பொருளாதார அளவுகோல் என்னும் கண்ணிவெடி யால் தகர்க்கப்படும் சமூகநீதியை மீட்டெடுக்க மண்டல் பிறந்த நாளில் சூளுரைப்போம்!

உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!

இன்று (25.8.2020) இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக பொறுப்பேற்றுச் செயலாற்றிய – பீகாரின் முன்னாள் முதல்வரும், வழக்குரைஞருமான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) அவர்களது 103 ஆவது பிறந்த நாளாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது விதியின்படி…

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டின் பெரும்பான்மையினரான ஒடுக் கப்பட்ட மக்களின் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, உத்தியோக வாய்ப்பினை – மறுக்கப்பட்ட உரிமைகளை – அம்மக்களுக்கு மீண்டும் அளிப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது விதியின்படி அமைக்கப்பட்டதுதான் மண்டல் தலைமையிலான அந்தக் குழு.
இந்தக் கமிஷனை அமைக்க வற்புறுத்தி முன்மொழிந்தது உ.பி.யின் சரண்சிங் அவர்களும், லோகியா சோஷலிஸ்ட் அமைப்பினரும் ஆவர். ஜனதா கட்சி அமைச்சரவையில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அதற்கு ஒப்புதல் அளித்தார் (20.12.1978). இந்தியா முழுவதும் 2 ஆண்டுகளுக்குள் சுற்றுப்பயணம் செய்து, பல ஆய்வு நிறுவனங்களுடன் கலந்து, விஞ்ஞானபூர்வமான முறையில் அறிக்கை தயாரித்து 12.12.1980இல் அப்போது பிரதமராகிவிட்ட திருமதி இந்திரா காந்தி அவர்களிடம் நேரில் தரப்பட்டது.
சுமார் 10 ஆண்டுகள் இதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவே இல்லை.

42 மாநாடுகள், 16 போராட்டங்கள்…

இதற்கிடையில் திராவிடர் கழகம் சார்பில் வடபுல சமூகநீதி அமைப்பின் தலைவர்களோடு தொடர்பு கொண்டு 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி, மண்டல் அறிக்கையை வெளியிட்டு, பரிந்துரைகளைச் செயல்படுத்தவும் நாடு தழுவிய இயக்கத்தை நடத்தினோம். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும், அதுபோல ஒத்த கருத்துள்ளவர்களும் வடபுலத்திலும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர்.

பார்ப்பனரின் இரட்டை வேடத்தால்…

ஏனெனில், 1955 இல் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் அறிக்கை விவாதத்திற்கே நாடாளுமன்றத்தில் வைக்கப்படாமல் – அதன் தலைவரான காகாகலேல்கர் என்ற மராத்திப் பார்ப்பனரின் இரட்டை வேடத்தால், செயல்படுத்தப்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டதோடு, ‘‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்ல, குழியும் பறித்தது’’ என்ற கதைபோல, அன்றிருந்த காங்கிரஸ் மத்திய அரசு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அமையவேண்டும்; ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் கூடாது என்று மாநிலங்களுக்குச் சுற்றறிக்கையும் அனுப்பியது. அந்த நிலை மண்டல் கமிஷன் அறிக்கைக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாம் தொடர்ந்து போராட வேண்டி இருந்தது.

ஒரு மாபெரும் வரவேற்பினை பெரியார் திடலில் அளித்தோம்

மண்டல் கமிஷன் குழுவினர் – அது சென்னை வந்தபோது ஒரு மாபெரும் வரவேற்பினை பெரியார் திடலில் அளித்தோம்; அப்போது பதிலளித்த மண்டல் கூறினார், ‘‘அறிக்கை அளிக்கத்தான் எங்களால் முடியும்; அதனைச் செயல்படுத்துவது உங்களைப் போன்றவர்களின் கையில்தான் இருக்கிறது. முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை உரு வாக்கிய பெரியார் மண்ணில் உள்ளவர்களால்தான் இப்பெரும் பணியை வெற்றிகரமாகச் செய்ய முடியும்‘’ என்ற கருத்துப்பட பேசியதோடு, அவ்வப்போது மண்டல் அவர்களும், அதன் உறுப்பினர்களில் சிலரும் நம்மோடு இடையறாத தொடர்புடன் இருந்து வந்தார்கள்.
(இதை அறியாத அல்லது திட்டமிட்டே புளுகுனிகளாக உள்ள பா.ஜ.க. அரைவேக்காட்டு ஆரியர்கள் சிலர் மண்டலுக்கும், திராவிடர் கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஊடகங்களில் உளறிக் கொட்டி, வாங்கிக் கட்டிக் கொண்டனர்).

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் 27 சதவிகித இடங்களை ஒதுக்கி ஆணையிட்டார். அது தி.மு.க. முரசொலிமாறன் அங்கம் வகித்த அமைச்சரவை என்பது குறிப்பிடத்தக்கது.

தடை ஆணையை திராவிடர் கழகம் கொளுத்தி சாம்பலை அனுப்பியது!

இதற்குமுன் அந்த கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அமர்வு – தடை விதித்ததை எதிர்த்து, அந்தத் தடை ஆணையை திராவிடர் கழகம் கொளுத்தி, சாம்பலை மூட்டை மூட்டையாக அனுப்பிய போராட்டமும் தமிழ்நாட்டில் நடைபெற்றது.

வி.பி.சிங் ஆட்சியின் ஆணையை எதிர்த்து, பார்ப்பன மாணவர்களைத் தூண்டிவிட்டனர் – டில்லியில் அவர்தம் ஊடகங்கள் அதனை ஊதிப் பெரிதாக்கி, தீ வைத்துக் கொண்ட நிகழ்வுகளைத் திட்டமிட்டு விளம்பரப்படுத்தியது – அதே ஊடகங்களில் சிலவற்றால் அம்பலமும் ஆகியது.
இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் கமிஷன் வழக்கை உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து, 16.11.1992 இல் தீர்ப்பு வழங்கியது.

அதில் ஜஸ்டீஸ் எஸ்.இரத்தினவேல் பாண்டியன் தனித் தீர்ப்பை எழுதியே தனது ஒத்திசைவை மற்ற தீர்ப்புரைக்கும் தந்தார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வந்த ஒரு வழக்கில் (பாலாஜி வழக்கில்) 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்பதாக ஒரு குறிப்பு கூறப்பட்டதையொட்டியே மண்டல் கமிஷன் பரிந்துரைகளில், 52 சதவிகிதமாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 52 சதவிகித இட ஒதுக்கீடு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், 27 சதவிகிதம் என்று இப்போது ஒதுக்கினால்போதும், காரணம் எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு 22.5 சதவிகிதம் மத்திய அரசு ஏற்கெனவே அளித்து வருகிறது என்று விளக்கம் தரப்பட்டது.

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியதை உச்சநீதிமன்றத்தின் – 9 நீதிபதிகள் அமர்வு ஏற்றதோடு, பரிந்துரைகளையும் செல்லும் எனக் கூறியது. (தேவையற்ற கிரிமீலேயர் என்ற ஒன்றை நுழைத்தது).
2004 இல் அமைந்த காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் யு.பி.ஏ. ஆட்சியில், மத்திய கல்வி நிறுவனங்களும் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறியது.

தகவல் அறியும் சட்டத்தின்மூலம் அம்பலமாகியது

இவ்வளவு தடைகளைத் தாண்டியும், பார்ப்பன அதிகாரவர்க்கத்தின் தலையீடுகளால் 27 சதவிகிதம்கூட சரிவர அமல்படுத்தப்படாமல், வெறும் 12, 14 சதவிகிதம்தான் அவர்களுக்குக் கிடைத்திருப்பதோடு, எஞ்சிய (27-12) 15 சதவிகித பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினர் அபகரித்துள்ள செய்தி, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியது!

வி.பி.சிங் ஆட்சி 11 மாதங்களில் பா.ஜ.க.வினரால் கவிழ்க்கப்பட்டது

மண்டல் கமிஷனை அமுலாக்கியதற்காகவே வி.பி.சிங் ஆட்சி 11 மாதங்களில் பா.ஜ.க.வினரால் கவிழ்க்கப்பட்டது என்பது உலகறிந்த உண்மை!
அதைப் பெருமையோடு ஏற்று வரலாற்றுப் புகழ்பெற்றவர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்.
மண்டலுக்கு எதிராக கமண்டலத்தைத் தூக்கிக் கொண்டு ராமன் கோவில், ரத யாத்திரை என்று கிளம்பியவர்கள் கையில், இன்று மத்திய ஆட்சி சிக்கிக் கொண்டது!

சமூகநீதியை நாளும் பார்ப்பனரும், உயர்ஜாதியினரும் பகற்கொள்ளை அடித்து வரும் வகையில்….

பிரதமர் மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் என்ற முகமூடியை வைத்தே, சமூகநீதியை பார்ப்பனரும், உயர்ஜாதியினரும் பகற்கொள்ளை அடித்து வரும் வகையில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பா.ஜ.க. ஆட்சி நாளும் செயல்படுகிறது!
30 ஆண்டு மண்டல் சமூகப் புரட்சியை ஒழிக்கும் வகையில் நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்தும் வகையில் மோடி எனும் முகமூடியை வைத்தும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை (வடபுலத்தில்தான்) பிரித்தாண்டும் பார்ப்பனப் பண்ணையம் வெற்றிகரமாக நடைபெறுகிறது!

எனவே, மண்டல் பிறந்த நாளில் நாம் எடுக்கவேண்டிய சூளுரை,
‘‘சமூகநீதிப் பறிப்பைத் தடுத்து நிறுத்துவோம்!
பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு என்ற கண்ணிவெடியை அடையாளம் கண்டு அகற்றுவோம்!’’ என்பவையாகும்.

போராடுவோம்; வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன் றத்திலும், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் ஓரணியில் திரட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்திப் போராடுவோம்; வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

மண்டல் பிறந்த நாளில் உறுதிமொழி!

உயிரா? மானமா? உரிமையா? என்பதில் உயிரைக் கொடுத்தேனும் மற்ற இரண்டையும் மீட்டெடுப்போம். தந்தை பெரியார் -அறிஞர் அண்ணா – காமராசர் – கலைஞர் முதலிய தலைவர்களும், திராவிட இயக்கமும் செயல்பட்ட வழியில் – இன்று களத்தில் நிற்கும் முற்போக்கு மதச்சார்பற்ற சமூகநீதி அணியை அகில இந்திய அளவில் 1980-90-களில் கட்டியதைப்போல மீண்டும் கட்டி, எழுச்சியை ஏற்படுத்த சூளுரையாகவும், அதையே மண்டல் பிறந்த நாளில் உறுதிமொழியாகவும் எடுப்போம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

25.8.2020
சென்னை