ஜாதிப்பெயரில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படி தங்கள் ஜாதிப்பெயரை வெளிப்படுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தக்கூடாதா? பிராமணர்கள் மற்றும் பிராமணீயத்திற்கு எதிராக திராவிடர்கழகம் போன்ற அமைப்புகள் பேசுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என சிவகாசிப் பார்ப்பனர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள செய்தியை இன்றைய நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.
எந்த சாதிப்பெயரையும் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வந்ததால்தான் கடந்த திராவிட இயக்க ஆட்சிக்காலங்களில் பெரும்பாலான தெருக்களின் பெயர்களில் ஒட்டி இருந்த சாதி வால் நறுக்கப்பட்டது. தற்போதும் இந்த நிலை தனியார் நிறுவனங்களில் தொடர்வது விரும்பத்தக்கதல்ல என்பதோடு அகற்றப்படவேண்டியவை என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நாடார் மெஸ்சும், தேவர்ஸ் பிரியாணி கடையும், பிராமணாள் கபேயும் ஒன்றா?
தேவரும், நாடாரும், அய்யரும்,அய்யங்காரும் சாதிப்பெயர்கள்.பிராமணாள் என்பது சாதிப்பெயரா? வர்ணாசிரம தர்மப்படி இந்துக்கள் பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் வைசியனும், சத்திரியனும், மறைந்து பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வர்ணங்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. சூத்திரன் என்பவன் அடிமை . போரில் புறமுதுகிட்டு ஓடியவன். பிராமணர்களுக்கு சேவகம் செய்யக்கூடியவன். பிராமணர்களின் வைப்பாட்டி (தேவடியாள்) மக்கள். என்று மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே ஒருவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக்கொள்வானானால் மற்றவர்கள் சூத்திரர்கள் எனப் பொருள்பட்டுவிடும் என்பதாலேயே பிராமணாள் என்கிற சொல்லை எதிர்க்கிறோம்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார் அவர்கள் பிராமணாள் கபே பெயர்ப்பலகை அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார்கள். சென்னையில் இயங்கி வந்த பிராமணாள்(முரளி)கபே முன்பு நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள் இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நோக்கித்திரண்டனர். எங்கள் ஊர் மயிலாடுதுறை தோழர்களும் பலர் அதில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சென்னையில் தங்கவைக்கப்பட்டு தினசரி ஐம்பது தோழர்கள் புறப்பட்டு முரளிகபே வாயிலில் நின்று வாடிக்கையாளர்களிடம் தமிழர்களை இழிவுபடுத்தும் கடைக்கு செல்லவேண்டாம் எனக்கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.
கடைத்தொழிலாளர்கள் மூலம் கழகத்தோழர்களைத் தாக்கிய வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது. போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து கடையை நடத்தஇயலாத நிலையில் கடை உரிமையாளர் தந்தை பெரியார் அவர்களிடம் நேரில் வருத்தம் தெரிவித்து கடையின் பெயர்ப்பலகையை மாற்றினார். அதனைத்தொடர்ந்து அங்கங்கிருந்த ஒன்றிரண்டு பிராமணாள் பெயர்ப்பலகைகளும் காலப்போக்கில் மறைந்து போனது.
தற்போது 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரியம் கோலோச்சுகின்ற நிலையில் பார்ப்பணீயம் படமெடுத்தாடத் துவங்கியிருக்கிறது. ஆரியபவன்களும், உடுப்பி ஹோட்டல்களும் கூட நம்நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. தேவைப்படும்பொழுது அவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் நடைபெறுவது உண்டு. அது வேறு, பிராமணாள் கபே அழிப்பு என்பது இன இழிவு ஒழிப்பு!. மானஉணர்வுள்ள, சுயமரியாதை உள்ளம் கொண்ட எவனும் இதை சகித்துகொண்டிருக்க முடியாது. எதிர்த்துப் போராடவே செய்வான்.