பார்ப்பனியத்திற்கு முன் மண்டியிடும் சட்டமும் சமூகத்தின் மனசாட்சியும்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பார்கள்… ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை.  ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுநீதி தான் ஒரு சிறிய மாற்றத்துடன் நடைமுறையில் உள்ளது. அதாவது ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று இல்லாமல், இன்றைய சட்டம் பார்ப்பனரைத் தவிர அனைவரும் சமம் என்ற நிலையில் தான் இருக்கிறது. 

சிவலோகத்தில் இருந்து நேரடியாக இறங்கி கீழே வந்து குடியேறியதாக கூறிக்கொண்டு தில்லைத் தீட்சிதர்கள் சிலருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவ்வாறு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டால் 
அவர்கள் தொடர்புடைய வீடுகளில் “தனிமைப்படுத்தப்பட்ட வீடு” என்று நோட்டீஸ் ஒட்ட வேண்டும். 14 நாட்கள் அல்லது 28 நாட்கள் சுகாதார ஊழியர்கள் அந்த நோட்டீஸ் இருக்கிறதா என்று ஆய்வு செய்வார்கள்.  இதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீட்சதர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதற்கு தீட்சிதர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

சட்டத்தை மீறி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடியவர்கள் வேறு என்ன செய்வார்கள்? 
எனவே சுகாதார ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டாமல் திருப்பி வந்துள்ளதாக ஒரு செய்தி.

இதே போல் எதிர்ப்பை  பூணூல் இல்லாத ஒருவர் காட்டியிருந்தால் சட்டம் அவர்களை கைது செய்திருக்கும். சமூகத்தின் மனசாட்சி அவர்களை திட்டி தீர்த்து இருக்கும். ஆனால் இங்கே சட்டமும் சமூகத்தின் மனசாட்சியும் பூணூல்களுக்கு முன்னால் மண்டியிட்டுகின்றன.

இதுபோல் டெல்லி மாநாட்டிற்கு சென்றுவந்த ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து அதற்காக சட்டமும் சமூகத்தின் மனசாட்சியும் அவர் தன் குடும்பத்தை உலுக்கி எடுத்தன. ஆனால் பூணூல் போட்டு இருந்தால் மட்டும் ஒரு உயர்ந்த தனித்த அதிகாரம் வந்து விடுகிறதே ஏன்? 

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், “கொரானா தொற்றுக்கு மருந்து உள்ளது எனக்கு வாய்ப்புத் தாருங்கள்” என்று கேட்டதால் கைது செய்யப்பட்டார். அவர்மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் கொரானா நோய்க்கான மருந்து என்று விளம்பரம் செய்து ஒரு மருந்தையே விற்பனை செய்தார் பாபா ராம்தேவ். அந்த மருந்து மத்திய அரசால் தடை செய்யப்படுகிறது. ஆனால் அவர் மீது வழக்கு பதிவு கைது நடைபெறவில்லை. 
இந்த நடவடிக்கைகள் பாரபட்சமற்ற இன்று நம்மால் கூற முடியுமா?
இந்த “நோய்த்தொற்று” பற்றி அறிவியலுக்குப் புறம்பான கருத்து தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு ஜீயர் 108 முறை நமோ நாராயணா என்று சொன்னால் கொரானா போய்விடும் நோய் போய்விடும் என்று பேசுகிறார். கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் இந்த ஊடகங்கள் அதனை பெரிய செய்தியாக்கி வெளியிடுகின்றன.  அவர்மீது ஏன் வழக்கு தொடுக்கப்படவில்லை .
இப்படி பாரபட்சம் காட்டுவதில் இது முதல்முறை அல்ல. வரலாறு முழுவதும் அப்படித்தான் நடந்து வருகின்றன.
 திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது உரையில் தாழ்த்தப்பட்டோர் பற்றி கூறிவிட்டார் என்றவுடன், பிசிஆர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார்கள். அதே காவல்துறையினர் “தீண்டாமையை கடைபிடிப்பது எனது உரிமை” என்று ஒரு பார்ப்பனர் பேசிய நிலையில் அவரை என்ன செய்துவிட்டனர்.

சிதம்பரத்தில் ஒரு பெண்ணை ஒரு கோயில் தீட்சத அர்ச்சகர் கன்னத்தில் அடிக்கிறார். அவர் கைது செய்யப்படவில்லை. அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கும் வரை சட்டம் அவரை நெருங்கவே பயப்படுகிறது. அதன்பிறகும் அவர் விரும்பும் இடத்தில் காவல் நிலையத்தில் அவர் போய் கையெழுத்து போடலாம் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. இது அனைவருக்கும் சாத்தியமா?  சமூகமும் இதைப் பெரிதாக கண்டிக்க முன்வரவில்லை. இதே செயலை ஒரு பார்ப்பனரல்லாதார் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்!

பலருக்கு நினைவிருக்கும், 2006 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆஜராக வேண்டிய நிலையில் அவரது பணிச்சூழல் காரணமாக அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரியை நீதிமன்றத்திற்கு அனுப்பியது நீதிமன்றத்தை அவமதித்தது என்று கொந்தளித்தார்களே!

ஆனால் ஒரு நபர் ஐகோர்ட் ஆவது மயிராவது என்று பேசுகிறார் அவர் மீது அரசு சார்பில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை நீதிபதிகள் அதுகுறித்து விளக்கம் கேட்க வில்லை. யாரோ ஒரு வழக்கறிஞர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறார். அதிலும் அந்த நபரை நீதிமன்றத்திற்கு அழைத்து மயிலிறகால் வருடி அனுப்புகிறார்கள். இது அனைவருக்கும் சாத்தியமா?

சங்கராச்சாரி சங்கர ராமனை கொன்ற வழக்கில் எல்லா ஆதாரங்களும் இருந்தும் அவற்றை உடைத்து விட்டு வெளியில் வர முடிகிறது.
 ஒரு பேட்டரி வாங்கி தந்தார் என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு முப்பது ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.

கேத்தன் தேசாய் என்று ஒருவர் ஆல் இந்திய மெடிகல் கவுன்ஸில் தலைவராக இருந்தார். அவர் வீட்டில் இருந்து ஒன்றரை டன் தங்கமும் பல கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை. இன்று சர்வதேச மருத்துவ அமைப்பு ஒன்றின் உறுப்பினராக உள்ளார்.
ஆனால் ஒரு மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா அவர்களை ஒரு துண்டு சீட்டு கூட ஆதாரமில்லாமல் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் வைக்க முடிகிறது இந்த சட்டத்தால்.
காரணம் கேத்தன் தேசாய் பூணூலோடு காணப்படுபவர்.
ஆ.ராசா பூணூல் இல்லாதவர்.
இப்படி ஆயிரம் எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்..
தந்தை பெரியார் சொல்லுவார் “ஓட்டலில் எச்சில் பிளேட்டு கழுவும் பார்ப்பானுக்கு இருக்கின்ற சமூக அந்தஸ்து பார்ப்பனரல்லாதாரில் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் அவருக்கு கிடைக்காது” என்று!
இன்று வரை இந்த நிலை மாறவில்லை!
மாற்றத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்வோம்!

  • வை.கலையரசன்
    உல்லியக்குடி