மதுவிலக்கு: ராஜாஜி கிண்டலும், கலைஞரின் பதிலும்

தேர்தலில் தோல்வியடைந்த ராஜகோபாலாச்சாரியார் கலைஞரை நிந்தித்து கல்கியில் எழுதிய கவிதையும், அதற்கு கலைஞர் கவிதையாலேயே கிழித்தெறிந்த பதிலும்.

ராஜாஜியின் கவிதை

“சாராய சகாப்தம்’

ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல
ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா
தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்;
வீழ்ந்தவர்கள் முன்போல் வாட
ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு
வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு
வரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார்
கள்ளும் சாரயமும் தந்தார்
அரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில்
போற்றுக முதல்வர் பணியை!
சோற்றுத் திண்டாட்டம் – ஏழை மனைகளில்
சாராயக் கடைகளில் பெரும் கொண்டாட்டம்!
போற்றுக தமிழ் நாட்டு முதல்வரை!
சாராயக் கடைகளை அரங்கேற்றினார்
வரம்பெற்ற கருணைச் செல்வர்!

-ஆச்சாரியார்

************************************
ஆச்சாரியாருக்கு கலைஞரின் பதில் கவிதை:

கிழ பிராமணா! உன் வாக்குப் பலித்தது

`சாராய சகாப்த மென்று ஓர் கவிதை
சக்ரவர்த்தி ராஜாஜி மாமுனிவர்
தாராளமாய்க் `கல்கி ஏட்டில் தீட்டியதால்
யார் யாரோ சுதந்தராக்கள் மகிழ்கின்றார்.
`பார் பாராய்க் குடித்தவர்கள் பர்மிட் வாங்கி
நேர்மாறாய்ப் பேசுகின்றார் புத்தர்போல!
இதயத்தில் நோய் என்றும்
இரு யூனிட் வேண்டுமென்றும்
இதோ `டாக்டர் சர்டிபிகேட் பாருமென்றும்
இங்கிருக்கும் சுதந்தராக்கள் குடித்த கதைஊர் அறியும்
பணக்காரர் பகல் வேடக்காரரெல்லாம்
மணக்கும்மது வாங்குவதற்கு பர்மிட் வேண்டும்
பகட்டுக்கு ஒருநீதி – பாவம் ஏழைக்கு ஒருநீதி
பஞ்சாங்க சாத்திரத்தின் புதுநீதி
வாடுகின்ற ஏழைக்குடிகாரன்
வார்னீஷைக் குடித்து செத்த போதும்தனம்
மேவுகின்ற சீமான்கள் – போதை
மோதுகின்ற `விஸ்கி, ரம் அடித்தபோதும்
நவ்ரோஜி வீதியில்தான்
நாற்றம் துளைக்கலையோ?
நாடுதான் பார்க்கலையோ?
`ஆழ்ந்த அறிஞர் அண்ணா என்று
அன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்
அயர்ந்தேதான் போனேன் அய்யா!
இன்னொருநாள்,
அண்ணாபற்றி அரசாங்கப் பாடநூல் வந்தபோது அற்பவயதில் செத்தவரெல்லாம்
அவதாரப் புருடர் தாமோ என எழுதி
அவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தாபோகும்?
ஒரிசாவில் இவர்கட்சி ஆட்சியிலே
ஓடிற்றே மதுவின் வெள்ளம்! அப்போது
தரிசாகப் போனவது ஏன் இவரின் உள்ளம்?
வரம் பெற்ற கருணைச்செல்வா என – எனை
வாழ்த்துகின்றார்! வணங்குகின்றேன்
வரம் தந்தார் இவரல்ல; நேசக்
கரம் தந்த நாட்டு மக்கள்!
வரம் பெற்றேன் – பெரியார் அண்ணா தந்த நெஞ்ச
உரம் பெற்றேன்.
இப்போதும் சொல்கின்றேன்,
கேட்டிடுக!
இந்தியா முழுமைக்கும் அறவே
மதுவிலக்கு கொண்டுவர
சட்டம் செய்தால்:
சிரம் தாழ்த்தி கரம் குவித்து
சிறப்பான செயல் என்று போற்றி நின்று
செயலாக்க முந்திடுவேன்
அதன் பிறகும்;
இதய நோய் என்று – சிலர்
இருட்டினிலே குடிப்பதையும்
இனி அனுமதிப்பதில்லை யென்று விதி செய்வேன்
முழுவிவரம் தேவை யெனில்
பட்டியல் பிறகு சொல்வேன்!

– டாக்டர் கலைஞர்

(17.9.1971 ஈரோடு தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் போது பாடிய கவிதை)

(தகவல்: ’முகநூல்’ அன்சாரி முஹம்மது)