– சொ.சங்கரபாண்டி
திராவிடக் கருத்தியலின் அடிப்படைக் குறிக்கோள் சமூகநீதி. பெரியார் அதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய அனைத்து பகுத்தறிவற்ற வரைமுறைகளையும், அமைப்புகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் அறவழியில் அடித்து நொறுக்குமாறு பரப்புரை செய்தார். அதில் தமிழ்மொழி பற்றிய பகுத்தறிவற்ற வறட்டுக்கூச்சல்களும் உள்ளடங்கும். பல நேரங்களில் சிந்தனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவே அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரத்துடன் முன்வைத்தார்.
வெறுமனே தற்புகழ்ச்சியுடன் உதவாக்கரை கவிதைகளை எழுதிக்குவித்த கவிஞர்கள் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்பு என்ன? மாற்று மொழியினரின் வெறுப்பையும் சந்தேகத்தையுமே சம்பாதித்தது. அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று பெரியார் விருன்பினார். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதை அந்த அதிர்ச்சியூட்டும் உத்தியாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன்.
பகுத்தறிவற்ற குப்பைகள் மொழியைப் பற்றிப் போற்றுவதாயிருந்தாலும், சமூக நீதிக்கு எதிராகத்தான் பயன்படும். திராவிட இயக்கத்தாலும், பெரியாரின் இறுதிமூச்சுவரையிலான உழைப்பாலும் உயர்ந்த ஒரு சமுதாயம் இன்று தமிழ்மொழி அடிப்படைவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு திராவிட இயக்கத்தையும், பெரியாரையும் கொச்சைப்படுத்துவதால் இழப்பு பெரியாருக்கல்ல. (அவர் தன்னுடைய கருத்துகளை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாமென்றும் தன்னையும் தன் கருத்துகளையும் விமர்சியுங்களென்றும் பல இடங்களில் தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார்.)
தன் மீது வீசப்பட்ட செருப்பைக்கூட அவர் பயனுள்ளதாக ஏற்றுக்கொண்டார். அதனால் பெரியாரையும், திராவிடக் கருத்தியலையும் கேவலப்படுத்துமாறு தமிழ்தேசிய அடிப்படைவாதிகள் பேசினால் அவற்றை உதாசீனப்படுத்தி கடந்து செல்ல வேண்டும். கடவுளைப் போல் பெரியாரைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. பிறமாநிலங்களை ஒப்பிடும்பொழுது தமிழகம் அடைந்துள்ள சமூகநீதி ஒன்று போதும் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் புரிந்துகொள்ள.
(சொ.சங்கரபாண்டி அவர்கள் முகநூலில் தெரிவித்திருந்த கருத்துகளிலிருந்து…)