ஒருவருடைய காலில் விழுந்து வணங்குவது அல்லது ஒருவருடைய காலைத் தொட்டு வணங்குவது என்பது வடஇந்தியாவைவிடத் தென்னாட்டில்தான் இன்று அதிகம் வழக்காற்றில் காணப்படுகிறது. இதனை வைணவ சமயம் சரணாகதி என்று குறிப்பிடுகிறது. சரண் புகுதல் என்று கவிஞர்கள் இதனைப் பாடி வைத்துள்ளனர். பாரதி தேடி உன்னைச் சரண் புகுந்தேன் தேசமுத்து மாரி என்று முத்துமாரியைப் பாடுகையில் குறிப்பிடுகிறார்.
வைணவத்தில் எல்லாப் பொறுப்புகளையும் நீயே கதி என்று பெருமாளிடம் காலில் விழுந்து ஒப்படைத்துவிட்டால் பெருமாள் பார்த்துப்பார் என்று குறிப்பிடுவார்கள்.
அதேபோல் பார்ப்பனர்களிடையே இறைவன் ஊர்வலத்தின்முன் வேதம் ஓதிக் கொண்டு வருபவர்களையோ, அல்லது நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடிக்கொண்டு வருகின்றவர்களையோ அவர்கள் வருகையில் சாலையாக இருந்தாலும் விழுந்து நமஸ்கரித்தல் என்பதைச் செய்கிறார்கள்.
அதேபோலச் சமயத் தலைவர்கள் அதாவது ஆச்சாரியாரியர் என்று அழைக்கப்படும் சங்கராச்சாரியார் அல்லது ஜீயர்கள் என்று அழைக்கப்படும் திருவரங்கம் ஜீயர், அகோபிலம் ஜீயர் என்று அழைக்கப்படுகின்ற ஜீயர்கள் வருகின்றபோது சாஷ்டாங்கமாக அதாவது அடிபட்ட மரம் வீழ்ந்தது போல எண்சாண் உடம்பும் தரையில் பட விழுந்து வணங்குகிறார்கள். இதனைத் தெலுங்கில் படிமுக்கு என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு வணங்குவதை மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நால்வருக்கு உரியதாக வகுத்து வைத்திருக்கிறார்கள். அதனால் பெற்றோர்களைக் காலில் விழுந்து வணங்குவது, பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை வணங்குவது, தெய்வத்தை அவ்வாறு வணங்குவது என்ற வழக்கம் இருந்து வந்துள்ளது.
நாளடைவில் இப்பழக்கம் பெரியவர்களை விழுந்து வணங்குவது என்று ஆகியிருக்கிறது. முன்பெல்லாம் மனினுடைய சராசரி ஆயுட்காலம் அறுபது வயதுக்குக் குறைவாகவே இருந்தது. எனவே அறுபது வயது அடைந்தவர்கள் அதனை மணிவிழா என்றோ, சஷ்டியப்த பூர்த்தி என்றோ கொண்டாடுகையில், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் கூட அறுபது வயது கொண்டாடியவர்களை வணங்க வேண்டும் என்ற மூடநம்பிக்கையின் பயனாய் காலில் விழுந்து வணங்குவதோடு, வெள்ளிப்பூ, பொற்பூ என்று பொன்னால், வெள்ளியால் ஆன சிறிய பூக்களைப் பாதத்தில் போட்டு அவர்களை வணங்கினார்கள்.
இப்போது பெரிய மனிதர்கள், ஆச்சாரியார்கள் என்பவர்கள், தண்டனை பெறக்கூடிய குற்றம் செய்தவர்களாகக் கருதப்பட்டு சிறைச்சாலை எட்டிப் பார்த்து அல்ல, சிறைச் சாலையில் வாசம் செய்துவிட்டு வந்தவர்களை விழுந்து வணங்குகிறார்கள்.
ஒரு மனிதன் மற்றொரு மனிதன் அல்ல மனித ஜென்மத்தின் கால்களில் விழுவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. நம்மைப் போலவே பத்து மாதம் தாயின் கருவறையில் இருந்து வந்தவர்கள்தானே? எனவே உயர்ந்த பண்பாடு உள்ள மனிதர்களுக்கு மரியாதை செலத்துவது, கைகளைக் குவித்து வணக்கம் செய்வது, வாழ்த்துவது ஆகியன அவர்கள் பண்பால், அறிவுத் திறத்தால், அறவாழ்க்கையினால் உயர்ந்தவர்களாய் இருந்தால் அவர்களுக்கு அவற்றைச் செய்வதில் தவறில்லை.
ஆனால் அதை விடுத்து அவர்கள் காலில் விழுந்து வணங்குவது அவர்கள் அரச பதவியில், உயர் பதவியில் இருக்கிறார்கள் என்றால் அவர்களைக் காலில் விழுந்து வணங்குவது அது கண்டு அவர்களும் மகிழ்வது அறிவீனம் அல்லவா எனும் கேள்வி எங்கும் கேட்கப்படுகிற கேள்வி.
காலில் விழுந்து வணங்குவது உயர்வானதா என்றால் உயர்வானது, அதனைச் செய்பவர் தவறு செய்பவர், இழிந்தவர் என்றே கருதப்படும் நிலை உள்ளதற்குக் கிராமப் புறங்களில் பஞ்சாயத்துக்கள், தவறு செய்தவர்களை விசாரிக்கின்றபோது அவர்கள் தவறு செய்தவர்களாயின் மன்னிக்கும்படி வாயினால் மட்டும் கூறி வேண்டினால், அவர்களை மன்னிக்க அவர்கள் ஊரார் காலில் விழுந்து வணங்கி வேண்டிக் கேட்கவேண்டும். அதேபோல் திருட்டு முதலியவை செய்தவர்கள் காலில் விழுந்து கதறினால் மன்னிக்கப் பெறலாம். தன்னைக் காதலித்துக் கைவிட்ட ஆடவனின் காலில் விழுந்து கெஞ்கினால் மனம் இறங்குவது உண்டு.
எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் காலில் விழுவது என்பதைத தமிழ்ச் சமுதாயம் ஏற்பதில்லை. தமிழ்ச் சமுதாயம் மட்டும்தானா உலகில் வேறு நாடுகளில் நிலைமை எப்படி?
கிரேக்கத்தில் நடந்த கதை இது. அலெக்சாண்டரின் காலைத் தொட்டு அரிஸ்டாட்டில் அவர் அரசராக விளங்கியபோது, வணங்கினார் என்று வரலாற்றில் ஒரு தகவல் கூறப்படுகிறது.
அறிஞராயும், தத்துவ ஞானியுமான அரிஸ்டாட்டில் அலெக்சாந்தர் அரசர் என்பதால் அவரை வணங்கியபோது, மற்றவர்கள் இதனை ஒரு குறையாக எண்ணி, இவ்வளவு பெரிய மாமனிதரான நீங்கள் போய் அரசரான அவர் காலில் விழலாமா? இது சரியா? முறையா? என்று கேட்டபோது, அரிஸ்டாட்டில் கூறியதாகக் கூறப்படும் பதில் இதுகுறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. நான் என்ன செய்வது? அலெக்சாந்தர் என்னுடைய மாணவன்தான்.
இப்போதோ அவர் அரசர். அது மட்டுமல்ல அவன் காலில் இந்தக் கிரேக்கநாட்டின் அரசு அல்லவா இருக்கிறது. எனவேதான் அவன் காலில் விழுந்து வணங்கினேன் என்று பதில் கூறினாராம்.
ஆக இங்கு மட்டுமல்ல அங்கும் கூடக் காலில் விழுகிற பண்பாட்டு நடவடிக்கை உலகின் பார்வையில் குறித்த செயல் என்றுதான் கருதப்படுகிறது. இதனை இங்கே நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும்.
சரி! இந்தக் காலில் விழுந்து வணங்கும் பழக்கம், மரபு, ஆரியப் பண்பாடா? திராவிடப் பழக்கமா? மரபா? என்று ஆராய்ந்தால் வரலாறு என்ன கூறுகிறது?
வரலாறு தெள்ளத் தெளிவாக இது ஆரியப் பண்பாடு என்று காட்டுகிறது. ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக, மத்திய ஆசியாவிலிருந்து ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வருகையில் பாரசீகத்தில் நீண்ட நாட்கள் அதாவது பல்லாண்டுகள் தங்கினார்கள்.
அங்கே பாரசீக நாட்டின் மரபு, பண்பாடு அரசனுடைய காலில் விழுந்து வணங்குவது மட்டுமல்லாது, அரசனுக்கு மரியாதை காட்டுவதற்கான அரசனுடைய பாதங்களை அவருடைய அவையில் முத்தமிடுவது என்பது ஆகும். இந்தப் பழக்கம்தான் ஆரியர்களைத் தொற்றிக் கொண்டது.
எனவே, இந்தியாவில் வந்து குடியேறிய ஆரியர்களுடைய பழக்கம் தாள் பணிவது சரணாகதி ஆவது என்று ஆயிற்று.
இந்த வரலாற்றைச் சொல்லுகையில் மற்றுமொரு வரலாற்றுச் செய்தியையும் தொட்டுக் காண்பிபோம். இந்தக் காலில் விழுந்து வணங்குவது, காலை முத்தமிடுவது ஆகியனவெல்லாம் இசுலாமியர்களிடையே கிடையாது. இசுலாமிய சமயமும் அதனை ஏற்றுக் கொள்வது கிடையாது.
வடஇந்தியாவில் இசுலாமிய ஆட்சி ஏற்பட்டபோது அடிமை மரபு என்று சொல்லப்பட்ட மரபின் அரசராக விளங்கிய சியாசுத்தீன் பால்பன் என்ற இசுலாமிய மன்னர்தான் அரச பதவியில் தெய்வீக உரிமைக் கோட்பாடு என்பதனை நம்பி அதனை நுழைத்தவர்.
அரசருடைய அதிகாரத்தையும், அரச பதவிக்குச் செல்வாக்கையும் புகுத்த விரும்பினார். அவர் முழுமையான வல்லாட்சி அதாவது யாரும், எவரும் அரசரைக் கேள்வி என்று எதுவும் கேட்காமல், அரசருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று விரும்பினர். எனவே அதற்குரிய வழிகள் என்று பல வழிகளைச் சிந்தித்துச் செயல்படுத்தினார்.
அவர் பாரசீகத்தின் பண்பாடு ஆன அரசருடைய முன் விழுந்து படுத்து வணங்க வேண்டும் என்றும் கட்டளையையும், அரசருக்கு மரியாதை செலத்தும் வகையில் அரசருடைய அவையில் அதாவது பலரும் கூடியுள்ள, பலரும் பார்க்கின்ற அவையில் அரசரின் கால்களுக்கு முத்தமிடுதலையும் அறிமுகம் செய்தார்.
அந்தப் பழக்கம் இன்றும் நம் அரசியல்வாதிகளிடம் தொற்றிக் கொண்டு உள்ளது. எனவே மக்களின் பிரதிநிதிகளாக அமைச்சர்கள், அவைத் தலைவர்கள் முதலமைச்சர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தனர். அவ்வாறு விழுந்த புகைப்படங்களும் பத்திரிகைகளில் இடம்பெற்றன.
பெற்ற தாய், தந்தையர் காலில் விழுகின்றானோ இல்லையோ, அரசில் உயர்பதவி வகிக்கும் முதலமைச்சர் காலில் விழுந்தனர். இதில் வேடிக்கை பேரன், பேத்தி எடுத்தவர்கள் கூட, அவர்கள் காலில் மற்றவர்கள் விழும் நிலை எய்தியவர்கள் கூடச் சம்பந்தம் இல்லாத -_ ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் காலில் விழுந்தனர்.
இங்கே நாம் காணும் வேடிக்கை இது. சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் வயதாகாதவர்கள் என்றாலும்கூட அவர்கள் காலில் சாமி, சாமி என்று விழுவதைக் கார்த்திகை மாதம் பிறந்ததுவிட்டால் காணலாம்.
பாக்யராஜ் திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி. பாக்யராஜ் நடித்த ஒரு கை ஓசை திரைப்படத்தில் பாக்யராஜ் மஞ்சள் வேட்டி அணிந்து சாமியாடியாகி விடுவார். அவரைப் பெற்ற தகப்பன், மகன் சாமியாடியானதால் காலில் விழுவார்.
அப்போது பாக்யராஜ் மனத்தில் இளம் வயது நினைவுகள் பின்புலத்தில் ஓடும். அப்போது சிறுவனாக இருக்கையில் கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு தந்தை அடிக்கத் துரத்தியது நினைவுக்கு வரும். அன்று தன்னை அடிக்கத் துரத்திய தந்தை இன்று காலில் விழுவதை எண்ணி பாக்கியராஜ் மகிழ்வார்.
இன்று அதுபோல் அரசியலில் பலருக்கும் தன்னிடம் பதவி, பரிசை, ஆள் அம்பு, சேனை இருக்கையில் காலில் விழுவது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது போலும்.
உண்மையான துறவு உடையவர்கள் அவ்வாறு தம் காலில் விழுபவர்கள் தம் காலில் விழவில்லை, இறைவன் தம்மிடம் உறைவதாக எண்ணிக் கருதுகிறார்களாம்.
எது எப்படியோ, திராவிடன் எவருடைய காலிலும் விழமாட்டான்.
–– முனைவர் பேரா.ந.க.மங்களமுருகேசன்