லோக “பிராமணீய” பாலகங்காதர திலகர்!


(கி.தளபதிராஜ்)

இந்திய சுதந்திரப்போராட்ட தீவிரவாதி என்று அடையாளப்படுத்தப்படும் திலகர், இந்திய அரசியலை இந்துத்துவ மயமாக்கி, இந்தியாவில் இந்து சனாதன ஆட்சியை நிறுவியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்ட ஒரு இந்துமதத் தீவிரவாதி!

பால்யவிவாக தடுப்புமசோதா!

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 1880 ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த பி.எம்.மலபார் என்பவர, ஆங்கிலேய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதம், பல்வேறு விவாதங்களைக் கடந்து, பல ஆண்டுகளுக்கு பின்னர் பிரிட்டீஷ் அரசால் குழந்தை திருமணத்தடுப்பு சட்ட மசோதாவாக கொண்டுவரப்பட்டது. இந்து சனாதனத்தில் ஊரித்திளைத்த திலகரோ, இது இந்து மதத்தினருக்கு விடப்பட்ட சவால் என்று கூறி துள்ளிக்குதித்தார்!. இந்துமத சம்பிரதாயங்களில் கை வைப்பதற்கு வெள்ளையனுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்!.தனது “கேசரி” இதழில் பால்ய விவாகத்தை ஆதரித்து கட்டுரைகளை எழுதினார்!.இந்துக்களுக்கு எதிரான எந்த சட்டத்தையும் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என்று ஊர்தோறும் பேசித்திரிந்தார்!.

விநாயகர் அரசியல்!

விநாயகனை அரசியலாக்கி, மதவெறி அரசியலுக்கு அடித்தளம் அமைத்தவரும் இவர்தான். மகாத்மா புலே, சாகுமகாராஜ் ஆகியோர் மராட்டியத்தில் துவக்கிய “சத்ய சதக்” இயக்கம், பார்ப்பனரல்லாதாரிடத்தில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது!. இந்துமதம் பார்ப்பனரல்லாதாரை தீண்டத்தகாதவர்களாக, சூத்திரர்களாக, வைத்திருப்பதை அவர்களுக்கு உணர்த்தியது!. விழிப்புற்று எழுந்த பார்ப்பனரல்லாதாரை மத போதையில் ஆழ்த்தி, அவர்களை தன் வயப்படுத்தும் சூழ்ச்சியில் இறங்கினார் திலகர்!.

“சர்வஜன கணபதி விழா” என்ற பெயரில் விநாயகர் ஊர்வலங்களை நடத்தி, இஸ்லாமியர்களுக்கு எதிராக, இந்துமத வெறியூட்டி, பார்ப்பனரல்லாதாரை என்றென்றும் சூத்திரர்களாகவும்,பஞ்சமர்களாகவும் தங்கள் வாழ்க்கையைத் தொடர பல்வேறு யுத்திகளைக் கையாண்டார்.

விநாயகனின் வாகனம் எலி!

1897 ல் புனே, பம்பாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் “பிளேக்” எனும் கொடிய நோய் பரவி மக்கள் பெருமளவில் இறந்து போனார்கள். “பிளேக்” நோய்க்கு “எலி” முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டது!. உதவி கலெக்டராக அப்போது பதவி வகித்துவந்த ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் ஆகியோர் கொண்ட குழு, “பிளேக்” மேலும் பரவாமல் தடுக்க தீவிரமாக செயல்பட்டது. அப்போது நோய்க்கு காரணமான எலிகளையும் ஒழிக்க முனைந்தது.

“விநாயகனின் வாகனமான எலியை ஒழிப்பதா?” என திமிறி எழுந்து தன் பஞ்சகச்சத்தை இறுக்கினார் திலகர்!. “எலிகளைக் கொல்லுவதன் மூலம் இந்துக்களின் மனதை பிரிட்டீஷ் அரசு புண்படுத்துகிறது” என்று அறிக்கை விடுத்தார்!.இதற்கெல்லாம் சற்றும் சளைக்காது, தன் கடமையிலிருந்து பின்வாங்காது செயல்பட்ட உதவிகலெக்டர் ராண்ட் டும், அயெர்ஸ்டும் “பிளேக்” நோயை முற்றிலுமாக ஒழித்து, பொதுமக்களிடத்தில் பெரும் செல்வாக்குப்பெற்றனர்.

 

கொலைவெறியை தூண்டிய திலகர்!

ஜேம்ஸ் என்கிற ஒரு பாதிரியார், ராண்ட்டுக்கும், மக்களுக்கும் இடையிலான இனக்கமான சூழலைப் பயன்படுத்தி, தீண்டப்படாத மக்களாக கருதப்பட்ட அவர்களிடம்,கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அனைத்து மக்களும் கல்வி கற்பதற்கான ஏற்பாட்டினைச் செய்தார். ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் மீது ஏற்கனவே கோபம் கொண்டிருந்த பார்ப்பன இளைஞர்களுக்கு ஜேம்ஸ் பாதிரியாரின் செயல் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதை எதிர்த்ததோடு , பெண்களுக்கு கல்வி வழங்குவதை அறவே வெறுத்தவர் திலகர். “சூத்திரர்களும், பஞ்சமர்களும் கல்வியே கற்கக்கூடாது” என்று வெளிப்படையாகப் பேசியவர்!.

“வீரசிவாஜி இந்துமத நலனுக்காக, அப்சல்கானை கொன்றது சரிதான்” என்றும் “இந்துமதத்திற்கு எதிராக செயல்படுபவர்களை,சிவாஜி வழியில் நின்று கொன்றால் அது தேசபக்தியே யாகும்” என்றும் தனது “கேசரி” இதழில் எழுதி பார்ப்பன இளைஞர்களிடம் கொலைவெறியைத் தூண்டினார் திலகர்!.சனாதன வெறிபிடித்த பார்ப்பன இளைஞர்களான தாமோதரஹரியும், பாலகிருஷ்ணஹரியும், ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் டை கொல்ல சதித்திட்டம் தீட்டினர்!.

விக்டோரியா மகாராணி பதவியேற்ற நாளின் வைரவிழா 1897ம் ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது!. ராண்ட் டும், அயெர்ஸ்டும் அந்த விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில், அந்தப்பார்ப்பன காலிகளால், திட்டமிட்டபடி சரமாரியாக சுடப்பட்டனர். அயெர்ஸ்ட் அந்த இடத்திலேயே சரிந்தார்!. ராண்ட் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்!

கொலைக்காரர்களைப்பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்க முயன்ற ஆரிட் என்ற இளைஞனையும், ஜேம்ஸ் பாதிரியாரையும், அந்தக்கும்பல் வேறொரு நாளில் தீயிட்டு கொளுத்தி கொன்றது!. இந்து சனாதனத்தை காப்பாற்ற கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாத அய்யர் எப்படி சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்கப்படுகிறாரோ, அப்படியே தாமோதரனும் பாலகிருஷ்ணனும் வரலாற்றில் தியாகியாக்கப்பட்டு விட்டார்கள்!.

கலப்புமண சட்டம்!

வித்திலபாய் படேல் என்பவர் மத்திய சட்டசபையில் 1918 ம் ஆண்டு கலப்பு திருமண சட்ட மசோதாவை கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் நீதிக்கட்சியும், மராட்டியத்தில் அம்பேத்கரும், சட்ட மசோதாவை ஆதரித்து பேசினர். திலகரோ, “பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை திருமணம் செய்துகொண்டால், பார்ப்பனத் தன்மையை இழந்துவிடுவார்கள்” என்றார்.”அனுலோமத் திருமணங்களை ஆதரித்தால்,பிரதிலோகத் திருமணங்களை தடுக்க முடியாது” என்றும் எச்சரித்தார்.

(சபிக்கப்பட்ட உறவுகளுக்கு மனு வைத்த பெயர் “சங்கரமம்”. ஆண் மேல் சாதியாய் இருந்து, கீழ்சாதிப்பெண்ணை மணந்தால் “அனுலோம சங்கரமம்”. பெண் மேல் சாதியாய் இருந்து கீழ்சாதி ஆணை மணந்தால் “பிரதிலோம சங்கரமம்”. இப்படி திருமணம் செய்துகொள்வோரை சண்டாளர்கள் என்று சொல்லி அவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்தான் மனு என்று கூறப்படுகிறது).

சூத்திரனுக்கு ஏது அரசியல் உரிமை?

பார்ப்பனரல்லாதாருக்கு அரசியல் உரிமை கோரி தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கங்கள் கோரிக்கை வைத்து போராடிய நிலையில் சென்னை வந்த திலகர் பொதுக்கூட்டம் ஒன்றில், “செக்காட்டும் செட்டியும், செருப்பு தைப்பவனும், துணி துவைப்பவனும் சட்டசபைக்கு வர நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.சூத்திரர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல” என்று திமிராக பேசினார்.

 

“கீதா ரகசியம்” என்ற உரைநூலை எழுதி, மக்கள் கீதையை படித்து இந்துமத உணர்வு பெறவேண்டும் என்று கூறிய திலகர், இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்து கடைபிடித்து, இந்திய அரசியலை, இந்துமதக் கோட்பாட்டுக்குள் அடக்க முயற்சித்தார்.ஆர்.எஸ்.எஸ் தளகர்த்தராக விளங்கிய சாவர்க்கரையே இவர்தான் தயார் செய்தார் என்று சொல்லப்படுகிறது!