Category Archives: சமூகநீதி

தோல்வி அல்ல இது

தோல்வி அல்ல இது, உயிர்ப்போடும், கொண்ட கொள்கைகளோடும் பீனிக்ஸ் பறவையாகத் தான் எழுந்து வந்திருக்கிறோம், அதிமுகவுக்கு ஒரே எதிரிதான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பல எதிரிகள்.

அதிகாரப் பசியும், துரோக வரலாறும் கொண்ட சகுனிகள் மறைமுகமாக பாசிச ஜெயாவுக்கு முட்டுக் கொடுத்த வாக்குச் சிதறல், மதவாத முகமான ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எல்லா இடத்திலும் ஒரு நாற்காலியைப் போட்டு வளர்க்கும் முதலாளித்துவ ஊடகங்கள், சாதிய ஆற்றல்களை ஒன்றிணைத்து சமூகத்தைப் பிளவு செய்த ஒற்றைச் சாதி ஆதிக்க ஆற்றல்கள்.

அடக்குமுறையை நிர்வாகத் திறன் என்று பறைசாற்றிய அடிமை அரச அலுவலர் கூட்டம், ஊழலில் திளைத்த பணம், நடுநிலை என்கிற பெயரில் திமுகவுக்கு எதிராக எப்போதும் ஒப்பாரி வைக்கும் பார்ப்பனீய வன்மம் கொண்ட கும்பல் என்று திசையெங்கும் பரப்பப்பட்ட அவதூறுகளையும், தடைகளையும் தாண்டியே 100 சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்ற எம்மக்கள் எங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

சமூக நீதியின் மீது அளவற்ற பற்றுதலும், நல்லிணக்கமும், நம்பிக்கையும், அரசியல் அறிவாற்றலும் கொண்ட மிகப்பெரிய ஒரு இளைஞர் படை தி.மு.கவில் வளர்ந்து வருவதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாக நமக்குச் சொல்கிறது. ஏறத்தாழ 110 சட்ட மன்ற உறுப்பினர்கள் தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கையை வென்று காட்டியிருப்பதை மிகப்பெரிய தோல்வியைப் போலச் சித்தரிப்பார்கள், அழிந்தோம், காணமல் போனோம் என்றெல்லாம் இன்னும் சில நாட்களுக்குப் பேசுவார்கள்.

உண்மையில், இத்தனை எதிர்களையும் தாண்டி உயிர்ப்போடும், எழுச்சியோடும் எழுந்து வந்ததைக் கொண்டாடுங்கள், நாமே பாதித் தமிழகத்தின் மக்களுக்குப் பணியாற்றப் போகிறோம், பதவியும், அதிகாரமும் மட்டும்தான் ஜெயாவுக்கு, மிகச் சிக்கலான ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் தென் மூலையில் இருக்கும் ஒரு பழமையான இனத்தின் சமூக நீதியின் மீதான நம்பிக்கையும், எழுச்சியுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த வெற்றி.

முதல்வருக்கும் மேலான நம்பிக்கையையும், பொறுப்பையும் மீண்டும் வென்று காட்டியிருக்கிறார் தலைவர் கலைஞர். அரசியல் என்பது ஆட்சி அதிகாரத்தை நுகரும் பதவிகளால் காட்டப்படும் கட்டிடம் அல்ல, மாறாக, வருங்கால சந்ததியை வழிநடத்தி அறமும், ஆற்றலும் கொண்ட மேம்பட்ட சமூகத்தை உருவாக்கும் ஒரு பாதை, நாம் சரியான பாதையில் தான் இருக்கிறோம், இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்.

– கை.அறிவழகன் 

தமிழ்த்தேசிய வியாபாரிகளே, பிசினஸை மாற்றுங்கள்!

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இது போன்ற வரிகளைக் கேட்டாலே தமிழ் வியாபாரிகளுக்கு வயிற்றில் புளி கரைப்பது ஏனோ தெரியவில்லை. வருகிற நவ 20 நீதிக்கட்சி நூற்றாண்டு துவக்கநாளை முன்னிட்டு சென்னையிலே திராவிடர் கழகத்தால் நீதிக்கட்சி நூற்றாண்டு விழா அறிவிப்பு வெளியானது தான் தாமதம் பேணாவை தூக்கி விட்டது தமிழர் கண்ணோட்டம்.
நீதிக்கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் என்ன சம்பந்தம்? நாயரும்,தியாகராயரும் தோற்றுவித்த நீதிக்கட்சியை கேரளாவில், ஆந்திராவில் கொண்டாடாமல் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன? நீதிக்கட்சியினர் திராவிடர் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் இட ஒதுக்கீட்டிற்கு என்ன சாதித்து கிழித்துவிட்டார்? இப்படி பொய்யும் புனையுமாக புரண்டோடுகிறது கட்டுரை.
நீதிக்கட்சியை தூக்கி நிறுத்த, பெரியார் சிறைபட்டிருந்த காலத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் தனது தோளுக்கிட்ட மாலையை பெரியாரின் காலுக்கிடுகிறேன் என்று சொல்லி, மேடையில் இருந்த பெரியார்படத்திற்கு இட்டு அவரை நீதிக்கட்சியின் தலைவராக்கிய வரலாறையெல்லாம் அறியாதவர்களா தமிழக மக்கள்?

பார்ப்பனரல்லாதாரின் நலனுக்காக 1916 நவம்பர் 20ம் நாள் தென்னிந்திய நல உரிமை சங்கம் திராவிடர் இயக்கத் தலைவர்களால் இதே சென்னை மாநகரில் விடோரியா பப்ளிக் ஹாலில் தானே துவக்கப்பட்டது. சென்னையில் துவக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆந்திராவில் ஏன் கொண்டாடவில்லை? ஆப்பிரிக்காவில் ஏன் கொண்டாட வில்லை? எனக் குதர்க்க கேள்விகள் ஏன்?
பின்னாளில் நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பிதா மகன்களில் ஒருவரான டாக்டர் நடேசனார் அவர்களாலே துவக்கப்பட்டதுதான் “மெட்ராஸ் யுனைட்டட் லீக்” அமைப்பு. 1912ல் துவக்கப்பட்ட அந்த அமைப்பின் முதலாமாண்டு விழா சென்னையில் டாக்டர் நடேசனாரின் மருத்துவமனை தோட்டத்திலே நடைபெற்றது. மெட்ராஸ் யுனைட்டட் லீக் எனும் பெயரை “திராவிடர் சங்கம்” எனும் பெயர்மாற்ற தீர்மானம் ஏகோபித்த ஆதரவில் அன்று இயற்றப்பட்டதுதானே வரலாறு. ஒருவகையில் நீதிக்கட்சிக்கும் இந்த திராவிடர் சங்கம் தான் முன்னோடி.
1916ல் துவங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்திற்காக “ஜஸ்டிஸ்” எனும் ஆங்கிலப்பத்திரிக்கை துவங்கப்பட அப்பத்திரிக்கையின் பெயரே பிரதானமாகி “ஜஸ்டிஸ் பார்ட்டி” என ஆங்கிலத்திலும், “நீதிக்கட்சி” என தமிழிலுமாக அந்த அமைப்பையே அழைக்கத்துவங்கினர். அதே ஆண்டில் நீதிக்கட்சியினரால் தமிழில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை “திராவிடன்” என்பதை இவர்கள் அறிவார்களா?
தமிழகத்தில் அன்றைக்கு சென்னையிலும், திருச்சியிலும் மட்டுமே முதல்தரக் கல்லூரிகள் இருந்தன. அங்கே பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட விடுதிகளில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இதை உணர்ந்த டாக்டர் சி.நடேசனாரால் 1916ம் ஆண்டில் சென்னை திருவல்லிகேணியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்காக துவக்கக்கப்பட்ட விடுதிக்குப் பெயர் “திராவிடர் சங்க விடுதி”.
திராவிடர் இயக்கத்திற்கும் நீதிக்கட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். இது பாட்டனுக்கும்-தந்தைக்குமான உறவு! தந்தைக்கும்-மகனுக்குமான உறவு! என்பதை தமிழர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். பெரியாரை விமர்சிப்பதே ஒரு பிழைப்பாய், விளம்பரமாய் இன்னும் எத்தனை காலத்தை வீணடிக்கப் போகிறீர்கள்? தொடர்ந்து அம்பலப்பட்டு முகத்திரை தாறுமாறாக கிழிந்து தொங்குகிறது. பிசினஸை மாற்றுங்கள்!

-கி.தளபதிராஜ்

நாகையில் பெரியார் கொடுத்த குரல்! -கி.தளபதிராஜ்

குழந்தைத் தொழிலாளர் சட் டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற் கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.  இதுகுறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழில்கள்,

திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குள் பட்டவர்களை ஈடுபடுத்தவும், வேறெந்தப் பணிகளிலும் அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன.

இதன்படி, விவசாயம், கைவினைத் தொழில் போன்றவற்றை மேற்கொண்டு வரும் பெற்றோருக்கு, அவர்களது குழந்தைகள் பள்ளி நேரத்துக்குப் பிறகோ, விடுமுறை நாள்களிலோ உதவ லாம். தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழிலின் அடிப்படைகளை குழந் தைகள் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது திரைப்படம், தொலைக் காட்சி என தேன் பூசப்பட்டிருந் தாலும் துணி வெளுப்பவன் பிள்ளை துணி வெளுக்கவும், முடி திருத்துபவன் பிள்ளை முடிதிருத்தவும், மலம் அள்ளு பவன் பிள்ளை மலம் அள்ளவும் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசு வசதி செய்து கொடுக்கிறது.

பள்ளிப்பருவத்தில் இப்படி ஒரு சலுகை வழங்கப்படுமானால் அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சுகம் கண்டு அந்தப்பிள்ளைதான் மேற்கொண்டு படிக்க முயலுமா? அந்தக் குடும்பங்கள் தான் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முயலுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

இதன்மூலம், குழந்தைகளுக் கான கல்வி உரிமை மீறப்படுவதுடன், குழந்தைத் தொழிலாளர் முறையை பகுதி அளவில் சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயற்சித்துள்ளதாகத்தான் கருதவேண்டும்.

1954ல் தமிழ்நாட்டில் இதேபோல் இராஜாஜி ஒரு கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார். பள்ளிப் படிப்பை மூன்று மணி நேரமாக குறைத்து மீதி நேரத்தில் அவரவர் பாரம்பரியத் தொழிலை செய்யலாம் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களை சவக்குழியில் தள்ளும் இந்தத் திட்டத்தின் சூழ்ச்சியை சரியாக புரிந்து கொண்ட பெரியார் ராஜாஜி கொண்டுவந்தது “குலக்கல்வித் திட்டம்” என்று விமர்சித்ததார். 24.1.54 அன்று ஈரோட்டில் “ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு ” மாநாட்டை கூட்டினார்.

ஆச்சாரியார் தொடர்ந்து அத்திட்டத்தை கைவிட மறுக்கவே சென்னையில் 31.1.54ல் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி அதில் ஆச்சாரியாருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “தோழர்களே! இந்தக்கல்வித்திட்டம் எவ்வளவு யோக்கியமற்றது! இந்தப் பார்ப்பனர்கள் நம்மை எவ்வளவு தூரம் கொடுமை படுத்துகிறார்கள்.

அடக்கி மிதித்து நசுக்குகிறார்கள் என்பதற்கு, இந்தக் கல்வித்திட்டமே போதுமானது என்பது விளங்கும்.எவ்வளவு தைரியம்? இந்தக் காலத்தில் இவ்வளவு தைரிய மாக நம்மைக் கொடுமைப்படுத்து கிறார்களே!

இந்தக்கல்வித் திட்டம் கேடானது; எங்கள் மக்களை நசுக்குவது; நாங்கள் படிக்கக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்படும் அழிவுத் திட்டம் என்று சொன்னால், இவர்கள் இல்லை இதுதான் நல்ல திட்டம். மக்களை கெடுப்பதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று நமக்கு சொல்லுகிறார்கள்.

என்ன தைரியம்? எங்கள் நாட்டில் பார்ப்பானுக்குச் சமமாக வாழ எங் களுக்குத் தகுதியில்லை திறமையில்லை என்கிறார்கள் படிக்கவும் வசதி செய்து தரமாட்டேன் என்கிறார்கள் கொஞ்சம் மனிதனாகலாம் என்றாலும்அதற்கும் விடாமல் கல்வித்திட்டம் என்ற பெய ரால் அவனவன் சாதித் தொழிலுக்கு போங்கள் என்று அதற்கும் வெடி வைக்கிறார்கள்.

உள்ளபடி இந்தக் கல்வித்திட்ட எதிர்ப்பு என்பதை ஓர் அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதைச் சமுதாயப் போராட்டமாக, இனவாழ்வுப் போராட் டமாக கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு திராவிட இனத்துக்கு இந்த இனத்தையே தீர்த்துக்கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான உயிர்நிலைப் போராட் டமாக கருதுகிறோம்.

ஆச்சாரியார் இந்தத் திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக (அவர் பதவியை விட்டுப் போகிறாரோ இல்லையோ அது வேறு விசயம்) இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாக இருக்கப்போகிறது.” என்று பேசினார். நாகையிலிருந்து குலக் கல்வித்திட்ட எதிர்ப்புப் படை சென்னையை நோக்கி புறப்பட்டது. பலத்த எதிர்ப்புக்கு பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் இந்தக்  குழந்தைத் தொழிலாளர் சட்டத்திருத்தத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விளையப்போகும் கேட் டிற்கும், அன்றைக்கு ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்தால் விளைய நேர்ந்த கேட்டிற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. “இந்தக்காலத்தில் இவ் வளவு தைரியமாக நம்மைக் கொடு மைப்படுத்துகிறார்களே!” என்று 1954ல் பெரியார் கேட்டார். அறுபது வருடங் களுக்குப் பிறகும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனை!

இட ஒதுக்கீடு குறித்து சில அரைவேக்காடுகளுக்கு…

இட ஒதுக்கீடு. சில கேள்வி பதில்கள்.

1) கேள்வி: நகர்ப்புறங்களில், ஃப்ளாட் கலாச்சாரத்தில் ஜாதிப் பாகுபாடே இல்லையாமே?

பதில்: பதில்: கிராமங்களில் வீதிகளில் ஜாதி இருக்கிறதென்றால் நகர்ப்புறங்களில் ஃப்ளாட்டுகே ஜாதி இருக்கிறது. அடயார் டைம்ஸ், திருவான்மியூர் டைம்ஸ், ராயப்பேட்டா மணிக்கூண்டு டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகளில் கொட்டிக் கிடக்கும் ‘Non-Brahmins excuse’ போட்ட விளம்பரங்களைப் பார்த்ததில்லையா நீங்கள்? அல்லது மேட்ரிமோனியல் தளங்களில், ‘சாதி பிரச்சினையில்லை. SC, ST தவிர்த்து’ போன்ற விளம்பரங்களைப் பார்த்ததில்லையா? பெரிய வணிக நிறுவனங்களின் மேலாளர்கள் நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களின் முதுகைத் தடவி நூல் இருக்கிறதா எனத் தேடும் பாங்கைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்களே நம்மாட்கள். கேட்டதில்லையா நீங்கள்? IITயில் தலித்மாணவர்களை ரிசர்வேஷன் என மேல்சாதி மாணவர்களும், ஆசிரியர்கள் கிண்டலடிப்பதால் இதுவரை 18க்கும் மேலான IIT மாணவர்கள் தற்கொலையே செய்திருக்கிறார்கள்! paypal நிறுவனத்தில் மெத்தபடித்த நகர்ப்புற மேதாவிகள் சாதிப்பேர் வைத்து விழா எடுத்தார்களே, கேள்விப்படவில்லையா நீங்கள்!!!

2) கேள்வி: பணக்கார கல்வி நிலையங்களில் படிக்கும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து இட ஒதுக்கீடு உரிமையை பறிக்க வேண்டும் என்று சில மூன்றாம் தர பத்திரிக்கையாளர்கள் கிளம்பியிருக்கிறார்களே?

பதில்: சாதிப் பாகுபாடு என்பது நம் நாட்டின் கலாச்சாரம் மட்டுமல்ல. அது மக்களின் மரபணுவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பதிவுசெய்யப்பட்ட ஒன்று. அதை ஒரு தலைமுறை கல்வி கற்றவுடன் நீக்கிவிட முடியாது. ஆன்டிபயாடிக் மருந்தை எப்படி ஒரே ஒரு வேளை விட்டுவிட்டுச் சாப்பிட்டாலும் மீண்டும் கிருமி பற்றிவிடுமோ அப்படித்தான் இட ஒதுக்கீடு எனும் மருந்தும். ஒரே தலைமுறையில் சரியாகிவிடும் என நினைத்து நீக்கினால், கிருமிக்கு கொண்டாட்டமாகிவிடும். நம் நாட்டில் கடைசி பிற்படுத்தப்பட்டவன், கடைசி தலித் படித்து முன்னேறும் வரை இட ஒதுக்கீடு அவசியம். அப்படி நான் போராடித்தான் ஆவேன் என ஏதேனும் போலித் தமிழ்தேசிய பார்ப்பன அடிமை யாரேனும் கூக்குரலிட்டால் பணக்கார கோவில்களில் 100% இட ஒதுக்கீடு வைத்திருக்கும் பார்ப்பனர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் எதிராகப் போராடச் சொல்லுங்கள். கொஞ்சமேனும் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டு அச்சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் பார்ப்பனர்களிடம் போய் பேசச் சொல்லுங்களேன்! மாட்டார்கள். மாட்டவே மாட்டார்கள்! முதலாளியை எதிர்த்துப் பேச வருமா இந்த போலித் தமிழ்தேசிய பத்திரிக்கையாளர்களுக்கு! தமிழன் தான் இளிச்சவாயன். ஒரு தலைமுறை படித்தவுடனேயே உரிமைகளை இழக்க வேண்டுமாம்! (தோழர் கிளிமூக்கு அரக்கன் சொன்னதைப் போல பத்திரிக்கையாளர்களில் முதல் தரம் மூன்றாம் தரமெல்லாம் இல்லை. வியாபார தரம் மட்டும் தான். சிலர் நடிகையின் தொப்புளை விற்பார்கள். சிலர் தன்னையும், இனத்தையும் விற்பார்கள். வகை தான் வேறு வேறு!)

3) கேள்வி: இட ஒதுக்கீடு சாதியை வலுவடைய வைக்கிறதா?

இட ஒதுக்கீடு சாதியம் வகுத்திருக்கும் பாகுபாடுகளுக்கான மருந்து. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொஞ்சமாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகமாகவும் அந்த மருந்து நோய்க்கேற்ப தரப்படுகிறது. ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் “அவனுக்கு அதிகம் தருகிறார்கள் பார்” என பிற்படுத்தப்பட்டவர்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தூண்டி விடுவதால் சில இடங்களில் இட ஒதுக்கீடு சாதிப்பற்றை வலுவடைய வைப்பதாக தவறாகப் பார்க்கப்படுகிறது. இந்த தூண்டிவிடும் பார்ப்பனர்களையும், போலித் தமிழ்தேசிய பார்ப்பன அடிமைகளையும் ஏதேனும் மருந்து கொண்டு காலி செய்தால் இட ஒதுக்கீடு சாதிப் பாகுபாட்டு அழிப்பு என்ற தன் வேலையை மட்டும் மிகச் சரியாகச் செய்யத் துவங்கிவிடும். அந்த வேலையில் தான் நாம் இறங்க வேண்டுமேயொழிய, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வேலைகளில் அல்ல!

-டான் அசோக்