Category Archives: புரட்டு

இளித்தது பித்தளை!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணலில் கையாண்ட ஊடக தர்ம மீறல்.
இராமகோபாலன், எச்.ராஜா இத்யாதிகளிடம் காட்டிய இனப்பாசம்.

இந்துத்துவ மதவெறிசக்திகளுக்கு துணைபோகும் தொடர் போக்கு.

பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்த இது போன்ற நிகழ்வுகளால் பாண்டேவின் முகத்திரை கிழிந்து “ஆயுத எழுத்து” நெறியாளருக்கே ஒரு சுயபரிசோதணை செய்து வைக்க வேண்டிய நிலைமை தந்தி நிர்வாகத்திற்கு ஏற்பட, பாண்டேவை சுபவீ கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

சுபவீ யின் கேள்விகளுக்கு தன்பக்கம் நியாயம் இருப்பதைப்போல் போக்கு காட்டினாலும் பெரும்பாலும் மழுப்பலாகவே இருந்தது பாண்டேவின் பதில்கள்.

பளபளக்கும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எத்தனை பாலிஷ் போட்டாலும் பித்தளை இளிக்கத்தானே செய்யும்.

இந்த நிகழச்சியைப் பார்த்த பொழுது, தந்தை பெரியார் அவர்கள் சொல்லும் ஒரு கதைதான் நினைவிற்கு வருகிறது.

விருந்திற்கு வந்த மாப்பிள்ளையின் வாய் நாற்றத்தை சகிக்க முடியாத மாமியார், மருமகனிடம் “இந்த ஊர் கரும்பு பேர்போனது. தின்று பார்த்து வீட்டிற்கும் வாங்கி வாருங்கள்” என்று சொல்லி காசு கொடுத்து அனுப்பி வைத்தாள். வீடுதிரும்பிய மாப்பிள்ளை கொடுத்தனுப்பிய காசுக்கு எல்லுப்புண்ணாக்கு வாங்கி தானும் தின்று விட்டு வீட்டுக்கும் வாங்கிவந்தானாம்!

# இந்தக் கதையோடு நேற்று சுபவீ யின் கேள்விகளுக்கு பாண்டே பதிலளித்த விதத்தையும் சேர்த்து கொஞ்சம் நினைவில் அசைபோட்டுப் பாருங்கள் தோழர்களே!

-கி.தளபதிராஜ்

 

ஓ.கே.யா தினமணி?

அயோக்கியதனத்திற்கு அளவில்லையா?

தினமணி என்றொரு ஏடு! நம் பார்வையில் அது இனமணி. ஒவ்வொரு நாளும் அதன் ஒலிப்பில் இதை உணர்த்துகிறது.

நெஞ்சினில் நஞ்சு வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே! என்ற வரிக்கு தினமணி வைத்தியநாத அய்யர் சரியான சான்று!

தமிழ்ப் பற்றாளர் போல் காட்டுவார். ஆனால், தமிழை உள்ளூர அழித்தொழிக்கும் வேலையை அரவமின்றி செய்வார்.

நடுநிலையாளர் போல் காட்டுவார். ஆனால், அப்பட்டமாக தன் சார்பு நிலையை வெளிப்படுத்துவார்.

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை போட்டால், முதல் பக்கத்தில் செய்தி போடுவார். உயர்நீதிமன்ற நீதிபதி அதற்கு தடைவிதித்தால் செய்தியே போடமாட்டார்.

தி.மு.க. மீது ஊழல் வழக்கு வந்தாலே நடந்துவிட்டது போல பக்கம் பக்கமாக எழுதுவார். ஆனால், செயலலிதாவுக்கு தண்டனையே வழங்கப்பட்டாலும் அதை எப்படியெல்லாம் மறைத்தும், மாற்றியும் எழுத முடியுமோ அப்படி எழுதுவார்.

தாலி அகற்றுதல் சிந்தனை வறட்சி என்று கட்டுரை வெளியிடுவார். அதற்கு மறுப்பு எழுதினால் அதை மறைத்து, ஆசிரியர் கடிதத்தில் நான்குவரி வெளியிடுவார்.

உளச் சான்று உறுத்தலே இல்லாமல் மதியென்ற மண்டூகத்தை விட்டு கேலிப் பேசுவார். பெரியார் படத்தையே போடமாட்டார். சங்கராச்சாரியை தெய்வமாகத் தூக்கிப் பிடிப்பார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஊறி, சோவிடம் ஆசிபெற்று, தினமணியுள் நுழைந்து விட்டவர் இப்படித்தான் இருப்பார் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால், அயோக்கியத்தனத்தின் உச்சமாய், அபாண்டமாய், ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவரை கேவலப்படுத்துவதும், மாண்பின், பண்பாட்டின் உறைவிடமான அவரை, அவரது செயலை திரித்து, அவர் சமுதாய, பண்பாட்டுக்கு எதிரிபோலவும், சமூகம் தறிகெட்டுப் போக அவரே காரணம் என்பதுபோல கேலிக் கருத்து வெளியிடுவதும் அயோக்கியத்தனத்தின் உச்சமல்லவா?

தாலி என்பது அடிமைச் சின்னம் என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை, கணிப்பு. இதை பல பெண்கள் மகிழ்வுடன் ஏற்று தாலியை மறுக்கின்றனர்.

சுயமரியாதைத் திருமணச் சட்டமே தாலியில்லா திருமணத்தை ஏற்கிறது.

பதிவுத் திருமணம் செய்து கொள்வதை சட்டம் ஏற்கிறது. அதற்கு தாலி கட்டாயம் கட்ட வேண்டியதில்லை.

உண்மைகள் இப்படியிருக்க, தாலி கட்டுகிறவர்கள், கட்டிக் கொள்கிறவர்கள் எல்லாம் கண்ணியவான்கள், ஒழுக்கச் சீலர்கள் போலவும், தாலி கட்டாதவர்களெல்லாம் கண்டபடி கண்டவர்களோடு வாழ்பவர்கள் போலவும், அதை தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தூண்டுவது போலவும், ஆதரிப்பது போலவும் முதல் பக்கத்தில் கருத்து வெளியிடுகிறார்கள் என்றால் அவர்களை எதனால் அடிப்பது?

நான் தாலியில்லாமல் திருமணம் செய்தேன். நானும் என் மனைவியும் ஒருவர் ஒருத்தியென்ற ஒழுக்க நெறியில் இன்றளவும் வாழ்கிறோம். ஒரு புலனாய்வு வைத்து வேண்டுமானால் ஆய்வு செய்துகொள். ஆனால், தாலி கட்டி திருமணம் செய்தவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், என்னென்ன ஒழுக்கக் கேடு புரிகின்றார்கள் என்பது இந்த வை(பை)த்தியநாத அய்யருக்கும், மதியென்ற மண்டூகத்திற்கும் தெரியாதா?

இன்றைக்கு நடக்கின்ற ஒழுக்கக் கேடுகளை புரிகிறவர்கள் எல்லாம் தாலி கட்டியவர்களா? கட்டாதவர்களா?
சூடு சொரணை நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்!

தாலி அணிய விருப்பமில்லை, அதை கழற்றி விடுகிறேன் என்று ஒரு பெண் சொன்னால், அப்படிப்பட்ட பெண், ஊர் ஊரா சுத்தலாம் இச் இச் என்று எத்தனை முத்தம் வேணா குடுத்துக்கலாம்; ஹோட்டல்ல தங்கலாம்; வேறு என்ன வேணாலும் பண்ணிக்கலாம், என்று முடிவுக்கு வந்துவிட்டாள் என்று அந்த பெண் சொல்கிறாள் என்று பொருள் என்று உங்கள் அகராதி சொல்கிறதா?

இதைக் கேட்டால் அந்தப் பெண் உங்களை முச்சந்தியில் நிறுத்தி முகத்தில் உமிழ்ந்து செறுப்பால் அடிக்க மாட்டாளா?

இதைத் தான் திராவிடர் கழகம் சொல்கிறது என்கிறீர்களே என்றைக்கு இப்படி திராவிடர் கழகம் சொன்னது? ஆதாரம் காட்ட முடியுமா? அற்பத்தனத்திற்கும் அயோக்கியத் தனத்திற்கும் அளவில்லையா?

இப்படியெல்லாம் எழுதினாலும் தண்டிக்கப்படக் கூடாது என்று தலையங்கம் வேறு இன்று எழுதுகிறாய். உங்களை மட்டும் எவனும் தண்டிக்கக் கூடாது. ஆனால், மற்றவர்களெல்லாம் தப்பு செய்யாமலே தண்டிக்கப்பட வேண்டும். இதுதானே ஆரிய தர்மம். பத்திரிகை இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதுவதா? இது பேனா ரவுடித்தனம் இல்லையா?

உடம்பெல்லாம் நெய்யைப் பூசிக்கொண்டு எவனோடு வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் என்பதும், மனிதனை மட்டுமல்ல குதிரையோடு படுத்துக்கூட பிள்ளை பெறலாம் என்பதும் உங்கள் கலாச்சாரமே ஒழிய திராவிடர் கலாச்சாரமல்ல.

ஓகே தினமணி!

– மஞ்சை.வசந்தன்

சமஸ்கிருதம் ஆரிய மொழி! உருது திராவிட மொழியா ?

கேள்வி எண்1
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் உள்ள சமஸ்கிருதம் ஆரிய மொழி
200 ஆண்டுகளுக்குள் வந்த உருது திராவிட மொழியா ?


விடை:
எத்தனைத் திரிப்புகள் ஒரு கேள்வியில்!
சமஸ்கிருதம் எந்த ஆண்டில் தோன்றியது.அதற்கு பல்லாயிரம் ஆண்டு வரலாறு உண்டா. கற்காலத்தில் இருந்து கல்லில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவம் வட்டு எழுத்து சதுர எழுத்து புள்ளி இல்லாத ஓலை எழுத்து என தமிழின் வரி வடிவ மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் கல்வெட்டு ஆதாரஙங்கள் உள்ளன. சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை எழுத்தே இல்லை. எந்தக் கல்வெட்டு ஆதாரமும் இல்லை.
சமஸ்கிருதம் முதலில் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது.பிறகு தேவநகரி வடிவில் எழுதப்பட்டு வருகிறது.
இரவல் எழுத்தில் வாழும் ஒரு மொழியை அதனினும் சிறந்த வரலாற்று மொழியை தாய்மொழியாகக்கொண்ட தமிழர்கள் ஏன் வழிபாட்டு மொழியாக ஏற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி.

தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியமே 5000ஆண்டுப்பழமையுடையது என்றால் அதற்கு முன்பு எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இந்த மொழி உருவாகி பேசப்பட்டு எழுதப் பெற்று இலக்கிய வடிவங்களை அடைந்து பின் இலக்கணம் பெற்றிருக்கும் என்பதை நினைக்கவே மலைப்பாக இருக்கிறதே.

உங்கள் வேதங்களில் மைத்ரியில் தொடங்கி மூன்று அல்லது நான்கு படித்த பெண்களைக்காட்டமுடியும்.
சங்கத் தமிழ் இலக்கியங்களிலோ இதுவரை கிடைத்திருக்கும் பெண் கவிஞர்கள் மட்டும் 44 பேர்.
ஆங்கிலத்தைப்போல எல்லா நாட்டிலும் பிற மொழிகளில் கிடைக்கும் அறிவு வளத்தை தனது மொழியில் எழுதி வைத்துக்கொண்டு என் மொழி அநாதி காலத்தில பிறந்தது. கடவுள்களால் பேசப்பட்டது என்று கதை விடுவதாலேயே உங்கள் மொழி எம்மொழியை விட உயர்ந்தது பழமையானது என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லமுடியாமல் உருது மொழியைக் கொண்டு வந்து பிணைப்பது என்ன நியாயம்?

உருது மொழியின் வளத்தை அறிந்தவர்கள் அதன் வயது இருநூறு தானா என்று விளக்கட்டும்.நாம் அந்த ஆராய்ச்சிக்குப் போகவேண்டாம்.
உருது திராவிடமொழி என்று யார் சொன்னது? எனக்குத் தெரியவில்லை.இந்தக்கேள்வியை பதிவிட்ட நண்பர்கள் அதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால் நாம் அதுபற்றி பதில் சொல்லமுடியும்.

ஆனால் ஒன்று : சமஸ்கிருதம் , அரபி, ஹீப்ரு மூன்றுமே மத்திய ஆசிய மக்களால் உருவாக்கப்பட்டவையே. ஹிந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களும் அந்த மண்ணில் இருந்து தொடங்கியவையே.
கிருஷ்ணன் பிறப்பும் கிருஸ்துவின் பிறப்பும் பற்றிய ஒரேமாதிரியான கதைகளே அதற்கு சான்றாக இருக்கின்றன.
வேதங்கள் எழுதப்படவில்லை.அவை காற்றிலே இருந்தன அவற்றை ரிஷிகள் ஞானக்கண்ணால் படித்தார்கள் என்பதைப்போல்தான் மகமது நபிகளுக்கு குரான் வசனங்கள் அருளப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட எந்தக்கதையும் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை.

மேலும் சம்ஸ்கிருதத்தின் அருமை பெருமைகளை ஆராய்ந்து பதிவு செய்த ஓரியண்ட்டல் ஜோன்ஸ் ( கீழைநாட்டு மொழிகளுக்குத்தான் ஓரியண்டல் என்று பெயர் ) முதல் அனைத்து மொழி ஆய்வாளர்களும் சமஸ்கிருதத்தை ஆரியமொழிக் குடும்பத்தில் இந்தோ ஆரிய மொழியாகத்தான் வகைப்படுத்தினார்கள். ஆரிய ஜெர்மானிய மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள உறவை போற்றி வளர்த்தவர் மேக்ஸ்முல்லர். அவர் பெயரால் இந்திய அரசின் உதவியோடு நிறுவப்பட்டமேக்ஸ்முல்லர் பவன் இன்றும் இயங்கிவருகிறது. சமஸ்கிருதத்திற்கு ஆரியத்தொடர்பு இல்லை. அது இந்தியாவின் பழங்குடி மக்களின் மொழி என்று அவர்கள் உறுதியாக மறுத்திருந்தால் இந்தியாவில் மேக்ஸ்முல்லர் பவன்கள் இருந்திருக்காது.
சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் எழுந்த சமஸ்கிருத எதிர்ப்பலையை எதிர்கொள்ளவும் நாங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள் இஸ்லாமியர்களதான் அன்னியர்கள் என்று திசைதிருப்பவும் மேலோட்டமாக வைக்கப்படும் ஒரு கருத்துதான் சமஸ்கிருதம் இந்தியமொழி என்ற வாதம். அதை பார்ப்பனர்களைவிட நம்மவர்கள்தான் நம்புகிறார்கள்.

எனவே நமது தாய் மொழியை நீசபாஷை என்றும் சமஸ்கிருதத்தை தேவபாஷை என்றும் சொல்பவர்கள் நமக்கு அந்நியர்கள்தான்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை.

– அ.அருள்மொழி, வழக்குரைஞர்

பகவத்கீதையும்-திருக்குறளும்! கி.தளபதிராஜ்.

பகவத்கீதையும்-திருக்குறளும்!
கி.தளபதிராஜ்.

எதற்காக இலக்கியம்? அதனால் நமக்கு என்ன பயன்? நம் புத்திக்கு எட்டிய முறையில் தமிழர் பண்புக்கு கலைக்குத் தகுந்தவாறு ஏதேனும்இலக்கியங்கள் இருக்கிறதா? என்ற பெரியார் இராமாயணம், பாரதம், பகவத்கீதை, பெரியபுராணம்,உள்ளிட்ட அணைத்து இலக்கியங்களையும் கடுமையாக சாடினார்.மதமும்,மௌடீகமும் மண்டிக்கிடக்கும் இவற்றைத் தவிர அறிவு வளர்ச்சிக்குத் தேவையான எந்த புதிய இலக்கியங்களும் தமிழில் படைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஆரியத்தின் பிடியிலிருந்து நம்மக்களை மீட்க புராண, இதிகாச குப்பைகளை புதைகுழிக்கு அனுப்ப முயற்சித்த அதே பெரியார் தான் 1949 ஜனவரி 15,16 ஆகிய இரண்டு நாட்கள் அறிஞர் பெருமக்களையெல்லாம் அழைத்து பெரியதொரு மாநாட்டை திருக்குறளுக்காகவே நடத்தினார். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள விடுதலை மூலம் பெரியார் வேண்டுகோள் விடுத்தார்!
திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதி நெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல், குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும், பெரும் அளவுக்கு ஆரியர்கள் பிரசாரம் செய்வது மாத்திரமல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.
ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமே யானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு, விலக்குவதை விலக்கலாம்.
நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே காப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற்கையே யாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல.
எனவே, குறள் தத்துவத்தை விளக்கிட வென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர்க் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.என்று எழுதினார்.
பெரியார் உரை
தந்தை பெரியார் தனது மாநாட்டு உரையில் திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகவே என்னால் கருத முடிகிறது. திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க அவைகளை மடியச் செய்ய அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்.
மனுதர்மம்-வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள்-பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் உண்டு என்று உபதேசிக்கிறது. திருக்குறள்-மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறது.
திருவள்ளுவர் காலம் பொது உடைமைக்காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால், வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார். அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார் என்று குறிப்பிட்டு விட்டு இத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டுமென்றும் பேசினார்.
பகவத்கீதை
இன்றைய தினம் மத்தியில் ஆண்டுகொண்டிருக்கிற பாஜக தலைவர்கள் பகவத்கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று கூறுகின்றனர். இந்தியா முழுதும் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்களையும், தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களையும் கொச்சைப்படுத்தும் ஒரு நூலை புனித நூலாக்க துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் முயற்சியை திராவிடர் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்த நூலை மற்றவர்களின் மேல் திணிக்க முயற்சிப்பது அரசியல் சட்டப்படி இந்த நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கே வேட்டுவைப்பதாகும் என்று ஒருசாரார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இப்படி சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பகவத்கீதையை பற்றி அன்றைக்கே திருக்குறள் மாநாட்டிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார் அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூற்கள் பல தேடிப் பார்த்த போது தான் கண்ட பாரதம், பாகவதம், பகவத் கீதை, இராமயணங்கள், வேதங்கள் உப நி­த்துகள் இவையாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரியப் பிரச்சாரத்தால், புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள். திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவை இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த வேளையில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டி திராவிடர்களுக்கு எல்லாத் தமிழர்களுக்கும் தருகிறார் தந்தை பெரியார்.
இனித் திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டும். திராவிடன் கையில் குறள் இருப்பதை, பகவத் கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் காண்பார்களாகின் பார்ப்பனீயம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல் தம் அகம்பாவத்தையும் , மூட நம்பிக்கை களையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விடுவார்கள்” என்றார் அண்ணா
பகவத்கீதையை எதிர்க்கும் அதே வேளையில் தேசியநூலாக்கப்படவேண்டியது திருக்குறளே தவிர கீதை அல்ல என்கிற வாதமும் இப்போது வலுத்துவருகிறது.வரலாற்றை சற்று முன்னோக்கிப் பார்ப்போமானால் இதே கருத்து நம் அறிஞர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எடுத்துவைக்கப்பட்டிருப்பதை அறிய முடியும்.1949ல் கூட்டப்பட்ட திருக்குறள் மாநாட்டில் தமிழறிஞர் சி.இலக்குவனார் அவர்கள்
“குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி அதற்குச் சிறப்பை உண்டாக்கித் தர இப் பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றதென்றும், இயற்கை கூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்குப் பெருமை தருவதாகும்” என்றும் எடுத்துக் கூறி, “அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போது கூட, வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதி இருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச் சார்பற்ற சர்க்காராக வேண்டுமானால், திருக்குறள் அதற்கேற்ற வழிகாட்டி என்றும் கூறி பழந்தமிழனான வள்ளுவன், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக் காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டும்” என பேசினார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் “பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார் குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொதுநூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே! எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றியிருக்கிறது.” எனக் குறிப்பிட்டார்.
திராவிடர்க்கு ஒழுக்கநூல் குறள்தான் என ஓங்கி ஒலித்த பெரியார், பகவத்கீதை,பாகவதம்,இராமாயணம்,மகாபாரதம் போன்ற நூல்கள் திராவிடரின் ஒழுக்கத்திற்கோ, மான வாழ்வுக்கோ ஏற்றபடி எழுதப்பட்ட நூல்கள் அல்ல. அவைகளெல்லாம் ஆரியர்கள் தங்களின் உயர்வுக்காக, தங்களின் மேல்சாதி தன்மையை நிலைநிறுத்தி அதனால் இலாபம் அடைவதற்காக ஏற்பட்ட வர்ணாசிரம தர்மத்தை வலியுறுத்தி எழுதி வைத்துகொண்டவை யல்லாமல் பொதுவாக மனிதர்கள், உலக மக்களின் நலனுக்கு ஏற்ற முறையில் எதையும் கூறவில்லை என்று 1950 களிலேயே பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.
தற்போது மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ், பாஜக வகையறாக்கள் ஏதோ உலகமே தங்கள் கைக்குள் வந்துவிட்டதாக கருதி இந்துத்துவ ஆதிக்க சதி வேலைகளை கட்டவிழ்த்து திரிகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை..

dhalapathiraj@gmail.com

மண்ணுருண்டை மாளவியா ! -கி.தளபதிராஜ்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரதரத்னா  விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவை தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும்.
இந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களை தூக்கிப்பிடித்த சனாதனவாதி.
தென்னாட்டு பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப்பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும், தமிழ்நாட்டிற்கு வந்து பலமுறை மூக்குடைபட்டு திரும்பியவர் என்பதையும்  வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.
1929ல் “சாஸ்திரம் அறிந்தவன் நான். நமக்கு சாதிகள் இருக்க வேண்டியது அவசியம்” என்று பேசிய மாளவியாவை எதிர்த்து “கிறிஸ்துவனையோ, மகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள்?” என்று கேட்க, அதற்கு “சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று நழுவியவர் மாளவியா. “உங்கள் இந்து யூனிவர்சிட்டியில் ஈழவர்களை சேர்த்துக் கொள்வீர்களா?” என்ற கேள்விக்கு, “நீங்கள் புலையர்களை கல்லூரிகளில் சேர்ப்பீர்களா?”  என ஆத்திரம் பொங்க கேட்டார் மாளவியா.கூட்டத்தினர் எழுந்து ஏகோபித்த குரலில் “நாங்கள் சேர்த்துகொள்வோம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை எதுவுமில்லை” என்று சொல்ல மாளவியா மூர்ச்சையாகிப் போனதாக அன்றைய குடியரசு எழுதியது.
தொடர்ந்து சாதியமமைப்பை ஆதரித்து பேசிவந்த மாளவியாவை கண்டித்து மீண்டும் தலையங்கம் எழுதியது குடியரசு பத்திரிக்கை.
“இந்து சாதிய அமைப்பில்,எல்லா சாதியினருக்கும் ஒரே மாதிரியான சத்தியம் இருக்க முடியாது.மற்றொருவன் சமைத்ததை பாவம் என்றும், மற்றொருவன் தொட்ட தண்ணீரை குடிப்பது தோஷம் என்றும், மற்றொருவன் பார்க்க சாப்பிடுவது நரகம் சித்திக்க கூடியது என்றும் பண்டித மாளவியா போன்ற ‘உத்தமபிராமணர் ‘ களுக்கு தோன்றலாம். ஆனால் இப்படி நினைப்பதே ஆணவமென்றும், அறிவீனம் என்றும் அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய, நாடு ஒற்றுமையும், சமத்துவமும் அடையாதென்றும், அதை ஒழிக்க சத்தியாகிரகம் செய்ய வேண்டுமென்றும் உண்மையான சமூக சீர்திருத்தக்காரர்களுக்கு தோன்றலாம்.”என்று குறிப்பிட்டிருந்தது.
தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் தொகுதியை மாளவியா எதிர்த்தபோது, பார்ப்பனீயத்தை காப்பாற்ற மாளவியாவிற்கு எவ்வளவு அக்கறை உண்டோ அதுபோலவே பார்ப்பனீயத்தை ஒழித்து மனிதத்தன்மையைப் பெற அம்பேத்கருக்கும், இரட்டைமலை சீனிசாசனுக்கும் உரிமை உண்டு என்று சொன்னார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.பால்ய விவாக தடைசட்டம் வந்தபோது திலகரோடு சேர்ந்து அதை எதிர்த்தவர் மாளவியா.
பம்பாய் கல்பதேவியில், 1932ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி நடந்த நிகழ்ச்சியொன்றில் சமபந்தி போஜனம், கலப்பு மணம் இவைகளைப் பொறுத்தவரையில் ஜாதிக்கட்டுப்பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான் ஒப்புகொள்ள முடியாது என்று பேசினார் மாளவியா.
“தீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் ஜாதி வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால் ஜாதிக்கட்டுப்பாடும், வருணாசிரமதருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்ற நாட்டில் கலப்புத் திருமணங்கள் நடைபெறவேண்டும்.
ஒவ்வொரு ஜாதிகளும் தமக்கு மேற்பட்ட ஜாதிகளுடனும், கீழ்ப்பட்ட ஜாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். பஞ்சமர் முதல் பார்ப்பனர் வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும் வரை ஜாதிகள் ஒழியாது. தீண்டாடையும் ஒழியாது.
இன்று இக்காரியங்களுக்கு தடையாக இருப்பது இந்து மதமும், அதில் உள்ள வேத, புராண, இதிகாச, சாஸ்திரங்களும் அதை படித்துவிட்டு சொந்த புத்தியில்லாமல் இருக்கும் மாளவியா போன்ற மண்ணுருண்டைகளுமே ஆகும்.” என்று மாளவியாவின் பேச்சிற்கு பதிலடி கொடுத்தார் குத்தூசி குருசாமி.
பார்ப்பனர்கள் கடல் தாண்டி பயணம் செய்ய சாஸ்திரத்தில் இடமில்லை என்பதால்,  இங்கிலாந்து சென்றபோது  அதனால் ஏற்படக்கூடிய தோஷத்தைக் கழிக்கவேண்டி ஒரு கூஜாவில் கங்கை நீரையும், கொஞ்சம் களிமண்ணையும் எடுத்துச் சென்ற வைதீகப் பார்ப்பனர்தான் இந்த மாளவியா. இந்த இழி செயலைக் கண்டித்து “மண்ணுருண்டை மாளவியா” என அப்போதே குத்தூசி குருசாமியால் விமர்சிக்கப்பட்ட ஒருவருக்குத்தான் தற்போது காவிக்  கூட்டம் பாரதரத்னா வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?

மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார்.

எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார்.

புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத் தவறியதில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, “வெள்ளைக்காரனிடமிருந்து ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களிடம் கை மாறியிருக்கிறது. இது நமக்கு துக்கநாள்” என அறிவித்த பெரியார் அதில் மாற்றுக்கருத்து கொண்டிருந்த அண்ணாதுரை அவர்களின் கட்டுரையையும் தனது விடுதலை நாளிதழில் வெளியிட்டதை அறிந்தவர்களுக்கு பெரியாரின் கருத்துச்சுதந்திம் பற்றி சந்தேகம் எழாது.

தான் கொண்ட லட்சியத்தை நிறைவேற்ற தன் இயக்கத்திற்கு கட்டுப்பாடான ஆயிரம் முட்டாள்கள் போதும் என்ற பெரியார் தான் “தன் கருத்துகளை அப்படியே ஏற்றுகொள்ளும்படி நான் கூறவில்லை. ஒரு முறைக்கு ஆயிரம் முறை சிந்தித்துப் பார்த்து சரி எனப்பட்டதை ஏற்றுகொள்ளுங்கள்” என மேடை தோறும் மறக்காமல் சொன்னார்.

பெரியாரின் இந்த குணநலன்களில் எவற்றோடு ஒத்துப்போகிறார் ஜெயலலிதா?

தமிழகம் அறிந்த திராவிட இயக்க எழத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதே பெயரைகொண்ட வேறொரு ஆசாமியைக் கொண்டு இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்திருக்கிறது இன்றைய தமிழ் இந்து நாளிதழ்!

கொட்டை எடுத்த புளிகளுக்கு…

ஆர்.எஸ்.எஸ் – போலி தமிழ்த்தேசிய கூட்டு அம்பலம்!
———————————————————————–
இந்த Krishna Tamil Tiger என்கிற தமிழ் புளி தான் ஒரு அரைகுறை என்பதை அவரே அவ்வப்போது நிருபித்துக்கொண்டே இருப்பார்.

காஞ்சி சங்கராச்சாரி காலடியில் இந்தியாவின் மத்திய அமைச்சராக இருக்கிற பொன்.இராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருக்கும் படத்தையும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிய சாமி நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தையும் ஒப்பிட்டு தோழர்கள் சிலர் பதிவுகளை எழுதியிருந்தார்கள். அறியாமையில் இருக்கும் இந்து மத பக்தர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க ஆதரவாளர்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு, இந்து மதத்தில் அனைத்து மட்டங்களிலும் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை எளிமையாக விளக்கியது இந்த ஒப்பீடு. உண்மையிலேயே அந்த ஒப்பீடைப் பார்த்து கோபம் கொள்ளவேண்டியது ஆர்.எஸ்.எஸ் இந்து மத வெறியர்கள்தான். ஆனால் வழக்கம் போல (போலி) தமிழ்த் தேசியவாதிகளுக்குதான் கோபம் வருகிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்களிடம் நாம் எதிர்பார்த்த பதிலை இந்த (போலி) தமிழ்த் தேசியவாதிகள் தருகிறார்கள்.

சங்கராச்சாரிக்குச் சரிசமமாக மாமா சு.சாமியும், தரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும்

பெங்களூர் குணா என்னும் அயோக்கியரின் ரசிகரான இந்த தமிழ் புளி எழுதியிருக்கும் பதிவில், அந்த குணாவை போலவே பொய் தகவல்களையும் முட்டாள்தனமான கருத்துக்களையும் நிரப்பியிருக்கிறார்.

இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கே.ஆர்.நாராயணனின் சிறப்புகளில் ஒன்று, அவர் சங்கராச்சாரிகள் உட்பட எந்த ஒரு இந்து மத தலைமை பீடத்தையும் போய் சந்திக்காதவர். பலராலும் பல முறை இந்த சிறப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த நபரோ, கே.ஆர்.நாராயணன் சங்கராச்சாரி காலடி அமர்ந்தார் என்று எழுதுகிறார் , கற்பனையாக குணா பாணியில்.

திருமாவளவன் போய் சங்கராச்சாரியை பார்த்தாரே, அவர் சங்கராச்சாரி தலையிலா போய் அமர்ந்தார் என்று கேட்கிறார். இது என்ன வகையான கேள்வி என்று தெரியவில்லை. திருமாவளவன் சங்கராச்சாரியை சந்தித்துபற்றி உறுதிபடுத்தப்படாத தகவல்கள்தான் உலவுகிறது. அதனால் அதைப்பற்றி நாம் பேசமுடியாது. ஆனால் கக்கன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர் சங்கராச்சாரியை சந்திக்க சென்ற போது, நேரில் பார்த்தாலே தீட்டு என்று குறுக்கே பசுமாட்டை நிறுத்தி , அவருடன் பேசியவன் இதற்கு முன்னால் இருந்த பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரன். இந்த வர்ணாசிரம கொடுமையை ஒழிக்கவேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு ஏன் பொத்துக்கொள்கிறது தமிழ்த் தேசியர்களே.

சங்கராச்சாரியை சுப்பிரமணிய சாமியையும் வைத்து வெறும் “பூச்சாண்டி” காட்டுகிறார்கள் திராவிடர் இயக்கத்தினர் என்கிறார் இந்த தமிழ்த்தேசியவாதி. சில நாட்களுக்கு முன்புதான், தலித் மக்களை கோவிலுக்கு உள்ளேயே விடக்கூடாது என்று சொல்லியிருக்கிறான் பூரி சங்கராச்சாரி. இதெல்லாம் வெறும் பூச்சாண்டிதான் இந்த தமிழ்த்தேசியவாதிகளுக்கு. வேற என்னதான்டா பிரச்சனை என்று கேட்டால், அவன் தமிழ்ஜாதி இவன் தெலுங்கஜாதி என்று மொக்கத்தனமாக எதையாவது வைத்துக்கொண்டு ஜல்லி அடித்துக்கொண்டிருப்பார்கள். இந்த விவாதத்தில் கூட, ஒரு தமிழ் பார்ப்பனர் சங்கராச்சாரி ஆக முடியாது என்று பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாமல் எதையோ உளறுகிறார் இந்த தமிழ் புளி. தமிழ் பார்ப்பனர் சங்கராச்சாரி ஆனால் பொன்.இராதாகிருஷ்ணனை மடியில் தூக்கி வைத்துக்கொள்வாரா என்று அவர் பாணியிலேயே நாமும் கேட்டு வைப்போம்.

சங்கரமட எதிர்ப்பு என்பது “பூச்சாண்டியை” காட்டி தமிழர்களை ஏமாற்றும் செயல் என்கிறார். அடுத்த வரியே பெரியார் சங்கரமடத்தை ஏற்றுக்கொண்டார் என்கிறார். என்னதான்டா உங்களுக்கு பிரச்சனை. கொஞ்சாமவது புத்தியும் நேர்மையும் உள்ளவன் எவனாவது தமிழ்த்தேசியவாதிகளில் இருந்தால் , பெரியார் எப்படா சங்கரமடத்தை ஏற்றுக்கொண்டார்னு கேட்டிருக்கனும். ஆனால் நமக்குதான் இந்த தமிழ்த்தேசியவாதிகளைப்பற்றி தெரியுமே. பெரியாரை கொச்சைப்படுத்தி எதாவது எவனாவது எழுதிவிட்டாலே போதும் குஷியாகி அதை விரும்பவும் பகிரவும் செய்வார்கள்.

சங்கரமட எதிர்ப்பு, சுப்பிரமணியசாமி எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பதெல்லாம் வெறும் திசைத்திருப்பும் செயல் என்கிறார்கள் போலி தமிழ்த்தேசியர்கள். உண்மையிலேயே , ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்துதான் இங்கு பல முக்கிய பிரச்சனைகளின் மீதும் மக்களின் கவனம் செல்லாமல் திசைத்திருப்படுகிறது என்பது கொஞ்சம் சுயபுத்தி உள்ளவர்களுக்குகூட தெரியும்.

இத்துணை ஆண்டு காலம் இங்கே பார்ப்பனியத்தை எதிர்த்து கோலோச்சிய திராவிடம் சங்கர மடத்தின் ஒரு செங்கலையாவது அசைத்து இருக்குமா என்று கேட்கிறார். புத்தரை தின்று செறித்த பார்ப்பனீயம், பல தமிழ் சித்தர்களை தின்று செறித்த பார்ப்பனியம், இன்று பெரியாரை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தினறுகிறது. தங்களுக்கு துணையாக தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் சிலரை தயார் செய்து பெரியாருக்கு எதிராக அவதூறுகளை செய்ய பணித்திருக்கிறது. அவர்கள் சொல்வது என்னவென்றால், இத்தனை ஆண்டுகாலம் போராடியும் உங்களால் சங்கரமடத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை, எனவே அவர்களை எதிர்க்காதீர்கள் என்பதுதான்.

அந்த போலி தமிழ்த்தேசியவாதிகளுக்கு புரியும்படி பதில் சொல்வதென்றால், ஒரு அறுபது ஆண்டுகாலம் அறவழியிலும் ஆயுதவழியிலும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடிய பிறகு, இன்று ஈழத்தமிழர்கள் எல்லாமும் இழந்து சொந்த மண்ணிலும் புலம் பெயர்ந்தும் அகதிகளாக எதிர்காலம் குறித்த எந்த தெளிவும் இல்லாமல் நிற்கிறார்களே, இதெல்லாம் விடுதலைப் போராட்டம் என்கிற பெயரில் சிங்கள அரசுடன் சேர்ந்து புலிகள் செய்த சதித்திட்டம் என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தமோ அயோக்கியத்தனமோ, அப்படிதான் தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் இந்த போலிகள் செய்கிற அவதூறுகளும்.

பெரியார் மீது அவதூறு செய்வதே முழுநேர பணியாகக் கொண்டிருக்கும் இந்த போலி தமிழ்த்தேசியவாதிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பீர்!

– பிரபா அழகர்