பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

விடுதலை ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் பதிலளித்திருந்தார்.

“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா.

“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!” என்று ஆசிரியர் அந்த வினாவிற்கு விடையளித்திருந்தார். சில‘  தமிழ்த் தேசியர்கள் பெரியாரை எதிர்ப்பது, அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக என்று தான் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஏனோ தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் தோழர் மணியரசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அவர் தனது இயக்க முகநூல் பக்கத்தில் “வீரமணி அவர்கள், அகவைக்கும் அனுபவங்களுக்கும், தலைமைக்கும் உரிய பண்புடன் விடை கூறவில்லை!” என்று தொடங்கி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். மேற்படி பதிலில் என்ன பன்பு குறைந்து விட்டது என்று தெரியவில்லை.

மனியரசன் தனது கட்டுரையில், “தமிழர்” என்று தனித்தன்மையுள்ள இனப்பெயர் இருக்கக்கூடாது; அதைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் கலந்த கலப்பினமாகச் சித்தரிக்க வேண்டும் என்பது பெரியாரின் திட்டம்! பெரியார் தமிழினத்தில் பிறக்கவில்லை என்பதற்காக இந்த வேலையைச் செய்தார் என்று நான் கருதுகிறேன் என்கிறார்.

தமிழினத்திற்காக தன் வாழ்நாளையே அற்பனித்த பெரியாரை பழித்து, அந்த மகத்தான தலைவரின் அருந்தொண்டுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் இவர்களின் மலிவான அரசியலுக்கு, தமிழர் தலைவரின் பதில் எந்தளவிற்கு பன்பு கெட்டு விட்டது என்று புரியவில்லை.

மணியரசன் என்ன சொல்ல வருகிறார்?

‘திராவிடர்கள்’ என்ற பெயர் அசலாக யாருக்கு வந்தது? தென்னாட்டுப் பிராமணர்களுக்கு! இதைத் “தென்னாட்டுக் குலங்களும் குடிகளும்” என்ற தலைப்பில் கள ஆய்வு நூல் எழுதிய தர்ஸ்ட்டன், “திராவிடர்” என்பது தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே அசலாகக் குறித்த சொல் என்று குறிப்பிடுகிறார். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் “திராவிடியன்” என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது, தர்ஸ்ட்டனின் மேற்கோளை அப்படியே அது காட்டுகிறது (Encyclopaedia Britannica, Vol. 7, Edn. 15 – 1947). என்று சொல்கிறார்.

‘திராவிடியன்’ என்ற சொல்லுக்கு விளக்கமளிக்க, 1947ல் வெளிவந்த என்சைக்ளோபிடியாவை காட்டுகிறார் மணியரசன். 2007ல் பிரசுரிக்கப்பட்ட அதே என்சைளோபிடியாவில் சர்ச்சைக்குரிய இந்த கருத்தை தவிர்க்கும் பொருட்டு திராவிடியன் என்ற சொல்லையே நீக்கி வெளியிட்டிருட்டிருக்கிறது ஆனந்த விகடன்.

திராவிடர் என்ற சொல் பார்ப்பனர்களைக் குறிக்கிறது என்பதற்கு ஆதாரமாக, சென்னையில் “தென் கனரா திராவிட பிராமணர் சங்கம்” ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள புதூரில் அவ்வட்டார பிராமணர்களுக்கு மட்டுமே உரிய “புதூரு திராவிட பிராமண சங்கம்” ஐதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் தெலுங்கு பிராமணர் அமைப்பான “சிறீ கோனசீமா திராவிட சங்கம்”  “தும்மங்கட்டா திராவிட பிராமணர் சங்கம்”  “உடுப்பி ஸ்தனிகா திராவிட பிராமண சங்கா”  “உடுப்பி தென்கனரா காசர்கோடு திராவிட பிராமணர் சங்கம்” எனப் பல திராவிட பிராமண சங்கங்கள் இப்போதும் செயல்பட்டு வருவதாகவும், ‘சென்னை மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமணப் பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட் சாஸ்த்திரி! மட்டைப் பந்து வீரர் பெங்களூர் பிராமணரின் பெயர் இராகுல் திராவிட்!’ என்றும் ஒரு நீண்ட பட்டியலையே ஆதாரத் தகவலாக கொடுத்திருக்கிறார் அவர் இப்படி எவ்வளவு சாட்சிகளை இழுத்து வந்தாலும் அதில் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று தான்.

திராவிடர் கழகத்திற்கும், திராவிட அரசியல் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? திராவிடர் கழகத்தில் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. ஏன் எனில் திராவிடர் என்பது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல். திராவிட கட்சிகளில் பார்ப்பனர்கள் உறுப்பினராகலாம். இதில் உள்ள ‘திராவிட’ என்பது இடத்தைக் குறிக்கிறது.’திராவிடர் என்பதோ இனத்தைக் குறிக்கிறது’.

மணியரசனார் குறிப்பிடும் பெயர்கள் அனைத்தும் ‘திராவிட’ என்றே குறிப்பிடப் பட்டிருப்பதை கவனிக்க  வேண்டும். திராவிடப் பகுதியில் வாழும் பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், கேரள பார்ப்பனர்கள், ஆந்திரப் பார்ப்பனர்கள் என்பது போல் திராவிடப் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். எந்தப் பார்ப்பனராவது திராவிடன் என்றோ, திராவிடர் என்றோ பெயர் வைத்திருக்கிறார்களா? அதே போல் திராவிட் என்பதும் இடத்தைத்தான் குறிக்கும். அதற்கு சைதாப்பேட், குரோம்பேட், தேனாம்பேட் என ஆயிரம் உதாரணங்களை நாமும் காட்ட முடியும்.

‘பாப்பாத்தி’ என்று பெண்குழந்தைகளுக்கும், ‘அய்யர்’ என்று ஆண்களுக்கும் நம்மவர்களிடையே பெயர்கள் புழக்கத்தில் இருப்பதையும் பார்க்கிறோம். அதற்காக அந்த பெயருடையவர்களையெல்லாம் பார்ப்பனர்கள் என நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் என்று நினைத்தால் மணியரசனின் வாதங்களை கை கொட்டி சிரிக்கத்தான் வேண்டும்.

“திராவிடர் என்ற சொல்லுக்கு தமிழ்ச் சான்றுகள் கொடுங்கள்” என்று இக்காலத் திராவிடவாதிகளிடம் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் அவ்வாறான அகச்சான்று கொடுக்கவில்லை என்கிறார் மணியரசன்.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களைப் பார்த்து விவேகானந்தர் “நீங்கள் என்ன கோத்திரம்?” என்று கேட்டபோது “நான் தன்மானம் மிக்க தென்னாட்டு திராவிடன்” என்று சொன்னதாக அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் பதிவாகியிருக்கிறதே அதற்கு என்ன அர்த்தம்?

தமிழர் – திரமிளர் – திராவிடர் என பாவாணர் எடுத்து இயம்பவில்லையா?

ஆரிய திராவிட போர் எந்த இலக்கியத்தில் இருக்கிறது என்கிறாரே? ஆரிய திராவிடப் போராட்டம் என்பது என்ன மல்யுத்தமா? ஆயுதப் போரா? சிப்பாய்களைக் கொண்டு படையெடுப்பதா? மாறாக அது பண்பாட்டு படையெடுப்பு அல்லவா? பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் மூலைக்கு பார்ப்பனர்களால் இடப்பட்ட கண்ணுக்குத் தெரியாத விலங்கை உடைக்கும் போராட்டமல்லவா? பெரியார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே தோன்றியிருந்தால், பார்ப்பன சூழ்ச்சியை இந்த சமூகம் அக்குவேறு ஆணிவேறாக புரிந்து கொண்டிருந்தால் மணியரசனார் சொல்வது போல சங்க இலக்கியங்களில் இவையெல்லாம் இடம் பெற்றிருக்கும். என்ன செய்வது பெரியார் 19ஆம் நூற்றாண்டில்தானே பிறந்தார்?

தமிழர் விழாவான பொங்கலை திராவிடர் திருநாள் என்று ஏன் சொல்ல வேண்டும் எனக் கேட்கிறார் மணியரசன். தமிழர்களுக்கான ஒரே விழாவாக இருந்த பொங்கலையும் “ஸ்வாகா” பண்ணப் பார்த்தது தான் பார்ப்பனீயம். அந்த சூட்சமத்தை மக்களிடம் போட்டுடைத்தார் பெரியார்.

“பொங்கல் பண்டிகையைக் கூட பார்ப்பனர்கள் தம் வழியில் திருப்பிக் கொண்டனர். ‘சங்கராந்தி’ ‘போகி’ ‘பொங்கல்’ என்று சொல்லி இந்த மூன்றும் அவனது புராணத்தில் உள்ளதை அனுசரித்து அக் கருத்துப்படி இந்திரனுக்கு, கிரகங்களுகென்று அமைக்கப்பட்டிருக்கிறதென்று ஆக்கிக் கொண்டனர்” என்றார். இந்த பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கத்தான் தமிழர் விழா என்பதோடு நிறுத்தாமல் திராவிடர் திருநாள் என்கிறோம்.

இலக்கியங்களில் ஆரியர் திராவிடர் போராட்டத்திற்கான சான்றுகள் இல்லை என்று சொல்லும் மணியரசன், ஆரியர் – திராவிடர் இனக்குழுக்களுக்கான அறிவுப்பூர்வமான அராய்ச்சி முடிவுகளைப் பற்றி என்ன சொல்கிறார்?

2009-ல் ரெய்க்கின் தலைமையிலான ஒரு குழு, ‘நேச்சர்’ இதழில் ‘இந்திய மக்கள்தொகை வரலாற்றின் மறு கட்டுமானம்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

இந்திய மக்கள்தொகையின் மரபணுக் கட்டுமானத்தை ஆய்வுசெய்த இந்தக் கட்டுரை, வட இந்திய மூதாதையர், தென்னிந்திய மூதாதையர் என்கிற கருத்தாக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டது. வட இந்திய மூதாதையர் மரபணுரீதியாக மத்தியக் கிழக்கு ஆசிய, மத்திய ஆசிய, ஐரோப்பியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்றும், தென்னிந்திய மூதாதையர் பிரத்யேகமாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அது கூறியது.

தற்போது இந்தியாவில் இருக்கும் மக்கள் குழுவினர் பலரும் ஏறக்குறைய இந்த இரண்டு வகை மூதாதையர்களின் கலப்பானவர்கள் என்றும், தொன்றுதொட்டு உயர் சாதியைச் சேர்ந்த இந்தோ – ஐரோப்பிய மொழி பேசுபவர்களிடையே வட இந்திய மூதாதையர் பாரம்பரியம் அதிகமாக இருக்கிறது என்றும் நிறுவியது அக்கட்டுரை.

‘எட்ஜ்’என்கிற இதழுக்கு ரெய்க் அளித்த ஒரு நேர்காணலில், இந்தோ – ஐரோப்பிய மொழிகள் ஸ்டெப்பி புல்வெளிகளில் தோன்றி பிறகு ஐரோப்பாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் பரவின என்கிற கருத்தாக்கம் குறித்து,

“மரபணு ஆராய்ச்சி முடிவுகள் ஸ்டெப்பி புல்வெளி தொடர்பான இந்தக் கருத்தாக்கத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளது. ஏனெனில், ஆதிகால வடக்கு யுரேஷிய மூதாதையர் ஐரோப்பாவுக்கு வந்ததற்கான வலுவான தடங்களைக் கடந்த ஆண்டு கண்ட நமக்கு, அவர்கள் எந்த காலகட்டத்தில் ஐரோப்பாவுக்கு வந்தனர் என்று இப்போது தெரியவந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

 “அந்த மூதாதையர் 4,500 ஆண்டுகளுக்கு முன் கிழக்கில் இருக்கும் ஸ்டெப்பியிலிருந்து வந்தனர். மேலும், இந்தியாவில் 2,000 மற்றும் 4,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் குழுக்களின் மிகத் தீவிரமான கலப்பு ஏற்பட்டது. மிகப் புராதனமானதும், உலகத்திலேயே மிகவும் பழமையான இலக்கியங்களில் ஒன்றானதும், கலப்புச் சமுதாயத்தை விவரிப்பதுமான ரிக் வேதம் இயற்றப்பட்ட காலகட்டத்தோடு இயைந்துசெல்கிறது இந்தக் காலம்”  என்றும் அவர் கூறினார்.

”ரெய்க்கின் பார்வையில், இந்தோ – ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் ஐரோப்பாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் பரவிச் சென்று, மிகப் பெரும் மக்கள்தொகை மாற்றங்களை ஏற்படுத்திய காலகட்டம் இது என்பதே இந்தக் கருத்தின் சாரம் என  ஃபிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

அதைப்போலவே ஜெர்மனியைச் சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிளாங்க் நிலையம் மற்றும் இந்தியாவின் டேராடூன் நகரில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்ற சர்வதேச குழு ஒன்று மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தக் குழு தங்கள் ஆய்வு முடிவுகளை “ராயல் சொசைட்டி ஓப்பன் சயின்ஸ்”  என்ற இதழில் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் தமிழ் உள்ளிட்ட 80 மொழி வகைகள் அடங்கிய திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறது. இப்படி பல்வேறு சான்றுகள் தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆராய்ச்சிகளெல்லாம் ஒரு புறம் இருக்க திராவிடர் என்ற சொல் குறித்து பெரியார் என்ன சொல்கிறார் என்பதை கவனிக்க வேண்டும்.

“பார்ப்பனர்களிடமிருந்து விடுதலை பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு குறி சொல்லாகவே ‘திராவிடர்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறேனே ஒழிய இதில் இரத்த பரிசோதனை ஒன்றும் நடத்தப்பட வில்லை!” என்கிறார் பெரியார்.

“பிராமணர், பிராமண மகா சபை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பெருமையும், உரிமையும் கிடைக்கின்றது. நாம் நம்மை சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர் ஜாதியினருக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பனரின் தாசி மகன் என்ற பட்டம் தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால் தான், அப்பெயரால் எவ்வித சலுகையோ, உரிமையோ கிடைக்காததால் தான், அப்பெயரில் உள்ள இழிவு காரணமாகத்தான், அத் தலைப்பில் அதே இழி தன்மையுள்ள திராவிடராகிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்கள் எல்லாம் ஒன்று சேர மறுத்து வருகிறார்கள். அதனால் தான் நம்மை சூத்திரன் என்று கூறிகொள்ளாமல் திராவிடர் என்று கூறிக் கொள்கிறோம். சூத்திரன் என்பவர்களுக்கு திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொறுத்தமான பெயரை வேறு யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்” என்கிறார் பெரியார்.

திராவிடர் என்ற சொல்லுக்கு பெரியார் இவ்வளவு தெளிவாக விளக்கமளித்து விட்ட பிறகும், பெரியாரை சிறுமைப்படுத்த நினைப்பது, அவரது தொண்டிற்கு உள்நோக்கம் கற்பிப்பது எவ்வளவு அறிவு நாணயமற்ற செயல்?

‘திராவிடர்’ கழகத் தலைவர் வீரமணிக்குத் ‘தமிழர்’ தலைவர் பட்டம் ஏன் என்கிறார் மணியரசன். திராவிடர் கழகம் என்பது ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்ககாக ஏற்படுத்தப்பட்டது. பெரியார் குறிப்பிட்டதைப்போல் பார்ப்பனர்களை தவிர்த்து திராவிடராகிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் என யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அது ஆரியர் அல்லாத திராவிடர்களுக்கான இயக்கம்தான். அதே நேரத்தில், அந்த இயக்கத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பார்ப்பனரல்லாத தமிழர்கள் தங்கள் தலைவரை தமிழர் தலைவர் என்று அழைத்து மகிழ்கிறார்கள் என்று சொன்னால் இதில் மணியரசன்களுக்கு வயிற்றெறிச்சல் ஏன் வருகிறது?

இப்போது சொல்லுங்கள்!

“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!” என்று தமிழர் தலைவர் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு சரியான பதிலல்லவா?

கி.தளபதிராஜ்