பெரியார்

ஆரியச் சாக்கடையில்
அறிவு தொலைத்த
எம் மக்களின் புத்தியை
சுத்தம் செய்ய வந்த
ஈரோட்டு சானிடைசர்!

சனாதன தர்மமென்று
எம்மைச் சூத்திர
பஞ்சமனாக்கிய
கயவர்களின் தோலுரித்த
கருப்புச் சாட்டை!

வேத ஆகமங்களைக்
காரணம் காட்டி
மூடிய கருவறைக்
கதவுகளின் சூழ்ச்சியை
உணர்த்திய பேரரக்கன்!

தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டென
ஆரியம் மூட்டிய தீண்டாமைத் தீ
அணைக்கப்பொங்கி எழுந்த
பகுத்தறிவுப் பேரலை!

அன்றாட வாழ்வியலோடு
நகமும் சதையுமாய்
ஒன்றிக் கிடந்த
மூடப் பழக்கங்களைக்
கொத்தாய் அகற்றிய ஜேசிபி!

அக்கிரஹாரத்திற்குள் சுருக்கிய
புத்தக வாசனையையும்
அரசு வேலையையும்
அடித்தட்டு மக்கள் வரை
கொண்டு சேர்த்த மாண்பாளன்!

ஆண்டாண்டு காலமாய்
அடிமைப்பட்ட பெண்ணினத்தின்
உரிமைகளை மீட்டெடுக்க
ஊர் ஊராய் முழங்கிய
முதிர் சங்கு!

வசதியாய் வாழ
அத்தனை வாய்ப்பிருந்தும்
மரணத்தின் இறுதி நொடியிலும்
இந்த மக்களுக்காகவே வாழ்ந்த
ஆல மரத்தின் மூல விதை …

  • பாசு ஓவியச்செல்வன்