Tag Archives: பெரியாரியல்

பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

கடந்த 2014 
மார்ச் மாத அகநாழிகை இதழில் மபொசியாரின் பேத்தி,
தி.பரமேஸ்வரி அவர்கள் பெரியாரைக் கொச்சைப்படுத்தி
எழுதிய ஒரு கட்டுரையை வெளியாகியுள்ளது.
    “அவர்காலத்தில் வாழ்ந்த மற்ற பெரியார்களெல்லாம் ஒதுக்கப்பட்டு,
ஈ.வெ.ரா பெரியார் என்னும் ஒருவருடைய அதிகபட்ச செயல்பாடுகளையும்
மீறிய ஒரு பெரும் பிம்பத்தை கட்டமைத்து, ஆதரவானதோர் அலையை
தொடர்ந்து உருவாக்கி வரும் ஒரு கூட்டத்தார், தங்கள் எண்ணங்களை
அந்த பிம்பத்தின் மீது ஏற்றித் தங்களை ஈடேற்றிகொள்கிறாரகளோ? என்று
தோன்றுமளவு ஈ.வெ.ரா பெரியார் பற்றிய மிகை பிம்பங்களைத்
தோற்றுவிக்கும் எழுத்துக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு படிக்கக் கிடைக்கிறது”
எனத் துவங்குகிறது அக்கட்டுரை!.
    சமகாலத் தலைவர்கள் என்று இவர் குறிப்பிடுவது யாரை?
அம்பேத்கரும், காந்தியும், சர்.ஏ.டி.பன்னீர் செல்வமும், கப்பலோட்டியத்தமிழன்
வ.உ.சியும் தான் அவரது சமகாலத்தலைவர்கள்! சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்,
கப்பலோட்டியத்தமிழன் வ.உ.சி போன்றவர்கள் பெரியாரை தனது தலைவராக
ஏற்றுகொண்டவர்கள் அல்லவா? தனது தோளுக்கிட்ட மாலையை பெரியாரின்
காலுக்கிடுகிறேன் என்று சொல்லி, மேடையில் இருந்த பெரியார்படத்திற்கு
இட்டு அவரை நீதிக்கட்சியின் தலைவராக்கி அழகுபார்த்தவர் அல்லவா
திரு.பன்னீர் செல்வம்?
    பெரியார் தன் 84வது பிறந்தநாள் மலரில் எழுதிய ஒரு கட்டுரையில்
தாசி என்ற சொல்லை பயன்படுத்தியதை கண்டுபிடித்த கட்டுரையாளர்
இப்படி பல இடங்களில் பெரியார் பேசிவந்ததாக குறிப்பிட்டு
“பெண்களின் நிலைகுறித்து தீவிரமாகச் சிந்திக்கக்கூடிய ஒரு மனிதர்,
பெண்களை இழிவாகக் குறிக்கும் சொல்லாடல்களை எப்படி ஒரு
கேள்வியுமின்றி மிக இயல்பாக தன் பேச்சுகளில் பயன்படுத்தியிருக்க
முடியும்? என்று கேட்கிறார்.
    பெரியார் வாழ்ந்த காலத்தில் தாசி என்கிற சொல்தானே புழக்கத்தில்
இருந்தது! அன்றைக்கு தேவதாசிமுறை ஒழிப்பு சட்டத்தை தமிழகத்திலே
கொண்டுவர காரணமாக விளங்கியவரே தந்தை பெரியார்தானே!
மூவலூர் மூதாட்டி இராமாமிர்தத்தம்மையார் கூட தாசிகளைப்பற்றி
தான் எழுதிய நூலுக்கு “தாசிகளின் மோசவலை” என்று தான் பெயரிட்டார்.
அந்த பெயரை பயன்படுத்தியதால் அம்மையார் அவரையும்
பெண்ணியத்திற்கு எதிரானவர் என பட்டியலிடுவாரோ?
      1962ல் வெளியான அதே பெரியார் பிறந்தநாள் மலரில், ம.பொ.சி யாரின்
கட்டுரை ஒன்றும் வெளிவந்திருக்கிறது.
    “பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மாற்றுக்கட்சியினராலும், போற்றிப்புகழத்தக்க
மான்புடையவர். கட்சி வேறுபாடு காரணமாக மட்டுமல்லாம்ல்,
கொள்கை வேறுபாடு காரணமாகவும், அவருக்கு நெடுந்தொலைவில்
உள்ளவன். எங்கள் இருவருக்கும் நடுவிலுள்ள இடைவெளி எளிதில் கடக்க
முடியாததாகும். ஆயினும் பொதுவாழ்க்கையில் அவர் கடைபிடித்துவரும்
நேர்மை, கொள்கையில் காட்டிவரும் உறுதியான மனப்பான்மை
காரணமாக அவரிடம் எனக்கு பெருமதிப்புண்டு” என குறிப்பிட்டிருந்ததை
பரமேஸ்வரி அறியவில்லையா?
    பெண்ணியம் குறித்த தெளிவான தொடர்ந்த சிந்தனை, வாசிப்பு
பெரியாரிடம் இல்லை என்கிறார் பரமேஸ்வரி!
    பெண்கள் மணவிலக்கு பெறவும், விதவைகளுக்கு மறுமண உரிமை
கோரியும் 1929 லேயே செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம்
இயற்றியவர் பெரியார்.
    பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்துரிமை, வாரிசுரிமை
ஆண்களைப்போலவே எந்தத் தொழிலையும் செய்வதற்கு சமஉரிமை,
பெண்களை சட்டசபைகளுக்கும், நகர சபைகளுக்கும் தேர்ந்தெடுத்தல்
போன்ற உயரிய தீர்மானங்களை நிறைவேற்றி அதற்காக களம்கண்டவர்
பெரியார்.
    பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் எந்திரமாக
நடத்தி அடிமைப்படுத்துவதை ஒழிக்க நினைத்த பெரியார்தான் பிள்ளை
பெறும் எந்திரமா பெண்கள்? என வினா எழுப்பி, பெண்களே! தேவைப்பட்டால்
கர்ப்பப்பையை அகற்றவும் தயாராகுங்கள் என்று எச்சரித்தார்.அதன்
தத்துவார்த்தத்தைக் கூட புரிந்துகொள்ளாதவர் கர்ப்பப்பைக்கு
மருத்துவவிளக்கமளிக்கிறார்!
    “சேரமாதேவி குருகுல விடுதியில் பிராமணர், பிராமணரல்லாதாருக்கு
இருந்த தீண்டாமையில் தீவிரம் காட்டிய பெரியார், கொடுமைகளில் நலிந்து
கொண்டிருக்கும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை” என யாரோ
எழுதியதாக சுட்டிக்காட்டி இதையே பெரியாரின் பெண்ணியத்துக்கும்
பொறுத்திப் பார்க்கலாம் என்று எழுதுகிறார்.
    பார்ப்பன ராஜாஜி கூட்டத்திற்கு கைத்தடியாக இருந்து தமிழினத்
துரோகியாக வலம் வந்த ம.பொ.சி பரம்பரையில் பிறந்து
பார்ப்பனர்களுக்காக பேனா பிடிக்கும் அடிவருடிகளுக்கு பெரியாரின்
சேரமாதேவி குருகுலப் போராட்டம் எரிச்சலைத் தருவதில் வியப்பில்லை.
    பெரியார் மணியம்மை திருமணம் பற்றி குறிப்பிடுகையில் ” 30 வயதுப்
பெண்ணின் உணர்வையும், மன நிலையையும் சற்றும் சிந்தியாமல் சேர்த்து
வைத்திருந்த பொருளே குறியாக(அதை அவர் இயக்கத்திற்காகவே
செய்திருப்பினும் கூட) பெண்ணுணர்வை ஒரு பொருட்டாகவே கருதாத
ஈ.வெ.ரா வை எப்படி பெண்ணிய சிந்தனைவாதியாக ஏற்றுகொள்ள முடியும்
எனக் கேட்டு அண்ணாவையும் துணைக்கு அழைத்திருக்கிறார்?
    பேரறிஞர் அண்ணா அவர்களே அதற்கு பதிலளித்து விட்டார். எனக்கு
இன்றைக்கு இருக்கும் உடல் உபாதைகளுக்கு மேலாக அன்று பெரியாருக்கு
இருந்தது. மணியம்மையார் போன்று ஒருவர் கிடைத்திராவிட்டால் பெரியார்
இத்தனை நாட்கள் வாழ்ந்திருக்க முடியாது என்று சொல்லி வருந்தினார்.
அன்னையார் மீது மிகவும் கரிசனப்பட்டு “பெண்ணுணர்வை ஒரு
பொருட்டாகவே கருதாத ஈ.வெ.ரா வை” என்று  எழுதியிருக்கும் சகோதரியாரே!
இந்தத் திருமணத்தைப்பற்றி அன்னை மணியம்மையார் என்றைக்கேனும்
வருந்தியதற்கான செய்தி உண்டா.மாறாக பொதுவாழ்கைக்காக தன்
வாழ்கையையே அழித்துக்கொண்ட மெழுகுவர்த்தி அல்லவா அவர்?
    ஈ.வெ.ரா வுக்கு பெரியார் பட்டம் எங்கு கொடுக்கப்பட்டது? யாரால்
கொடுக்கப்பட்டது? அப்படியான என்ன கருத்தாக்கங்களை அல்லது
நன்மைகளை அவர் பெண்களுக்கு செய்திருக்கிறார்?என்பது பற்றிய
தகவல்கள் ஏதும் இல்லை.என்கிறது கட்டுரை.
       13.11.1938 ல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா அவர்களுக்கு
“பெரியார்” என பட்டம் வழங்கிய செய்தி 1938 நவப்ர் 20ம் தேதியிட்ட குடியரசு
இதழில் வெளிவந்துள்ளது.
    “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத்தலைவர்கள், செய்ய
இயலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி
அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும்,
சமமாகவும்  நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும், அவர் பெயரைச்
சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப்
பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும்
கேட்டுக்கொள்கிறது.” என்கிற தீர்மானமும், கணவனை இழந்த பெண்களின்
துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பது
உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும்,
இறுதியில் தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப்பெண்கள் நிலைமையை
விரித்தும் தோழர் ஈ.வெ.ரா சொற்பொழிவாற்றினார் என்றும் குடியரசு
பதிவு செய்துள்ளது.
    இப்படி சரியான வரலாற்று ஆவனங்கள் இருக்கும்பொழுதே ஆதாரம்
ஏதும் இல்லை என முழு பூசனிக்காயை சோற்றில் மூடி மறைக்க
முயற்சித்திருக்கிறார் கட்டுரையாளர்!.
    பெரியார் இயக்கத்தின் கீழே ஒரு அறிஞனோ, எழுத்தாளனோ, கவிஞனோ
உண்டா? உள்ளவர்கள் எல்லாம் நாலாம்தர பேச்சாளர்கள்!.
ஐந்தாம் தர அரசியல்வாதிகள்! என நிதானமிழந்து பேனாவை
நகர்த்தியிருக்கிறார்.பாரதிதாசன் போன்றவர்கள் கூட இவர் கண்களுக்கு
தென்படாமல் போனது ஆச்சரியம்தான்
    அம்மையார் சொல்லும் ஜந்தாம்தர அரசியல்வாதிகளான அண்ணா,
கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரிடத்தில் பதவி சுகம் தேடி அலைந்தவர் யார்
என்பதை நாடு அறியும். ம.பொ.சியார் தன் தலைக்கு மேலே நாற்காலியைத்
தூக்கிக்கொண்டு “அண்ணா தம்பி வந்திருக்கேன்!” “அண்ணா தம்பி
வந்திருக்கேன்!” என இறைஞ்சுவது போல் தமிழக பத்திரிக்கைகள் போட்ட
கார்ட்டூன்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ம.பொ.சியார் மறைந்து
பல ஆண்டுகள் ஆகியும் அவரது துரோகம் மட்டும் தொடர்கதையாகிவிட்டது
– கி,தளபதிராஜ்

திராவிட மாயை(!?)

ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் கொடுக்கின்றன, கொடுக்கிறார்கள்.

தமிழில் இருந்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன் பிரிந்த தெலுங்காகட்டும், சில நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த கன்னடமாகட்டும், வெகு சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளமாகட்டும் அனைத்தும் தமிழ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரியர்களைப் பொறுத்தவரை சிந்து சமவெளி நிலப்பரப்பில் இருந்த கறுப்பர்கள் யாவரும் திராவிடர்களே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவர்களின் வருகையின் போது தமிழ் இப்போது உள்ள வடிவத்தில் இல்லையென்றாலும் அது பல மொழிகளாக பிரிந்திருக்கவில்லையென்றும், ஒரே மொழியாகத்தான் இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்திய இந்த ‘திராவிட’ எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில் இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் திராவிட என்பதற்கு சமஸ்கிருதத்தில் வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அதனால் திராவிட என்பது தமிழர்களைக் குறிக்க பிரத்யேகமாக ஆரியர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தையே ஆகும். நாம் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்பையும் ‘திராவிடர் நிலம்’ என்றே வழங்கினார்கள்.
(ஆதாரம்: ‘ரிக்வேத கால ஆரியர்கள்’ நூல். எழுதியவர்: ராகுல சாங்கிருத்தியாயன்)

திராவிட (தமிழ்) இனத்திற்கு எதிரானவர்கள், முக்கியமாக சமஸ்கிருதத்தை தங்கள் கடவுளர் மொழியாகக் கொண்டுள்ள இந்து மதவாதிகள் கூறும் இன்னொரு குற்றச்சாட்டு, கால்டுவெல் அடிப்படையில் ஒரு பாதிரியார் என்றும் அதனால் மதத்தை பரப்ப அவர் செய்த சதியே ஆரிய-திராவிட மொழிக்குடும்ப பிரிப்பு என்பதும் ஆகும்! சரி அப்படியே ஆகட்டும்! நாம் கால்டுவெல்லை கணக்கில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். ஆங்கிலேய அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ICS (Indian Civil Service) அதிகாரியாக, இராமநாதபுரம், சென்னை உட்பட்ட இடங்களின் ஆட்சியாளராக பல ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றியவர் எல்லிஸ். திராவிட மொழிகளை இனங்கண்டதில், திராவிட மொழிகளின் தனித்துவத்தை கண்டறிந்ததில் இவரது பணி போற்றத்தக்கது. (இவர் பிற்காலத்தில் தன் பெயரை தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற வண்ணம் எல்லிஸன் என மாற்றிக்கொண்டார்.)

1804ல் வில்லியம் காரே என்ற அறிஞர் தமது சமஸ்கிருத இலக்கண நூலில் இந்தியாவில் பேசப்பட்ட அனைத்து மொழிகளுக்குமே வேர்-மொழி சமஸ்கிருதம் என்ற கருத்தை முன்வைத்த போது அதற்கு எல்லிஸ் தலைமையில் இயங்கிய சென்னைக் கல்விச் சங்கக் குழு ஆதாரங்களுடன் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தது. பின் அக்கல்லூரியின் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த அலெக்ஸாண்டர் காம்பெலின் ‘தெலுங்கு மொழி இலக்கணம்’ என்னும் நூலுக்கான முன்னுரையில் திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றுள் தமிழுக்கான முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் எல்லிஸ். அதாவது கால்டுவெல்லுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே! கால்டுவெல் தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆராய்ச்சி நூல் மூலம் திராவிட மொழிக் குடும்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தாலுமே கூட, அவருக்கு பல ஆண்டுகள் முன்பே எல்லிஸ் அந்த பணிகளை துவங்கிவிட்டார். முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து தென்னிந்திய மொழிகள் முற்றிலும் வேறுபட்டவை என்று பறைசாற்றியவர் எல்லிஸ். தாமஸ் ட்ரவுட்மேன் என்ற மொழியியல் ஆராய்ச்சியாளர் தன் ‘திராவிடச் சான்று’ புத்தகத்தில் ஆதாரங்களுடன் இவற்றை எடுத்துவைத்திருக்கிறார். அதனால் எல்லிஸ் ஆரம்பித்த, செய்த பணிகளை முழுமைப்படுத்திய கால்டுவெல்லை பற்றிய மதம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை நாம் கருத்தில் கொள்ளவே தேவையில்லை.

அடுத்து, ஏன் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொள்வதில்லை என்று கேட்கப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லில் (superior or root language) வேர்மொழி தமிழ் தான் என்று அனைத்து ஆராய்ச்சிகளும், அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கும் போது ‘திராவிடம்’ என்ற சொல்லாடலை அவர்கள் பயன்படுத்தினால் தமிழர்க்கு கீழ் அவர்கள் என்ற தோற்றம் ஏற்படும் தானே! அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர் என்பதைப் போல! அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும் வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு. இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா? திராவிடம் எனச் சொல்வது அனைத்து திராவிட மொழிகளுக்கும் நம் மொழியான ‘தமிழ்’ தாயாக இருந்தது என்பதாகத் தான் அர்த்தப்படுமேயொழிய, நம் மொழிக்கு உயர்வுதானேயொழிய எந்த வகையிலும் சிறுமை இல்லை. திராவிடன், திராவிடம் என்ற சொற்பதங்களை நாம் புறக்கணித்தோமானால் நாளை இந்தப் பெருமையும், உண்மையும், நம் தொன்மையும் மறைக்கப்படலாம், மறந்து போகலாம், காணாமல் போகலாம்!

திராவிடம் என்பதற்கான இலக்கணம் இப்போது திரிந்து சீர்க் கெட்டுக் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்போது திராவிடம் என்பதை வெறும் அரசியல் கட்சிகளாக பலர் அடையாளம் காண்கின்றனர். திராவிடக் கட்சிகளைப் பிடிக்காதவர்கள் திராவிடக் கொள்கைகளை, திராவிட கருத்தாக்கத்தை பிடிக்காததது போல் நடந்துகொள்வது அறியாமையே! உதாரணத்திற்கு இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத் தலைவர்களை திட்டுவார்களா? தமிழ்த் தேசியக் கொள்கையை திட்டுவார்களா என்பதே என் ஐயம்!

மேலும் மதராஸ் மாகாணமாக இருந்தபோது திராவிட நாடு என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய திராவிட நிலப்பரப்பையும் குறிப்பதாய் இருந்தது. உறவுச் சிக்கல் ஏற்பட்டு உணர்வு ரீதியாக பிற மொழியினருடன் இயைந்து வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டு நிகழ்ந்த மாநிலப் பிரிவுக்குப் பின், பெரியார் காலத்திலேயே தமிழ்நாடு தமிழர்க்கே, திராவிடநாடு தமிழர்க்கே என்ற முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. விடுதலை நாளிதழிலேயும் அப்படியான முழக்கங்களே வெளிவந்தன.

இதையெல்லாம் திராவிட இயக்கங்கள் முன்வைத்த திராவிடநாடு என்பது தமிழ்நாடே என நிரூபிக்க மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம் ஒன்று உண்டு. இந்தியா முழுவதையும் சில பெரிய மாநிலங்களாகப் பிரித்தால் மாநிலங்கள் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற கருத்து மேற்குவங்காள முதல்வர் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டது. அதாவது தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றை ஒன்றாக தட்சிணப்பிரதேசம் என்ற மிகப்பெரிய மாநிலமாக அறிவிக்கலாம் என்றும் அதை தட்சிணப்பிரதேசம் என்றும் குறிப்பிடலாம் என்றும்! இதுகுறித்த தீர்மானம் 1956ல் அமிர்தசரஸீல் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேருவின் அமைச்சரவை இது குறித்து முதல்வர்களிடம் கருத்து கேட்டபோது காமராசர் முதலில் ஒப்புக்கொண்டார். பின் பெரியார் அவசரமாக காமராசருக்கு ஒரு தந்தி அடித்து இதற்கு ஒப்புக்கொண்டால் தமிழ்நாட்டில் தமிழர்களின் முக்கியத்துவம் குறைந்து, பிறமொழியினரின் ஆதிக்கம் வந்து எல்லா துறையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என அறிவுரை வழங்கினார். இதையேற்ற காமராசர் தன் ஒப்புதலில் பின்வாங்கினார். (அண்ணாவும் இந்த தட்சிணப்பிரதேச திட்டத்தை ஏற்கவில்லை) அதன்பின் பல முதல்வர்களுக்கு விருப்பமில்லாததால் நேருவால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதாவது இன்றைக்கு தமிழ்த் தேசியவாதிகள் தூற்றும் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், தான் விரும்பிய திராவிட நாட்டில், தான் முன்வைத்த திராவிட நாட்டில் உணர்வில் வேறுபட்ட மலையாளிகளையோ, கன்னடரையோ, தெலுங்கரையோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த திராவிட நாடானது தனித்தமிழ்நாடே என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

திராவிட இயக்கங்கள், கட்சிகள் வலுப்பெற்று இருக்கும் இந்த 50 ஆண்டுகளில் தமிழகம் ஏராளமாக வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதுயும், பிற வடமாநிலங்களை விட தொழிலிலும், உட்கட்டமைப்பிலும் பலபடிகள் முன்னே இருக்கிறது என்பதும் நிதர்சனம். இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

அதே நேரத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு பெரிய அளவில் இன்று இருக்கிறது. (அம்மொழிகள் தமிழ் பெரு அளவிலும், சமஸ்கிருதம் பின்னாளில் சிறு அளவில் கலந்து உருவான மொழிகள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) தமிழில் கூட சுமார் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பத்திரங்களாகட்டும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களாகட்டும் பெருமளவில் சமஸ்கிருதம் கலந்திருந்தது. படிப்படியாக அதை நீக்கி தமிழின் தனித்தன்மையை மீட்டெடுத்ததும் திராவிட இயக்கங்களே! (சிறு தகவல்: எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக்! இன்றும் அந்தப் பத்திரிக்கையில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லாத அளவிற்கு வடமொழி வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.)

தமிழ்த் தேசிய முழக்கம் திராவிடக் கொள்கைக்குள் அடங்குமேயொழிய அது தனியொரு கொள்கை ஆகாது! இன்று புதிதாய் முளைத்துள்ள சில தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக திராவிடக்கொள்கையை தமிழர்களுக்கு எதிரி போல் திரிக்கிறார்கள். தமிழை, தமிழுக்கு எதிரியாய் திரித்தல் எவ்வளவு ஆபத்தோ, அறிவீனமோ அதைப் போல, சாதிய அடக்குமுறைக்கு எதிராக திராவிட இயக்கங்களால் நிறுவப்பட்ட ‘திராவிடக் கொள்கை’ – அம்பேத்கர் சொன்னதைப் போல, என்.எஸ்.கிருஷ்ணன் பாடியதைப் போல – “கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும்.. பள்ளு பறையரோடு கள்ளர் மறவரென உள்ள பேதங்களை ஒழித்துக்கட்டும்” என்ற கொள்கை கொண்டதால் தற்கால சாதிய உணர்வோடு செயல்படும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவர்ப்பாக இருக்கிறது என்பதே உண்மை!

சமீபத்தில் முளைத்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சி – தனது கொள்கையாக – தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத யாரையும் தான் முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று பல மேடைகளில் அறிவித்திருக்கிறது. இதன்படி தமிழர்களின் அழிவிற்காக அயராமல் பாடுபடும் சுப்பிரமணிய ஸ்வாமியும், தமிழ் எழுத்து சீர் பெறுவதைக் கூட விரும்பாத சோவும் தமிழர்கள் ஆவார்கள்; தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆனால் காலம் காலமாக தமிழகத்தில் ரத்தம் சிந்தி உழைக்கும் தெலுங்கு பேசும் அருந்ததியர் போன்ற ஆதிதிராவிடர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள்! அவர்களை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இவர்கள் ‘திராவிடர்கள்’ என்று எதிர்ப்பது யாரைத் தெரிகிறதா? இதுபோன்ற கொள்கையுடைய போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள்; பெரியாரைத் திட்டுகிறார்கள்; அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள்; வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின் சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து “நீ யார்?” என்கிறார்கள்!

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சாதி-மத பேதமற்ற தமிழ்நாடு தமிழருக்கே என்பதே திராவிடக் கொள்கை. திராவிடம் என்பது என்ன எனப் புரிந்தால்தான் தமிழ்த் தேசியத்தின் உண்மையான முகம் புரியும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடக் கொள்கையேயொழிய புதியதொரு கொள்கை அல்ல! எதிரியை விட்டுவிட்டு சுயநலத்தின் பொருட்டு வளர்த்துவிட்டவர்களின் மார்பில் பாய்கிறவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சாதி மத பேதமற்ற தமிழ்ச் சமுதாயம் படைப்போம்.

-டான் அசோக்

நன்றி: கீற்று

’மானமும் அறிவும்’ – தெளிவற்றவர்களுக்கு ஒரு விளக்கம்!

பெரியார் சொன்ன “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்ற கருத்தை தோழர். பரிமளராசன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருந்தார்.

அதை கண்டு சகிக்க முடியாமல், தலைச்சிறந்த தத்துவ மேதையாக தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர் (கிருஷ்ணா தமிழ் டைகர்), // மானம் என்றெல்லாம் எதுவும் தனியா இல்லை தோழர்! மானம் என்று சொல்வதே ஒருவகை உளவியல் ரீதியான அறிவுதான். அறிவும், மானமும் வேறு வேறல்ல. பள்ளிகொடத்துல படிச்சு மனப்பாடம் செய்றத ஒரு வேள அறிவுன்னு எல்லாரும் நெனைக்கிறமாதிரி நெனச்சு மானம், அறிவுன்னு தனித்தனியா சொல்லிட்டாரோ? என்ன பகுத்தறிவோ போங்க! // என்று தனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிரேக்கத்தில் பிறந்திருந்தால் சாக்ரடீசை குறை சொல்லி தங்களை அறிவாளியாக காட்டிக்கொள்ள முயன்றிருப்பார்கள் சிலர். அவர்கள் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்து தொலைந்துவிட்டதால், தந்தை பெரியாரை குறை சொல்லுவதன் மூலமாக தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவரான இந்த மேதாவிக்கான எனது விளக்கம்:

இழி நிலையில் இருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பது அறியாமை!

இழி நிலையில் இருக்கிறோம் என்பதையும், எதனால் இழி நிலையில் இருக்கிறோம் என்பதையும் உணர்வதற்குத் தேவை அறிவு!

உணர்ந்த பின்பும் அந்த நிலையை சகித்துக்கொண்டு மாற்ற முயற்சிக்காமல் அப்படியே தொடர்வது மானமற்ற நிலை!

இழி நிலையை சகிக்க முடியாமல் அதை நீக்க போராடும் உணர்வே மானம்!

அறிவுள்ளவன் எல்லோரும் மானவுணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

எடுத்துக்காட்டு: நீ பிறப்பால் இழிவானவன், நீ கோவில் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று கேவலப்படுத்தினாலும், அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், கோவிலுக்கு வெளியே கைக்குப்பி நிற்பவர்களும், அப்படி நிற்பது சரி என்று வாதிடும் படித்த பட்டம் பெற்ற பார்ப்பன அடிவருடிகளும் அறிவிருந்தும் மானவுணர்வு இல்லாதவர்கள்.

IQ தான் EQ என்று வாதாடமுடியாது. EQ மற்றும் IQ இரண்டும் சேர்ந்து சரியான கலவையில் இருப்பதுதான் சரி.
அது போலத்தான் தந்தை பெரியார் “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்று சொல்லியுள்ளார்.

அறிவு இல்லாமல் மானவுணர்வு மட்டுமிருந்தால் அவன் வெறும் முரடனாக மட்டுமே அறியப்படுவான். மானவுணர்வு இல்லாமல் அறிவு மட்டுமிருந்தால், அவன் வெறும் கோழையாக மட்டுமே அறியப்படுவான். ஆகவே, மானமும் அறிவும் சேர்ந்து இருந்தால்தான் அழகு!

 

அன்னை-யார்?

காங்கிரசில் ஓட்டுப் பிச்சை கேட்பவர்களுக்கு வேண்டுமானால், திருமதி சோனியா அவர்கள் அன்னையாக இருக்கலாம்.

க்ரஹார தி.மு.க வான அ.தி.மு.க-வில் வேண்டுமானால், சுயமரியாதையும் தன்மானமும் இழந்த அடிமைகள் இருப்பதால், அதனையும்  அதன் கொள்கையையும்(!) ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்(!) இருப்பதால், செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘அம்மா’வாக இருக்கலாம்.

  

ஆன்மிக போதையில் சிக்கித் தவிக்கும், சிற்சிறு மாய எண்ணத்தில் முழ்கித் தவிக்கும் மானிடர் யார்க்கும் வேண்டுமானால் சாராதா தேவி அவர்களோ அமிர்தானந்தமயி அவர்களோ அன்னையாக இருக்கலாம்.

ண்மையில், சமுதாயத்தின் சமத்துவத்துக்கு பகுத்தறிவு வளர்ச்சிக்கு பெண் உரிமைக்கு வித்திட்ட அன்னை யார்?

சில காலங்களுக்கு முன்னர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள், தந்தை பெரியாரைப் பற்றி கூறிய ஒரு செய்தி மிக சுவாரசியமாகவும் – ஆகா ! இவ்வளவு சுய மறுப்பாளரா தந்தை பெரியார் எனும் பிரமிப்பே மேலோங்கச் செய்தது.

தந்தை பெரியார் அவர்கள், இந்து மதத்தில் உயர் ஜாதி என்று சொல்லக் கூடிய ஜாதியில் பிறந்தார்; ஆனாலும், காலம் முழுதும் ஒடுக்கபட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியின் முன்னேற்றதுக்கு உழைத்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள், செல்வமும் சொத்தும் நிறைந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார்.  ஆனாலும், காலம் முழுதும் ஏழைகளுக்காகவே பாடுபட்டார். தன்  சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கே செலவு செய்தார்கள்.

தந்தை பெரியார் அவர்களை, கன்னடர் என்றும் தெலுங்கர் என்றும் கொச்சைப் படுத்தினார்கள். ஆனாலும், வாழ்நாள் முழுதும் அந்தக் கொச்சைப்  படுத்தலைப் புறந்தள்ளி, தமிழர்-தமிழ்நாடு முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள்.

என்ன! தந்தை பெரியார் அழகு தமிழில் அடுக்கு மொழியில் பேசத் தெரியாதவர்; கொச்சைத் தமிழில் நடைமுறையில் நடப்பவற்றை உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே கூறுவார்கள். ஆனாலும், அந்த கொச்சைத் தமிழ்தான் தமிழரைத் தன்மானம் பெற வைத்தது.

தந்தை பெரியார் ஆணாகப் பிறந்தார்; ஆனாலும் காலம் முழுதும் பெண்ணின் உரிமைக்காக ஓடி ஓடி உழைத்து கொட்டித் தீர்த்தார்கள்.

பாரதியார் கூட பெண் உரிமைக்காக வெறுமே பாடினார். தந்தை பெரியார் அவர்களோ பெண் விடுதலைக்காக, பெண் உரிமைக்காக கிராமம் கிராமமாக காலில்  சக்கரம் கட்டிக் கொண்டு ஓடினார்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கராக இருந்து ஈ.வெ.ராமசாமி ஆன நம் தலைவருக்குத்தான், பெண்கள் மாநாடு  கூட்டி  “பெரியார்” என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

இப்படித்தான் தந்தை பெரியார் அவர்கள், உயர் ஜாதி என்று சொல்லப் படுவதான, பணக்காரன் என்கிற, பிற மொழிக்காரர் என்கிற, ஆண் என்கிற அனைத்து தளத்திலுமே ஒரு சுய மறுப்பாளராக இருந்திருக்கிறார்கள் !

ன்னே ஓர் ஆச்சரியம் ! இப்படிப் பட்ட ஒரு சுய மறுப்பளரை இந்த உலகம் கண்டதுண்டா ? சற்றே சிந்தித்துப் பாருங்கள் !

இன்னும் கூற வேண்டுமானால், காங்கிரசில் சேர்ந்து நம் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று தான் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும்  தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார்கள். அடடா! இதுவன்றோ பதவி மறுப்பு ! இன்றைக்கோ, பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் என்றாலும், பல்லிளித்துக் கொண்டு தாஜா செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் !

மதராஸ் ராஜதானியை ஆட்சி செய்யும் பெரும் பதவி இரண்டு முறை பெரியாரை நோக்கி வந்தது. வந்த பதவி பூமராங் போல திரும்பிச் சென்றது. இரண்டு முறையும் அந்தப் பதவியை துச்சமென மதித்து ஏற்க மறுத்தார்கள்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள் !

இவற்றையெல்லாம் கேட்டு மலைப்பாய் இருக்கிறதா ?!

பொறுங்கள் ! இன்னும் இருக்கிறது !

இவ்வளவு சுய மறுப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் ஒரு சுய மறுப்பு இருக்கிறது ! அந்த சுய மறுப்புதான் உலக இயற்கையின் கடும் சவால். அந்த சுயமறுப்பை வாழ்ந்த தியாகச்  செம்மல்கள் யார் தெரியுமா ?!

இது ஏதடா, இதுவரையில் தந்தை பெரியாரைப் பற்றி பேசிவிட்டு, இப்போது “செம்மல்கள்” என்று பன்மையில் கூறுகிறானே என்று எண்ணுகிறீர்களா ?!

அந்த தியாகச் செம்மல்கள் யாவர் தெரியுமா? அவர்கள்தான் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் !

நம்மவர்களில் பலருக்கும் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை; வழக்கம் போல பார்ப்பனப் பத்திரிகைகள் வரலாற்றை மறைக்கக் கூடும்; திரித்திருகக் கூடும்.1989-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம்தான் நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை பெறச் செய்தது. இன்றைய நம் பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. இதுவே 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சட்டப்படி உரிமை இல்லை! இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படிப்பட்ட நிலை என்றால், பெரியார் காலத்தில் கேட்கவா வேண்டும் ?

ன்றைக்கும் எண்ணிப் பார்த்தால், நம் பாட்டிகளுக்கு, அவர்கள் பிறந்த ஊரில் சொத்து இருக்குமோ என்னவோ தெரியாது; ஆனாலும், வசதி வாய்ப்புக்கு ஏற்ப நம் பாட்டிகளின் புகுந்த ஊரில், தாத்தா வழி வந்த சொத்துக்கள் இருகக்கூடும்.

இப்படி இருந்த ஒரு காலக் கட்டத்தில், திராவிடர் கழகத்தின் சொத்தையும், தந்தை பெரியாரின் கொள்கையையும் பாதுகாக்க  தந்தை பெரியார் எடுத்த சட்டப்படியான நடைமுறை நடவடிக்கையே ‘அன்னை மணியம்மையார்’

இன்றும் கூட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் விசா காரணங்களுக்காக சட்டப்படியான திருமணப் பதிவை முன் கூட்டியே ரிஜிஸ்டர் செய்வது வழக்கம். பின்னொரு நாளில் சமுதாயத்துக்கு அறிவிக்கும் திருமண நாள் என்பது நடைமுறை வாடிக்கை !

“ஏனப்பா? இப்படி செய்கிறீர்களே ?! இப்படி செய்யலாமா ?! இது வைதிகத்திற்கும் வேதத்திற்கும் சாஸ்திரத்திற்கும் எதிரானது என்று யாராவது எள்ளலுடன் துள்ளலுடன் கேள்வி கேட்ககே கூடாது ! மூச் !”

“அது வசதிக்காக செய்து கொள்வது. இப்பல்லாம் யார் சாஸ்திர சம்பிரதாயம் பார்க்கிறார்” என்று கூறுவார்கள்.

அப்படிக் கூறுபவர்களைக் கண்டால் உள்ளத்துள் மகிழ்ச்சி. ஏன் என்றால் ? நாம் வெளிப்படையாய் இந்து மதத்தை விட்டு  தள்ளி இருந்து முற்போக்காய் நடக்கிறோம்; அதாவது முழுவதும் பகுத்தறிவு ஆற்றில் இருக்கிறோம். அவர்களோ, இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே முற்போக்காய் இருக்கிறார்கள். இந்து மதத்துக்குள் இருந்து கொண்டே சாஸ்திர எதிர்ப்பை செய்கிறார்கள்; அதாவது சாஸ்திர வேத சேற்றில் ஒரு காலும் பகுத்தறிவு ஆற்றில் ஒரு காலும் வைக்கிறார்கள்.

நல்லது ! எப்படியோ முற்போக்கடைந்தால் நல்லதுதான் !

ந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரை சட்ட வசதிக்காகத்தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

தன் அசதிக்காகவோ தன் வசதிக்காகவோ அல்ல;

தமிழ் இனம் தன்மானம் அடைய வேண்டும் எனும் சமுதாய வசதிக்காக !

இப்போது புரிகிறதா? தந்தை பெரியாரின் சுய மறுப்பின் மகுடம் எது என்று?

இல்லறத்தில் இருந்து துறவியாய் வாழ்ந்த இந்த இரு தியாக செம்மல்களைத்தான் பார்ப்பன ஏடு ( குமுதம் ரிப்போர்ட்டர்) பாம்பெடுத்து படம் ஆடி இருக்கிறது.

தந்தை பெரியார் அன்னை மணியம்மையாரை சட்டப்படி திருமணம் செய்தவுடன், ஏசினோர் ஏராளம்; பேசினோர் பற்பலர்!

கால ஓட்டத்தில் தந்தை பெரியாரின் கணிப்பே மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது.

அன்று ஏசினோர், பின்னர் அன்னையை ஏற்றுக் கொண்டார்கள்.

அன்று புறம் பேசினோர், பின்னர் அன்னையை போற்றச் செய்தார்கள்.

தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.

அவற்றையெல்லாம் அடுக்கினால் இந்தக் கடுரையின் நீளம் இன்னும் நீளும்!

முத்தாய்ப்பாக ஒன்றை சொன்னால்

ஆரியக் கூட்டம் நடு நடுங்கும்!

பார்ப்பனக் கூட்டம் பதை பதைக்கும்!

சூழ்ச்சி நரிகள் சற்றே நெளியும்!

அதுதான் இராவண லீலா !

இராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்பது.

கதையின் படியே, கோழையான, மறைந்திருந்து தாக்கும், பெண்களைக் கொன்ற ( தடாகை, சூர்ப்பனகை ), தேவர்கள் செய்யும் அராஜக உயிர்க் கொலை யாகங்களைப் பாதுகாத்த, பூதேவர்கள் எனும் பார்ப்பனர்களைத்  தவிர சூத்திரன் அறிவுப் பெறக் கூடாது என்று சம்பூகனைக் கொன்ற இராமனுக்கு இராம லீலா இருக்கும் போது,

வீரனான, தேவர்கள் செய்யும் உயிர்க் கொலைகளைக் கண்டித்து அது தவறு நடக்கக் கூடாது என்று தடுத்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உயரிய  உயிர் நேயம் மிக்க; அறிவில் ஆற்றலில் சிறந்த,  தன் குடும்பப் பெண்களைக்  ( தடாகை, சூர்ப்பனகை ) கொன்ற  இராமனை பழி வாங்க, இராமனின் மனைவியை கொணர்ந்தும் கடைசி வரை சீதையைப் பாதுகாத்த இராவணனுக்கு   இராவண லீலா இருக்கக் கூடாதா ?

இப்படி, இராவண லீலா கொண்டாடுவது சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றததிலும் உத்தரவு வாங்கியவர்கள் யார் தெரியுமா ?

அவர்கள் தான், திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார் !

இப்போது தெரிகிறதா அன்னை யார் என்று ?

ஆம்! அன்னை மணியம்மையார் அவர்கள்தான் !

திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!

– சொ.சங்கரபாண்டி

திராவிடக் கருத்தியலின் அடிப்படைக் குறிக்கோள் சமூகநீதி. பெரியார் அதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய அனைத்து பகுத்தறிவற்ற வரைமுறைகளையும், அமைப்புகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் அறவழியில் அடித்து நொறுக்குமாறு பரப்புரை செய்தார். அதில் தமிழ்மொழி பற்றிய பகுத்தறிவற்ற வறட்டுக்கூச்சல்களும் உள்ளடங்கும். பல நேரங்களில் சிந்தனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவே அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரத்துடன் முன்வைத்தார்.

வெறுமனே தற்புகழ்ச்சியுடன் உதவாக்கரை கவிதைகளை எழுதிக்குவித்த கவிஞர்கள் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்பு என்ன? மாற்று மொழியினரின் வெறுப்பையும் சந்தேகத்தையுமே சம்பாதித்தது. அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று பெரியார் விருன்பினார். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதை அந்த அதிர்ச்சியூட்டும் உத்தியாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன்.

ஓவியம்: மணிவர்மா

பகுத்தறிவற்ற குப்பைகள் மொழியைப் பற்றிப் போற்றுவதாயிருந்தாலும், சமூக நீதிக்கு எதிராகத்தான் பயன்படும். திராவிட இயக்கத்தாலும், பெரியாரின் இறுதிமூச்சுவரையிலான உழைப்பாலும் உயர்ந்த ஒரு சமுதாயம் இன்று தமிழ்மொழி அடிப்படைவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு திராவிட இயக்கத்தையும், பெரியாரையும் கொச்சைப்படுத்துவதால் இழப்பு பெரியாருக்கல்ல. (அவர் தன்னுடைய கருத்துகளை முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாமென்றும் தன்னையும் தன் கருத்துகளையும் விமர்சியுங்களென்றும் பல இடங்களில் தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார்.)

தன் மீது வீசப்பட்ட செருப்பைக்கூட அவர் பயனுள்ளதாக ஏற்றுக்கொண்டார். அதனால் பெரியாரையும், திராவிடக் கருத்தியலையும் கேவலப்படுத்துமாறு தமிழ்தேசிய அடிப்படைவாதிகள் பேசினால் அவற்றை உதாசீனப்படுத்தி கடந்து செல்ல வேண்டும். கடவுளைப் போல் பெரியாரைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. பிறமாநிலங்களை ஒப்பிடும்பொழுது தமிழகம் அடைந்துள்ள சமூகநீதி ஒன்று போதும் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் புரிந்துகொள்ள.

(சொ.சங்கரபாண்டி அவர்கள் முகநூலில் தெரிவித்திருந்த கருத்துகளிலிருந்து…)

சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது.பெரியாரை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தமிழகஅரசியல்களத்தில் புதியதாக அரசியல் பண்ண புறப்பட்டிருக்கும் இந்த கொள்கை சீமான்கள் திராவிட இயக்கத்தையும்-பெரியாரையும்கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறனர்.

நாம் தமிழர் ஆவணம்

நாம் தமிழர் ஆவணம்

திராவிடம் என்ற ஒரு இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும் புதுக்கரடி விட்டிருக்கின்றனர்! தமிழையும் தமிழினத்தையும் திராவிட இனம் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறுகிறனர். இந்தியாவில் எந்த இனத்திலும், இல்லாத அளவில் மொழியுணர்ச்சியும், தனி- ஈழம் – தமிழ்நாடு கோரிக்கைகளும் மேலோங்கி இருக்கும் தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தமிழர் உணர்ச்சியை மழுங்கடித்து விட்டதாக கூறுவது உண்மையா? பெரியார் மொழியிலேயே அவர்களுக்கு விடை காண்போம்.

தமிழக அறிவையும், தன்மானத்தையும் மீட்டெடுப்பதாக முழங்கிக்கொண்டு தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை என்று திராவிட இயக்கத்தினர் பகுத்தறிவு பரப்புரையும் தன்மான பரப்புரையும் செய்தனர் என்கிறது ஆவணம்.

தமிழை பள்ளிகளில் கட்டாய பாடமாக்க வேண்டுமென்று குடிஅரசு ஏட்டில் 4-9-1938 லேயே கட்டுரை தீட்டப்பட்டிருக்கிறது.

”ஏ! சட்ட சபை தமிழா! நீ சர்வ முட்டாள் அல்ல! தாய்நாட்டுக்கு துரோகம் செய்யும் தருதலையும் அல்ல! தாய் மொழியை கட்டாயமாக்க கூடாது என்று கருதி திரியும் சண்டாளனுமல்ல!

நீ தமிழன். உன் தந்தை தமிழன். உன் தாய் தமிழ் மகள். உற்றார் தமிழர் உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீர தமிழர் குருதி.

கட்டாய இந்தியால் உன் தமிழ் நாலாவகையிலும் நசுக்கப்படுகிறது. மொழிப் பாடங்களை மட்டும் தமிழில் கற்றால் தமிழ் விருத்தியாகிவிடும் என்று கருதி மயங்காதே! உன் தாயை உன் தமிழை இம்சிக்காமல் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று தீர்மானிப்பாயாக! இல்லையானால், தமிழை கட்டாயமாக்க வேண்டும் என்று முயலாமல் இருந்தாயானல், உன் நாட்டு மொழிக்கு துரோகியாவாய். உன் நாட்டின் கலைக்கு விரோதியாவாய்.

நீ மானமுள்ள தமிழனானால், உன் பெற்றோரின் தமிழ் இரத்தம் உன் உடலில் நரம்பில் தோந்திருக்குமானால் இன்றே ஏன் இப்பொழுதே எங்கள் நாட்டில் எங்கள் தாய் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக.உங்கள் தமிழை கட்டாயாமாக்க முயசி செய்யாமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா? நீங்கள் தன் உணர்ச்சி இல்லாத விலங்குகளா? தாய் மொழியில் அபிமானம் இல்லாத தசைபிண்டங்களா?.

தேசத்தின் பெயரையோ, சமுகத்தின் பெயரையோ சொல்லி சிறைச்சென்றவர் எல்லா நாட்டிலும் உண்டு. நீ விரும்பும் இந்தி பேசும் நாட்டிலும் உண்டு. தான் பேசும் மொழி குறித்து சிறை புகுந்த தீரம் தமிழனுக்கு உண்டு. தன் மொழிக்காக சிறை புகுந்தான்! புகுகிறான்! புகுவான்! தடியடிப்பட்டான்! படுகிறான்! படுவான்! சகல துன்பங்களையும் அனுபவிப்பான் பேசும் தமிழை தாய் மொழியாக உடைய நீ, தாய் மொழியை கட்டாயமாக்க கூடாது என முயலும் துரோகியாக போகிறாயா? போவாயானால் ஏ! துரோகி உன் சட்ட சபை வாழ்விற்கு சாவு மணி அடிக்கப்பட்டதென்று எண்ணிக்கொள்” என்று குறிப்பிடும் பெரியாரை தமிழை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை என்று பகுத்தறிவு பரப்புரை செய்ததாக கூறுகின்றனர்.

தமிழரை தொடர்ந்துஅடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ் திராவிடநாடு முழக்கத்தை திராவிட இயக்கம் முன்னெடுத்ததாக நாம் தமிழர் கட்சி ஆவணம் கூறுகிறது.

எனக்கு ஏன் திராவிட நாடு வேண்டாம் என்று தந்தை பெரியார் அவர்கள் தனது 84-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் தனித்தமிநாடு கோரிக்கையை வலியுறுத்தி எழுதியுள்ள கட்டுரையை படியுங்கள்.

“1938-ம் ஆண்டு நான், ராஜாஜி ஆட்சிக்கொடுமையை கண்டு சென்னை ராஜதானி என்று பெயர் கொண்டிருந்த திராவிடநாடு தனி நாடாக ஆக வேண்டும் என்று கேட்டு திட்டம்போட்டு கிளர்ச்சி செய்து வந்தேன். அன்று பார்ப்பனர் தவிர்த்து யாரும் அதை எதிர்க்கவில்லை. அப்போது திராவிட நாடு என்பது ஆந்திரர், கன்னடம், மலையாளம் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு சிறு பாகமே தமிழ்நாட்டுடன் சேர்ந்து திராவிட நாடாக இருந்தது. தமிநாட்டு மக்கள் தொகை இரண்டு கோடியே எண்பத்தைந்து இலட்சம் மற்ற முன்றும் சேர்ந்து இரண்டு கோடியே எழுபத்தைந்து இலட்சம் தான். ஆகவே தமிழ்நாட்டு மக்கள் தொகை மேற்கண்ட முன்று நாடுகளை விட அதிகமாக இருந்தது. அரசியல் சமுதாய பொருளாதார நிலையில் இந்த நாடுகள் தமிநாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது என்பதோடு நம் கை வலுத்தாகவும் இருந்தது.

ஆனால் இன்று தமிழ்நாடு மக்கள்தொகை முன்று கோடிக்கு கீழ்ப்பட்டதாகவும் அவை முன்றும் சேர்ந்து சற்றேரக்குறைய எட்டுக்கோடி மக்களாகவும் இருக்கிறார்கள். நாம் அதில் பகுதிக்கு கூட அருகதையற்றவர்களாக இருக்கிறோம். உலகில் பிரிவினைக்காரன் எவனும் பிரிந்த பின் விருப்பப்படி ஆட்சி அமைக்க, பதவி பெற வசதியாக யாருக்கும் மைனாரிட்டியாக இல்லாமல் சுய பலத்தோடு இருக்க என்னுவானா. மைனாரிட்டியாக இருக்க என்னுவானா? எனவே தான் திராவிட நாடு வேண்டாம் என்று சொல்லுகிறோம்.

சட்ட சபையில் நாம் 206 பேர் அவர்கள் 429 பேர் கூடுதலாக 635 பேர் இருக்கிறார்கள். பார்லிமென்ட்டில் நாம் 41 பேர் அவர்கள் 46 பேர் அதிகப்படியாக 87 பேர் இருக்கிறார்கள். திராவிட நாடு பிரிந்தால் நமது குறைகளை பங்குகளை யாரிடம் கேட்பது? எதற்கு பிரிவினை கேட்கிறோம்? இன்று நாம் மைனாரிட்டியாக இருந்து மற்றவர்கள் மெஜாரட்டி ஆட்சிப்படி நடக்க வேண்டி இருக்கிறது. பிரிந்தால் நமக்கு நாமே எஜமான். வேறு யாரும் கூடாது. நாம் யாருக்கும் அடிமையல்ல. என்கிற நிலை பெறவே பிரிவினை கேட்கிறோம். பிரிவினையால் பலன் அனுபவிக்க வேண்டுமானால் திராவிட நாடு கேட்பது புத்திசாலித்தனமா? தமிழ்நாடு கேட்பது புத்திசாலித்தனமா? என்பதை பற்றி இப்போது யோசித்துப்பாருங்கள்.”என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

இந்த வகையில் பெரியாரைப்பற்றி விமர்சிக்க இந்த காளான்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. நாம் தமிழர் கட்சி தனது கொள்கை ஆவணத்தில் கலைச்சொல் விளக்கம் என்ற பெயரில் பார்ப்பான் என்றால் ஆய்வாளன், இளைஞன்”. என்றும் ஆரியர் என்றால் ”சீரியன், உயர்ந்தவன்” என்றும் பிராமனன் என்றால் ”பேரமணன்” என்றும் கூறி பார்ப்பனர்களை மகிழ்விக்க துடிக்கிறது. ஆரியர் வருகை – மனுநெறியர் போன்ற மரியாதைக்குரிய சொல்லாடல்களையே பார்ப்பனர்களை குறிக்கும் இடத்திலெலாம் கையாண்டு இருக்கும் இந்த கூட்டம் பார்ப்பனர்களின் கைக்கூலிகளே என்பது தமிழர்களுக்கு விளங்காமல் போகாது.

நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் தங்கள் வழிகாட்டியாகவும், தமிழ்அறிஞர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அறிஞர்கள் பெரியாரைப்பற்றி கூறிய கருத்துக்கள் இதோ!

மறைமலைஅடிகள்: சாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக்கொகையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனை பகைத்தும் எனக்கு தீது செய்தவர்கள் சைவறிர் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.
பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொகையையே மேலுந்தட்பமாக எடுத்துவிளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைப்பாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர்.

தேவநேயப்பாவாணர்: எல்லா துறைகளிலும், பிராமணீயத்தை வெளிப்படையாகவும் உண்மையாகவும் எதிர்த்து தமிழரை தன்மானமும், பகுத்தறிவும் உள்ள மக்களாக வாழவைத்த செயல் ஏனைய எவரும் செயற்கறிய செயலாதலின் பெரியார் உண்மையில் பெரியாரே.

சோமசுந்தர பாரதியார்: பெரியார் ராமசாமி அவர்கள் திராவிடருக்குப் பொதுவாயும், தமிழருக்கு சிறப்பாயும் உரிமையும், பெருமையும் உண்டுபண்ண உழைக்கும் பெருந்தலைவர். தற்கால தமிழகத்தில் தலைநின்று ஒல்லும்வகையில், ஓயாது உழைத்து, தமிழர் வாழ்வுயர் வளம் சிறக்க, உரிமைப்போர்த் தலையணியில், பொருது வரும் ஒப்புயர்வற்ற தலைவர். தம் வாழ்வனைத்தும் தமிழர் உரிமை பேனும் அறப்போருக்கு உதவி, நல்லோர் மதிக்கும் அல்லோர் அழுக்காறும் நாளும் பெருக்கும் இயபுடையவர்.

கா.அப்பாதுரையார் : தமிழர் உண்மையிலேயே தமிழராய் தனித்தமிழராய் உலகில் பிறருடன் ஒப்புரிமைக்கொள்ள துணிவர்! தன்னாட்சி புரிவர்! அறிவாட்சியில் அன்புக்கலையாட்சியில் முனைவர்! என்பதகு பெரியார் வாக்கையின் வெற்றி ஓர் அறிய வழிக்காட்டியும் நற்குறியுமாகும்.

கி.ஆ.பெ.விசுவநாதம்: இந்நாட்டில் தோன்றி மறைந்தும் தோன்றி இருப்பதும், இனி தோறுவதுமாகிய எத்தகைய இயக்கமும் செய்திராத செய்யமுடியாத சீர்திருத்தச்செயல்களை இந்நாட்டில் சுயமரியாதை இயக்கம் செய்து காட்டிவிட்டது. எவராலும் நினைக்கவே முடியாத இவ்வியக்கத்தை தோற்றுவித்து நடத்தி வெற்றி அடைந்த பெரியார் அவர்கட்கு நாடும் இம்மாகானமும், இத்தேசமும் மட்டுமல்ல உலகமே ஒன்று சேர்ந்து நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது.

இலக்குவனார்: பெரியார் தலைமையில் நமது நாடு திராவிட நல்திருநாடு விடுதலை பெற்று உலக அரங்கில் உயர் பெருமை அடைவது உறுதி.

புலவர் குழந்தை: பெரியார் பிறவாதிருப்பரேல் தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ்நாகரிகம் எனும் உணர்ச்சியெலாம் தமிழ்மக்களுக்கு தோன்றியிரா. தமிழ் வாழ்க என முழக்கம் இடும் நெஞ்சத்துணிவுட ஒரு காலும் உண்டாகியிருக்காது. பெரியார் பிறந்ததால் தமிழருக்கு உண்டான நன்மைகள் அளவிறந்தன. அவற்றையெலாம் கூறப்புகின் அது தனி நூலாகிவிடும். 1920 தமிநாடு இருந்த நிலையும் இன்றுள்ள (1948) நிலையும் ஒத்திட்டு பார்த்தால் பெரியார் பிறந்ததினால் தமிழ்நாடு அடைந்த பயன் முழுதும் விளங்கும்.

வ்வளவு நன்மைகள் செய்த பெரியாருக்கு தமிழர்கள் செய்யும் கைமாறு என்ன? தமிழர் உரிமை காக்க புதிதாக புறப்பட்டிருக்கும் சீமான்களே! உங்கள் வழிகாட்டிகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்