அரசியல் என்பது வெறும் வெற்றி தோல்விகளால் முடிவு செய்யப்படுகிற ஒரு புறப்பொருள் அல்ல, அது ஒரு உயிரியக்கக் கோட்பாடு, கட்சிகள், தலைவர்கள் இவற்றை எல்லாம் தாண்டி ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் இருந்தும் உருவாக்கப்படும் ஒரு வாழ்வியக்க ஆற்றல், தனக்குள் உருவகித்துக் கொண்ட பல்வேறு சிந்தனைகளின் கூட்டுத் தொகுப்பை உள்ளீடு செய்து சமூக இயக்கத்தோடு தனி மனிதர்கள் இணையும் ஒரு அளப்பரிய வெளி அது.
கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு மானுடனின் ஆழ்மனமும் இசைந்து உருவாக்கிய ஒரு இயக்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் முடிந்து விடும் என்று நான் நம்பவில்லை. அதிமுக வின் தலைமைக்கும், அதன் அரசியல் கோட்பாடுகளுக்கும் ஒரு எல்லை வகுத்துக் கொடுத்திருகிறார்கள் வாக்காளர்கள், சட்டமன்ற இயக்கங்களிலும், சட்டமியற்றும் நிலைப்பாடுகளிலும் ஏறத்தாழ சரிபாதியான ஒரு எதிர்க் கட்சியை அவர்கள் கடந்து வர வேண்டும்.
முன்னைப் போல முழு வீச்சில் தான்தோன்றித்தனமாக ஜெயாவால் இயங்க முடியாதபடி ஒரு வலிமையான எதிர்கட்சி வரிசையை எமது மக்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள், ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் தி.மு.க என்கிற சமூக இயக்கத்தின் வேர்களை மீண்டும் வலிமைப்படுத்தி, அதன் குறைகளைக் களைந்து கொண்டு மீண்டெழ ஒரு வாய்ப்பைக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கும் கணிசமான உறுப்பினர்களை வழங்கும் வாய்ப்பையும் தி.மு.க வுக்குக் கொடுத்து தேசிய அளவில் அந்தக் கட்சியின் முக்கியத்துவத்தையும் இந்தத் தேர்தல் மூலம் உயர்த்திக் கொடுத்திருக்கிறார்கள்.
மதச் சார்பும், பார்ப்பனீய உள்ளீடுகளும் நேர்த்தியாகச் செய்யப்படுகிற மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சிக்கும் கூட இந்த திராவிடக் கட்சிகளின் முழுமையான வெற்றி ஒரு வலிமையான “செக்”.
ஆக, எல்லா வகையிலும் இந்தத் தேர்தல் திமுகவைப் பொருத்தவரை நேர்மறையான நம்பிக்கைகளை வழங்கி இருக்கக் கூடிய தேர்தலே, வருத்தம் தரக்கூடிய சில நிகழ்வுகளாக சிலவற்றை இந்தத் தேர்தல் நமக்குச் சொல்கிறது, சட்டமன்றத்தில் முழுமையாக பங்களிப்பை இழந்திருக்கும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளின் தோல்வி உண்மையில் மக்களின் தோல்வியே, ஆனால், அது முழுக்க முழுக்க அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட தற்கொலை முயற்சி.
வை.கோ என்கிற பரிதாபமான பழி தீர்க்கும் வன்மம் கொண்ட ஒரு மனிதனின் மண்குதிரையை நம்பி அவர்கள் ஆற்றில் இறங்கிக் கரைந்து போனார்கள். விஜயகாந்தின் தோல்வி, பிரேமலதா என்கிற இன்னொரு பாசிசத் தலைமையை உருவாக்கும் ஆபத்தில் இருந்து எமது மக்களைக் காப்பாற்றி இருக்கிறது, விஜயகாந்தின் அரசியல் பேரங்களையும், கோட்பாடுகளற்ற அரசியல் இயக்கத்தையும் மக்கள் வலிமையான இரும்பு ஆப்படித்து காலி செய்திருக்கிறார்கள், தனித்துவமான தங்கள் அரசியல் உணர்வால் தேமுதிக என்கிற நச்சுப் பாம்புக்கு சமாதி கட்டி அனேகமாக அழித்து விட்டார்கள்.
கூடா நட்பு கேடாய் முடிந்ததைப் போல, அண்ணன் திருமாவளவன், வை.கோ என்கிற தனிப் பகை அரசியல் செய்யும் ஒரு அரசியல் தரகரிடம் வீழ்ந்து போயிருக்கிறார், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் என்கிற கனவைக் கூட நனவாக்க முடியாமல் அவரை இந்தமுறை அழித்தவர் வை.கோ என்கிற தரகர் மட்டும்தான், மருத்துவர் கிருஷ்ணசாமியின் தோல்வி பல்வேறு ஐயங்களைத் தோற்றுவிக்கும் தோல்வி மட்டுமன்றி, அவர் இன்னும் இணக்கமான அரசியலை ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இயக்கங்களோடு செய்ய வேண்டிய ஒரு அழுத்தத்தை அவர் சார்ந்த சமூகத்துக்கும் உருவாக்கி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதிக்க சாதி அரசியலுக்கும், அதீத ஆசைகளுக்கும் மீண்டும் ஒருமுறை மக்கள் ஆப்படித்துப் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், ஆனாலும், அவர்களின் தன்னம்பிக்கையையும், வாக்கு வங்கியையும் கொண்டு நேர்மறையான மாற்றங்களை நோக்கி அவர்கள் பயணித்தால் மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி மீண்டும் கலைக்கப்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்தொடு இணைந்து விடுவதற்க்கான எல்லா சாத்தியக் கூறுகளும் வரும் நாட்களில் உண்டு. பாரதீய ஜனதாக் கட்சியை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை பிணைத் தொகை இழந்த அவர்களின் தலைவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
இறுதியாக அண்ணன் சீமானின் கனவுகள் வெகுதொலைவில் விண்மீன்களுக்கு அப்பால் நிலை நிறுத்தப்பட்டது என்றாலும், அரசியலின் அரிச்சுவடியை இப்போது தான் படிக்கத் துவங்கி இருக்கும் அவரது பயணம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், ஈழம் எமது இதயத்தில் ஆறாமல் இருக்கும் வடு என்றாலும், அது மட்டுமே இங்கு அரசியல் இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியின் உடன்பிறப்புகள் விரைந்து உணர வேண்டும்.
ஆளுங்கட்சியின் வலிமையான பல தலைவர்களை எல்லாம் தங்கள் வாக்கு வலிமையால் விரட்டி அடித்திருக்கிறார்கள் எம்மக்கள், பல இடங்களில் எளிய மக்கள் பணியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள், தொடர்ந்து செய்யப்படும் அரசியல் பரப்புரைகளாலும், விழிப்புணர்வுப் பாடங்களாலும் தான் பணத்துக்காகவும், பல்வேறு உடனடித் தீர்வளிக்கும் புறக்காரணிகளுக்காகவும் வாக்களிக்கும் பாமர மக்களையும், அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையும் மாற்ற முடியும், கட்சிகளைத் தாண்டி, தலைவர்களைத் தாண்டி அப்படி ஒரு அரசியல் மயப்படுத்தலை நாம் தொடர்ந்து செய்வோம்.
இந்தத் தேர்தல் காலக் கொண்டாட்டங்களில் எனது அரசியல் நிலைப்பாடோ, சொற்களோ மாற்று அரசியல் இயக்கங்களில் இருக்கும் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அது தனி மனிதர்களுக்கு எதிரான வன்மமோ பகையோ அல்ல என்பதை உணருங்கள், அரசியல் ஒரு மேம்பட்ட சமூகத்துக்கான வழிமுறை, மாற்று வழிகளில் பயணித்தாலும் நமது ஒற்றை இலக்கு தமிழ்ச் சமூகத்தின் மேன்மை என்பதே இறுதியான உண்மை.
வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகும் அதிமுகவின் தலைவியும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்து, உங்களைத் திருத்திக் கொண்டு இன்னும் சிறப்பான மக்கள் பணியாற்ற முயற்சி செய்யுங்கள், தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அறவழியில் நின்று வரும் ஐந்தாண்டு காலமும் உங்கள் ஆட்சிக்கு உதவும் வகையில் அவர்களை நேர்மையோடும், முதிர்ச்சியோடும் அணுகுங்கள்.
இறுதியாக திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அழிக்க முடியாத சமூகப் பேரியக்கம் என்பதை மூதறிஞர் கலைஞர் மீண்டும் ஒருமுறை தனது கடின உழைப்பாலும், அரசியல் முதிர்ச்சியாலும் உணர்த்தி இருக்கும் மகிழ்ச்சியில் புதிய தலைமுறையின் அகப்பொருளாய் இந்த இயக்கத்தை மாற்றுவோம்.