ஆணவ (கவுரவ)க் கொலையும் தீர்ப்பும்


கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற காதல் இணையர்கள் சங்கர்- கௌசல்யா மீதான கொலைவெறி தாக்குதல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில்  படுகாயமடைந்த உடுமலை சங்கர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் வெட்டுக்காயமடைந்த கௌசல்யா சிகிச்சைபெற்று குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.

வழக்கு

இதையடுத்து, கௌசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி மற்றும் அன்னலட்சுமி தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. 1500 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய மூவரும் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

தூக்குத் தண்டனை

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

மீதமிருந்த 9 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

9-வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேல்முறையீடு

இந்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பும் மேல் முறையீடு செய்தது. தூக்குத் தண்டனையை உறுதிசெய்யும்படியும் அரசுத் தரப்பு கோரியது.

விடுதலையும் தண்டனைக்குறைப்பும்

நீதிபதிகள் சத்திய நாராயணா, நிர்மல் குமார் அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கில் 23.06.2020 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 311 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பில் முதல் குற்றவாளியான சின்னச்சாமியின் தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார்.

கவுசல்யா தந்தை விடுதலை ஏன்?

அவர் விடுவிப்பதற்கு உயர்நீதிமன்றம் கூறியுள்ள காரணம் ‘கூட்டுச்சதி’ நிரூபிக்கப்படவில்லை என்பதுதான்.

முதல், இரண்டாம் குற்றவாளிகள் இருவரும்  கொலையாளிகளுடன்  6.2.2016 முதல் 6.3.2016 வரையிலான காலத்தில் பலமுறை செல்பேசியில் பேசியிருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டாலும் அவர்களது உரையாடலில் சங்கரை கொல்வதற்கான சதி உருவானது என்பதை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

தண்டனைக் குறைப்பு ஏன்?

மேலும் முதல், இரண்டாம் குற்றவாளிகளை வழக்கில் இணைப்பதற்காகவே Conspiracy Theory மற்றும் அதற்கான குற்றப் பிரிவுகள் சேர்க்கப் பட்டதாகவும் நீதிமன்றம் கூறுகிறது.

மற்ற அய்ந்து குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்களுக்கு எந்த ஒரு தளர்வும் அளிக்கக்கூடாது என்றும், இவர்கள் குறைந்தது 25ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அய்ந்து பேரும்தான்  குற்றவாளிகள்தான் கொலையை செய்தவர்கள் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் அனைவரும் வயதில் இளையவர்கள் என்பதாலும் அவர்கள் மீது  வேறு பெரிய குற்ற முன் வரலாறு இல்லாத்தாலும் அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருதியே மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது உயர் நீதிமன்றம்.

தன்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்துசெய்யப்பட்டது. மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த அய்ந்தாண்டுகால சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டது செல்லும் எனவும் நீதிமன்றம் கூறியது.

தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பின் கூடுதல் வழக்கறிஞர் எமிலியாஸ், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

இது குறித்து  கெளசல்யா குறிப்பிட்டுள்ளதாவது…

“எனது சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளிக்கிறது. முதலில் அன்னலட்சுமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டார். இப்போது சின்னச்சாமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்களுக்கு மரணதண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

முதலில் இவ்வளவு அவசரமாக இந்தக் கொரானா காலத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமா… சமூகம் பெரும்பாலும் முடங்கியுள்ள சூழலில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது எனக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல தமிழக அரசு இந்த வழக்கைப் போதிய முனைப்போடும் அக்கறையோடும் நடத்தியிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதற்கும் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு  நடைபெற்றதற்கும் இந்த இரண்டு காலங்களில் என்னோடு அரசு தரப்பு கொண்டிருந்த தொடர்புக்கும் பெருத்த வேறுபாட்டை உணர்கிறேன். ஆனால் இன்னும் நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. எனது சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு தமிழக அரசால் எடுத்துச் செல்லப்படும் என நம்புகிறேன். அப்படி நடத்தப்படும் போது  உரிய சட்டக் கலந்தாய்வு செய்து எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக் கொள்வேன். ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டேன். இன்னும் வேகமெடுத்து எனது போராட்டத்தைத் தொடருவேன். மிகக் குறிப்பாக சின்னச்சாமி அவர்களும் அன்னலட்சுமி அவர்களும் தண்டனை பெற வேண்டும். அதுதான் சங்கருக்குரிய குற்றவியல் நீதியாக இருக்கும்! என் சங்கருக்கு உரிய நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தை இன்னும் முனைப்புடன் கவனமெடுத்துத் தொடர்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கர் கொலைக்கு நேரடிப் பொறுப்பானவர்கள் முற்காரணமானவர்கள் இப்போது ஆயுள்தண்டனை பெற்றவர்களா அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பவர்களா என்கிற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பான்… இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காதே..!

மீண்டும் சொல்கிறேன்… சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். குறிப்பாக சின்னச்சாமி, அன்னலட்சுமி ஆகியோருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வரை ஓய்ந்துவிடமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்குக் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஜாதி சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கொண்டாடி வருகின்றனர்.. இந்தத் தீர்ப்பை உச்சிமோந்து பாராட்டுகின்றனர். ஒருவர் தன் பெருமையை காப்பாற்ற விரும்பும் பெற்றோருக்கு இது ஒரு இனிப்பான செய்தி என்றே கொண்டாடியுள்ளார்.

காதல் வாழ்வுக்குக்காக தம் உயிரையும் இழந்த இந்த வழக்கின் தீர்ப்பு பற்றி எழுதும்போது நாடக காதலர்களுக்கு கிடைத்த மரண அடி என்று தெரிவிக்கிறார் மற்றொருவர்.

இந்த நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து தலைவர்கள்  பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளைப் பற்றி தமது  பலத்த எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர்.

தொல்.திருமாவளவன்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளை விடுவித்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கென தனிச்சட்டம் இல்லாமையும்;அரசுத்தரப்பு வாதம் வலுவாக இல்லை என்பதுவுமே காரணங்களாகும். இது ஆணவக்கொலைகளையும் கூலிக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இரா.அதியமான்

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் அவர்கள், ” வெளிச்சமூட்டிய தீர்ப்புக்கு , இருள் பாய்ச்சிய உயர்நீதி மன்ற  தீர்ப்பால் நீதியின் மீதான நம்பிக்கையை கேள்விக் குறியாக்கியுள்ளது, கவலையடைய  செய்கிறது.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் பெற்றோர்களே தன் பிள்ளைகளை கொலை செய்கின்ற கொடூரம் இந்து சனாதானத்தால் மட்டுமே திணிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு திணிக்கப்பட்ட கற்பிதத்தை மனிதநேயமிக்க எவரும் எதிர்க்கத் தான் செய்வார்கள்.

அரசு தரப்பின் வலுவற்ற வாதத்தால் ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் மேற்கோள்களுக்கு முன்னுதாரணமாக இத் தீர்ப்பு அமைந்துள்ளதாகவே ஆதித்தமிழர் பேரவை கருதுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

உடுமலை மு.இரவி

அருந்ததியர் சமூக சீர்திருத்த இயக்க பொறுப்பாளர் உடுமலை மு.இரவி கூறும்போது, “போதிய சந்தர்ப்ப சாட்சியங்கள் இருந்தும், முன்னரே குற்றம் அய்யமின்றி நிரூபிக்கப்பட்ட ஒரு வன்கொடுமை வழக்கு, மேல்முறையீட்டின் காரணமாக முன்னர் வழங்கப்பட்ட தண்டனையிலிருந்து விலகி தற்போதைய உயர் நீதிமன்ற தீர்ப்பில் தண்டனை விபரங்கள் முற்றிலும் மாறுகிறதென்றால் உயர் நீதிமன்றங்களின் மேல் கடைக்கோடி சாமானியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மீது நீதியரசர்கள் அவநம்பிக்கையை விதைக்கிறார்கள்….” என்று தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படாததாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 அதாவது எவ்வளவு அதிகபட்சமாக குற்றவாளிகளை காப்பாற்ற முடியுமா அவ்வளவு அதிகபட்சமாக காப்பாற்றி தீர்ப்பு வெளி வந்துள்ளது. இதற்கு காரணம் நீதிபதிகளா?  வழக்கை நடத்திய அரசுத்தரப்பா? என்பது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.