சாதாரணமாக நான் ஈஸிசேரில் உட்காருவது கிடையாது.எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் இருக்கின்றதென்றாலும் ஈஸிசேர் (சாய்வு நாற்காலி) கிடையாது. இருந்தாலும் அதை உபயோகிப்பதில்லை. ஏனெனில் நான் முதலாவதாக உட்காரும்போது சாய்ந்துகொண்டு உட்காருவதில்லை. இவையெல்லாம் சுகவாசிகள் அனுபவிக்க வேண்டியவை. நான் அப்படி சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புபவனல்ல. மேலும் சீட்டில் உட்காரும்போது முழுச்சீட்டில் கூட இல்லாமல் பாதிஅளவு மட்டும் சீட்டில் முன்தள்ளி உட்காருவேன்.
மேலும் என் வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்ற போதிலும் பிரயாணகாலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவுபகலாய் பயணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண்விழித்துகொண்டுதான் செல்வேன்.
ஏதாவது இரவுநேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துகொள்ள பார்த்து கடைசியில் பெரிய ரகளை உண்டாகி சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால் அதிகம் தூங்க மாட்டேன். இப்படிப்பட்ட ரகளையின் காரணமாக நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம்.
இப்படி எனக்கு தூங்குவது என்ற பழக்கம்கூட வெறுப்பாகிவிட்டது.தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதில்லை. இப்படி சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக்கொண்டும் சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றி போய்விட்டது.
– தந்தை பெரியார்
(84ம் வயதில் -1962)