பதினாலேயே உலகெங்கும் வலம்வரும் பெரும்பாலான எல்லா முக்கியமான விசயங்களை, செய்திகளை, வரலாறுகளைச் சுற்றியும் மாற்றுக் கோட்பாடுகளும் (alternate theory) வலம் வருகின்றன. உண்மைகளை மறைக்க, பொய்களை உண்மையாக்க நூற்றாண்டுகள் எல்லாம் தேவையில்லை, இருபது முப்பது ஆண்டுகள் கிடைத்தாலே போதும். எந்த தகவலையும் சரி பார்ப்பது சுலபமாக இருக்கும் நம் சமகாலத்தில் கூட நம்மிடையே வரலாற்றை மாற்றியமைக்கும் ‘திறமை’ வாய்ந்த கோயபல்ஸ்கள் வாழத்தான் செய்கிறார்கள். சும்மாவே பொய்களை அள்ளித் தெளிக்கும் இக்-கோயபல்ஸ்கள் சிறுகூட்டங்களுக்கு தலைவர்களாகவும் ஆகிவிட்டால் கேட்கவும் வேண்டுமா? இப்படியான சூழ்நிலையில், முக்கியமான கடந்த கால வரலாறுகளை வெறும் வாய்வழியாகச் சொல்லாமல் ஆதாரங்களுடன் ஆவணமாகப் பதிய வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அப்படியொரு பெரும்பணியைச் செய்திருக்கிறது அய்யா சு.ப.வீயின் ‘ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்’ நூல்.
2009ல் ஈழப்போர் உக்கிரமடைந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் துவண்டு கிடந்த ஈழ உணர்வு மீண்டும் நிமிரத் துவங்கியது. அதற்கடுத்து நடந்த சமகால நிகழ்வுகளை நாம் அறிவோம். ஆனால் அந்த காலத்தில் நம் தமிழக ‘ஈழ’ அரசியல்வாதிகளால் நமக்குப் புகட்டப்பட்ட வரலாற்றுச் செய்திகள் சரியானவைதானா? எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை எனவும் இந்நூல் அலசுகிறது.
உலகெங்கும் திமுகவின் ஆதரவாளராக, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக அறியப்பட்டிருக்கும் சுபவீ அய்யாவின் இந்நூல் குறித்து சிலருக்கு ஒருபக்கச் சார்பு இருக்குமோ என்ற ஐயம் இருக்கலாம். அதற்கு அவரே முன்னுரையில் பதில் அளித்திருக்கிறார். “நான் ஒரு வழக்கறிஞன். என் பக்கத்தில் இருக்கும் நியாயங்களை நான் ஆதாரத்துடன் எடுத்து வைத்திருக்கிறேன். படித்து ஆராய்ந்து தீர்ப்பை நீங்கள் எழுதுங்கள்” என்று!!
இப்பதிவுகள் சுபவீ அய்யாவின் வலைதளத்தில் தொடராக வந்தபோது பலர் நம்பகத்தன்மை இன்றியே படிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அக்கட்டுரைகள் வெறும் சொற்ச்சுவையும், பொருட்சுவையும், உணர்வுச் சுவையும் மட்டுமே தாங்கிய வெறும் உரைகளாக இருக்கவில்லை. மாறாக முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த செய்தித்தாள் கத்தரிப்புகள், அறிக்கை கத்தரிப்புகள், ஆவணங்களின் நகல்கள் என ஒரு நீதிமன்ற விசாரணையில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களைப் போல மிகக்கூர்மையான ஆதாரங்களோடு தெளிவாக இருந்ததால் மாற்றுக் கருத்து கொண்டோர் மத்தியிலும் மிகுந்த நம்பகத்தன்மையையும், ஆதரவையும் பெற்றது. நம்மிடையே இப்போது ஈழ அரசியல் பேசும், நாம் பெரிதும் மதிக்கும் அரசியல்வாதிகள் சிலரின் தற்போதையே பேச்சுக்களை, வரலாற்றுத் திரிபுகளை அவர்களின் முந்தைய அறிக்கைகளாலேயே முறியடிக்கிறார் சுபவீ! படிக்கப் படிக்க, “அரசியலுக்காக இப்படியுமா பொய் பேசுவார்கள்? வரலாற்றை மாற்றுவார்கள்?” என நமக்கு ஆச்சரியமே மேலோங்குகிறது!
சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, எம்.ஜி.ஆர் முதல்வர் பதவியேற்பில் பெரியார் பங்கேற்றதாகவும் அவ்விழாவில் பெரியாரை எம்.ஜி.ஆர் புகழ்ந்து பேசியதாகவும் கூறினார். ஆனால் எம்.ஜி.ஆர் பதவியேற்க ஏழு வருடங்களுக்கு முன்பே பெரியார் இறந்துவிட்டார்!! உண்மை இப்படியிருக்க வெறும் கைதட்டலுக்காக மேடையிலேயே ஒரு வரலாற்றுப்புனைவை உருவாக்குவதென்பது எவ்வளவு பெரிய பிழை? அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான இளைஞர்கள் அதை உண்மை என்றல்லவா நம்பியிருப்பார்கள்? இப்படி நம்மிடையே எத்துணை ஆயிரம் வரலாறுகள் திரிக்கப்படுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன என்பதை எண்ணினால் வியப்பும், பயமுமே ஏற்படுகிறது!
இதுபோல தொடர்ந்து கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட சில வரலாற்றுப் பொய்களுக்கான பதில் தான் ‘ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்’ என்னும் இந்நூல். இதன் சிறப்பம்சமே இது தாங்கி நிற்கும் ஆவணங்கள் தான். நூல் என வழங்குவதைவிடவும் ஆவணம் என வழங்குவதே சரியானதாக இருக்கும். எந்த இடத்திலுமே சுபவீ தன் ‘கருத்தை’ பதியவில்லை. மாறாக ‘ஆதாரங்களைப்’ பதிகிறார். கிடைப்பதற்கரிய இத்தனை ஆதாரங்களையும், செய்திகளையும் எப்படி திரட்டினார் என நினைத்தால் மனம் மலைக்கிறது.
ஈழம் குறித்த முக்கியமான நிகழ்வுகள், அதற்கு தமிழக அரசியல்வாதிகள் ஆற்றிய கடந்தகால-நிகழ்கால எதிர்வினைகள் என எல்லாவற்றையும் ஆதாரங்களோடு இந்நூல் எடுத்துரைக்கிறது. ஈழம் குறித்தும், ஈழம் சார்ந்த தமிழக அரசியல் குறித்தும் ‘ஆதாரங்களோடு’ அறிய விரும்பும் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஆவணக் களஞ்சியம் இந்நூல். பொது விவாதங்களிலும், தனிநபர் விவாதங்களிலும் நாம் பங்கேற்கும் போது இந்நூலில் இருக்கும் செய்திகள் நமக்கு பெரிதும் கைகொடுக்கும். ஈழம் குறித்த அக்கரை இருப்போரின் ஒவ்வொரு கைகளிலும் அவசியம் இருக்க வேண்டியது நூல், அய்யா சுபவீயின் ‘ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்’!
கிடைக்குமிடம்:
வானவில் புத்தகாலயம்
10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை
(தி.நகர் பேருந்து நிலையத்திற்கும்
காவல் நிலையத்திற்கும் இடைப்பட்ட சாலை)
தியாகராய நகர், சென்னை -600017
தொலைபேசி : 044-24342771, 044-65279654
கைபேசி : 7200050082
விலை- 90ரூபாய்
– டான் அசோக்
Comments
One response to “ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்”